Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-1

 1

திருமணமான இரண்டாம் நாளே சுமதியின் முகத்தில் சோக ரேகை படரத் துவங்கியதைக் கண்ட அவள் தாய் ரங்கம்மா, ரகசியமாக மகளிடம் விசாரித்தாள்.  “ஏண்டி மூஞ்சி இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்கு… என்னாச்சு?”

தாயை ஏறிட்டுப் பார்த்து விரக்தியாய்ச் சிரித்த சுமதி, “குரங்காட்டம் ஒரு மாப்பிள்ளையைக் கட்டி வெச்சிருக்கீங்கல்ல… அதான் நானும் குரங்காட்டம் மாறணும்னு இஞ்சியைத் தின்னிருக்கேன்… போதுமா?” பொரிந்து தள்ளினாள்.

“ச்சூ… கொஞ்சம் மெதுவாப் பேசுடி… யார் காதிலாவது விழுந்து வைக்கப் போகுது” மகளை அடக்க முயன்றாள் ரங்கம்மா.

“ஏம்மா… போயும் போயும் ஒரு நாற்பத்தியஞ்சு வயசுக்காரனுக்கு ரெண்டாந்தாரமா என்னைக் கட்டி வெச்சதுமில்லாம…  “ஏண்டி மூஞ்சி இப்படி இருக்கு?”ன்னு குசலம் வேற விசாரிக்க வந்திட்டியா?… போம்மா…. போய் வேற வேலை எதுனா இருந்தா பாரும்மா… என் கிட்டப் பேசி என்னோட எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தாதே!” ’கடு…கடு’ முகத்துடன் தாயைத் துரத்தினாள்.

ஆனால், ரங்கம்மா அவள் பேச்சை சற்றும் பொருட்படுத்தாமல், “ஆமாம்டி… உனக்கும் வயசு முப்பத்தி மூணாச்சு… இதுக்கு மேலேயும் உன்னை வீட்டோட வெச்சிருந்தா.. கல்யாணம்ங்கற ஒண்ணே உன் வாழ்க்கைல நடக்காமலே போயிருக்கும்… அதான் யார் தலையிலாவது கட்டிட்டா போதும்ன்னு இந்த மாப்பிள்ளைக்குக் கட்டி வெச்சோம்” தங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னாள்.

தாய் சொல்வதிலிருந்த யதார்த்த உண்மையை புரிந்து கொண்ட சுமதி சற்றே இறங்கி வந்து, “உங்களோட நிலைமை எனக்கும் புரிஞ்சதினாலதான்… நானும் ரெண்டாம்தாரமாப் போக ஒத்துக்கிட்டேன்… ஆனா இங்க வந்ததுக்குப் பின்னாடிதான் தெரிஞ்சுது… இங்க ஒரு சுண்டெலி இருக்குன்னு” என்றாள்.

“சுண்டெலியா?… என்னடி சொல்றே?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள் ரங்கம்மா.

“உன்னோட மாப்பிள்ளைக்கு… அதான் என் புருஷனுக்கு ஏழு வயசுல ஒரு மகன் இருக்கான்னு உனக்குத் தெரியுமா?”

“ம்…தெரியுமே!….”

“அதையேன் என் கிட்டச் சொல்லலை?”

“அது…வந்து…” என்று இழுத்த ரங்கம்மா, “ஏய்… உண்மையிலேயே அந்த மகனுக்கு ஒரு தாய் வேணும் என்பதற்காகத்தான் மனுஷன் இந்தக் கல்யாணத்தையே பண்ணிக்கிட்டார்… அது தெரியுமா உனக்கு?” என்றாள் சமாளிப்பாய்.

“அம்மா… இப்பச் சொல்றேன் கேளு… ஒண்ணு…. அந்த சுண்டெலி அந்த வீட்ல இருக்கணும்… இல்லை நான் இருக்கணும்…” ஆணித்தரமாய்ச் சொன்னாள் சுமதி.

“ச்சூ.. மெதுவாப் பேசுடி… ஹால்ல உட்கார்ந்திட்டிருக்கற உன் புருஷனுக்குக் கேட்டுடப் போகுது” பயந்தாள் ரங்கம்மா.

“கேட்டா கேட்டுட்டுப் போகுது… அதைப் பத்தி எனக்கொண்ணும் பயமில்லை” அலட்சியமாய்ச் சொன்ன சுமதியின் அருகில் வந்து,

“த பாருடி… நீ என்ன காரணத்துக்காக அந்தப் பயலைத் தொந்தரவா நெனைக்கறே!ன்னு எனக்குப் புரியாமலில்லை… கொஞ்ச நாள் பொறு… போன உடனேயே அந்தப் பயலைத் துரத்த நினைச்சேன்னா… அக்கம்பக்கத்துல இருக்கறவங்க சித்திக் கொடுமை… அதுஇதுன்னு பேசி.. உன் பேரைக் கெடுத்துடுவாங்க…”

 “அதுக்காக…?”

  “அதுக்காகத்தான் சொல்றேன்… ஒரு ஆறு மாசம் எப்படியோ பொறுத்துக்கோ.. அப்புறம் அந்தப் பயலை… எங்காவது வெளியூர் ஸ்கூல்ல சேர்த்தி… ஹாஸ்டல்ல வெச்சிடுவோம்” ரங்கம்மா தன் திட்டத்தைச் சொன்னதும், அதை ஏற்றுக் கொள்வது போல் தலையை மேலும், கீழுமாய் ஆட்டிய சுமதி,

“நீ சொல்றதும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு.. சரி… நடக்கட்டும்”

“சரி…சரி…பேசிட்டே நிற்காதே… ஹால்ல உட்கார்ந்திருக்கற மாப்பிள்ளைக்கு குடிக்க எதுனாச்சும் கொண்டு போய்க் குடு”

”என்ன இருக்கு?” திருப்பிக் கேட்டாள் சுமதி.

“காஃபி… டீ… எல்லாம் இருக்கு”

“அதெல்லாம் வேண்டாம்… லெமன் இருக்கா?”

“ம்… இருக்கே”




 

“அதுல ஜூஸ் பிழிஞ்சு எடுத்திட்டு வா… நான் போய் ஹால்ல அவர் கூட இருக்கேன்” சொல்லி விட்டு ஹாலுக்கு ஓடினாள் சுமதி.

“கடவுளே… இந்தப் பொண்ணு பேசறதைப் பார்த்தா பெரிய பிரச்சினையைக் கொண்டு வந்திடுவா போலல்ல இருக்கு” மனசுக்குள் புலம்பிக் கொண்டே எலுமிச்சம்பழத்தை நறுக்கினாள் ரங்கம்மா.

கண்ணாடி டம்ளர்களில் ஜூஸை நிரப்பி, ஒரு டிரேயில் வைத்து எடுத்துக் கொண்டு வரும் போது ஹாலில், மாப்பிள்ளை குமரேசன் மகன் சரவணன் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருந்தான். எதிர் சோபாவில் அதை முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் சுமதி.

ஜூஸை ரங்கம்மா நீட்ட, “சரவணா… எடுத்துக்கப்பா” என்றார் குமரேசன்.

முகம் மாறினாள் சுமதி.

பையன் தயங்க, “நீங்க எடுத்துக்கங்க மாப்ள” என்றாள் ரங்கம்மா.

ஆனால், குமரேசனோ ஒரு ஜூஸ் டம்ளரை எடுத்து மகன் கையில் கொடுத்து விட்டு, “டீப்பாய் மேலே வெச்சிடுங்க அத்தை… நான் அப்புறமா எடுத்துக் குடிச்சுக்கறேன்” என்றார்.

முகம் மாறிப் போன ரங்கம்மா, டிரேயை டீப்பாயின் மீது வைத்து விட்டு நகர, சுமதி ஆரம்பித்தாள்.  “ஏங்க… எங்கம்மா எத்தனை ஆசையா மாப்பிள்ளைக்கு ஜூஸ் போட்டுட்டு வந்து தர்றாங்க… ஒரு மரியாதைக்காவது ஒரு டம்ளரைக் கையில் எடுத்து அவங்களை சந்தோஷப்படுத்தக் கூடாதா… என்னமோ வேண்டா வெறுப்பா “அங்க வெச்சிட்டுப் போங்க”ன்னு சொல்றீங்க…”

“அதான் சரவணன் எடுத்திட்டானே?” சமாளித்தார் குமரேசன்.

“அவனா?… அவனா?  இந்த வீட்டு மாப்பிள்ளை?”

சூழ்நிலை இறுக்கமாகிப் போய் விடக் கூடாது, என்கிற நல்லெண்ணத்தில், “இப்ப என்ன?… நானும் ஒரு டம்ளர் ஜூஸை எடுத்துக்கணும்… அவ்வளவுதானே?… எடுத்திட்டாப் போச்சு” சொல்லியவாறே குமரேசன் ஒரு ஜூஸ் டம்ளரைக் கையிலெடுக்க,

“இதை அப்பவே செஞ்சிருந்தா… எங்கம்மா மனசும் குளிர்ந்திருக்குமல்லவா?”

“இப்ப மட்டும் என்ன?.. உங்கம்மாவை வரச் சொல்லு…அவங்க முன்னாடியே ஜூஸை எடுக்கறேன்” தமாஷாய் குமரேசன் சொல்ல,

“எங்க குடும்பத்து ஆளுங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு அத்தனை நக்கலா இருக்கு… அப்படித்தானே?” சுமதியின் முகத்தில் கோப அலைகள் வேகமாய் உருண்டன.

“என்ன சுமதி… இப்பவே உங்க குடும்பத்து ஆளுங்க… எங்க குடும்பத்து ஆளுங்க!ன்னு பிரிச்சுப் பேசறே?…” குமரேசன் சாதாரணமாய்த்தான் கேட்டார்.

”வெடுக்”கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, வேகமாய் எழுந்து உள்ளறையை நோக்கிச் சென்றாள் சுமதி.

விக்கித்துப் போய் அமர்ந்தார் குமரேசன்.

ஒரு சிறிய அமைதிக்குப் பின், தந்தையின் தாடையைத் தொட்ட சரவணன், “அப்பா… நாம நம்ம வீட்டுக்கு எப்ப போவோம்?” சன்னக் குரலில் கேட்டான்.




சுமதியின் அந்த தாறுமாறான நடவடிக்கை சிறுவன் மனதில் ஏதோவொரு வகையில் சின்னதாய் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, என்பதை எளிதாய்ப் புரிந்து கொண்ட குமரேசன், “ராத்திரி ஆயிடுச்சல்லப்பா… விடிஞ்சதும் போகலாம்” என்றார். 

“இல்லைப்பா… இப்பவே போகலாம்ப்பா” சரவணன் குரலில் அச்சம் கலந்த கெஞ்சல்.

மகனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில், “அது வந்து… நம்ம வீடு இங்கிருந்து ரொம்ப தூரம்ப்பா… காத்தால போகலாம்ப்பா” என்றார்.

அரை மனதுடன் சரியென்று தலையாட்டி விட்டு படுக்கையறைக்குச் சென்று மெத்தை மீது ஏறிப் படுத்துக் கொண்டான்.

முகம் மாறிய சுமதி, “அம்மா… அம்மா” என்று கத்த, சமையலறையிலிருந்து வேகமாய் வந்தாள் ரங்கம்மா, “என்னடி…என்னாச்சு?”

“அங்க பாரு” என்று அவள் கைகாட்டிய திசையில் பார்த்து அதிர்ந்தாள் ரங்கம்மா, “என்ன மாப்ள?… பையனை என் கூட ஹால்ல படுக்கச் சொல்லலாம் அல்ல?”

“அது… வந்து… அவங்கம்மா போனதிலிருந்து அவன் என் கூடத்தான் படுத்துக்கறான்…” தடுமாறினார் குமரேசன்.

“இருக்கட்டுங்க… அதுக்காக எப்பவுமே அப்படி படுத்துக்க முடியுமா?… உங்களுக்கு ஒரு சம்சாரம் வந்த பிறகும் அதையே தொடர முடியுமா?… தனியா படுக்க பழக்கி விடுங்க” 

ரங்கம்மா சொல்வதைக் கேட்டு மிரண்டு போன சரவணன், அவனாகவே எழுந்து, “அப்பா… எனக்கு அம்மா புடவையைக் குடுங்க.,..நான் அதைக் கட்டிபிடிச்சுக்கிட்டு வெளிய படுத்துக்கறேன்… நீங்க இங்கியே படுத்துக்கங்க” சொல்லியவாறே எழுந்து போய் பேக்கிலிருந்த தன் அம்மா புடவையை எடுத்து முகர்ந்து பார்த்துக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான்.

குமரேசனுக்கு நெஞ்சு கனத்துப் போனது. அவனை திருப்பிக் கூப்பிட்டு, “வாடா… வந்து இங்கியே படுத்துக்கடா” என்று சொல்ல உதடுகள் துடித்தாலும் மனம் அதை செயலாக்க மறுத்தது.




What’s your Reaction?
+1
8
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
7
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!