Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்-5

5

வீடுகளை ஒன்றாக எண்ணிக் கொண்டு வந்த சக்தி அன்வரின் வீடு இருந்த இடம் வரும்பொழுது திகைத்தாள். முற்றிலும் சிதிலமடைந்து இருக்கும் இந்த வீடு யாருடையது. இதை இதுபோல் தீயிட்டுக் கொளுத்தியது யார் ?இந்த வீட்டில் வாழ்ந்தவர்களின் நிலைமை என்ன?. ஐயோ பாவம் என்னை போல் தானே அவர்களும் அனாதரவாக மாறியிருப்பார்கள்.

சரி ,அன்வர் வீடு எது? இங்கே யாரிடமாவது விசாரிக்கத்தான் வேண்டி இருக்குமோ? இப்பொழுது அன்வர் என்ன செய்து கொண்டிருப்பான்? என்னை கண்டதும் என்ன செய்வான்? ஏய் சுட்டி பெண்ணே என்று கூறி என் மூக்கை கில்லி என்னை முதுகில் தூக்கி கொள்வானா?. என் கன்னத்துடன் அவனுடைய கன்னங்களை வைத்து இறுக்கி கொள்வானா உடல் முழுவதும் பரபரப்பு.

யாரிடம் கேட்கலாம் அந்த தெரு முழுவதும் பொதுவாக பார்வையை ஓடவிட்டாள். அப்பொழுது ஒரு வயது முதிர்ந்தவர் அவராக சக்தி இருந்த இடம் நோக்கி நெருங்கி வந்தார். அவர் சக்தியிடம் பேசலானார்.

” நீ யாரம்மா? ஏன் இங்கே தயங்கி நிற்கிறாய்”?.

ஐயா நான் நவகாளியில் இருந்து வருகிறேன். இங்கே இஸ்மாயில் என்பவருடைய வீட்டிற்கு வந்திருக்கிறேன். எது அவருடைய வீடு என்பது தெரியாமல் திகைத்து இருக்கிறேன். தங்களால் எனக்கு உதவ முடியுமா?

முடியாது சக்தி, என்னால் உனக்கு உதவ முடியாது. .இப்பொழுது இஸ்மாயில் குடும்பத்தினரை உன்னால் பார்க்க முடியாது.

சக்திக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்த முதியவர் என்ன எதுவும் மந்திரக்கலை கற்று வைத்திருக்கிறாரா ?அது எப்படி என்னை பார்த்தவுடன் என் பெயர் சொல்லி இவரால் அழைக்க முடிகிறது.

மாய மந்திரம் என்று ஒன்றும் இல்லை அம்மா. உன் தகப்பனார் கோவர்த்தனன் தாயார் காமாட்சி இருவருக்கும் ஏதேனும் பெரிய ஆபத்து வந்துவிட்டதா? நீ மட்டும் ஏன் அம்மா தனியாக வந்திருக்கிறாய்?




சக்திக்கு மேலும் மேலும் அந்த முதியவர் ஆச்சரியத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவளுடைய அந்த தடுமாற்றத்தை மேலும் நீட்டிக்க விரும்பாத முதியவர், நீ முதலில் என்னுடைய வீட்டிற்கு வா என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.

சக்தி கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாது மளமளவென்று அவளுக்கு சாப்பிடுவதற்கு தேவையான உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தார். நீ முதலில் சாப்பிட அம்மா நாம் பிறகு பேசலாம் என்று வாஞ்சையோடு கூறினார்.

உணவுப்பண்டங்களை கண்முன்னால் பார்த்த பிறகுதான் இரண்டு தினங்களாக தான் எதுவுமே சாப்பிடவில்லை என்ற உணர்வு சக்திக்கு வந்தது .வாயும் வயிறும் உணவை கொண்டா கொண்டா என்று துடிக்க ஆரம்பித்தன. மேலும் எதுவும் பேசாமல் மழமழவென்று உணவை அள்ளி விழுங்க ஆரம்பித்தாள்.

அவள் சாப்பிடுவதை ஆர்வமுடன் பார்த்தபடி இருந்த முதியவர் அவள் சாப்பிட்டு முடித்தவுடன் ,போ சக்தி போய் குளித்துவிட்டு வா என்று கூறினார்.

ஐயா நீங்கள் நான் கேட்ட எந்த கேள்விக்கும் விடை அளிக்க வில்லையே?
அம்மா சக்தி எனக்கு உன் தகப்பனுக்கும் தகப்பன் வயது இருக்கும். நான் சொல்வதை நீ கேட்பதால் நிச்சயம் சுகமடைவாய் போ போய் குளித்துவிட்டு வா பிறகு பேசலாம்.

மேலும் பேசுவதற்கு ஏதும் வழி இல்லாமல் ,சக்தி குளியலறைக்கு சென்றாள். குளியலறையில் இருந்து வெளிவந்த சக்தி புதியதாய் பிறந்தது போன்று  உணர்ந்தாள்.

ஐயா என்று சக்தி ஏதோ பேச ஆரம்பிக்க கையை  தூக்கி அவளை பேசாது நிறுத்தினார். இந்த கதையின் முந்தைய அத்தியாயம் முழுவதையும் சக்திக்கு விளக்கமாக அவர் சொல்லலானார்.

ஐயா என்ன சொல்கிறீர்கள் இவ்வளவு பெரிய  கொடுமைகளா  நடந்தது. இங்கே சாயிரா எவ்வளவு நல்லவர் அன்பே வடிவானவர். அவருக்கு இவ்வளவு பெரிய தீங்கு செய்ய அந்த கொலைகாரர்களுக்கு எப்படி மனது வந்தது?.

ஐயோ சாய்ந்து நிற்பதற்கும் மனச்சுமையை இறக்கி வைப்பதற்கு ஒரு சுமைதாங்கி இருக்கிறது என்று இங்கு தேடி வந்தேன். ஆனால் ,நான் தேடிவந்த சுமைதாங்கி சாய்ந்து கிடக்கிறது. என் துரதிர்ஷ்டம் தான் இவர்களையும் துரத்தியடித்து இருக்கிறதா?

ஜாதி மதம் என்று எந்த ஒரு பேதமும் பாராது என்னை தன் மருமகள் என்று சொன்ன மாமனிதர் மாண்டு போய்விட்டார். பச்சை தண்ணீரும் நான் குடிக்கலாமா?. ஆனால் நானும் உண்டு உடுத்தி உங்கள் வீட்டில் கழித்து இருந்திருக்கிறேன். ஏன் இதுபோன்ற பாவத்தைச் செய்ய என்னை தூண்டினீர்கள்?




சக்தி நீ இப்பொழுது சாப்பிட்ட இந்த சாப்பாட்டை வேண்டாம் என்று ஒதுக்கி இருந்தால் இறந்துபோன இஸ்மாயில் திரும்ப வந்து விடுவானா?. துள்ளத் துடிக்க கருவறுத்து கொலை செய்தனரே சாயிரா அவள் தான் மீண்டும் எழுந்து விடுவாளா.  நீ ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாமா நீ இழப்பதற்கு இந்த பூமிக்கு எதையும் கொண்டு வரவில்லை. நீ இழந்து விட்டதாய் நினைப்பதை பெறுவதும் உன் கையில் இல்லை. சாட்டை அவன் கையில் இருக்க நாமெல்லாம் ஆடும் பம்பரங்கள் தானே.

ஐயா நீங்கள் உங்கள் வயது முதிர்ச்சியில் பேசுகிறீர்கள் .அந்த சாட்டைக்கு சொந்தக்காரன் மட்டும் எனக்கு கிடைத்தால் அந்த  சாட்டையாலேயே என் ஆத்திரம் தீருமட்டும் அவனை  அடித்து  விலாசி இருப்பேன்.

கோவிந்தனிடம் இப்பொழுது  அட்டகாசமான சிரிப்பு .சரி விடு இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்.

“நானும் பாகிஸ்தான் செல்ல போகிறேன் .என் அன்வரை தேடி”.

அம்மா..  அன்வர் ஒன்றும் இன்ப சுற்றுலா செல்ல வில்லை. நீ அவனை தொடர்ந்து செல்வதனால் உன் பயணமும் நிச்சயமாக சுகமாக அமையப்போவதில்லை. கலவரத்தின் தீவிரம்  அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இப்போதுள்ள சூழ்நிலையின்படி- நீ இங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நவகாளியில் உனக்கு கிடைக்காத பாதுகாப்பு இந்த கிழவனின் வீட்டில் கிடைக்கும். என்னுடனே இருந்துவிடு நிலைமை சீரடைந்தது நிச்சயம் அன்வர் இங்கு வருவான் உன்னை கூட்டி செல்வான்.

பெரியவர் சொல்லி முடிக்கும் முன்னரே சட்டென்று எழுந்து கொண்டாள் சக்தி.
முடியாது, மாட்டேன், நீங்கள் சொல்வதை கேட்க மாட்டேன்., நான் ஏன் கேட்க வேண்டும்.

என்  அன்வர் சொந்த நாட்டிலேயே அகதியாய் யாருமற்ற அநாதையாய் வீதி வீதியாய் அலைந்து கொண்டிருக்கும் பொழுது, நான் மட்டும் உங்களுடைய வீட்டிற்குள் அடைந்து இந்த உடலையும் உயிரையும் வளர்க்க வேண்டுமா? அப்படி ஒரு வாழ்வு எனக்கு நிச்சயம் தேவை இல்லை.

எப்பொழுது என் மீது கொண்டுள்ள அன்பு, இன்னமும் மாறாமல் என் அன்வரின் நெஞ்சில் நிலைத்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டேனோ இனி ஒரு நிமிடமும் அன்வரை காணாமல் என்னால் இருக்க முடியாது.

இப்பொழுதுதான் நான் அன்வருடன் இருக்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து உடல் நலமில்லாத தாயை அழைத்துக்கொண்டு அப்பப்பா என்ன ஒரு வேதனை இப்பொழுது அன்வருக்கு என் தோள் வேண்டும். அவன் சாய்ந்துகொள்ள என் மடி வேண்டும். என் கைகளால் அவன் தலையை கோதி நான் அவனை ஆறுதல் படுத்த வேண்டும்.

பிறகு அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டு நான் அடைந்த துயரங்களை எல்லாம் சொல்லி அழவேண்டும். மொத்தத்தில் அவனுக்கு நானும் எனக்கு அவனும் இந்த நேரம் கட்டாயம் வேண்டும். முடிந்தால் அவன் சென்ற பாதையில் நானும் செல்வதற்கு நீங்கள் உதவுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.

உணர்ச்சிப் பூர்வமாக எழுந்துநின்று பேசிய  சக்தியை பார்க்கும்பொழுது ஸ்ரீராமன் உடன் காட்டிற்கு சென்ற தீருவேன் என்று முடிவெடுத்த சீதையைப் பார்த்த உணர்வு வந்தது கோவிந்தனுக்கு. அவள் முடிவின் உறுதியைக் கண்டு அவள் மனம் மாறுவது இயலாதது என்ற உண்மையை கண்டு அவள் பாகிஸ்தான் செல்வதற்கு உண்டான வழித்தடத்தை அவளுக்கு விவரிக்க ஆரம்பித்தார். அன்வரின் பாகிஸ்தான் வீட்டு முகவரியையும் அவளுக்குத் தந்தார்.

சிறிது மகிழ்ச்சி, சிறிது கவலை, சிறிது சோகம், சிறிது பயம் என்று பல்வேறு உணர்ச்சிகளுடன் முதியவரின் வீட்டை விட்டு வெளியேறினார் சக்தி. சிதிலமடைந்து கிடந்த அன்வரின் வீட்டில் இருந்து அவர்களுடைய குடும்ப போட்டோ ஒன்றை எடுத்துக் கொண்டாள். தன் வழிப் பயணத்தில் அது பயன்படும் என்று நம்பினாள்.

கலவரம் நடக்கும் பகுதிகளை புத்திசாலித்தனமாக தவிர்த்து அந்த இடங்களுக்கு சென்று விடாதபடி முன்னெச்சரிக்கையாகநடந்தோ அல்லது வேறு போக்குவரத்து மூலமாகவோ பெரு நகரங்களுக்கும் நுழையாமல் கிராமங்கள் வழியாகச் சுற்றிக்கொண்டு லக்னோவை நெருங்கி இருந்தான் அன்வர். இப்பொழுது ,அவனது தாயாரின் உடல்நிலை சிறிது மோசமானது பாகிஸ்தான் செல்லும்வரை தேவையான மருத்துவ வசதி கிடைக்காமல் தாயால் இருக்க முடியாது என்பதை அன்வர் நன்றாக உணர்ந்தான். எனவே, லக்னோவில் நுழைந்து மருத்துவ உதவி பெற எண்ணினான்.

அன்றைய பிரிட்டிஷ் சர்க்காரின் ஆளுமைக்கு உட்பட்டு அவர்களுடைய கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு மருத்துவமனை அதில் அன்வரின் தாயாருக்கு தனியான படுக்கையை ஒதுக்கியிருந்தார்கள். குறைந்தது மூன்று நாட்கள் அவள் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது  சிறந்தது என்று கூறியதால் பயணத்தை மேலும் தொடர முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை வந்தது அன்வருக்கு.

இந்தக் கதையை தொடர்ச்சியாக வாசித்து வரும் வாசக நண்பர்களுக்கு இந்தக் கதையில் நான் கூறியிருக்கும் சம்பவங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் உண்மையே. அன்றைய தேதியில் நடந்த உண்மை சம்பவங்களின் பின்னணியில் சிறிது கற்பனை சேர்த்து எழுதியிருக்கிறேன்.

அன்றைய தேதியில் சுமார் 2 மில்லியன் மக்கள்  இரண்டு நாடுகளுக்கும் இடையே அகதிகளாக இடம் மாறினர். கணக்கில் வராத உயிரிழப்புக்கள் ஏராளம்  உலக வரலாற்றிலேயே அதிகமாக அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்தது இந்த சம்பவத்தில் தான். இதை நீங்கள் அறிந்து கொண்டால் கதையை வாசிக்க ஏதுவாக இருக்கும்.

தாய் மருத்துவமனையில் உறங்கிக் கொண்டிருக்க வெளியே வந்தான் அன்வர். அவனுடைய கண்களில் அன்றைய தேதி நாளிதழ் பட்டது.

” மகாத்மா நவகாளி விஜயம் ”   தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது.  நவகாளியில் நடக்கும் கொடூரமான கொலை சம்பவங்களை தொடர்ந்து, மக்களை அமைதிப்படுத்த வேண்டி மகாத்மா நவகாளி யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்  என்பதாக அந்த செய்தி தொடர்ந்தது.

”  தலைநகர் டெல்லியில் காக்காய் குருவிகளைப் போல் இஸ்லாமிய சகோதரர்கள் செத்து விழுகிறார்கள் நான் செய்வதறியாது தவித்து நிற்கிறேன்” என்று ஜவகர்லால் நேரு கூறியது பத்திரிக்கையின் பெட்டிச் செய்தியாக வெளிவந்திருந்தது.

கலவரத்தின் தீவிரம் டெல்லி வரை சென்று இருப்பதை உணர்ந்து அன்வருக்கு லேசான நடுக்கம் பரவியது. மகாத்மா இப்பொழுது இந்தப் பிரச்சனைக்கு உள்ளே வந்திருப்பதால் கலவரம் விரைவில் ஒடுங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த மாமனிதரின் வார்த்தைக்கு கட்டுப்படாதவர்கள் இந்த பூவுலகில் யார் இருக்கிறார்கள்.

“சுதந்திரத்திற்கு பின்பு இந்தியா இந்துஸ்தான் ஆகிவிடும்.  அங்கு முஸ்லீகளுக்கு இடமில்லை எனவே, இந்துக்களுக்கு ஒரு இந்துஸ்தான் முஸ்லிம்களுக்கு ஒரு பாகிஸ்தான்” என்பது போன்ற வாசகங்கள் தெருவில் மட்டுமல்ல பத்திரிக்கையிலும் இடம்பெற்றன. அன்றைய தேதியில் இந்த வாசகத்தை வெளியிட்ட ஜின்னாவின் புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.

இவை தவிர, தனித் திராவிட நாடு கேட்கும் ஈவேரா பெரியாரின் கருத்துக்களும் பத்திரிக்கையில் பிரசங்கம் ஆகியிருந்தன.

அன்வருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.  பிய்த்து விடுங்கள் பிய்த்து எறிந்துவிடுங்கள் துண்டு துண்டாக வெட்டி எறியுங்கள். ஜாதி வாரியாக மொழிவாரியாக, இனவாரியாக, மதவாரியாக என்று இந்த நாட்டை துண்டாடுங்கள். அப்படியாவது உங்களுடைய ஆசை தீரட்டும். ஏதும் அறியாத மக்களாவது உயிர் பிழைக்கட்டும்.

நாளிதழை மடித்து வைத்துவிட்டு கடையிலிருந்து வெளியேறினான். கையில் தேவைக்கு அதிகமாகவே பணம் இருந்தது. ஆனால், நிம்மதியாக சாப்பிட முடியவில்லை .ஓரிடத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேலே நிற்கவும் பயமாக இருக்கிறது என்ன கொடுமை இது. மீண்டும் மருத்துவமனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இப்பொழுது, அவன் மனம் முழுவதும் சக்தி வந்து சப்பணமிட்டு அமர்ந்து கொண்டாள்.

” சக்தி, நீ எங்கிருக்கிறாய்; நீ நலம்தானே; உன் தாய் தந்தையர்கள் அனைவரும் நலம் தானே; நாம் இருவரும் எப்போது சந்திக்கப் போகிறோம்”?

உன்னை பார்க்காமர்ல் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்  நரகமாக கழிகிறது. சக்தி என்னை மன்னித்துக்கொள். தாயின் இயலாமையின் போது என்னால் நவகாளிக்கு வந்து உன்னை பார்க்க முடியவில்லை. அவரை பத்திரமாக பாகிஸ்தான் கொண்டு சென்று விட்டு, உடனடியாக உன்னை நோக்கி பறந்து வருவேன்.

நீ ஏழு மலை ,ஏழு கடல் தாண்டி இருந்தாலும் சரி, இந்திரலோகத்தில் அடைபட்டுக் கிடந்தாலும் சரி, எமனின் பாசக் கயிற்றில் பிடிபட்டு கிடந்தாலும் சரி ,அத்தனையும் உடைத்தெறிவேன்.  என் உள்ளங்கையால் உன்னை தூக்கி என் உள்ளச் சிறையில் தாழ் இடுவேன். பொறுத்து இரடி பெண்ணே!!!.

(தொடரும்..…)




What’s your Reaction?
+1
6
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!