Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-14

14

சடங்கு நடக்கும் வீட்டிற்கு அனைவரும் சீர் வரிசைகளுடன் சென்றுவிட்டனர். வீடு அமைதியாகயிருந்தது. உமாபதி தன் அறையிலிருந்து வெளியே வந்தான். கூடத்தில் கிடந்த சோபாவில் அமர்ந்தான்.

சற்று முன் அம்மாவின் முகத்தில் தாண்டவமாடிய மகிழ்ச்சி, பரவசம் அவனுடைய கண் முன்னே வந்து வந்துப் போய்க்கொண்டிருந்தது.

 ஏதோ தவமிருந்து இறைவனின் தரிசனத்தைப் பெற்ற பக்தனின் பரவசம் போல்….அவனை பட்டுப் பாவடை தாவணியில் பார்த்து அவள் பரவசம் கொண்டாள். தன் ஜென்மமே பூரணத்துவம் அடைந்ததைப் போல் ஆனந்தம் கொண்டாள்.

தனக்காக  தன் மகன் பட்டுப் பாவாடையுடுத்தி சந்தோ\ப்படுத்தினான் என்று நினைத்தாள். அதை நினைத்து உள்ளுக்குள் வேதனைப்பட்டான் உமாபதி. 

‘அம்மா…உன்னை சந்தோ\ப்படுத்துவதற்காக நான் பட்டுப் பாவாடை கட்டிக் கொள்ளவில்லை. என்னையே நான் சந்தோ\ப்படுத்திக் கொள்ளத்தான் உடுத்திக் கொண்டேன். பெண்ணாக நான் பிறந்திருந்தால் மிகவும் சந்தோ\ம் அடைந்திருப்பேன் என்று சொல்கிறாயே அம்மா. நான் பெண்ணாகத்தான் பிறந்திருக்கிறேன் என்பதை நீ அறிவாயா? வெளித்தோற்றத்தில் ஆணாகவும் உள்ளே பெண்ணாகவும் நான் மாறிக் கொண்டிருப்பதை நீ அறிவாயா அம்மா.’

உமாபதி உள்ளுக்குள் உடைந்துக் கொண்டிருந்தான்.

சில வருடங்களாக அவனுக்குள் உண்டாகும் உணர்வுகள் அவனுக்கே வித்தியாசமாகயிருந்தன. கூடப் படிக்கும் மாணவர்களோடு நெருங்கி வகுப்பில் அமர முடியவில்லை. அவர்களுடைய உடல் தன் மேல் பட்டுவிட்டால் ஏனோ பெரும் தடுமாற்றமாகயிருக்கிறது. வியர்த்து விடுகிறது. கூச்சமாகயிருக்கிறது. ஆண் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து கழிவறைக்குள் செல்ல முடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்கிறது. 




உணவு இடைவேளையின் போது மாணவிகள் பக்கம் போய் அமர்ந்து சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. மதிப்பெண் குறைந்துவிட்டாலோ ரெக்கார்ட் நோட் புத்தகத்தில் தவறு நேர்ந்துவிட்டாலோ கண்கள் குளமாகும் போது ராதாவின் மடியிலோ, சங்கரியின் மடியிலோ முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது. 

பன்னிரெண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்த போதுதான் தன்னைப்பற்றி அவன் முழுமையாக புரிந்துக் கொண்டான். தான் ஆணாகப்பிறந்துவிட்ட ஒரு பெண். அவனுக்குள் பொங்கி பூரிக்கும் பெண்மை முன்பைப் போல் அவனுக்குள் குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக பெரும் மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. தன்னை பெண்ணாக உணரும் ஒவ்வொரு கணமும் அவன் பெரும் நிம்மதியையும், ஆனந்தத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

தன்னை முழுமையாக பெண்ணாக அலங்காரம் செய்து பார்த்துக்கொள்ள துடித்துக் கொண்டிருந்தான். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அம்மாவின் புடவையை அணிந்துப் பார்த்தான். அம்மாவின் வளையல்களை, கழுத்து நகைகளை எடுத்து அணிந்து கண்ணாடியில் அழகுப் பார்த்தான். கண்மையும், பொட்டும் வைத்து ரசித்தான்.

இன்றைக்கு கூடத்தில் தாம்பாளத்தில் பட்டுப் பாவாடை தாவணியைப் பார்த்த போது சத்தியமாக உலகையே மறந்துவிட்டான். வீட்டில் உள்ளவர்கள் நினைவு எதுவுமே வரவில்லை. எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவன்தான். அவற்றை அணிந்தபின் வேறு உலகத்திற்கு சென்றுவிட்டான். தன்னுடைய அழகென்னும் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த போதுதான் அம்மா வந்துவிட்டாள்.

அம்மாவைப் பார்த்து அவன் அதிர்ந்துதான் போனான். ஆனால் அம்மா அதிர்ச்சியடையவில்லை. மாறாக அவனுடைய தோற்றத்தைக் கண்டு அம்மா முகமாற்றம் கொள்ளாமல் சந்தோ\ப்பட்டது, ரசித்தது அந்த நேரம் நன்றாகயிருந்தது. 

காரணம்… அம்மா அவளை சந்தோ\ப்படுத்துவதற்காக அவன் அப்படி உடையணிந்தான் என்று நினைத்தாள். தற்காலிகம் இது என பொற்காசுகள் கிடைத்ததைப் போல் பூரிப்பு அடைந்தாள். அதுவே நிரந்தரம் என்றால் நிம்மதியாக இருப்பளா? ஆணாகப் பிறந்தது பெண்ணாகிவிட்டது என்றால் அந்த அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ள மடியுமா? பெண் குழந்தைதான் வேண்டும் என தவமிருந்தவள். பெண் குழந்தைகள் பிறந்து இறந்ததில் தாளமுடியாத துயர் அடைந்தவள். அந்த ஏக்கத்தை போக்கிக் கொள்ள ஆண் குழந்தையை பெண்ணாய் அலங்கரித்துப் பார்த்தாள். நிஜமாகவே நான் பெண் என்றால் அலங்கரித்துப் பார்த்த அதே மகிழ்ச்சியை அடைவாளா?

;பெண் குழந்தையே  இந்தக் குடும்பத்தில் பிறக்கக் கூடாது என்ற சாபத்தால் ஆணாய் பிறந்தேனோ? அது மற்றவர்களின் வெளிப் பார்வைக்காக மட்டும்தானா? பெண்தான் வேண்டும் என அம்மா தவமிருந்ததால் ஆண் உருவில் பெண்ணாய் என்னை இந்த பூமிக்கு கடவுள் அனுப்பிவிட்டாரோ? 




அம்மா…என் எல்லா பிரச்சனைகளையும் உன்னிடம்தானே சொல்லி ஆறுதல் தேடுவேன். இந்தப் பிரச்சனையை எப்படி சொல்வேன்? சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வாய்? பெண் குழந்தையைத்தான் நீ அதிகம் நேசித்தாய். இதோ… நானும் உன் பெண் குழந்தைதான். என்னை நீ ஏற்றுக் கொள்வாயா? இந்த ரகசியம் தெரிந்தால் நீ எப்படி நடந்துக் கொள்வாய்? நீ ஆசைப்பட்ட பெண் குழந்தை உனக்கு கிடைத்துவிட்டது என பூரிப்பாயா? இல்லை… பூரிக் கட்டையால் அடித்து நொறுக்குவாயா? 

சிறு குழந்தையில் நீ என்னை பெண்ணாக அலங்கரித்ததே பாட்டிக்கு பிடிக்கவில்லை என்பாயே. ஆல்பத்தை நடுவீட்டில் போட்டு எரித்துவிட்டதாக சொல்லியிருக்கிறாயே. இன்றைக்கு நான் பெண்ணாக மாறிக் கொண்டிருப்பது தெரிந்தால்… பாட்டி எப்படி நடந்துக் கொள்வாhர்? இந்த வீட்டில் என்ன நடக்கும்? அப்பாவின் மனநிலை எப்படியிருக்கும்? இந்த ஊர், உற்றார் உறவினர் எல்லாரும் எப்படி என்னை எதிர்க்கொள்வார்கள்? வெயில் மழை நோய் நொடி என எல்லாவற்றிலிருந்தும் என்னை அரவணைத்துக் காத்த தாயே… இந்த விசயத்திலும் எல்லாரிடமிருந்தும் என்னைக்; காப்பாற்றுவாயா?

உமாபதி பலவிதமான மன உளைச்சலுடன் வீட்டிற்குள் தனியே வளைய வந்தான். 

அதே சமயம்,,,, 

சடங்கு வீட்டில் லலிதா இனம் பரியாத சந்தோ\த்தில் இருந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. உமாபதி பட்டு பாவாடை தாவணியில் நின்ற கோலமே மறுபடி மறுபடி அவளுடைய கண்களில் வந்து நின்றது. குறும்புக்காரன். அம்மாவுக்கு பெண் குழந்தைதான் பிடிக்கும் என்பதற்காக எப்படிப்பட்ட இன்ப அதிர்ச்சியை தந்தான்? இந்த வயதில் எந்த ஆண்பிள்ளையாவது இப்படி பாவாடை தாவணியை அணிந்து வந்து அம்மாவிற்கு ஆச்சரியத்தை தருவானா? பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறான். ஆனால்… இன்னும் சிறு குழந்தையைப் போல் விளையாட்டுத்தனமாகத்தான் இருக்கிறான். 

கண்ணனின் லீலைகளை நினைத்து நினைத்து ரசிக்கும் யசோதாவின் மனநிலைக்கு ஆளானாள் லலிதா. எதிரே அவர்கள் கொண்டுவந்த பட்டுப் பாவாடையை அணிந்து அலங்காரமாக சடங்கான பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்கு பெண்கள் குலவையிட்டு பூச்சூடி பொட்டு வைத்து சந்தனம் பூசிக்கொண்டிருந்தனர். 

அந்தப் பெண்ணைப் பார்த்தாள் லலிதா. அதே பட்டுப் பாவாடையணிந்து தன் முன் காட்சியளித்த உமாபதியும் கண்ணுக்குள் தோன்றினான்.

அந்தப் பெண்ணைவிட தன் மகனே அந்த உடையில் அழகாக இருந்ததை நினைத்து பெருமைக் கொண்டாள். 

பாவம் அவளுக்குத் தெரியாது. மகன் விளையாட்டுக்கு பாவாடை தாவணிப் போட்டு அவளை பரவசப்படுத்தவில்லை என்று. உண்மையில் அவன் பெண்தான் என்பது. 

தெரிந்தால் அவளுடைய நிலை என்னாகும்?

என்றைக்கும் இல்லாத மகிழ்ச்சியோடு அன்றைக்கு வீடு திரும்பினாள். சடங்கு வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுப்பண்டங்களை இலைவிரித்து அவனுக்குப் பரிமாறியபடியே பெருமையாக அவனைப் பார்த்து சொன்னாள்.

“உமா…ஒரு விசயம் சொல்லட்டா?”

“சொல்லும்மா…” சாப்பிட்டவாறே கேட்டான் மகன்.

“ரோசா… அதான் உன் உன்னுவிட்ட மாமா பொண்ணு சடங்குக்குப் போயிருந்தோமே. நாம எடுத்துட்டுப் போன பட்டுப் பாவாடையைக் கட்டித்தான் சடங்கு சுத்தினாங்க. அந்த டிரஸ்ல அவளை விட நீதான்டா ரொம்ப அழகாயிருந்தே. நீ மட்டும் பொண்ணாப் பிறந்திருந்தா நான் எவ்வளவு சந்தோ\ப்பட்டிருப்பேன் தெரியுமா?”

லலிதா பெருமூச்சுவிட உமாபதி அம்மாவை உற்றுப் பார்த்தான். 

“அம்மா…”

“சொல்லுடா”

“நான் பொண்ணாயிருந்தா உனக்கு சந்தோ\மாம்மா?”

“அதைவிட எனக்கு வேற என்னடா சந்தோஷம்?”

சிலாகித்து சொல்லும் அம்மாவையே சில நிமிடங்கள் உற்றுப் பார்த்த உமாபதி சொன்னான்.

“அம்மா… நான் பெண்தாம்மா”

அம்மா புரியாமல் சிரிக்க அவன் விவரமாக தயங்கி தயங்கி சொல்லி புரிய வைக்க ஆடிப் போனாள். 

ஆடிப் போனது மட்டுமல்ல….

மறுநாள் அந்தக் கூக்குரல் அவனுடைய காதை வந்தடைந்தது. “ஐய்யயோ….லலிதா அரளி விதையை அரைச்சுக் குடிச்சுட்டா.”




       

What’s your Reaction?
+1
9
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!