Serial Stories காதல் தேசம்

காதல் தேசம் -1

1946ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் நவகாளி மாகாணத்தின் ஒரு சிறிய கிராமம்:  அந்தி சாய்ந்து இருட்ட ஆரம்பித்து விட்ட வேலை மிகவும் பரபரப்புடன் வீட்டிற்குள் நுழைந்தார் பண்டிட் கோவர்தன். உள்ளே நுழைந்தவுடன் வாசல் கதவை சாத்தி தாழிட்டார்.

அவர் முகம் முழுவதும் கலவரம் படர்ந்திருந்தது. கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. முகம் முழுவதும் முத்து முத்தாக வேர்த்திருந்தது. அவர் நெடுந்தூரம் ஓடி வந்திருக்க வேண்டும் என்பதை அவர் மூச்சிரைப்பு  மூலம் உணர முடிந்தது.  கதவை சாத்தி தாழிட்ட கையோடு ஜன்னல்களையும் சாத்தி தாழிட்டார்.

“என்னங்க.. என்ன ஆச்சு? ஏன் கதவை சாத்தி தாப்பாள் போடுறீங்க?” என்று கூறிய மனைவியை, இரண்டு உதடுகளுக்கு இடையே ஆட்காட்டி விரலை வைத்து ‘உஷ்’ என்று சத்தம் செய்து, பேசாது இருக்குமாறு எச்சரித்தார்.

அப்பொழுது வீதியில் திபுதிபுவென்று பெரிய கூட்டமொன்று ஓடி வருவதை உணர முடிந்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தகாத வார்த்தைகளை உரக்கக் கூவியபடி, அதே வீதியில் கடைசியில் இருந்த காளி கோவில் பட்டர் வீட்டை நோக்கி செல்கின்றனர் என்பது புரிந்தது. அவர்கள்  கைகளில் பயங்கரமான கொலை ஆயுதங்கள் இருந்திருக்க வேண்டும். அவர்கள் அவற்றை ஒன்றோடு ஒன்று மோதி சத்தம் ஏற்படுத்திக்கொண்டு குழப்பத்தை விளைவித்த படி தெருவில் உள்ள அனைவரையும் சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தனர்.

              அந்த கும்பல் தன்னுடைய வீட்டினை கடந்து விட்டார்கள் என்பதை முடிவு செய்த பின், மிக மெதுவாக பேச ஆரம்பித்தார் கோவர்தன்.

காமாட்சி நிலைமை மிகவும் கட்டுக்கடங்காது போய்விட்டது. நம்முடைய கதி என்னவோ எனக்குத் தெரியவில்லை. நம்முடைய தெருவிற்கு பக்கத்து வீதியை முழுவதுமே இந்த கலவரக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருக்கிறார்கள். நெற்றியில் விபூதியும், குங்குமமும் வைத்திருந்தால் அவர்களுடைய தலை வீதியில் உருட்டப்படுகிறது. இதோ நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தப்பிச் செல்லவும் வழியின்றி இந்த பகுதி முழுவதையும் மொத்தமாக சுற்றிவளைத்து கலவரக்காரர்கள் வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

“இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்”? என்றாள் காமாட்சி.

தெரியவில்லை காமாட்சி. இன்றைய பொழுதை நாம் உயிருடன் கடந்துவிட்டால், அது அந்த காளிமாதா அளித்த வரம் மட்டுமே. காளியின் மேல் பாரத்தை வைத்து நாம் இப்பொழுது நம் வீட்டை விட்டு வெளியேறியே ஆகவேண்டும்.

            காமாட்சியின் முகத்தில் சொல்லமுடியாத வேதனை படர்ந்தது. அவர்களுக்கு சொந்தம் என்று இருந்தது அந்த இரண்டு அறைகளை கொண்ட ஓட்டு வீடு மட்டுமே.   அந்த வீட்டை தன் உயிரைப் போலவே அவள் பாவித்து இருந்தாள். ஆனால், இப்போது இந்த சூழ்நிலையில் சொந்த வீட்டை விட்டு அகதியை போல் வெளியே ஓடுவதா, ஏன் ஓட வேண்டும்?! எதற்காக ஓட வேண்டும்?  நமக்கு உதவுவார் என்று இங்கு யாரும் இல்லையா? அந்தப் பேதை உள்ளம் கொதித்தது.

நிற்காதே காமாட்சி போ போய் கையில் கிடைப்பதை எடுத்துக்கொள்.  சில வினாடி நேரம் தான் நமக்கு இருக்கிறது எங்கே நம் குழந்தை.

அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வது புரிந்தும் அதற்கான காரணம் முழுவதும் புரியாமல் ஒரு இரண்டும் கெட்டான் நிலைமையில் திருதிருவென்று விழித்தபடி இருந்தாள் சக்தி.

           சக்தியை பற்றி சொல்ல வேண்டுமென்றால்  கோவர்த்தன் காமாட்சி தம்பதியினரின் ஒரே ஒரு செல்ல மகள். வெளி உலகம் தெரியாமல் கஷ்டங்கள் துயரங்கள் எதையும் உணராமல் தாய் தந்தையரின் அரவணைப்பில் சுகமாக வாழ்ந்து வரும்  16 வயது பருவ மங்கை இந்த கதையின் நாயகி.




         ” நான் இங்கே இருக்கிறேன் அப்பா”,சொன்ன படி தந்தையின் அருகில் வந்தாள்.

குழந்தாய் இந்த பூமி மனிதர்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாததாக போய்விட்டது. காட்டு விலங்குகள் அனைத்தும் நம் கிராமத்தை சுற்றி வளைத்துக் கொண்டன. மலைப்பாம்பின் வாயிற்குள் மாட்ட காத்திருக்கும் எலியைப் போல் நாம் நிற்கதியாய் நிற்கிறோம். உயிர்பிழைக்க அனைத்தையும் விட்டுவிட்டு கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடி ஆகவேண்டும் .மேலே எதுவும் பேசாதே,  சொன்னதை செய்;

             கோவர்த்தனன் பேசி முடிக்கும் பொழுது அவரது வீட்டு கூரையில் கற்கள் சரமாரியாக வீசப்பட ஆரம்பித்திருந்தன. கலவரக்காரர்களின் கையிலிருந்த  ஆயுதங்கள் அவரது வீட்டு கதவில் ஜன்னலில் இடியென இறங்க ஆரம்பித்தது.

இப்பொழுது வீட்டிற்கு மூவரும் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தனர் .இரண்டே வினாடிகள் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு இரண்டு பைகள் இருந்தது . அப்பொழுது இவர்களது வீட்டின் மேல் பெட்ரோல் ஊற்றப்பட்டு கொண்டிருந்தது. வெளியில் கும்பலில் இருந்த ஒருவன் தீக்குச்சியை உரசி வீட்டின் மேற்கூரையில் வீச எத்தனித்தான். மற்றொருவன் அதை தடுத்தான்.

மற்றொறுவன்   “ஏன் தடுக்கிறாய்”? கோபமாக வந்தது அவனது கேள்வி. இந்த வீட்டிலே ஒரு அழகான பெண் உண்டு என்று கூறி அவனைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினான் மற்றவன். இப்பொழுது வீட்டை பற்றவைக்க நினைத்தவன் கண்களில் ஒரு அதீத வெறி அவன் வீட்டை பற்ற வைக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு கதவை உடைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்க ஆரம்பித்தான்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது வீட்டிற்குள் இருந்த  கோவர்த்தனுக்கு  கேட்கத்தான் செய்தது.  நடு நெஞ்சில் மிக ஆழமாக ஒரு கத்திய செலுத்தியது போன்று உணர்ந்தார்.

            ஆஹா மானம் உயிரினும் மேலானது அல்லவா?!! அடேய்!! சண்டாளர்களா, அவள் குழந்தையடா என்று மனதிற்குள் குமுறிய படி வீட்டின் பின் வாசல் வழியாக வெளியேறினார். வீட்டின் பின்புறமும் பொல்லாதவர்கள் இருப்பார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால், காளிமாதா அவர்களை கைவிடவில்லை. வீட்டின் பின்புறம் நபர்கள் யாரும் இல்லாததால் இலகுவாக வெளியேறினர்.

வீட்டை விட்டு வெளியேறினாலும் அந்த வீதியை எவர் கண்ணிலும் படாமல் கடப்பது என்பது மிகக் கடுமையான சவாலாக இருந்தது. அந்த வீதி முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இருளான இடங்களில் மிக மெதுவாக நகர்ந்து மூவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது கோவர்த்தனன் காலில் ஏதோ ஒன்று தட்டுப்பட குனிந்து பார்த்த அவரின் ரத்தம் உறைந்தது. அவர் காலடியில் பந்துபோல் இடறியது காளி கோவில் பட்டரின் தலை. “ஈஸ்வரா!,” இது என்ன கொடுமை??

அப்பொழுது தந்தையின் தோலை மெதுவாக தட்டிய சக்தி, சுட்டிக் காட்டிய திசையில் சுமாராக ஒரு 7    அல்லது 8  முரடர்கள் ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த புதர் மறைவிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

சக்தியின் கண்களில் அதீத பயம். அவள் நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்க்கையை இப்படி பார்த்ததில்லை. அவள் அறிந்தவரை வாழ்க்கை என்பது மிகவும் இனிமையானது,வசந்தமானது. பிறகு, அன்வர் இருக்கும் இந்த பூவுலகு வசந்த மயமாக தானே இருக்கும். “அன்வர்” ஆம் அன்வர் அந்த பெயரை நினைக்கும் பொழுதே சக்திக்கு இதயம் தித்திக்கும் .உச்சரிக்கும் பொழுது நாவு சுவைக்கும். கேட்டாலோ உடல் புல்லரிக்கும்.

“யார் இந்த அன்வர்”? சொல்கிறேன். உங்களிடம் எல்லாவற்றையும் சொல்கிறேன்.  சொல்லத்தானே வந்திருக்கிறேன்.

          தொடரும்




What’s your Reaction?
+1
9
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!