Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-17

17

“பெண்ணா நீ ?பிசாசு.. போ வெளியே” முகுந்தன் சுமலதாவை பிடித்து வெளியே தள்ள வைசாலி அக்காவை தாங்கினாள்.

” என்ன மாமா இது?” சித்தார்த்தன் அதட்ட ,”இவள் பெண்ணே இல்லை. பேய்.  இவள் முகத்திலேயே விழிக்க நான் விரும்பவில்லை”

‘ அப்பா நீங்கள் எதற்காக கோபப்படுகிறீர்கள்? இதெல்லாம் எனக்கு முன்பே தெரியும். வாங்க உள்ளே போய் பேசலாம்” சொன்ன தங்கையை அடிபட்ட பார்வை பார்த்தாள் சுமலதா.

“ஆமாம் அக்கா, அந்த மாயாவை எங்களுக்கு திருமணமான விஷயத்தை சொல்லி சரியாக அந்த அரங்கேற்றத்தன்று வர வைத்தது நீதான் என்று எனக்கு தெரியும்” வைசாலி சொல்ல முகுந்தன் சீறினார்.

“தெரிந்தும் ஏன்மா சும்மா இருந்தாய்? முன்பே  விவாகரத்து ஆகாததை மறைத்து உன்னை திருமணம் செய்து வைத்தாள். இப்போது அங்கே உனக்கு எவ்வளவு பெரிய அநியாயம் செய்திருக்கிறாள்?”

சுமலதா கலவரத்துடன் சித்தார்த்தனை பார்த்தாள். அவள் பிறந்த வீட்டினரை கூட சமாளித்து விடுவாள்.ஆனால் இவன் ஒரு மாதிரி… இப்படி அவன் வாழ்வோடு விளையாடியவள் நான் தான் என தெரிய வந்தால்… வியர்த்து வழிய பரிதாபமாக நின்ற அண்ணன் மனைவியை மென்மையாக பார்த்தான் சித்தார்த்தன்.

“நீங்கள் என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அநியாயம் செய்திருக்கிறீர்கள்தான் அண்ணி. ஆனால் அதற்கு முன்பு உங்கள் தங்கையை எனக்கு மணம் முடித்து வைத்து விட்டீர்களே! அதற்கு நான் இந்த ஜென்மம் முழுவதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேனே! அதனால் பக்குவம் இல்லாத உங்களுடைய சிறு குழந்தை பொறாமை குணத்தால் செய்த இந்த செயலை நான் மன்னித்து விட்டேன். போங்க” புறங்கையை அசைத்தான்.

“அ…அங்கே ந…நம் வீட்டில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் தம்பி. ப்ளீஸ் என் வாழ்க்கையே போய்விடும்” கையெடுத்து கும்பிட்டாள் சுமலதா.

 “அப்பா என்னை மன்னிச்சிடுங்க” முகுந்தனின் முகம் திருப்பலை பார்த்து அழுதவாறு வெளியேறினாள் சுமலதா.

” மாயா வந்த இரவு எனக்கு மாற்று உடை கொண்டு வந்து கொடுத்து விட்டு, அம்மா வீட்டிற்கு போய் விடுமாறு ஒரே அறிவுரை.அதில்தான் அக்காவை நான் சந்தேகப்பட ஆரம்பித்தேன்.ஆனால் உங்களுக்கு எப்படிப்பா தெரியும் ?”வைசாலி கேட்டாள்.




 “நீ என்ன செய்கிறாய் என்று நோட்டமிட வந்திருப்பாள் போல, ஃபோனில் யாரோ அவளுடைய தோழியிடம் அந்த பாலே நடனக்காரியை பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அவள் என்னோட சொந்தக்காரிதான். இப்போ என்னாலதான் அவளுக்கு திரும்ப குடும்ப வாழ்க்கை கிடைச்சிருக்கு, அப்படின்னு பெருமை பேசினாள். நான் சந்தேகப்பட்டு அதட்டி கேட்கவும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்”

” உங்கள் மூத்த மகள் சின்ன வயதிலிருந்தே அப்படித்தான். வைசு மீது அவளுக்கு நிறைய பொறாமை. நான் பலமுறை உங்களுக்கு இதை உணர்த்த நினைத்தும் முடியவில்லை”  தேவகி வருந்தினாள்.

அவள் கண்கள் ஒன்றாக வீட்டிற்குள் வந்த சித்தார்த்தன் வைசாலி மேல் இருந்தது. இப்போதுதான் அவர்களை உணர்ந்த முகுந்தனும் கேள்வியாக இருவரையும் நிமிர்ந்து பார்த்தார்.

 சித்தார்த்தன் “நானும் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மாமா. ரஷ்யாவில் மிகப்பெரிய பாலே நடன போட்டி நடப்பதாகவும், அதில் பங்கு பெற மாயா செல்வதாகவும் எனக்கு தெரிய வந்தது. அப்படி செல்பவள் தொடர்ந்து அங்கேயே தங்கிவிட முடிவெடுத்து இருப்பதாக விசாரித்து தெரிந்து கொண்டேன். அவ்வாறு அவள் வெளிநாட்டில் தங்கிவிட்டால் இங்கே விவாகரத்து வாங்குவது எளிது என்று எங்கள் வக்கீல் சொல்லவேதான் எங்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன். முக்கிய காரணம் வைசாலியை மறுக்க மனம் இல்லாததுதான்”

” அண்ணனின் திருமணத்தின் போது மாநிறமாக ஒல்லியாக தாவணி அணிந்து கொண்டு அங்கும் இங்குமாக ஓடி திரிந்து கொண்டிருந்த

சிறு பெண் ஏனோ அடிக்கடி என் மனதிற்குள் வருவாள். தாவணி அணிந்த எந்த பெண்ணை பார்த்தாலும் ஏனோ உடனே வைசாலியின் நினைவுதான் வரும்”

“எனது இரண்டாவது திருமண பேச்சை வீட்டில் எடுத்த போது கொஞ்சம் பேராசையும் பொறாமையும் உண்டுதான். மற்றபடி குடும்பத்தை அனுசரித்து போய்விடுவாள்,இப்படியாவது ஒரு பெண் அமையாமல் போனாளே என்று அண்ணியை குறித்து அம்மா பேசினார்கள்.உடனே எனக்கு வைசாலியின் நினைவு வர நான் அம்மாவிடம் அவளைப் பற்றி பேசினேன்”

” எல்லோருமாக மனம் ஒத்துதான் எங்கள் திருமணம் நடந்தது. அண்ணனைப் போல் இல்லாமல் ஆண் பிள்ளைகள் வாரிசு இல்லாத உங்கள் வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்”

“ஆனால் விதி வேறு பக்கம் மாறிவிட்டது. மாயாவின் ரஷ்ய பயணம் கேன்சல் ஆகிவிட்டதால், அவள் கோபத்தில் யாரை குதறலாம் என்று இருந்தாள். அந்த நேரத்தில் அண்ணி எங்கள் திருமண விபரத்தை அவள் காதில் போட உடனே கிளம்பி இங்கே வந்து விட்டாள்”

“எல்லாம் சரிதான் தம்பி, இப்போது என் மகளின் கதி என்ன?”

“கேட்பதற்கு சினிமா வசனம் போல் இருந்தாலும் இதுதான் உண்மை மாமா. வைசாலி எனது உயிர். அவளை நான் பிரிய மாட்டேன். குறுகிய சந்து போன்ற இருளான இடத்தைத்தான் வாழ்வென்று நம்பியிருந்தவளுக்கு பரந்த வானத்தை காட்டியவள். எனக்கான வானம் அவள்.அவளுக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்குவேன். நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இதோ…”




 தனது தோளில் மாட்டியிருந்த பேக்கை பிரித்து உள்ளிருந்த பைலை எடுத்து டீபாயில் விரித்து வைத்தான்.

“விவாதத்தை ரத்து செய்வதற்கு மாயா வைத்த கோரிக்கை எங்கள் குடும்பத்தில் என் பங்காக வந்த சொத்துக்கள் முழுவதையும் அவள் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்பதுதான். அநியாயமான இந்த பேராசைக்கு மறுப்பு தெரிவித்தே நாங்கள் கேசை இழுத்துக் கொண்டிருந்தோம்”

“ஆனால் இப்போது எனக்கு வைஷு தவிர இந்த சொத்துக்கள் பெரிதாகத் தெரியவில்லை. எங்கள் குடும்ப வக்கீலை பார்த்து என் பெயரில் இருந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் இதோ மாயாவின் பெயருக்கு மாற்றி எழுதி விட்டேன். இன்று இதற்காக வக்கீலை பார்க்க போன இடத்தில்தான் வைசாலியை பார்த்தேன்.மாயா வைசாலியையே தாக்க நினைத்து விட்டாள்.இனியும் எனக்கு பொறுமை இல்லை”

” இந்த டாக்குமெண்ட்ஸை மாயாவிடம் காண்பித்து சட்டப்படி எல்லாவற்றையும் முடித்துவிட்டு வைசாலியின் கணவனாக திரும்ப வருகிறேன். அதுவரை என் மனைவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்”

முகுந்தனும் தேவகியும் சித்தார்த்தனை நெகிழ்வாக பார்க்க, அவன் புன்னகைத்தான். “என்ன மாமா ,தொழில்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு உங்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து சேர்ந்து கொண்டேனென்றால் எனக்கு இரண்டு வேளை சாப்பாடு போட மாட்டீர்களா?”

தேவகி விம்ம முகுந்தன் எழுந்து சித்தார்த்தனை அணைத்து கொண்டார். “வாங்க தம்பி உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்”

சித்தார்த்தன் வைசாலியை பார்க்க அவ்வளவு நேரமாக ,குனிந்து தன் போனில் ஆழ்ந்திருந்தவள் நிமிர்ந்தாள் “இதென்ன முட்டாள்தனம்? இந்த வீட்டோடு மாப்பிள்ளை கான்செப்டுக்கு நான்  சம்மதிக்க மாட்டேன்” உயர்ந்த குரலில் அறிவித்தாள்.

“வாங்க இந்த நியாயத்தை உங்கள் அப்பாவிடம் கேட்கலாம்”கிளம்பியவளின் பின்னால் குழப்பமாக நடந்தான் சித்தார்த்தன்.




What’s your Reaction?
+1
48
+1
29
+1
3
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!