Entertainment Serial Stories பூம்பாவை

பூம்பாவை-3

3

மலை மேலிருந்து பூம்பாவை உத்தேசமாக ஓரிடத்தைக் கூர்ந்து பார்த்தபடி இருந்தாள்.

“என்னத்த புள்ள பார்க்கற? எனக்குந் தான் சொல்றது.”

“இரு மயிலு. சத்தம் போடாத எம் பின்னாடி வா. அந்தக் கடம்பன் அங்க பதுங்கிப் பதுங்கிப் போறான் பாரு. என்னவோ கெட்டது செய்யறான்.”

பூம்பாவை விறுவிறுவென்று இறங்கினாள். 

“இது வேண்டாத வேல புள்ள. அய்யனுக்குத் தெரிஞ்சா வெளியே சுத்தவே விடமாட்டாரு.”

“அடியேய்.. இதைக் கவனிச்சுச் சொல்லாது போனா எங்க அய்யன் பேரு தான் கெட்டுப் போகும். வாடி கம்முன்னு!”

கரும்பாம்பென வளைந்தும் நெளிந்தும் செல்லும் பாதையில் அடர்ந்த மரங்களூடே நடந்து கொண்டிருந்தான் கடம்பன். அவன் நடையில் ஒரு தள்ளாட்டம். போதையின் வீரியம் கண்ணில் சிவப்பேறித் தெரிந்தது. 

காலில் கட்டிய கனத்த சலங்கையை அவிழ்த்து முந்தானையில் முடிந்து கொண்டனர் இரு பெண்களும். 

“சத்தம் போட்டுக் காட்டிக் கொடுத்துடும்ல! சரசரன்னு இறங்கு மயிலு! அவன் என்னத்த பதுக்கறான்னு பார்க்கணும்!”

“கள்ளுக்குடி தலைக்கு ஏறிக் கிடக்குது பூவு. அவன் கண்ணைப் பாரு! எப்படி செவந்து கெடக்குதுன்னு!”

“ம்ம். இந்தா இந்த பெருங்கொம்பை கையில் வச்சுக்க.! எதுவும் ஆபத்துன்னா ஒரே போடு அவன் தலைல.”

கடம்பனின் போக்கு அவர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியது. அந்த காட்டில் ஒவ்வொரு இடமாகத் தோண்டிப் பார்த்துக் கொண்டு போனான். 

“வரையாடு மேய்க்கறத விட்டுப்புட்டு வழியெல்லாம் பள்ளம் தோண்டிக்கிட்டுப் போறானே? எதுவும் பதுக்கி வச்சிருப்பானோ?”

“நேத்து நாம பார்த்த காரு அங்க பாரு முன்னாடி நைஞ்சு கெடக்கு. அந்தாளுகளோட இவன் ஏதோ சகவாசம் வச்சிருக்கான் மயிலு. என்னத்தையோ அவனுங்க கொடுத்திருக்கணும்..இவன் பதுக்கி இருக்கணும். நம்ம மலை நாட்டு கருவேம்பு இந்தக் கடம்பன் தான் மயிலு. வேரறுத்து விடணும் இவனை.” பூம்பாவை ஆவேசமானாள். இடுப்பில் இருந்த குத்தீட்டியை எதற்கும் இருக்கட்டுமெனக் கையில் மறைத்துப் பிடித்துக் கொண்டாள். 

“வாடா கடம்பா! ஊறலெடுத்த கள்ளுப்பானை கொண்டு வந்திருக்கியா? பதிலுக்கு எங்க ஊரு விஸ்கி உனக்கு ராவா தரேன்.”

கனத்த குரலுக்குரியவன் விக்ரம். ஊரறிந்த அரசியல்வாதி சாலமனின் மகன். பார்ப்பதற்கு படு ஸ்டைலாக இருந்தான். கண்ணில் இருந்த ரேபான் கண்ணாடி நான் கள்ளு குடிப்பதற்குப் புதியவன் என அவன் பணக்காரத் தனத்தைப் பறை சாற்றியது. கூரை மேல் சோறிட்டால் கவ்வும் காக்கை கூட்டம் போல அவனைச் சுற்றி  இருந்த நணபர்கள் கூட்டம் கடம்பன் தடுமாறுவதைப் பார்த்துக் கொல்லெனச் சிரித்தது. 

“தோ..இங்க தான் பதுக்கி வச்சிருக்கேன் சாமி. நீங்க உங்க பாட்டிலைக் கொடுங்க. நான் எம் பானையைத் தந்துட்டு நடையைக் கட்டறேன்.” கடம்பன் சரிவான மண்மேட்டைத் தோண்டி மேலிருந்த காய்ந்த இலைக் குவியலை அகற்றிக் கொடுத்தான். 

“ம்ம்ம்..ஆ..!” வாசனையை நுகர்ந்த விக்ரம் 

“இந்த மாதிரி போதை நம்ம சிட்டில  கூட கிடைக்காதுடா மச்சான். கூடவே கொஞ்சும் சிட்டுமிருந்தா.. ஏய்.. கடம்பா.. உங்க ஊருல இந்த பொண்ணுங்கலாம் கிடைக்க மாட்டாங்களா?”

“ஐயோ சாமி. தப்பாட்டம் ஆடிறாதீங்க. எங்க வனப்பேச்சி உங்களைச் சும்மா விடாது.”

“எங்க பிஸினஸ் தெரியாமப் பேசற நீயி.. விடு.. விடு.. எங்க கூடவே இருந்தா நீயும் வளரலாம். இல்ல.. வனப்பேச்சி வாய்ப்பேச்சின்னு பயமுறுத்தினீன்னா வந்தது வரட்டும்ன்னு உன்னைப் போட்டுத் தள்ளிட்டுப் போய்கிட்டே இருப்போம்.”

இப்போது விக்ரம் கையில் பிஸ்டல் முளைத்திருந்தது.

“சுட்டுராதீங்க சாமி. நான் தான் வேணுங்கறத செய்யறேனே.”

“இப்ப பொண்ணு!”

“தப்புத் தண்டாக்கு துணை போனா வனப்பேச்சி..”

“அதாருடா வனப்பேச்சி? சும்மா பூச்சாண்டி காட்டற.. பேசாம அந்த வனப்பேச்சியையே கொண்டா.. பார்ப்போம்!” இளித்த வாறே விக்ரம் சொல்லிக் கொண்டிருக்க பின்னிருந்து  சரசரவென இலைகள் மிதிபடும் சத்தம் கேட்டது.

“க்விக் . மறைஞ்சுக்கோ..யாரோ வராங்க.” விக்ரம் அண்ட் கோ சட்டென அகண்ட மர மறைவில் மறைந்து கொண்டனர்.

வந்தது பூம்பாவையும், மயிலும் தான். 

“என்ன மச்சான் இங்க நின்னு திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கற?” பூம்பாவை வேண்டுமென்றே மச்சானென்று அழைத்தாள்.

எதிர்பார்த்தது போல அம்மச்சானில் கிறங்கிய கடம்பன் முகமெல்லாம் சிரிப்பாக..

“ஏ..புள்ள..!  என்னையவா மச்சான்னு கூப்பிட்ட? ஏத்துக்கிட்டியா புள்ள? வர வாரமே பரிசம் போட்டுட வந்துடுவேன்ல.”




தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருந்தவன் விக்ரம் மரத்தின் பின்னால் மறைந்து இருப்பதை மறந்து விட்டு பூம்பாவை பின்னால் நடக்க ஆரம்பித்து விட்டான். 

“யாரு கிட்ட பேசிட்டிருந்த? என்னத்த தேடிட்டிருந்த? ரெண்டுத்துக்கும் பதில் சொல்லு. அப்பால பரிசம் போடறதப் பத்திப் பேசுவோம்!” பூம்பாவை அமர்த்தலாகப் பேசினாள்.

“நான் என்னத்த தேடப் போறேன்? ஆடு மேய்க்கத் தான் வந்தேன். வந்த இடத்துல கொஞ்சம் கள்ளு நாக்கேற அப்படி இப்படின்னு ஆடி நடக்கறேன்.”

“யாரு கூட பேசிட்டிருந்த?”

“யாரு கூடயும் இல்லையே.. ஓ.. வழியில் பார்த்தியா? அது அந்த பட்டணத்துக் காரங்க. அதான் புதுசா வந்துருக்காங்கல்ல. அவங்க வழி தெரியாம நின்னாங்க. வழி சொல்லிப்புட்டு நின்னேன். அதப் பார்த்தியாக்கும்

சரி வா புள்ள. இங்க நிக்குறது அனர்த்தமா போயிடும். யாராவது பார்த்துப்புட்டா ஆபத்து.”

“ஆபத்தே நீ தான்னு சொல்றேன் மச்சான்!”

“ஏய்.. என்ன பேச்சு நீளுது?” எகிறினான் கடம்பன்.

“பூவு.. அடக்கி வாசி! அவனோ குடிகாரன். ஏடாகூடமா வாய்விட்டு அவன்கிட்ட மாட்டிக்காத!” மயிலு பூம்பாவையின் காதில் ஓதினாள்.

“ஹி..ஹி.. என்னை ஆளப் போற ஆபத்து நீ தானே. அதச் சொன்னேன்.” சமாளித்தாள் பூம்பாவை.

“ஓஹோஹோ.. ஹோஹோ! நீ அப்படி வரியா? ஆமா ஆமா! ஆபத்தும் நாந்தான். அரணும் நான் தான். வெரசா இந்த இடத்த விட்டு நகருங்க ரெண்டு பேரும். இப்பல்லாம் காடு காடாவா இருக்குது. துஷ்ட மிருகங்கள் நடமாட்டம் கூடிப் போச்சுது. அதுகளுக்கும் பொண்ணுங்கன்னா ரொம்ப புடிக்குமாம். எம் பொண்டாட்டியையும் அவ கூட்டுப்பொண்ணையும் நான் தானே பத்திரமா பாதுகாக்கணும்!” 

கடம்பன் நீளமாகப் பிரசங்கம் செய்தபடி இருவரையும் முன்னே நடக்க விட்டுத் தானும் நடந்தான். அவனுக்குத் தெரியும் விக்ரம் அண்ட் கோ தன்னைத் தொடர்வார்கள் என்று. 

அப்படித் தான் நடந்தது. 

வனத்தில் அடர்த்தியில் இருள்போர்வை போர்த்தியிருக்க பழக்கப் பட்ட கால்கள் பாதை விலகாது நடந்து கொண்டிருக்க செம்பூவின் வாசம் நாசியை நிறைக்க பூம்பாவைக்கு ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது. 

“ஏய் புள்ள.. கடைசியா இவன் கிட்ட மனசக் கொடுத்திட்டியாக்கும்!” மயிலு கிசுகிசுத்தாள்.

“சும்மா வாடி.  ஆடுற மாட்டை ஆடித் தானே கறக்கணும். இது வெத்தாட்டம் தான். நம்பிடாத!” பூவும் பதிலுக்குக் கிசுகிசுத்தாள்.

“அப்ப மச்சான்னு சொன்னது?”

“இவன் என்ன செய்யறான்னு கண்டறியற வரை மச்சான் தான்.”

“அப்புறம் மடப்பய ஆயிடுவானா?”

“மடப்பய! அதென்னடி மயிலு சரியா என் மனசப் படிச்ச மாதிரி பேசற. மடப்பயலே தான்!”

“உன் கூடயே சுத்தறேன். உன்னைத் தெரியாதாடி பூவு. நீ விடற மூச்சுக் காத்தோட  வாசம் கூடத் தெரியும்.”

“ஹா ஹா சரி தான்டி!”

இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும் போது பின்னால் கடம்பனை ஒரு கரம் இழுத்து வைத்துக் கொண்டதை அவர்கள் அறியாது விட்டார்கள். 

“இவ தான் வனப்பேச்சியா? எங்களுக்கு விருந்தா வேணுமே!” விக்ரம் கடம்பனின் தொண்டையில் பிஸ்டலால் அழுத்தினான். அவன் பார்வை பூம்பாவையை வெறித்தது. 

இவர்களிடம் இருந்து தப்பிக்கும் வழியில் “ஹூம்.. ஹூய்..” முனகலோடு மண்சரிவில் கால் வைத்து  மலைச் சரிவில் வழுக்கிக் கொண்டு விழுந்தான் கடம்பன். 

“தொலஞ்சான்டா! இனி இவ மேல நாம கண்ணு வைக்கணும்!” விக்ரம் சொன்ன அந்த வினாடி பூவும், மயிலும் அவர்கள் பார்வையில் இருந்து மறைந்து அடிவாரத்துக்கு 

வந்திருந்தார்கள்.

சரியாக அந்த சமயம் பார்த்து குறுக்கே வந்தனர் நன்மாறனும் 

சிவாவும். 

“பார்த்தியாடி மயிலு. அங்க கடம்பனை உசுப்பி விட்டுட்டு அறியா புள்ளைக போல இங்க நம்ம முன்னாடி வந்து நிக்கறத. இவனுங்க தான் ஏதோ வசியம் வச்சிருக்கானுங்க கடம்பனுக்கு.”

“ஆமாடி பூவு. நாம அன்னிக்கு இவனுங்களைக் காப்பாத்தி இருக்கக் கூடாது. அப்படியே போகட்டும்ன்னு விட்டுருக்கணும்.”

நன்மாறன் இடையிட்டான். 

“ஹலோ தேவதைஸ்.. தேங்க்ஸ் ஃபார் சேவிங் அஸ். எங்களைக் காப்பற்றியதற்கு நன்றி. பை த வே.. நான் டாக்டர் நன்மாறன். இவன் சிவா.. என் நண்பன்.” 

கை குலுக்கவென்று தன் முன் நீண்ட நன்மாறனது கையைப் பார்த்த பூம்பாவை வீலென்று கத்தினாள்.

நன்மாறனின் பின்புறம் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிக் கொண்டு கொலைவெறியுடன் நின்றிருந்தான் கடம்பன்.

-தொடர்வாள்.




What’s your Reaction?
+1
8
+1
7
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!