Serial Stories பூம்பாவை

பூம்பாவை-10

10

விக்ரம் தந்த ‘ரம்’மின் போதையில் தன் உள்ளும் புறமும் முள்ளாய்க் குத்தும் குற்றவுணர்ச்சியிலிருந்து தற்காலிகமாகவேனும் தப்பிக்க நினைத்த கடம்பனை…விக்ரமின் வீட்டு  டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 

“ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா”

 பாடல் அவனை கழிவிரக்கத்தின் எல்லைக்கே இழுத்துச் சென்று விட்டது‌

‘எஞ்சாமி !  இந்தப் பாவி அறியாம செஞ்ச   பாதகத்தை மன்னிச்சிரு சாமி! அந்த நஞ்சன் பயல கண்ணு கொண்டு பாக்க ஏலலையே! எங்க கொண்டு போயி இந்த பாவத்த தொலப்பேன்? பூவு என்னப்  பாக்குற பார்வையில செத்து செத்து பொழைக்கறனே! ஒரேயடியா செத்துரலாம் போலிருக்குதே! தலையிலும்,மாரிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு மயங்கி விழுந்தவனைப் பார்த்தபடி வந்த விக்ரம்,

“உன்னோட ஆசையை நான் நிறைவேத்தறேன் நண்பா” என்று நக்கலாக கண்ணைச் சிமிட்டி சிரித்தான்.

———-

ஒவ்வொரு முறை பாவையைச் சந்திக்க செல்லும் போதும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுகிறதே என்று யோசித்தபடி, மலையேறிய மாறன் பாதையோரம் பூத்துக் குலுங்கிய ஒரு கொன்றை மரத்தடி நிழலில் நின்றான்.  அந்த இளமாலை நேரத்திலும் அவன் நின்றிருந்த இடம் மரங்களடர்ந்து இருளோவென்றுதான் இருந்தது. 

அப்போது அங்கே அவன்  கண்ட காட்சி!

  மலைசாதி இளைஞனொருவன் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்க, பூம்பாவையும், இன்னொரு மலைசாதிப் பெண்ணும் அவனைத் தேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். 

“பாவை…பாவை”  

அவர்களை நோக்கி வந்த மாறனை குரோதமாகப் பார்த்தபடி விருட்டென்று எழுந்த அந்த இளைஞன்,

” நீதானடே எம்மயில சாவடிச்சது? உன்னக் கொல்லாம வுடமாட்டன்” 

அவன் கையிலிருந்த வீச்சரிவாள் தலைக்கு மேலே உயர,

 “அச்சச்சோ!அண்ணாத்த இவுரு புதுசா வந்திருக்க டாக்குடரு..அவுர வுடு”

 வாசமல்லி நஞ்சன் கையைத் தட்டி விட,

“ஆமா நஞ்சா…இவுரு பிரண்டு , நல்லவரு “

பூவும் வழிமொழிய.. கொதிநிலை யிலிருந்த நஞ்சன் கொஞ்சமாக ஆக்ரோஷம் குறைந்தான்.

“பிரண்டு.. நாஞ் சொல்லல! மயிலோட மொற மாமன் ,மயிலு மேல உசுரையே வெச்சிருந்தாப்பலனு அந்த நஞ்சன் இவந்தான். அவள மறக்க கூடுதில்லனு தத்தளிச்சு மருகறவன தேத்துற வழி எங்களுக்கும் பொலப்படலையே!




” என்னை இந்த கதியாக்குனவங்கள பழி வாங்கியே ஆகோணும் மச்சான்,” னு எம் மயிலு எங்காதோரம் சொல்லிகிட்டே இருக்குறா. அவனுகள கண்டந்துண்டமா வெட்டிப் போடத்தான் வீச்சரிவாளும், ,கையுமா அலையுறவனை இதுக ரெண்டும் மலையிறங்கவுடாம காலைச் சுத்தி சுத்தி வருதுங்க” என்றான் 

நஞ்சன் கண்களில் பொறி பறக்க .

“அவுக யாரு எவருன்னு தெரியாத ஒத்தையில போயி நீயும் மாட்டிக்கிராத அண்ணாத்த. உனக்கேதாச்சும் சேதாரமாகிப் போச்சுதுன்னா” 

விசும்பிய வாசமல்லியின் பாசத்தில் கண்கலங்கினான் அண்ணன்.

 

ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நன்மாறனுக்கு அந்த பாசமலர்களைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தது.

“பாவை…! நான் உன்னைப் பாக்கத்தான் வந்தேன். நீ அன்னைக்கு ஏதோ காளான் பத்தி சொன்னியே. அந்தக் காளான் இருக்கற எடத்துக்கு என்ன கூட்டிப் போயேன் ப்ளீஸ்”

” ஐயோ சாமி! ! எங்க குடியிருப்பத் தாண்டியில்ல அந்த எடத்துக்குப் போகோணும். அங்க உன்னப் பாத்துட்டாங்க..அவ்வளவுதா! ஒன்னோட சேத்து என்னையும் பொலி போட்டுடுவாங்க! பதறினாள் பாவை.




“அப்படீன்னா அந்தக் காளானையாவது 

ஃப்ரஷ்ஷா கொண்டு வந்து குடு”

தன்னையே உற்றுப் பார்த்தவளை,

“பறிச்சதுமே, புத்தம்புதுசா கொண்டு வந்து தாயேன். அது வெச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணனும்”

“இந்த கார்த்திகை மாசத்துல மட்டுந்தான் அந்தக் காளான் மொளைக்கும்.. இன்னும் நாலைஞ்சு நாள் தானே இருக்கு மார்கழி பொறக்க. எங்க சனங்க அல்லாரும் அந்தக் காளானுக்காக ஆலாப் பறப்பாங்க. வெள்ளன எழுந்து பறிச்சிடுவாங்களே. ம்ம்”

யோசித்தாள் .

“என்னாத்துக்கு புள்ள..இம்மாந்தூரம் யோசிக்கறவ. காலம்பற வெள்ளன நாமளும் எந்திரிச்சு காளான பறிச்சா..தொரைக்கு கொண்டாந்து குடுத்துரலாம்ல.”

வாசமல்லி சொல்ல,

“சர்த்தான் புள்ள…செஞ்சிடுவோம் நாளக்காலைல பொழுது விடியறப்ப காளானைக் கொண்டாரோம்” என்றாள் பாவை.

நாளைக்கு வேண்டாம். நாளன்னிக்கு குடுங்க. நான் அதை சென்னைக்கு கொண்டு போகணும். அப்பறம் இன்னொரு விஷயம்….”

தயங்கினான் நன்மாறன்.

“என்னாத்துக்கு  இத்தன தயக்கம்? பட்டுனு கேளு தொரை..”

நஞ்சன் முன்வர…

“நீங்க மூணு பேரும் உதவி பண்ணா அந்த கொலைகாரங்களை கண்டு பிடிச்சிடலாம்”

“மெய்யாலுமா தொரை…என்ன செய்யோணும்னு சொல்லு”

 என்றான் நஞ்சன் படபடப்பாக.

அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குப் புரியும்படி மாறன் விளக்க, தயங்கினாலும் மூவரும் மாறன் திட்டப்படி நடக்க ஒத்துக் கொண்டார்கள்.

“ஆனா…நஞ்சா நான் சொல்ற வரைக்கும் நீ கள்ளு, சாராயம் எதுவும் குடிக்கக் கூடாது..சரிதானா?”

 எச்சரித்தான் மாறன்.

“ஐயோ..கடம்பனாட்டம் குடிகாரன்னு நெனச்சுப் போட்டீங்களாக்கும். எங்கண்ணன் இந்த இனத்துலயே தப்பிப் பொறந்தவன். அவன் இதுவரைக்கும் குடிச்சதேயில்லையே “

என்ற வாசமல்லியின் சொற்கள் பெருத்த நிம்மதியைத் தந்தது மாறனுக்கு.

“நாளன்னிக்கு புதன்கிழமை காலைல ஆறு மணிக்குள்ளாற காளானோட வந்துருங்க.  இதெல்லாம் யாருக்கும் தெரிய வேண்டாம்‌.”

மாறன் எச்சரிக்கை விடுத்த நொடி… 

அய்யோடா! கைதட்டியபடி மரத்தின் மறைவிலிருந்து வருவது யார்?

நல்லவேளை சிவாதான் !

“எத்தனை தரம் சொன்னாலும் அடங்க மாட்டியா? கெளம்பு இப்பவே! நான் உங்கம்மாக்கு ஃபோன் பண்றேன்”

எகிறியவனை..

“டேய் சிவா! ரொம்ப பெரிய அநியாயம் நடக்குதுடா இந்த அப்பாவிங்களுக்கு! படிச்ச நாமே நமக்கென்னன்னு கைய உதறி விட்டு போனா..இவங்க இனமே அழிஞ்சு போயிடும்டா. 

மயிலு ,ஊமையன் மரணங்களிலிருந்து தான் ஊகித்த விஷயங்களையும், அந்த அபூர்வ காளான் பற்றிய விஷயத்தையும் எடுத்து சொன்னவன்,

நம்ம பேதாலஜி ப்ரொஃபசர்கிட்ட இது பத்தி பேசினேன்டா. அவருக்குத் தெரிஞ்ச சைன்டிஸ்ட் வர்மா கிட்ட அழைச்சிட்டு போறதா சொல்லி இருக்காரு. இவங்களோட ப்ளட் சாம்பிள் தேவைப் படுது. அதுக்காக நஞ்சனை கூட அழைச்சிட்டுப் போறேன்.

இத நான் சோஷியல் சர்வீஸா நினைக்கல. ஒரு டாக்டரா..ஒரு மனுஷனா சக உயிர்களைக் காப்பாத்த செய்ய வேண்டிய கடமையா நினைச்சு செய்யறேன்”

நண்பனின் பேச்சில் தெளிந்த சிவா, தானும் உதவ முன்வர…அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை உறுதிப் படுத்திக் கொண்டு பிரிந்தனர்.

கடம்பன் கண்ணிலேயே படாததைப் பற்றிக் கேட்டான் நஞ்சன்.

“அது முட்ட முட்ட குடிச்சிட்டு எங்கனாச்சும் மல்லாந்து கெடக்கறது சகசம்தான? அது ரெண்டு நாளைக்கு கண்ணுல படாத வரைக்கும் நல்லதுதான்” என்ற பூம்பாவைக்கு இனி கடம்பன் நிரந்தரமாக கண்ணில் படவே மாட்டான் என்பது தெரிந்தால்..!

———-

விக்ரமின் திட்டப்படி , போதையில் கிடந்த கடம்பனை இழுத்துப் போய் ஓர் அறையில் வைத்துப் பூட்டிய கூட்டாளிகள், கடம்பனின் இரத்தத்தில் கலந்திருக்கும் ரம் மின் வீரியம் முழுதுமாக நீங்கக் காத்திருந்தனர்.

புதன்கிழமை அதிகாலை ..

சென்னை செல்லத் தயாராக, வெளியே வந்த மாறன், கார் கதவைத் திறக்க, தட்டென்று உள்ளிருந்து விழுந்தது கடம்பனின் உயிரற்ற உடல்.

அந்தக் குளிர்ந்த மலைப் பிரதேசத்தில், கார்த்திகை மாத பனிப்பொழிவிலும் அருவியாக வேர்த்துக் கொட்டியது மாறனுக்கு மட்டுமில்லை…அந்த நேரம் சரியாக அங்கு வந்து சேர்ந்த பாவை, நஞ்சன், மல்லி, சிவாவுக்கும்தான்.

கடம்பனின் நடத்தை பிடிக்கா விட்டாலும் பிறந்தது முதல் ஒன்றாக வளர்ந்த பாசம் பூம்பாவையின் கண்ணீர் வெள்ளத்தில் தெள்ளெனத் தெரிந்தது.

 அந்த டென்ஷனிலும் கடம்பன் உடம்பை ஆராய்ந்த மாறன்,

“இங்க பாருடா சிவா‌..கடம்பன் உடம்புலயும் ஒரு சொட்டு ரத்தம் இல்லை. ஸேம் பேட்டர்ன் ஆஃப் மர்டர். இவனைக் கொன்னு பழியை எம்மேல போடப் பாத்திருக்கானுங்க.

 இப்ப என்னடா பண்றது? இப்ப கெளம்பினாதான் சரியாயிருக்கும்.  அந்த சைன்டிஸ்ட்  வேற ஒரு வாரத்துல ஃபாரின் கெளம்பிடுவாராம்” பரபரத்தான் மாறன். 

பால்ய சிநேகிதனின் துர்மரணம் இதயத்தை நொறுக்கிய போதிலும், இந்த நிலை இப்படியே தொடரும் பட்சத்தில் தன் இனமே அழிந்து விடுமோ என்ற அச்சமும் நஞ்சன் உள்ளத்தில் எழுந்தது.

“தொரை…கருக்கிருட்டுல யாருக்கும் தெரியாதபடி  நான் கடம்பனோட ஒடம்பை

மலையடிவாரத்துல போட்டுட்டு குறுக்கு வழியா வந்து பைனூர் கூட்டு ரோடாண்ட நிக்கறேன். நீங்க மோட்டாருல வந்துருங்க. பூவு..நீயும் மல்லியும் வெரசா மலைக்கு ஓடுங்க.”

கொஞ்சமும் தாமதிக்காமல் நஞ்சன் செயல்பட்ட விதம் மாறனுக்கும் ஓர் உத்வேகத்தைத் தர , பாவைக்குத் தேறுதல் சொல்லி விட்டுக் காரைக் கிளப்பினான் .

சென்னையில்…

காளான் பற்றிய ஆராய்ச்சியும், நஞ்சனின் இரத்தப் பரிசோதனை முடிவுகளும் மாறன் அனுமானித்திருந்த படியே வந்திருந்தது. 

அந்த அபூர்வக்காளானில் மற்ற காளான்களைக் காட்டிலும் இரும்புச் சத்தும், மற்ற நுண்ணுயிர்ச் சத்துகளும் அபரிமிதமாக இருந்தது. பேச்சிமலை யின் மண்வளமும்,,கார்த்திகை மாதத்தின் சீதோஷ்ணமும் அந்தக் காளானுக்கு அப்படியொரு வீரியத்தை அளித்திருந்தது. இயற்கையின் இந்த அதிசய அருட்கொடை பற்றித் தெரிந்து, அதை உண்டு தங்கள் உடம்பில் இரத்த அணுக்களையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொண்ட  மலைவாழ் மக்கள் தாவர ஆராய்ச்சியாளர்களா என்ன? 

 அதிசயப்பட்டுப் போனார் விஞ்ஞானி வர்மா. 

அவ்வப்போது எல்லா விஷயங்களையும் சிவாவிடம் பகிர்ந்து கொண்டு, பாவைக்கும் தெளிவாகத் தெரிவிக்கும்படி அறிவுறுத்திய மாறன் அடுத்த இரண்டு நாட்களில் பைனூருக்கு வந்திறங்கினான் “ரஞ்சனுடன்.”




What’s your Reaction?
+1
8
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!