Serial Stories பூவே! பூவே! பெண்பூவே!

பூவே! பூவே! பெண்பூவே! -1

 1

அரும்பு:

ஒரு செடி பூக்கும் பருவத்தில் முதலில் தோன்றுவது அரும்பு. இது பார்க்க மிகவும் சிறியதாக இருக்கும்.”

 

வங்காள விரிகுடாவின் விரிபரப்பின் நீலத்தைப் பார்த்த கயலின் கண்கள் அப்படியே அதைத் தழுவாது தழுவி நிற்கும் வானையும் தொட்டு மீண்டது.

நீலத்தை யார் யாருக்குக் கொடுத்தது? வானம் கடலுக்குத் தந்ததா? இல்லை கடல் வானத்துக்குத் தன் நிறத்தைக் கடத்தி விட்டதா? கொண்டார் யார்? கொடுத்தார் யார்?

யோசனைகள் கேள்வியாய் மாறி நிற்க..

“கயல்! கயல்விழி! எங்கடாம்மா இருக்க? வீடு தான் கடல் மாதிரி பரந்து கிடக்கே. அத விட்டுட்டு நீ என்னன்னா மாடியேறி இந்தக் கடலப் பார்த்துட்டிருக்க! அம்மா இல்லாத ஒத்தப் பொண்ணைக் கல்யாண வயசுல நிக்க வச்சு இப்படி கடலப் பார்க்க விடுறாரே உன் டாடி! அவரைச் சொல்லணும்.”

‘ம்ச்ச்! அப்பத்தா! டாடியை ஒண்ணும் சொல்லாதீங்க. எந்த பிஸினஸ் மீட்டிங்ல மாட்டிக்கிட்டு இருக்காரோ? எந்த நாட்டு பிரஜை டாடியோட கலந்து பேசிட்டிருக்காரோ?”

“ம்க்கும்! அத்தனை சம்பாத்தியமும் யாருக்காம்? இந்த ஒத்த ரோசா கயலுக்குத் தானே! ரோசாப்பூவ தனியா காத்தாட விட்டு கம்பெனிக்குப் போறாராக்கும் உன் டாடி..”

“எங்க டாடியப் பத்திப் பேசினா எனக்குக் கோபம் வரும் அப்பத்தா!” சொன்ன கயல் பொய்க்கோபம் காட்டி கண்ணை உருட்டினாள்.

அப்பத்தா அவளின் அப்பாவைப் பெற்ற தாயில்லை. உறவில்லாமல் உறவானவள். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்தவளாதலால் அவ்வப்போது பேச்சில் பழமொழியும் கிராமத்து வாடையும் அடிக்கும். அதைக் காட்டிக் கொள்ளாது தானே சட்டென்று நகர வழக்குக்கு மாற்றிக் கொண்டு விடுவாள். பின்னே கயல்விழியின் அப்பா கைலாசம் அவளை வீட்டில் அனுமதிக்கும் பொழுது முதலில் மூட்டை கட்டச் சொன்னதே அவளது கிராமத்து வழக்கைத் தானே.




வேலை ஏதாவது போட்டுக் கொடுப்பா என அந்த வீட்டில் வந்து நிற்கும் போது கயல்விழியின் அம்மா நோயில் படுத்த நேரம். சட்டென்று கயலுக்கு அப்பத்தாவானாள் அவள்.

“ஏன்ம்மா வீட்டு ஒத்தாசைக்கு வந்தவங்களப் போயி.. அப்பத்தா அது இதுன்னு..” கைலாசம் கயலைக் கேட்ட பொழுது..

“ஆயா, பாட்டின்னா அது ஜெனரலா இருக்குப்பா. அப்பத்தான்னா என்னமோ எனக்குன்னு ஒரு உறவு கிடைச்சாப்ல! உங்களோட அம்மாவ அப்பத்தான்னு தானேப்பா கூப்படணும். இவங்களே உங்களுக்கு அம்மாவாகவும் இருக்கட்டுமே. அப்படித் தானே கூப்புடுறீங்க நீங்களும்.” வழக்கடித்த கயல்விழி அப்பத்தா என உரிமை கொண்டாடியது அப்போது தான்.

அப்பாவும், மகளுமான வாழ்க்கை என்றாகிப் போனபோது அப்பத்தாவின் பேத்தியாய் மாறிப் போயிருந்தாள் கயல். முதிய கரங்களின் வருடலில் மூழ்கிப் போயின அவள் வருத்தங்கள்.

“என்னடா கண்ணு யோசன? கடலம்மா என்ன சொல்லுது? கிட்டக்க வான்னு கூப்புடுதோ? போய்ப் பார்க்கலாமா? வரியா?”

“அப்பத்தா! நானென்ன குட்டிப் பாப்பாவா? காலேஜுக்குப் போறேன். இன்னும் குட்டிப் பாப்பா மாதிரியே கூப்பிடுறீங்களே!” கயல் சிரித்தாள்.

“எனக்கு நீ பாப்பா தான் கண்ணு. ஊராள் விட்டு, உறவாள் விட்டு ஓய்ஞ்சு போயி வந்த எனக்கு அடைக்கலம் தந்த வீட்டு மகராசி கண்ணு நீ! என்னைக்கும் நீ நல்லா இருக்கணும்!” நெட்டி முறித்தாள் முதியவள்.

“நல்லா இருக்கணும்! இருக்கணும் தான் அப்பத்தா!” சொன்ன கயலின் கண்கள் தூரத்துக் கடலை வெறித்தன.

இன்னும் வானும், கடலும் நீலப் போர்வையில் நிறம் மாறாது உறவாடிக் கொண்டிருந்தன. பார்க்கப் பொறாமையாய் இருந்தது அவளுக்கு.

உறவு அது ஏன் பொய்த்துப் போனது ? இயற்கையே இப்படி ஒட்டும் உறவுமாய் இருக்கும் போது உறவொன்று ஒருத்தர் இல்லாத வாழ்வு தனக்கு ஏன் வாய்த்தது என யோசனை ஓடிற்று.

காசை நீட்டினால் கடைப்பொருள் மட்டுமில்லை காப்பாற்றவும் ஆளுண்டு எனும்போது காசைப் பறிக்கும் உறவுகள் நமக்கு எதுக்கும்மா? இது அப்பா கைலாசத்தின் வேதாந்தம். அவரது அந்த ஜபர்தஸ்தால் ஒட்ட வில்லை உறவுகள்.

இதோ இந்த அப்பத்தா மட்டும் புயலில் தப்பித்த சிறுமீனாய் வீட்டோடு ஒட்டிக் கொண்டார். யோசனையுடன் மெல்லத் தலை திருப்பிப் பார்த்தாள் கயல்விழி.

வெகு நேரம் நின்று வாதாடிய களைப்பில் அப்பத்தா மாடிப்படியில் போய் காலை நீட்டி உட்கார்ந்திருந்தார்.

“கீழ போங்க அப்பத்தா! நான் வரேன்!”

“என்னத்த.. உனக்குத் தான் உலக சஞ்சாரமே இன்னும் முடியலயே. மேலயும் கீழயும் கண்ணிமைக்காம பார்த்து நிற்கற. வயசான காலா? வாகா இடம் பத்து உட்காரேன்னு கெஞ்சுது.”




“அதான் கீழ போங்கன்னு சொல்றேன்!”

“உன்னைப் பார்த்துக்கத் தானே கண்ணு உன் டாடி என்ன நியமிச்சாரு.. அதை விட எனக்கென்ன வேலை..ஹும்!”

“அப்ப பார்த்துக்கிட்டே இருங்க! நானும் அதை பார்த்துக்கிட்டே இருக்கேன்!” எனக் கடலைக் காண்பித்துச் சிரித்தாள்.

“பொழுதே போகலன்னு போக்கத்தவ ஒருத்தி வந்தா பொழுதே இதான்னு வானத்தை காமிச்சாளாம் வாலிபக்கன்னி! அத மாதிரில்ல இருக்கு இங்க!”

“ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வழக்கு உரையாடலை!”

அப்பத்தா பதில் சொல்லாது இடுப்புச் சுருக்கிலிருந்து வெத்தலையை எடுத்து நடு நரம்பைக் கிள்ளி துளி பாக்கை வைத்து மூணாவதையும் இட்டு வாய்க்குள் அடைத்துக் கொண்டார். இனி வெற்றிலைச் சாறு வாய்க்குள் சொட்டு சொட்டாய் இறங்கும் வரைக்கும் கண் மூடி கிறக்கம் கொள்வார். அது தெரிந்த கயல்விழி நிம்மதியாய் மூச்சு விட்டுக் கொண்டவள் தனக்குள் நிழலாடும் அம்முகத்தைத் தேடலானாள்.

சதுர முகத்தில் வெட்டரிவாளாட்டம் மீசை, சின்னஞ்சிறிய ஆனால் கூர்மையான கண்கள். குறும்புப் புன்னகை. பார்த்த நிமிடம் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டவனை தொடுவானத்தின் தூரத்தில் தேடிக் கொண்டிருந்தாள் கயல்.

கையில் இருந்த ஆன்ராய்டு போன் அழைத்தது. நிம்மி.. நிர்மலா அவளின் அத்யந்தத் தோழி.

அப்பத்தா கவனிக்கும் முன் சட்டென்று எடுத்தவள்..

“சொல்லுடி நிம்மி! அசோக்கின் போன் நம்பர் கிடைச்சுதா?” என்றாள் அவசரமாய்.

“ஓ. இந்த நிம்மி நினைச்சா முடியாத காரியம் இருக்கா கயல்? வேலை சக்ஸஸ். ஆனா ஏண்டி நம்மை தெரியாத நமக்கும் சம்பந்தமில்லாத யாரோ ஒருவனின் நம்பர் கேட்கற?

கயல் மௌனமானாள்.

கண்டவுடன் மீண்டும் காண ஆசை கொண்டேன். கண்டவுடன் மனம் களித்தாடக் கண்டேன். கண்டவுடன் காதல் மனமேறக் கண்டேன். இந்த வசனங்கள் எல்லாவற்றையும் அவளால் சொல்லிவிட முடியுமா?

“என்னடி கயல் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்ன்னு தெரியாதா?”

“ம்ச்ச்! ஒண்ணுமில்லடி. சும்மா தான் கேட்டேன். சீனியராச்சே. ஏதாவது காலேஜ் கலாட்டான்னா ஹெல்ப் கேட்கலாம்ன்னு. அது கூட எனக்கில்ல. நம்ம எல்லோருக்கும் தான்.”

“அப்ப அவன் கிட்ட கேட்டே வாங்கி இருக்கலாம்ல?”

“அடியேய்..அடி இவளே.. கம்முன்னு இருடி. அப்புறம் அப்படியே பேச்சு வளரும். நாம ஏதாவது இக்கட்டுல மாட்டினா தானே ஹெல்ப் கேட்கப் போறோம். அதுவரை கமுக்கமா கிடப்போம்!”

“…”

“என்னடி நிம்மி! நீ பேசாம இருக்கறத பார்த்தா அவன் கிட்ட போய் நான் நம்பர் கேட்டத உளறிடுவ போலிருக்குது! ப்ளீஸ்டி.. அப்படி பண்ணாத!”

“இல்ல கயல். இல்ல. இங்க அம்மா கூப்பிடறாங்க. அப்புறம் பேசவா?”




நிம்மி போனை வைத்தவுடன் அசோக்கின் எண்ணை தன் நோட்பேடில் எழுதி வைத்த கயல் அந்த எண்ணை அசோக்காக நினைத்து வருடினாள்.

பெண்ணவளுக்கு காதல் அரும்பும் தருணமோ? ஒரு செடியில் பூக்கும் பருவமே அரும்பு . இங்கும் ஒரு பூ பூக்கும் தருணம் அரும்பாய் முகிழ்த்திட நேரம் பார்த்தது.

அசோக்! பார்த்த முதல் நாளில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாய்! நீ யாரோ எவரோ எனக்குத் தெரியாது. தெரியவும் அறிய வில்லை. உன்னை நான் தெரிந்தால் தானா? என்னை உனக்கு வெளிப்படுத்திக் கொள்ள ஏன் நான் மெசெஜ் அனுப்பக் கூடாது? மெசேஜா? நான் தான் அனுப்பினேன் என்றறிந்தால் நேரே என்னைத் தேடி வந்து விட்டால்? ஐயோ! டாடி கொன்னே போட்டுடுவாரே.

இல்ல.. இல்ல.. என்னை வெளிப்படுத்தாது என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். காதலில் பொய் தானே முதல் அடித்தளம். போடுடி கயல் அடித்தளத்தை! தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

ஹான்.. என்ன எழுதலாம்? எப்படி பண்ணலாம்?

நகத்தைக் கடித்துக் கொண்டு இங்குமங்கும் நடந்தவள் நீல வானில் நிலவு பூத்து நிற்க அதை மறைக்கும் மேகக் கூட்டத்தைக் கண்டாள்.

“ஐடியா!”

அப்பத்தா விழித்துக் கொண்டார்.

“என்னா கண்ணு!”

“கீழ போலாம் அப்பத்தா!”

“படிக்கற பொண்ணுல்ல. தீவிரமா என்னத்தையோ யோசிக்குது. நாம என்னத்த கண்டோம். ” என்ற அப்பத்தா வெத்திலை சுருக்கை இடுப்பில் செருகிக் கொண்டு எழுந்து கொண்டார்.

“லிப்ட்ல போவோமா கண்ணு?”

“இல்ல அப்பத்தா.. படியில் இறங்கிடறேன் நானு. நீங்க வேணா லிப்ட்ல வாங்க.”

“ஐயோ உன்ன விட்டுட்டு நானா? உங்க டாடி பார்த்தாக்கா.. வேணாம் ராசாத்தி..உங்கூடயே படில வரேன்!”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. இறங்குங்க பேசாம!” அப்பத்தாவை லிப்ஃடில் அனுப்பியவள் தான் படியிறங்கத் தொடங்கினாள்..

நாலு மாடி படியிறங்கிக் கீழே செல்லும் போது கயலுக்குள் ஒரு தீர்மானம் வந்திருந்தது.

அம்மா சரசுவின் பெயரிலுள்ள இன்னொரு போனிலிருந்து அசோக்கின் நம்பருக்கு புதிராய் தன்னை புரிய வைப்பது என்று.

புதிராடுவாளா .. புதிராவாளா பெண்?

(தொடரும்)




What’s your Reaction?
+1
13
+1
11
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!