Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்-6

லக்னோ  நகரின் முக்கியமான வீதியில்  மந்தைகளைப் போல் மனிதர்கள் ‘கூட்டம்  கூட்டமாக’ வந்து கொண்டிருந்தனர். பிறந்து வளர்ந்து இருந்த இடத்திலேயே இவர்கள் அனைவரும் “அகதிகள்” .இவ்வளவு காலமும் இவர்களுக்கு சொந்தமாக இருந்தது இனி “அன்னிய தேசம்”.

அந்த கூட்டத்தில் மூன்று இளம் பெண்கள் நம் கவனத்தை கவர்கின்றனர்.  அவர்களில் ஒருத்தி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான்.” ஆம் அவள் தான்”,
இந்தக் கதையின் நாயகி ‘சக்தி’ .மற்ற இருவரையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சக்தியின் இடதுபுறம் இருப்பவள் ‘மகேஸ்வரி’. வலதுபுறம் இருப்பவள் ‘ஆயிஷா’ பீகாரில் இருந்து சக்தி தன் பயணத்தை துவங்கிய சிறிது தூரத்திற்கு எல்லாம் இவர்கள் இருவரும் சக்திக்கு பழக்கம் ஆகி விட்டனர். . இவர்கள் இருவர் பின்னும் சக்திக்கு உள்ளதுபோல் ஒரு சோக கதை உள்ளது.

அவை இந்த கதைக்கு தேவை இல்லாததாக இருப்பதால் ,இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் மகேஸ்வரி ஆயிஷா இருவரையும் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

இப்போதைக்கு காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மேலும் இரு சருகுகள். அதுவரை இந்தக் கதைக்கு போதுமானது.

மகேஸ்வரி கண் கலங்கி கண்ணில் நீருடன் நின்றுகொண்டிருந்தாள். மற்ற பெண்கள் இருவரும் அவளது கையை பற்றியபடி மகேஷ் ,நீ நன்றாக இருப்பாய், இறைவன் அருளால் இனி உன் வாழ்வில் எந்த ஒரு குறையும் வராது, உனக்காவது உன் தாய்மாமா என்று ஒரு சொந்தம் இருக்கிறது. இதோ,  இப்பொழுது நீ அவரது வீட்டிற்குச் செல்ல போகிறாய்,  சொந்த தங்கை மகளை அவர் விட்டுக்கொடுத்து விடுவாரா என்ன? உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கத் தான் போகிறார்.

என்னையும் ,ஆயிஷாவையும் பார் எவரும் அற்ற அனாதைகள் நாங்கள். எங்களை பார்த்து நீ ஆறுதல் படு. இப்பொழுது நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?.

நான் என் நிலையை நினைத்து  அழவில்லை.  பழகியது சிறிது காலம்தான் என்றாலும், உங்களை உடன் பிறந்தவர்களாக நினைத்து பழகி விட்டேன் . உங்களை பிரிய என் மனது வலிக்கிறது. அதனால் தான் இந்தக் கண்ணீர்.  நீங்கள் இருவரும் என்னுடன் என் மாமா வீடு வரை வந்து ஒன்று இரண்டு நாட்கள் தங்கி செல்லுங்களேன்.

அவளது இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து கைகளை உயர்த்தி முதலில் ஆட்சேபம் தெரிவித்தவள் சக்தி தான். மிகவும் பரபரப்பாக தன் கைகளை  உயர்த்தியவள்,  அடுத்து பேசுவதற்கு வார்த்தைகள் வராமல் தடுமாற,  அருகில் இருந்த ஆயிஷா இடை புகுந்தாள்.




‘ அம்மா தாயே’ நாளை மாலை  இங்கிருந்து பாக்கிஸ்தானுக்குச் செல்லும் ரயில் கிளம்பிவிடும். உனக்கென்ன உன் மாமன் மகன் அருகிலேயே இருக்கிறான். போனவுடன் அவன் கழுத்தை வளைத்து, கட்டிக்கொள்ளலாம். ஆனால், சக்தியின் நிலைமை அப்படியா? இங்கிருந்து டெ, பாகிஸ்தான் சென்று, அவள் கையில் உள்ள முகவரியை வலைவீசித் தேடி ,அதன் பிறகு தானே அன்வரை கட்டி அணைக்க முடியும். நீ காதல் செய்வதை பார்க்க அவள் விரும்பவில்லை.  தானே செய்து பார்க்கத்தான் விரும்புகிறாள். அப்படித்தானே ‘சக்தி’?.

சிறிதும் இடைவிடாமல், கேலி கொப்பளிக்கும் ஏற்ற ,இறக்கங்களுடன்  விழி பாவைகளை நாலாபுறமும் உருட்டி, சக்தியின் காதல் மயக்கதை கண்களில் கொண்டுவந்து காண்பித்து,   அவள் பிடித்த அபிநயம்மானது மகேஸ்வரிக்கு குபீர் சிரிப்பை வரவழைத்தது. அவளுடன் ஆயிஷாவும் சேர்ந்துகொள்ள, சக்தியை வெட்கம் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தது. உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் என்று பார் என்று கைகளை உயர்த்தியபடி சக்தி வர,….

‘  சக்தி சக்தி’ ஒரே ஒரு நிமிடம் நீ அன்வரை சந்திக்கும் பொழுது ஆயிஷாவை உடன் வைத்துக் கொள்ளாதே,  எப்படியாவது இவளை துரத்தி விட்டு விடு,  நீ அன்வரின் போட்டோவை காண்பித்ததில் இருந்து இவள் அடிக்கடி அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள். ‘அன்வர் ‘மீதான மயக்கம் உனக்கு மட்டும் தானா என்பதில் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது, என்று மகேஸ்வரி கூற, ஆயிஷா இடுப்பில் கை வைத்தபடி அவளை முறைக்க, பொய்க்கோபத்துடன் சக்தி சினுங்க, நெடுநாள் கழித்து அந்த பெண்கள் மூவரும் நிறைவாய் இருந்ததை நம்மால் உணர முடிந்தது.

அன்வர் தன்னுடைய தாயை மருத்துவ மனையில் சேர்த்து ஒரு வார காலம் ஆகியிருந்தது. இப்பொழுது அவரது உடல்நலம் வெகுவாகத் தேறி இருந்தது.  மற்ற இடங்களை விட  லக்னோவில் கலவரத்தின் சாயல் சிறிது குறைவு குறைவாக இருந்ததனால், அன்வரால் இவ்வளவு நாள் இங்கு தேங்கி இருக்க முடிந்தது. ஆனால், இந்த ஒருவார கால இடைவெளியில் தலைநகர் தில்லியில் கலவரம் உச்சத்தை தொட்டு இருப்பதை அவன் அறிந்து தான் இருந்தான். மகாத்மாவின் வருகை நவகாளியில் கலவரத்தை மட்டுப்படுத்தி இருந்தது. இந்த ஒரு வார காலத்திற்குள் அன்வருக்கு “கணேஷ்” இணைபிரியாத நண்பனாகி இருந்தான். இருவருக்கும் ஏறத்தாழ சம வயதுதான்.

மருத்துவமனையின் வாசலில் டீக்கடை வைத்திருக்கும் இளைஞன் தான் கணேஷ். அன்றாட செய்திகளை தெரிந்துகொள்ள கடைக்கு செல்ல ஆரம்பித்த அன்வருக்கு கணேஷ் உடன் சிறந்த நட்பு கிடைத்தது. எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் இருவரும் தன்னைப் பற்றி முழுவதுமாக பகிர்ந்துகொண்டனர்.

மதிய நேரம் என்பதால் கடையில் வியாபாரம் என்று எதுவுமில்லை. அன்வரும் கணேசனும் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.  நண்பா இப்பொழுது பீகாரிலும் ஓரளவுக்கு சகஜ நிலை திரும்பியதாக அறிகிறேன் என்றான் கணேஷ்.

மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போதும். யாருக்கு வேண்டும் இவர்கள் வரையபோகும் எல்லைக்கோடு. இந்த ஒற்றைக் கோடு தான் வாழ்க்கையை அடியோடுமாற்றி விடப் போகிறதா?

கணேசா அம்மா இப்பொழுது நன்றாக இருக்கிறார்கள் நினைவு முழுமையாக திரும்பி இராத பொழுதும் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது.

கேட்பதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது அன்வர்.




நான் நாளை செல்லும் பாகிஸ்தான் இரயிலில், நானும் அம்மாவும் பாகிஸ்தான் செல்வதற்கான பயணச்சீட்டை உறுதி செய்து விட்டேன்.

அன்வர் ,நிஜமாகத்தான் சொல்கிறாயா? அப்படியானால் “சக்தி”.
அம்மாவை பாகிஸ்தானிலுள்ள எங்களுடைய உறவினர்களிடம் சேர்ப்பித்து விட்டு மீண்டும் வருவேன் நண்பா. வந்து எங்கிருந்தாலும் சக்தியை தேடி அழைத்துச் செல்வேன்.

இப்பொழுது கணேசனின் முகம் வாடியது .நீ அம்மா சக்தி மூவரும் இணைந்து இங்கிருந்து கிளம்பு வீர்கள் என்று எதிர்பார்த்தேன். புதுமணத் தம்பதியர் ஆகவே உன்னையும் சக்தியையும் பாகிஸ்தான் அனுப்பி வைக்க விரும்புகிறேன். ஆனால், நீ இப்படி  சக்தியை தனித்து விட்டுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நானும் ஒன்றும் இதை விரும்பிச் செய்யவில்லை கணேசா, வேறு வழியில்லாது செய்கிறேன். உடன் பிறந்தவன் உட்பட உற்றார் அனைவரையும் இழந்தேன். உயிர் தந்தவளின் உயிரையாவது காப்பாற்ற வேண்டாமா?

உன் சூழ்நிலை எனக்கு புரிகிறது நண்பா.ஆனால்,  சக்தியை பற்றி நீ அதிகம் நினைக்க வில்லையோ என்று எண்ணும் பொழுது தான் எனக்கு வருத்தமாக உள்ளது.

இப்பொழுது அன்வரின் கண்கள் சிவந்தன. கை நரம்புகள் முறுக்கேறின,தாடை இறுகியது ,அவன் கோபமானது அவன் முக மாற்றம் தெளிவாக காட்டியது.

நான் சக்தியைப்பற்றி நினைக்கவில்லையா?!! என் கண்களைப் பார் நண்பா அதில் உள்ள கருவிழியை பார்  கருவிழியின் வழியாக ஊடுருவி உன்னால் என் இதயத்தை பார்க்க முடியும். ஆனால், அங்கேயும் பார் நான் விடும் மூச்சுக் காற்றை கவனித்துப் பார் என் இருதயத் துடிப்பை காது கொடுத்துக் கேட்டு பார் என் நாடித்துடிப்பை பரிசோதித்துப் பார் நீ பார்க்கும் இடம் அனைத்திலும் சக்தி நின்றிருப்பாள். நீ  கேட்குமிடம் அனைத்திலும் சக்தி சக்தி என்ற பெயரே ஒலிக்கும்.

என்னடா இவன் பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா? கண்ணால் காணமுடியாத காதால் கேட்க முடியாத விசயங்களை சொல்லி நான் நழுவப் பாக்கிறேன் எங்கு சந்தேகிக்கிறாயா? இதோ பார் உன் கண்களை நன்றாக திறந்து பார் கூறியபடி தன் சட்டையை கழட்டினான் அன்வர்.

அதிர்ச்சியில் கணேஷின் விழிகள் விரிந்தன. இவன் நிச்சயம் பைத்தியம் தானோ என்று ஒரு வினாடி கணேஷ் சிந்திக்கத் தான் செய்தான்.

“ஆம்” அன்பரின் உடல் முழுவதும் சிறிதும் பெரிதுமாக சக்தியின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்தது .உடலில் ஊசி முனை படும் அளவிற்கு கூட இடம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் சக்தியின் பெயர் இருந்தது. இதையும் பார் நண்பா என்று அன்வர் தன் நாக்கை வெளியே நீட்ட  நாக்கிலும் சக்தியின் பெயர்.

அவளுக்கு என்னால் உதவ முடியாததனால், அவளை பார்க்காமலே செல்கிறேனே. அதற்காக, ஒரு வேளை அவளும் ஏதாவது ஆபத்தில் இருந்தால், நான் அவளை காப்பாற்ற வருவேன் என்று நிச்சயம் ஏங்கிக் கொண்டிருப்பாள், நான் செல்லாதது அவளுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமாக இருக்கும். அதற்காக, இப்படி எப்பொழுதெல்லாம் எனக்கு நான் சக்தியை நிராகரித்து விட்டேன் என்று தோன்றுகிறதோ? அப்போதெல்லாம் என் உடம்பில் அவள் பெயரை பச்சை குத்தி இருக்கிறேன். நீ வேறு எதற்காக நண்பா என்னை வார்த்தைகளால் குத்துகிறாய்?

கணேஷ் ஓடிச்சென்று அன்வரை கட்டிக்கொண்டான்.

மன்னித்துவிடு “அன்வர் “.

சரி நாளை நீ எப்பொழுது கிளம்பப் போகிறாய்.

மாலை 7 மணிக்கு ரயில் கிளம்புகிறது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி பதில் சொன்னான் அன்வர்.

சரி நண்பா நீ பத்திரமாக போய் வா. நாளை எனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதால் நான் கடையை திறக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் ரயில் நிலையத்திற்கு, நான் உன்னையும் அம்மாவையும் பார்க்க வந்து சேர்ந்து விடுவேன். எனவே நீ என்னை இங்கே எதிர்பார்க்க வேண்டாம். நாம் இரயில் நிலையத்தில் சந்திக்கலாம்.

                            (தொடரும்….)




What’s your Reaction?
+1
4
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!