Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்-3

3

சக்தியின் நினைவுகள் வலுகிய  அந்தக் கடைசி வினாடி வரை, கண் முன் நடந்த அந்த சம்பவத்தை அவளது உள்ளம் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

இது ஏதோ ஒரு கெட்ட கனவு. இதோ இன்னும் சில வினாடிகளில் விழிப்பு வந்துவிடும்.  “சே சே”, என்ன ஒரு மோசமான கனவு விழித்தவுடன் இந்தக் கனவைப் பற்றி அம்மாவிடம் கூறி, அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள வேண்டும். தந்தையின் கைகளை எடுத்து தோளில் சுற்றிக் கொள்ள வேண்டும்.  ஆம்! நான் விழிக்க வேண்டும். உடனடியாக விழிக்க வேண்டும் சக்தியின் உள்ளம் மீண்டும் மீண்டும் இதை ஜபிக்க ஆரம்பித்தது.  அதனால்தானோ என்னவோ சில நிமிடங்களிலேயே அவளுக்கு நினைவு திரும்பியது.

அப்பாபா… அம்மாமா… என்ன வழி, இது ஏன் என் தலை இவ்வளவு பாரமாக இருக்கிறது?.. இப்பொழுது நான் எங்கே இருக்கிறேன்?.என்ன ஆயிற்று என் வீட்டிற்கு? ஏன் மேற்கூரை இல்லாது போனது? .கண்விழித்த சக்திக்கு நட்சத்திரங்களை பார்க்கும்பொழுது, இந்த சந்தேகம் எழுந்தது. அப்படியானால், நான் வீட்டில் இல்லையா ?பிறகு எங்கே இருக்கிறேன்? உண்மை நிலையை உணர தலையை லேசாகத் தட்டிக் கொண்டாள்.

அவள் மனம் நடந்த சம்பவங்களை நாடகக் காட்சிகளாக அவளுக்கு காண்பிக்க துவங்க, அவைகளை முழுவதுமாக உள்வாங்கும் தைரியம் சிறிதுமின்றி வேகமாக பள்ளத்தை விட்டு மேல் ஏறினாள்.
அங்கே கலவர கும்பல் எதுவுமில்லை சாலை வெறிச்சோடி கிடந்தது. அவளது நெற்றியில் இருந்து வழிந்த ரத்தம் கண் இமைகளில் படிந்து உறைந்திருக்க வேண்டும். அது அவளது பார்வையை மசமசப்பாக  ஆக்கியது. சுற்றிலும் அப்பிக் கிடந்த இருளுக்கு இடையே  அங்கே என்ன…… அது என்ன ….. அவளுக்கு தெரிந்து தான் இருந்தது. இருந்தாலும்…….மெல்ல முன்னேறினாள்.

இல்லை ! !  …..இது உண்மையாக இருக்கக் கூடாது. “இறைவா”! என் வாழ்வில் ஏன் திடீரென்று இவ்வளவு பெரிய சோதனைகளைத் தருகிறாய்? தலையில்லா முண்டமாக கிடந்த தாய் தந்தை அருகில் இருந்து கத்தி கதறினாள்.

ஐயோ!! நான் என் தாய் தந்தையின் முகத்தை காண வேண்டுமே? எங்கே அவர்களது தலைகள்? அவளது நினைவலைகள் அவள் விழுந்து கிடந்த பள்ளத்தில்  அவை உருண்டு  வந்ததை தெளிவுபடுத்தின.

இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? பள்ளத்திற்குள் இறங்க வேண்டுமா ?அருந்து போன என் தாய் தந்தையின் தலைகளை தேட வேண்டுமா? இவர்களது இந்த உயிரற்ற உடலை என்ன செய்வது? தகன கிரிகைகள் செய்ய வேண்டாமா?
உறவுகளுக்கு சொல்வது எப்படி?

“ஐயகோ”! இப்படி கேட்பதற்கும்  நாதியற்று  வீதியில் வந்து செத்தொழிந்து போனோமே….மார்பில் அறைந்து கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள் சக்தி.

அந்த கொடுமையான இரவு இன்னும் முடிந்து விட்ட பாடில்லை. மீண்டும் ஒரு கும்பல் அந்த பாதை வழியே வரும் சலசலப்பு கேட்டது. சக்தியின் புலன்கள் கூர்மை ஆயின. வருகிறார்கள் யாரோ வருகிறார்கள், ஒருவரல்ல பலபேர்,  இல்லை என்றால் ஒரு கூட்டம்,  அந்த ரத்த வெறிபிடித்த மிருகங்களாக இருக்கக்கூடும்.

வாருங்களடா,  வேசியின் மகன்களா, நீங்கள் எத்தனை பேர் வந்தால் என்ன? உங்கள் எவருடைய உடலிலும் தலை இருக்க இன்று நான் அனுமதிக்கப் போவதில்லை. தாய் தந்தை உடல் அருகே கிடந்த நீண்ட வாள் ஒன்றை இரண்டு கைகளிலும் இறுகப் பற்றியபடி சுட்டெரிக்கும் சூரியன் போல் சிலிர்த்து எழுந்து நின்றாள்.

‘வேண்டாம் சக்தி.'”இங்கே நிற்காதே, போய்விடு”. இது என் தந்தையின் குரல் அல்லவா? சுற்றிலும் திரும்பிப் பார்த்தாள். கீழே விழுந்து கிடந்த சடலம் அப்படியே இருந்தது. இருளில் எவரும் தென்படவில்லை.

உடனே போ, ” போய்விடு”  போ  “போ சக்தி”  இப்பொழுது அவளது தந்தையின் குரலுடன் தாயின் குரலும் சேர்ந்து கொண்டது.




“போய்விடு குழந்தாய்” போ போ… போய்விடு, முரடர்கள் தூக்கிச் சென்ற பொழுது விஜயலட்சுமி அக்கா  ‘ஓ’ என்று கதறி அழுத அந்த கதறல் ஒலி இப்பொழுது அவள் காதுகளில் மீண்டும் ஒலிக்களானது. விஜயலட்சுமியின் எண்ணம் வந்ததுமே சத்தியை பயம் சூழ்ந்து கொண்டது. இதற்குள் காலடி ஓசை மிக அருகில் ஒலிக்க ஆரம்பித்தது.  வருவது யாராக இருந்தாலும் அவர்கள் கண்களில் நான் படப் போவது இல்லை.

முடிவெடுத்த அடுத்த வினாடியே சக்தி பாதையில் இருந்து விலகினாள். இருளில் முழுவதுமாக தன்னை இழுத்துக்கொண்டாள்.  இனி இந்த இடத்தில் இருப்பது முட்டாள்தனம். இது பிரதான சாலையாக இருப்பதால்தான் அடிக்கடி நபர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். முதலில் நாம் இந்த சாலையை விட்டு விலக வேண்டும். முடிவு எடுத்த உடனேயே அதை செயல் படுத்தும் நோக்கத்துடன் தாய் தந்தைக்கு மனதிற்குள்ளேயே அஞ்சலியை செலுத்தி விட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

இப்பொழுது பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. இரவு முழுவதும் சக்தி உறங்கவே இல்லை.  எந்த ஒரு இடத்திலும் ஓய்விற்காக நிற்கவும் இல்லை. “சாவி” கொடுத்த பொம்மை ஒன்று எவ்வாறு நடந்துகொண்டிருக்குமோ, அதுபோல பீகார் செல்லும் கிளைச் சாலையில் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில், விஷ ஜந்துக்களை பற்றிய அச்சம் சிறிதுமின்றி, நடந்து கொண்டே இருந்தாள். பாதையில் வளர்ந்திருந்த முட்செடிகள் அவள் உடலில் ஆங்காங்கே  ரத்த கோடுகள் போட்டு இருந்தன. சில இடங்களில் உடை கிழிந்து இருந்தது. இவையெல்லாம் குறித்த எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் ஜடமாக நடந்து கொண்டிருந்தாள்.   கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.

இப்பொழுது நான் என்ன செய்வேன், ‘ஆண்டவனே’ ஓர் இரவுக்குள்ளாக
என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றங்களா ,  தாய் தந்தையர்களே என்னை இப்படி நிற்கதியாய் தெருவில் நிற்க வைக்கத்தான் இப்படி பார்த்துப் பார்த்து வளர்த்தீர்களா. உள்ளுக்குள் சுயபச்சாதாபம் இரக்கம் பொங்கிக் கொண்டு வர அழுகை குமுறிக் கொண்டு வெளிவந்தது.
பீகார் போனாலும் நான் என்ன செய்யப்போகிறேன். பெற்ற தாயும் தந்தையும் இல்லாமல், இப்படி சிங்காரம் கெட்டு ,நாதியற்ற அனாதையாய், அடைக்கலம் கேட்கும் அபலையாய் , வாழ வழி தெரியாத  தரித்திரத்தை உடையவளாய், இப்படியா  இந்தநிலையிலா அவள் அன்வரின் குடும்பத்திற்குள் நுழைய வேண்டும்.

அன்வரின் வீட்டிற்குள் நுழைவதைப் பற்றி எப்படி எல்லாம் கனவு கண்டிருந்தாள். அத்தனையும் கனவாகவே போனதே. என்னைப்போன்ற நிர்க்கதியான வளை அவர்கள் குடும்பத்தினர் இனி ஏற்பார்களா? முன்பே அவர்கள் திருமணம் என்பது மிகவும் கடினமான ஒரு விசயம் தான். ஆனால், இப்பொழுது அது யோசித்து கூட பார்க்க முடியாத ஒரு விசயமாக தெரிகிறதே. என்னைப்போன்ற  ஒரு அனாதையை அவர்கள் வீட்டிற்குள்ளாவது ,அனுமதிப்பார்களா?ஒருவேளை என்னை வீட்டின் வாசலிலேயே நிறுத்தி வைத்து, “போ போ “என்று விரட்டி விடுவார்களா ?இப்படி தெரு நாய்க்கும் கேவலமாக போனேனே!.

மீண்டும் சுய பச்சாதாபம் இரக்கம் சேர்ந்துகொள்ள அழுகை விம்மி வெடித்தது.

திடீரென்று ஏதோ தைரியம் வந்தவளாக தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ள ஆரம்பித்தாள். அன்வரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி நான் ஏன் சிந்திக்க வேண்டும்,. என்னை பற்றி சிந்திக்க அன்வர் ஒருவன் மட்டும் போதும்.  அவன் நிச்சயமாக என்னை கேவலமாக நினைக்க மாட்டான். இந்த ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து எதிர்த்தாலும்  சக்தி தான் என் மனைவி என்று மார்தட்டி சொல்வான்.  அப்படித்தானே அன்று காளி கோவிலில் வைத்து சத்தியம் செய்தான். அவன் சத்திய நந்தன் சத்தியம் தவற மாட்டான்.

என்னை ஏற்றுக் கொள்வாய் தானே அன்வர்? என்னை கைவிட்டு விட மாட்டாயே?” அன்வர்” ?நீ இன்றி இப்பொழுது எனக்கு வேறு கதி இல்லை.

மனதிற்குள் புலம்பியபடி அன்வர் மேல் அவர்களது காதல் மேல் வைத்திருக்கும்  முழு நம்பிக்கையும் வைத்தபடி, கால் அடிகளை வேகமாக எடுத்து வைத்தாள். ஊரை விட்டு கிளம்பிச் சென்ற அன்றே பீகாரின் அவர்களின் வீட்டு விலாசத்தை சக்தியிடம் சொல்லித்தான் சென்றிருந்தான் அன்வர். அந்த விலாசம் சக்தியின் நெஞ்சில் கல்வெட்டுகளால் பதிந்து போயிருந்தது். எனவே வீட்டை கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கப்போவதில்லை என்று நம்பினாள்.

நெடுந்தூர நடை ,சிறிது நேர மாட்டுவண்டிப் பயணம் ,சிறிது நேரம் குதிரை வண்டிப் பயணம் பேசிக்கொள்ள வழித்துணையாய் ஆதவனும், மரம் செடிகளும் எப்படியோ நிற்காமல் சலைக்காமல் ஓட்டமாக ஓடி இதோ பீகார் நகரத்திற்குள் வந்துவிட்டாள்.

பீகார் நகரத்திற்குள்ளும் ஆங்காங்கே கலவரத்தின் சாயல்கள் தெரிந்தன. மீண்டும் சூரியன் இன்னும் ஒரு இரவுக்கு வழி கொடுத்து விடை பெற ஆரம்பித்திருந்தான். இரவு சக்தியை மிரட்ட ஆரம்பித்தது. கூடாது, கூடாது இருள் சூழ்ந்து விடக்கூடாது. துணை இல்லாத மற்றொரு இரவை சந்திக்க நிச்சயமாக அவள் இப்போது தயாராக இல்லை.

“ஏய் ஆதவனே”, இவ்வளவு நேரம் நன்றாகத்தானே பேசிக்கொண்டு வந்தாய்? இப்படி திடீரென்று சென்றுவிட்டால் எப்படி? இன்னும் சிறிது நேரம் என்னுடன் துணை இரு. இதோ இப்பொழுது அன்வரின் வீட்டிற்கு சென்று விடுவேன். அவனும் என்னைப் பார்த்ததும் அப்படியே அள்ளிக்கொண்டு என் கண்ணீரை துடைத்து விடுவான். அந்த காட்சியை பார்த்த பிறகு, நீ ஓய்வெடுக்க செல்லலாம். அதுவரை சிறிது பொறுத்திரு. உள்ளுக்குள் பொறுமியபடி வேகமாக நடந்த சக்தியின் பாதையின் குறுக்கே அவர்கள் வந்தனர்.




யார் நீ???

பெண்….

        விளையாடுகிறாயா????   இல்லை பேசிக் கொண்டிருக்கிறேன்.

“ஓஹோ!!, அப்படியா நீ என்ன சொன்னாய்? உன்னை பெண்ணென்றா”,  அதில்தான் எனக்கு சந்தேகம் உன்னை சோதித்துப் பார்க்கட்டுமா?

இப்பொழுது சக்தி சிறிது மிரண்டாள். யார் இவர்கள்? இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? கண்களில் அதீத பயம் வந்தது.

ஆனால், அந்த முரடர்களின் கண்களிலோ திடீரென்று கனிவு வந்திருந்தது. அவர்கள் சத்தியின் கழுத்தில் தொங்கிய திரிசூல வடிவு கொண்ட சங்கிலியை பார்த்து, இவள் நம்மவள் என்று பேசிக்கொண்டனர்.

“குழந்தாய், நீ வெகு தூரத்தில் இருந்து வருகிறாயா? ஏன் இப்படி அலங்கோலமாக இருக்கிறாய்? உனக்கு எங்களால் செய்யக்கூடிய உதவி என்று ஏதாவது உண்டா”?

ஐயா நான் நவகாளியில் இருந்து வருகிறேன். எங்கள் ஊரில் முழுவதுமே ரத்த ஆறு ஓடுகிறது. அது மனிதர்கள் வாழ வழியில்லாத சுடுகாடாகி போனது.என் குடும்பத்தில் நான் ஒருத்தி மட்டும் தப்பிப் பிழைத்து  இங்கே வந்து நிற்கிறேன்.

நவகாளியில் நடந்த கொடுமைகள் எங்களுக்கும் தெரியும் அம்மா .அதற்கு உண்டான பதிலடியை தான் இங்கே நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சரி நீ எங்கே போகவேண்டும் என்று சொல், நாங்கள் உன்னை பத்திரமாக அங்கே கொண்டு போய் சேர்க்கிறோம்.

சக்தி தான் செல்லவேண்டிய தெருவின் பெயரைச் சொல்ல அவர்கள் கூட்டத்தில் இருந்த கண்ணன் என்ற ஒரு வாலிபனை சக்திக்கு துணையாக அனுப்பி அவளை பத்திரமாக இடம் கொண்டு போய் சேர்க்க சொன்னார்கள்.

உடன் வந்த நபர் பீகாரை முழுமையாக தெரிந்தவர். ஆதலால், விரைவாக தெருவின் முனைக்கு சக்தியை அழைத்து வந்திருந்தார்.

அண்ணா உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும். என் மீது இரக்கம் கொண்டு, இதுவரை எனக்கு துணை வந்ததற்கு, மிக்க நன்றி என் போன்ற பெண்கள் எவராக இருந்தாலும், இதுபோலவே நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று இரு கை கூப்பினாள் சக்தி.

அந்த வாலிபன் சிறிய புன்னகையுடன், தங்காய் உன் சொல்லில் அர்த்தம் எனக்குப் புரிகிறது. ஆனால், செயல்படுத்தும் வழிதான் இல்லை. சரி நான் வருகிறேன். நீ பத்திரமாக வீடு போய்ச் சேர் என்று கூறிவிட்டு அவளை திரும்பியும் பாராது மிடுக்காக நடந்து சென்றான்.

இப்பொழுது, சக்திக்கு அன்வரை பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. அந்த வீதியிலே எத்தனாவது வீடு தன்னுடையது என்பது உட்பட அனைத்தையும் அவர் அவளுக்கு விவரித்து இருந்தான். ஆதலால் வீடுகளை எண்ணியபடி வீதியில் நடக்க ஆரம்பித்தாள். இருதயத்தின் ரத்த ஓட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

“அன்வர், இதோ வந்துவிட்டேன்”.

“அன்வர், உன் சக்தி உன்னிடமே வந்துவிட்டேன் அன்வர்”.

(தொடரும்….)




What’s your Reaction?
+1
10
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!