Serial Stories பூம்பாவை

பூம்பாவை-11

அத்தியாயம்..11

ஏஞ்சாமி!

மலையை காவ காக்கிறேனு சொல்லி சுத்தி சுத்தி வந்தியே.உன்னையே அந்த பேச்சியம்மா காவு வாங்கிட்டாளே!.அடியே‌ மயிலு தொணைக்கு எம்புள்ளையை கூட்டி போய்ட்டீயே!”

கடம்பனின் ஆத்தா கதறிய கதறல் மலைக்காடெங்கும் எதிரொலித்தது.

மயிலு போன சோகம் முழுசா மறையறதுகுள்ளே கடம்பன் போனது மலைவாசிகளுக்கு பெருங்கவலையை உண்டு பண்ணியது.

“ஒத்தையில திரிய வேணாண்டு சொல்ல ஆரும் கேட்கல.இப்ப கடம்பனும் போயாச்சு.”

“மாசப்பொறப்புக்கு நாலு நாள் தான் இருக்கு. அதுக்குள்ள இப்படி பயங்காட்டுதே.”

ஆளாளுக்கு கவலை கூட…வேலக்குட்டனும் அடுத்து என்ன செய்வதென அறியாமல் புலம்பி தவித்தான்.

அய்யனின் கவலை பூவுக்கும் விசனமாகத்தான் இருந்தது.

“இதெல்லாம் பேச்சி வேலையில்ல.அந்நிய ஆசாமிக தான் நம்ம சனங்களை கொன்னு போடறாங்க.என் பிரண்டு கண்டுபிடிச்சு கொடுப்பாக.அப்ப  அவுகளை கூறு போடுவோம்.”

நாவு வரை வந்த வார்த்தைகளை மனசுக்குள் வைத்து பூட்டிக் கொண்டாள்.

இப்போது சொன்னால் யாரும் நம்ப மாட்டாக. வாசமல்லி யே நம்பலையே.

“இதோ பாரு பூவு. என் அண்ணாத்த மேல எனக்கு உசுரு. பட்டணத்து ஆசாமிகள நம்பி அண்ணாத்தையை அனுப்பிச்சிட்ட. அதையும் இதையும் கண்டுபிடிக்கறதா சொல்லி நம்ம சனம் முச்சூடையும் கொன்னு போட்டு இந்த பேச்சிமலையை பிடிச்சா என்ன புள்ள செய்வ?

மலைப் பொண்ணுக ஆரையும் நம்பக் கூடாது.

மயிலையும் கடம்பனையும் கொன்னவக இந்த தொரையோட கூட்டாளியா இருந்தா?”

பூவுக்கு சுருக்குனு தச்சுது. வாசமல்லி கருத்தா தான் பேசுவா. மயிலு மாறி இல்ல. நாம தான் நஞ்சனை அவுக கூட அனுப்பிட்டமோ.

இல்லை. வாசமல்லிக்கு தெரியாது.

மயிலு செத்தப்ப அவுக துடிச்சதை கண்ணால பார்த்தவ நானு. தப்பு செய்யறவுக மறைஞ்சில போவாக.

“அடியே மல்லி!

பேச்சி எண்ட மனசுல இருக்கா. மனுஷாளை பார்த்தா அவுக சரியா தப்பா னு எனக்கு காட்டிப்பிடுவா. உன் அண்ணாத்தைக்கு ஒண்ணும் ஆகாது. அவுக இங்ஙனகுள்ளே இருந்தா தான் ஆவத்து. நான் அனுப்பிச்சது சரிதேன் ‌.”

அப்போதைக்கு மல்லியிடம் சமாளித்தாலும் நஞ்சனும், மாறனும் ஊருக்கு வரும்வரை அவளுக்கும் பரிதவிப்பாய்த்தான் இருந்தது.

மயிலைக் கொன்னவக தான் கடம்பனையும் கொன்னிருக்காக. எதுக்காக மலைசாதியை இப்படி படுத்தறாக? அவுக யாரு? வனப்பேச்சி அவுகளை என் கண்ணுல காட்டு.

அவள் மனசார பேச்சியை வேண்டிக்கொள்ள…




மிகச் சரியாக அவ்விடம் நோக்கி வந்து கொண்டிருந்தான் விக்ரம்.

“அவ்வளவு தூரம் மெனக்கெட்டு கடம்பனை டாக்டர் வீட்டுக்கு போகச் சொன்னா…திரும்ப எப்படிடா நம்ம வீட்டுக்கே வந்தான்?’

ம்”…நீங்க கொடுத்த சரக்கு அப்படி. பயபுள்ள தலைமாடு கால்மாடு‌ தெரியாம குடிச்சுட்டு நம்ம வீட்டுக்கே திரும்ப வந்துட்டான்.”

“எப்படியோ அவனை முடிச்சு டாக்டர் காரில் போட்டாச்சு.

இந்நேரம் பேச்சிமலை பத்தி எரியும் ல..வாங்கடா என்ன ரியாக்ஷன் னு பார்ப்போம்”

விக்ரம் தன் கைத்தடிகளோடு‌ பேச்சிமலைக்கு வேவு பார்க்கவும் தேனெடுக்கவும் வர…

தூரத்தில் பூவும் வாசமல்லியும்..!

“டேய்..அங்கே பாருங்கடா..கறுப்பழகி கூட இன்னொரு சிலை..”

“அட..ஆமாண்ணே!

ஊசி குத்தி தூக்குவோமா?”

முட்டாள் பசங்களா! நமக்கு இப்ப‌ தேவை கொம்புத்தேன்.ஏதாவது உருப்படா வேலை பண்ணி மாட்டி விட்டுடாதீங்க “

“கடம்பன் செத்து கிடக்கான்.இவளுங்க ஏன் இங்கு மேயறாளுங்க?”

“இப்படியே பதுங்குங்க‌ டா.என்ன பேசறாளுங்க னு கேட்போம்.”

பெண்களுக்கே. உரிய நுண்ணுணர்வில் பாவையும் யாரோ அவர்களைக் கவனிப்பதை உணர்ந்தாள்.

“ஏ புள்ள..அசங்காம நாஞ் சொல்றதைக் கேளு. நம்மள ஆரோ பின்னாடியிருந்து பார்க்காக. நீ திரும்பாத. காதை மட்டும்‌ தீட்டு.”

“ஏ மல்லி பூவு..எங்ஙன நிக்கீக?

இந்த நஞ்சன் பயலை வேற காணல. கடம்பனை காவு வாங்கின பேச்சி இன்னும் ஆரெல்லாம் காவு கேட்குதோ?”

மல்லியின் தாத்தன் அவர்களை நோக்கி வெரசா வர…

மல்லி, பூ மட்டுமல்ல விக்ரமும் திகைத்தான்.

“இதோ வந்துட்டன் தாத்தா. நீரு போவும்”

நஞ்சனை பார்த்தியளா?”

“அண்ணாத்தே கடம்பன் சாவுல குமுறி கிடக்கு. மனசு பேதலிச்சு 

அலையுது. சாமி குத்தமா! ஆசாமி குத்தமா! சின்ன வயசுக்காரவுகளை சுரண்டி திங்குது.”

“ஆசாமி குத்தமா? கண்டுபிடிச்சா குடலை உருவி மாலை போட்டுடுவன்.”

“நம்மட பேச்சி காட்டிக் கொடுக்காத போவுமா?

வா புள்ள நாம் போவம்.”

பூவும் மல்லியும் சட்டென அங்கிருந்து மறைய…

விக்ரம் ஆடிப் போனான்.

“எப்படிடா?

எப்படி அந்த டாக்டர் தப்பிச்சான்?

கடம்பன் எப்படி இங்கே வந்தான்? இவனும் செத்ததில மலைக்குள்ளே பிரச்சினையாயிடும் போல.”

“ஏன் கவலைப்படறீங்க அண்ணே!

அதான் பேச்சி காவு வாங்கினதா பேசறாங்களே!”




“முட்டாள்! அந்த குட்டிகள் ஆசாமியோனு சந்தேகம் கிளப்பறாளுங்க பாரு. உடனடியா இதை திசை திருப்ப ஏதாவது செய்யணும்.”

யோசித்தவன் அவன் ஆட்களுக்கு சடசடவென உத்தரவு பிறப்பித்தான்.

இன்னைக்கு கொம்புத் தேனுக்கு என்ன பண்றது?

கண்கள் சுற்றிலும் மேய யாராவது சிக்குவார்களா எனத் தேடியபடியே வந்தவன் முன் நின்றிருந்தான் மாறன்.

“ஹலோ! யார் நீங்க?’

மாறனின் கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தவன் சட்டென சுதாரித்தான்.

“ஹாய் டாக்டர்! ஐ யம் விக்ரம்.”

கைநீட்ட அதைப் பற்றியபடியே

*இங்கே என்ன செய்றீங்க விக்ரம்?”

“அது நான் கேட்க‌வேண்டிய கேள்வி.

“டாக்டர் இங்கே எப்படி?”

“நான் ஊரிலிருந்து இப்ப தான் வர்றேன்.வர்ற வழியில் என்ன நடக்குது ஏது நடக்குதுனு கவனிச்சிட்டே வர்றது என் வழக்கம்.அப்ப தானே நோயை சரி பண்ண முடியும்.”

‘ரொம்ப கெட்டிக்கார டாக்டர் ஆச்சே!”

பின்னே! கொஞ்சம் அசந்தா இந்த வியாதிங்க ஆளையே காலி பண்ணிடுமே.”

சட்டென ஜெர்க் ஆனான் விக்ரம்.இந்த டாக்டர் எதையாவது ஸ்மெல் பண்ணிட்டானோ. பேச்செல்லாம். ஒரு தினுசு இருக்கே.

“அதிருக்கட்டும் விக்ரம். நீங்க இங்கே எதுக்கு வந்தீங்கனு இன்னும் சொல்லலையே.”

“நான் தேன் வாங்க வந்தேன் டாக்டர். யூஸ்வலா இங்கே ஒருத்தன் எனக்கு தேன் சப்ளை பண்ணுவான். அவனைத் தேடி வந்தேன். பட் ஆளைக் காணோம்.”

“ஓ…இந்த‌ ஊரில தேனோட அதைக் கொண்டுவர்ற ஆளையும் வாங்கிட்டு போயிடறாங்க போல..”

“என்ன சொல்றீங்க டாக்டர்?”

“ஜஸ்ட் ஃபார் ஃபன். ஆளைக் காணோம் னு சொன்னீங்களே..”

இதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாமல் கிளம்பினான் விக்ரம்.

அவன் கிளம்பியதும் மறைவிலிருந்து ஓடி வந்தார்கள் மல்லியும் பூவும்.

“தொரை! அந்த ஆளை விட்டுபுட்டீங்களே. அவன் தானே மயிலைக் கொன்னவன்.”

“அப்படி யார் சொன்னா?”

“அவன் தான் உள்ள வந்து என்னத்தையோ  தேடிக்கிட்டு இருந்தான்.”

“அவசரப் படாதே பாவை.”

“ஏன் ? குறுக்கால வராம இருந்தா அவனை கொன்டு போட்டிருப்பேன்.”

“அப்படியெல்லாம் பொசுக்கு பொசுக்கென்று யாரையும் கொல்ல கூடாது.”

“ஏஞ்சாமி.எங்க ஆளுகளை அவன் கொன்னப்ப உமக்கு இனிச்சுதா? நீரும் அவன் கூட்டாளியா?”

“ஏ புள்ள! படக்குனு இப்படியா பேசுவ? தொரை நொம்ப நல்லவரு.நம்ம சனத்துக்கு எத்தனை மெனக்கிடறாரு தெரியுமா?”

கேட்டபடியே இறங்கியவனைப் பார்த்ததும் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவன் மேல் பாய்ந்தாள் மல்லி.

“அட கொலகார கூட்டாளிகளா உம்மை இங்ஙனக்குள்ள கொடலை உருவறேன் “

“இரு புள்ள.. நா நஞ்சன்.உன்ட அண்ணாத்தே!

கறுப்பு கண்ணாடியை கழட்டியவனைப் பார்த்து அசந்தார்கள் இருவரும்.

“என்னா வேசமிது?

டவுனுகார தொரை கணக்கா…”

“ஆமாம் புள்ள ..இவருக்கு ஒத்தாசை செய்யப்போறேன் நம்ம சனத்தை காவந்து பண்ணப் போறேன்.”

“சரிதேன் அண்ணாத்தை! இந்த வேசத்தில நீயு மலைக்குள்ளே வரமுடியாது.”

“ஆமாம்.என்னோட அவர் தங்கிக் கட்டும்.நான் உண்மையை கண்டுபிடிக்கிற வரைக்கும் அவரோட உதவி எனக்கு தேவை.”

“ஆனாக்க தாத்தன் தேடுமே!”

“கடம்பன் செத்தது கண்டு பிராந்து பிடிச்சு அலையுறதா‌ சொல்லு புள்ளை.அப்பப்ப நானும் மலைக்குள்ளே பித்துக்குளியாட்டம் வந்து போறேன்.”

அவர்கள் சம்பாஷணையில் அவ்வப்போது பதில் சொன்னாலும் மாறனின் மனம் முழுதும் விக்ரம் மேலிருந்தது. என்ன காரணத்துக்காக இவர்களைக் கொல்கிறான்?ரத்தத்தை உறிஞ்சியது போலல்லவா இறக்கிறார்கள்? ஏதாவது பிளாக் மேஜிக் செய்கிறானா?அதற்கு மலைசாதியை ஏன் தேர்ந்தெடுக்கணும்? காளான் பறிக்க வந்தாலும் ஒரு நியாயம் இருக்கிறது. காளானைப் பத்தி தெரிஞ்சுக்க தான் முட்டாள் தனமா ஏதாச்சும் செய்கிறானோ? கண்ணை கட்டி காட்டில் விட்டது போலிருக்கிறதே.இந்த அப்பாவிகளை எப்படி காப்பாற்ற போகிறேன்?”

 பலவாறாக யோசித்தவனுக்கு சிவாவிடம் இருந்து கால் வந்தது.

“மாறா! நீ அனுப்பிய கார் நம்பர் அரசியல்வாதி சாலமனோடது டா.  அவர் சென்னையில் இருக்காராம்.அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லைனும் அதுக்கு ஏதோ மலை வேம்பு தேன் வாங்கத்தான் அவர் மகன் இங்கே வந்திருக்கிறதாகவும் பேசிக்கிறாங்க..”

“அப்புறம் ஏன் கடம்பனை கொன்னு என் காரில் போட்டாங்க?”

“டேய் பெரிய இடத்தோடு மோதாதே..உன்னால் அந்த மலைக்காட்டு மக்களுக்கும் சங்கடம் வரப்போகுது..”

அவன் சொல்லி முடிக்குமுன் ஒரு ஆடு கத்தியபடியே மலைரோட்டில் விழுந்து இறந்தது..

ஐயோ! அடுத்த கேடு வந்திட்டா?

-தொடர்வாள்.




What’s your Reaction?
+1
6
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!