Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-13

13

“எனக்கு ஒண்ணு புரியல, உங்களுக்கு அண்ணன் மேல ஏன் இவ்வளவு அக்கறை?” வெளியே நின்றிருந்தபோது நிரஞ்சனிடம் மெல்ல துருவினாள் கிருஷ்ணதுளசி.

“ஆமாம் அண்ணன் மீது, எங்கள் குடும்பத்தின் மீது எனக்கு எப்போதுமே ரொம்ப அக்கறைதான்” நிரஞ்சன் பெருமையாக அறிவித்துக் கொண்டான்.

“ஓ…உங்கள் அண்ணனுக்கு திருமணம் முடிந்ததும் நல்ல பிள்ளையாக கம்பெனியை அவரிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்கள் அப்படித்தானே?”

 நிரஞ்சன் விழித்தான் “அது… வந்து அண்ணன், இந்த ஐடி ஃபீல்டில் இன்ட்ரஸ்ட் இல்லை என்று சொல்லிவிட்டார்”

” சரி நாளைக்கு இன்ட்ரஸ்ட் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்”  

“அண்ணன் கொடுத்ததை திரும்ப வாங்கிக் கொள்ள மாட்டார்”

” அவ்வளவு நம்பிக்கை, ஆனால் சார் திருமணம் முடிந்து குடும்பமாக சேர்ந்து விட்டால் உங்கள் அண்ணன் நிச்சயம் தொழிலுக்குள்தான் வருவார் என்று எனக்குத் தோன்றுகிறது”

 நிரஞ்சனின் கண்களில் பீதி தெரிந்தது “அப்படியா சொல்கிறீர்கள்?” மண்டையை சொறிந்தான்.

 அப்பாடா! குழப்பி விட்டாச்சு! இனி மீன் பிடிக்க வேண்டியதுதான், என்று நினைத்த கிருஷ்ணதுளசி “இப்போது சொல்லுங்கள் சார். உங்கள் அண்ணனின் திருமணத்தின் மீது எதற்காக இவ்வளவு அக்கறை?”

” அது… வந்து அப்பா அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் என் திருமணத்தைப் பற்றி பேசுவதாக சொல்லிவிட்டார்…”

“அதனால்தான் உங்கள் அண்ணனுக்கு மணம் முடித்து வைக்க துடிக்கிறீர்களாக்கும்? எல்லாம் இதோ இந்த பெண்ணிற்காகத்தானே?” தனது ஃபோனில் இருந்த போட்டோவை காட்டினாள்.

” சிந்துஜா இவள் போட்டோ உங்களிடம் எப்படி…?”

” இங்கே பாருங்களேன், உங்கள் போட்டோ கூட இருக்கிறதே…” போன் ஸ்கிரீனை நகர்த்தி அருகில் இருந்த நிரஞ்சனையும் காட்டினாள்.

 நிரஞ்சன் கலவரமானான். “இதெல்லாம் உனக்கு எப்படி  தெரியும்?” கொஞ்சம் பயமாக கிருஷ்ணதுளசியை பார்த்தான்.




” எனக்கு எல்லாம் தெரியும். என்னால் முடிந்த ஒரு அட்வைஸ் தருகிறேன்.இந்த காதல் விவகாரத்தை மட்டும் உங்கள் அண்ணன் காதில் போட்டு விடாதீர்கள்.அந்த ஆள் சரியான சகுனி.காதலுக்கு தூது போய் சேர்த்து வைப்பார் என்றா நினைக்கிறீர்கள்? சிந்துஜாவிடமே போய் உங்களைப் பற்றி பேசி காதலையே கலைத்து விட்டாலும் விட்டுவிடுவார். ரொம்ப டேஞ்சரான ஆள்.ஜாக்கிரதை…”

” அஸ்வத் எதற்காக அப்படி செய்ய வேண்டும்?”

” இந்தக் காதல் இருப்பதால் தானே நீங்கள் அவரை திருமணம் செய்து கொள்ள சொல்லி பிரஷர் கொடுக்கிறீர்கள். அந்த காதலே இல்லாமல் செய்து விட்டால்…” இப்படித்தான் சார் அவருடைய புத்தி குறுக்குவாட்டில் யோசிக்கும்.

நிரஞ்சன் நெற்றிப் பொட்டை பிடித்தபடி அமர்ந்துவிட 

கிருஷ்ணதுளசியின் மனதிற்குள் நிம்மதி.ம்…ஒரு வழியாக அண்ணன் தம்பியை பிரித்தாயிற்று. அவனுக்கு இவன் கல்யாணம் செய்து வைப்பானாம்… இவனுக்கு அவன் காதலை சேர்த்து வைப்பானாம்…நடுவில் எனக்கு அனுமார் வேலை. அலுவலகத்தில், வீட்டில் என்று என்னை நிம்மதி இல்லாமல் இருக்க வைத்த நீங்கள் இருவரும் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்கள் என்று பார்க்கிறேன்.சகோதரர்கள் மேல் வஞ்சம் வைத்தாள்.

“அதாவது உன் அச்சுவுக்கு திருமணம் என்றால்தான் நீ வருவாய்.அப்படியா?” கேட்டபடியே வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார் காஞ்சனா.

“நம் அப்பா இறந்தபோது வந்தேன். பிறகு அம்மா இறந்த போதும் வந்தேன். ஆனால் அங்கே இருக்க பிடிக்காமல் இங்கே வந்து முடங்கிக் கொண்டேன்” சுஜாதாவின் இதழ்களில் ஒரு கசந்த முறுவல்.

 காஞ்சனாவின் முகம் சூம்பியது. அப்பா இறப்பிற்கு வந்தபோது காஞ்சனாவின் கணவர் நல்லதம்பி சுஜாதாவை வாசல் படி ஏற விடவில்லை. நீ உள்ளே வந்தால் மாமாவின் ஆத்மா சாந்தியடையாது என்று பேசி வெளியே அனுப்பி விட்டார்.அம்மாவின் சாவிற்கு வந்த போது யாரும் காஞ்சனா உட்பட சுஜாதாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திரும்பியும் பார்க்கவில்லை.அஸ்வின் மட்டுமே சுஜாதா அருகிலேயே அமர்ந்திருந்தவன்.

 தங்கையின் நினைவுறுத்தலில் காஞ்சனா அழுதுவிட்டார். “என் மனதார நான் உன்னை ஒதுக்கவில்லை சுஜா.உன் அத்தான் அப்படி என்னை நிர்பந்தித்து விட்டார். இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் உன் அத்தானை மீறும் தைரியம் எனக்கு வந்திருக்கிறது”

“சரி விடு பழையதை பேச வேண்டாம்” சுஜாதா அக்காவை சமாதானம் செய்ய “அதெப்படி ஆன்ட்டி முடியும்? உங்கள் சொத்துக்களையும் சேர்த்து இத்தனை வருடங்களாக இவர்களும் தானே அனுபவித்து வந்திருக்கிறார்கள்? உங்கள் அத்தானே தப்பு செய்தவராக இருக்கட்டும் .அப்போது அவர் தானே உங்களிடம் பேச வந்திருக்க வேண்டும்”

வீட்டின் வெளிப்புறம் அமைந்த சிறு திண்ணையில் இருந்து சத்தம் வர காஞ்சனா வெடுக்கென திரும்பி பார்த்தார்.கிருஷ்ணதுளசியும் நிரஞ்சனும் அங்கே அமர்ந்திருந்தனர்.

” யார் இந்த பெண்?” காஞ்சனா கேட்க, “நம் கம்பெனி ஸ்டாப் அம்மா” நிரஞ்சன் சொன்னதை கையசைத்து நிறுத்தினார் சுஜாதா.

” இவள் என்னுடைய தோழி. சொந்த பந்தங்கள் எல்லாம் என்னை கைவிட்டு ஒதுக்கி வைத்து விட்ட நிலையில் இவள் தயவால்தான் கடந்த இரண்டு வருடங்களாக நான் பிழைத்திருக்கிறேன். இவளது அறிமுகம் உன் கம்பெனியில் வேலையாள் என்பதல்ல நிரஞ்சா உன் சித்தியின் கம்பேனியன்”

சுஜாதா அழுத்தமாக பேச காஞ்சனா கிருஷ்ணதுளசியை பார்த்து புன்னகைத்தார். “என் தங்கையை நன்றாக கவனித்துக் கொண்டதற்கு ரொம்ப நன்றிமா. சீக்கிரமே எங்க அஸ்வத்துக்கு திருமணம் நடைபெறப் போகிறது .உனக்கும் அழைப்பு அனுப்புகிறோம்.தவறாமல் வந்துவிடு”

“அவள் இல்லாமல் அச்சுவின் திருமணம் நடக்காது அக்கா” சுஜாதா சொல்ல காஞ்சனா அக்காவை கூர்ந்து பார்த்தார். 

“உன்னைப் பார்த்தால் பேரன் பேத்தி எடுத்த பாட்டி மாதிரி தெரியவே இல்லை சுஜா. ரொம்பவும் இளமையாக தெரிகிறாய்” என்று பேச்சை மாற்றினார் காஞ்சனா.

” எல்லாம் என்ன அச்சுவின் வேலை”  சுஜாதா பெருமையோடு சொல்ல, “சுடிதார் ஸ்விம்மிங் மட்டும் இல்லை. சித்திக்கு ஒயின் கூட வாங்கி கொடுப்பான்” கிருஷ்ணதுளசி முணுமுணுக்க அருகில் இருந்து கேட்டுவிட்ட நிரஞ்சன் ஒரு மாதிரி விழித்தான்.

” சித்தி ஒயின் சாப்பிடுவார்களா?” என்றான் குறைந்த குரலில். 

“அதோ அந்த மரத்திலிருந்து கள் கூட இறக்கி குடிப்பார்கள்” கிருஷ்ணதுளசி தென்னை மரத்தை காண்பிக்க, நிரஞ்சன் அவசரமாக எழுந்து கொண்டான்.




” நாம் போகலாம்மா ” 

காஞ்சனா யோசனையுடன் 

கிருஷ்ணதுளசியை திரும்பி பார்த்தபடியே போனார்.

“இதென்ன ஆன்ட்டி எய்தவர் இல்லாமல் அம்பு மட்டும் வந்து சமாதானம் பேசுகிறது”

 “அதுதான் நீ எய்தவரை வரச் சொல்லி விட்டாயே! அவரே வந்தாலும் வரலாம்” சுஜாதா புன்னகைத்தார்.அவர் சொன்னது போலத்தான் நடந்தது .

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணதுளசி தாமதமாக எழுந்து நிதானமாக தலை குளித்து முடியை கோதி காய வைத்துக் கொண்டிருந்தாள். பாதி ராத்திரிக்கு மேல்தான் அஸ்வத் வீடு திரும்பியிருந்தான். அவன் அறைக்கதவு பூட்டப்பட்டிருக்க தூங்குகிறான் போலும் என அவள் நினைத்துக் கொண்டிருந்தபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. 

‘அரக்கன்’ மனதிற்குள் நினைத்தால் கூட போதும்,உடனே வந்து நிற்பான்.முணுமுணுத்தபடி போய் கதவை திறக்க எதிரே இன்னமும் முழுவதும் தூக்கம் கலையாத நிலையில் தாடியும் தலைமுடியும் பரட்டையாக கிடக்க நலுங்கிய தோற்றத்துடன் தளர்வாய் நின்றிருந்தான் அஸ்வத். 

அன்று சுஜாதாவிடம் தாடியை குறைக்கச் சொல்லுங்கள் என்று இவள் சொன்ன நாளிலிருந்து வீம்பிற்காகவே இன்னமும் அதிகமாக வளர்த்து வழிய விட்டுக் கொண்டு திரிகிறான்.

“கிருஷ்ணா! எனக்கு உன்னுடைய ரூமிற்குள் ஒரு மணி நேரம் மட்டும் தங்கிக்கொள்ள இடம் தாயேன்” கெஞ்சுதலாய் கேட்டான்.

 புரியாமல் பார்த்தாள்.”எதற்கு?”

“ப்ளீஸ், கீழே யார் யாரோ வந்திருக்கிறார்கள். எனக்கு அவர்களை சந்திக்க பிரியமில்லை. இங்கே வந்து கேட்டால் நான் இல்லை. எங்கேயோ போய் விட்டேன் என்று சொல்லிவிடு” என்றவன் அவள் தோள் தொட்டு தள்ளி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

கிருஷ்ணதுளசி புரியாமல் பாதி படிகளில் இறங்கி மெல்ல வீட்டிற்குள் எட்டிப் பார்க்க, அங்கே காஞ்சனாவும் நல்லதம்பியும் அமர்ந்திருந்தனர். 

ஓ.. அம்மா அப்பாவை சந்திக்கத்தான் சாருக்கு இவ்வளவு தயக்கமா?

 இதோ இங்கேதான் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று இவர்களிடம் போட்டுக் கொடுக்கலாமா? யோசிக்க ஆரம்பித்தாள்.

“உன் பங்கு சொத்துக்களை அப்படியே வைத்திருக்கிறேன்மா. நீ வந்து ஒரு கையெழுத்து போட்டால் எல்லாம் உன் பெயருக்கே மாற்றி விடலாம்” நல்லதம்பி சுஜாதாவிடம் குழைவாக பேசிக் கொண்டிருக்க, கிருஷ்ணதுளசிக்கு கோபம் வந்தது.

 இங்கே இவன் அப்பா சொத்துக்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்… இவனானால், வேகமாக மாறி ஏறி வந்தவளின் ஆத்திரம் இன்னமும் அதிகமானது. அங்கே அவளுடைய அறைக்குள் பெட்டில் குப்புறப்படுத்து உறக்கத்தை தொடர்ந்திருந்தான் அஸ்வத்.கட்டில் மேல் கிடந்த அவளது ஷாலை போர்வையாக மேலே மூடிக் கொண்டிருந்தான்.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இவனுக்கு எப்படி தூக்கம் வருகிறது? பெட்டில் இருந்த தலையணையை எடுத்து அவன் முதுகில் மொத்தினாள்.”கும்பகர்ணனா நீ ? எழுந்திரு”

 “ஏய் கிருஷ்ணா! சும்மாயிரு, நேற்று ஒரே ஒரு மணி நேரம்தான் தூங்கினேன். தூக்கம் வருகிறது.” குப்புறபடுத்தபடியே கத்தியவன், கையை பின்னால் நீட்டி தலையணையை பிடித்து இழுத்தான். இறுக்கமாக தலையணையை பற்றியிருந்தவள் அப்படியே அவன் மேல் வந்து விழுந்தாள்.

“குட், அப்படியே இரு. நான் தூங்குறேன்” மேலே வந்து விழுந்தவளை சுகமாய் சுமந்தபடி அவன் தூக்கத்தை தொடர ஆரம்பிக்க, “சை…சை…” என்றபடி எழுந்தவள் ஸ்தம்பித்தாள்.அறை வாசலில் நல்லதம்பியும் காஞ்சனாவும் நின்றிருந்தனர்.  

“வ… வ… வந்து” அவள் திக்கி கொண்டிருக்கும் போதே அவர்கள் வெளியே போய்விட்டனர். 

“ஏய் என்ன ஆச்சு?” அஸ்வத் கேட்க, “உ…உங்க அ…ம்மா… அ…அப்பா…” திணறினாள். 

வேகமாக எழுந்து அமர்ந்தவன் “பாத்துட்டாங்களா?” என்றான்.

 குரல் வெளியே வராமல் தலையை மட்டும் அசைத்தாள். “ரொம்ப நல்லது. எனக்கு ஒரு வேலை மிச்சம். நீ கொஞ்சம் எந்திரிச்சு அப்படி சோபாவில் உட்கார்ந்தால் நான் நன்றாக தூங்கி விழிப்பேன்.நிறைய வேலை இருக்கிறது” மீண்டும் படுத்துக் கொண்டான்.

” சை..நீயெல்லாம் ஒரு மனிதன்…” அறையை விட்டு வெளியே வந்து ஹால் ஷோபாவில் உட்கார்ந்து கொண்டாள். அவள் உடல் முழுவதும் அஸ்வத்தின் ஸ்பரிசம் கதகதப்பாய் நிரம்பியிருந்தது.

அடுத்து எதையும் நினைக்க கூட பயந்து ,இன்னமும் சிலிர்த்த தன் உடலை கடிந்தபடி யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

இரண்டு மணி நேரங்கள் அஸ்வத் நன்றாக தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது கிருஷ்ணதுளசி அங்கே இல்லை.சென்னையிலேயே அவள் இல்லை என்பது விசாரித்ததில் தெரிய வந்தது.




What’s your Reaction?
+1
45
+1
20
+1
1
+1
2
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!