Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-4

4

அன்று அமாவாசை. 

நடுநிசி நேரத்தில் தாயின் சேலை இல்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான் சரவணன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தன்னையும் மறந்து அவன் உறங்கிய போது, கனவுலகம் அவனை வரவேற்றது.

ஊருக்கு வெளியே இருந்த சுடுகாட்டை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் மூக்கு விடைத்து எங்கிருந்தோ வரும் தாயின் வாசனையை உணர்ந்தது. “அம்மா… அம்மா” என்று முனகிக் கொண்டே வாசனை வரும் திசையில் நடந்தவனைப் பார்த்து நாய்கள் குரைக்க, அதை அவன் சிறிதும் கண்டு கொள்ளவேயில்லை.  சுடுகாட்டின் இரும்பு கேட்டிற்குள் அவன் நுழைந்த போது அவன் கண்களில் அந்த துணி மூட்டை பட்டது.  முகம் பிரகாசமானது. “அம்மா…அம்மா… நீ இங்கிருக்கியா?”

தெருவில் உச்சஸ்தாயில் குரைத்த ஒரு ஆண் நாயின் சத்தத்தில் கனவு கலைந்து கண் விழித்த சரவணன், படுக்கையில் எழுந்தமர்ந்து யோசித்தான்.  

“அம்மா… நீ அங்கிருக்கியா?”. தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மெல்ல எழுந்தான்.

அப்பாவும், புது சித்தியும் படுத்திருக்கும் அறையின் கதவு மூடியிருக்க, நிதானமாய் நடந்து வாசற் கதவை சத்தமின்றித் திறந்தான்.

இதமான குளிர் காற்று முகத்திலடிக்க, கதவை வெளிப்புறமாகத் தாழிட்டான்.

தெருவில் இறங்கினான்.  எங்கும் அமைதி. கனமான நிசப்தம்.

கனவில் கண்ட சுடுகாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  மனதில் அம்மாவின் சேலை மட்டுமே ஆணித்தரமாக உட்கார்ந்திருந்தது.

சற்று தூரத்தில் ரயில்வே டிராக்கில் எக்ஸ்பிரஸ் ரயிலொன்று “தடக் தடக்… தடக் தடக்…”கென்று வேகமாய் ஓடி அடங்கியது.

இலக்கை நோக்கிச் செல்லும் ஓட்டப் பந்தய வீரனைப் போல் ஒரே நோக்கில் நடந்து கொண்டிருந்தான்.

****

மந்திரவாதி காயாக்குருதிக்கு வாக்குக் கொடுத்தபடி, அமாவாசை தினமான இன்று கோடங்கி ராஜய்யனிடமிருந்து அந்தக் கேரளக் குட்டிச் சாத்தானை அபகரிக்க சற்று முன்னதாகவே வந்து சுடுகாட்டின் நீண்ட காம்பௌண்டிற்கு வெளியே காத்திருந்தான் தாஸ்.

அவன் காலடியில் அனைத்துப் போடப் பீடித்துண்டுகள் குவியலாய்க் கிடக்க, உதட்டில் இன்னொரு பீடி ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அதே நேரம் சுடுகாட்டினுள்ளே கோடங்கி ராஜய்யன் வானத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.  ஊருக்குள் குறி சொல்லப் போகும் முன், வானின் ஈசானி மூலையில் மினுக்…மினுக்”கென்று சில நிமிடங்கள் மட்டும் ஒளிர்ந்து விட்டு மறையும் ”குத்தாட்டி” என்று அவனது மூதாதையர்கள் பெயரிட்டிருந்த அந்தக் குறிப்பிட்ட நட்சத்திரத்தை தரிசித்து விட்டுச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தான்.  நடு இரவு பனிரெண்டு மணி தாண்டிய சில நிமிடங்களில் தோன்றி மறையும் அந்த நட்சத்திரம் ஒரு மணியாகியும் இன்னும் தோன்றாததில் குழப்பமாகி உட்கார்ந்திருந்தான் கோடங்கி.  “என்னாச்சு… ஏன் இன்னும் குத்தாட்டி தோன்றலை?… ஈஸ்வரா… ஏதேனும் பங்கமிருந்தால் இப்போதே உணர்த்தி விடு ஈஸ்வரா”

இருட்டைக் கண்டு சற்றும் பயமில்லாமல் கால்களை வேகவேகமாகச் செலுத்தினான் சரவணன்.  “அம்மா… அம்மா”




 

“என்னது இந்தக் கோடாங்கி இன்னிக்கு இவ்வளவு நேரமாகியும் கிளம்பாம உட்கார்ந்திட்டிருக்கான்… இவன் குறி சொல்லக் கிளம்பிப் போனால்தானே நான் போய் அவனோட அந்தத் துணி மூட்டையை எடுத்து… அதுக்குள்ளார இருக்கும் அந்தக் கேரளக் குட்டிச் சாத்தானை எடுக்க முடியும்?” இன்னொரு பீடியை உதட்டில் செருகியபடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் தாஸ்.

இன்னும் ஈசானி மூலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கோடாங்கி ராஜய்யன் அடிமனதில் ஏதோ விபரீதமாகப் பட, மெல்ல எழுந்து சுடுகாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து ஒரு சிறிய மேட்டின் மீது ஏறி நின்று வானத்தையே உற்றுப் பார்த்தான். “ஏடா குத்தாட்டி… வெரசா வந்திடுடா… நாங் குறி சொல்லப் போணுமில்ல?” 

கோடாங்கி சுடுகாட்டின் கிழக்குப் பகுதியின் நின்று வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த அந்த நிமிடத்தில் சுடுகாட்டின் கேட்டிற்குள் நிதானமாய் நுழைந்தான்.

இயற்கை உந்துதலை இறக்கப் போயிருந்த தாஸுக்கு சரவணன் என்னும் சிறுவன் சுடுகாட்டிற்குள் நுழைந்தது தெரிய வாய்ப்பில்லை. செடி மறைவிலிருந்து வந்தவன், “ஹும்… இந்தக் கோடாங்கி என்ன இன்னிக்கு நம்மல இந்தப் பாடு படுத்தறான்?… எப்பவும் பனிரெண்டு மணிக்கு “டாண்”ன்னு கிளம்பிப் போற பயலுக்கு இன்னிக்கு என்னாச்சு?” புலம்பினான் தாஸ்.

தனக்குள் இருந்த அதீத சக்தியின் மூலம் கோடாங்கியின் துணிப்பையையும் அதனுள்ளிருந்த தன் தாயின் புடவையையும் கண்டுபிடித்து விட்ட சரவணன், நிதானமாய் நடந்து அந்தத் துணிப்பையை அள்ளி எடுத்துக் கொண்டு சுடுகாட்டினுள்ளிருந்து வெளியே வந்தான்.

அரையிருட்டில் மூட்டையோடு, ஆடி அசைந்து நடந்து வரும் சரவணனின் குள்ள உருவத்தைப் பார்த்த மாத்திரத்தில் “ஹக்”கென்று அதிர்ந்தான் தாஸ். 

“ஆஹா… அந்த மூட்டையை நான் அடிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தா.. அதை அந்தக் குட்டிச் சாத்தானே அடிச்சிட்டுப் போகுதே… இப்ப நான் என்ன பண்றது?” குழம்பினான். 

*****

நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பின், வானில் அந்தக் “குத்தாட்டி” நட்சத்திரம் சட்டெனத் தோன்றி, அதே வேகத்தில் சட்டென மறைந்து போக, அதைப்பார்த்து விட்ட நிம்மதியில் குறி சொல்லக் கிளம்பினான் கோடாங்கி.

தன் வழக்கமான இடத்திற்கு வந்து தன்னுடைய துணி மூட்டை அங்கு இல்லாததைக் கண்டு பீதியான கோடாங்கி, சுற்றும் முற்றும் தேடினான்.  “அய்யோ… எல்லாம் பாழாய்ப் போய் விட்டதே… எனக்குக் கிடைத்த அந்த அபூர்வக் குட்டிச் சாத்தானை இழந்து விட்டேன் போலிருக்கே?” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, அங்குமிங்கும் ஓடி ஓடித் தேடினான்.

அடிமனதில் மரணபீதி பீறிட்டுக் கிளம்பியது.

சுடுகாட்டிற்கு வெளியே வந்து, நடு ரோட்டில் நின்று, இரு பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பி தேடினான்.

தன்னுடைய அனுபவத்தில் அச்சம் என்பதை சிறிதும் அறிந்திராத கோடாங்கி ராஜய்யன், முதல் முறையாக பயந்தான்.  அதற்குக் காரணம், அவன் இழந்திருப்பது ஒரு தீய குட்டிச் சாத்தான் அல்ல… மிகவும் நல்ல குட்டிச் சாத்தான். ஆனால், அதைத் திருடிச் சென்றவர்கள் தீய வழியில் செலுத்த முயன்று அதன் சக்தியை மழுங்கடித்து விடுவார்களோ? என்கிற அச்சம்தான் அவனை மிகவும் உலுக்கியது.

அதே நேரம்,

சுடுகாட்டின் வெளிப் புறக் காம்பௌண்ட் சுவற்றின் ஓரமாய் அமர்ந்து, அதனுள்ளிருக்கும் தன் தாயின் சேலையைத் தேட ஆரம்பித்தான் சரவணன்.

செடி மறைவிலிருந்து அதைக் கவனித்துக் கொண்டிருந்த தாஸ், “ஆஹா…. குட்டிச் சாத்தான் ஏதோவொரு மாய வித்தையைச் செய்யப் போகுது போலிருக்கே!… அப்படி அது செய்ய ஆரம்பிச்சா நிச்சயம் ஒளிந்திருக்கும் என்னைக் கண்டு பிடிச்சிடும்… அப்புறம் என் கதி அதோ கதிதான்” என்று முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான முயற்சியை ஆரம்பித்தான்.

இருட்டில் தவழ்ந்து சென்று, ஒரு மரத்தின் பின்னால் தான் மறைத்து வைத்திருந்த தனது சைக்கிளை எடுத்துப் பறந்தான்.

என்ன செய்வது?… எப்படிச் செய்வது? என்று புரியாத நிலையில் சிலை போல் அமர்ந்திருந்த ராஜய்யன், “இன்னிக்கு குறி சொல்லவும் போக முடியாமல் ஆயிடுச்சே?” என்று வாய் விட்டுப் புலம்பினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, நாய்களின் குரைப்புச் சத்தம் தொடர்ந்து கேட்க, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டான்.  “தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கும் போலிருக்கு அதனால்தான் நாய்கள் குரைக்குது… நிச்சயம் என் மூட்டையைத் தூக்கியவன்தான் போகிறான் போலிருக்கு!… விடக் கூடாது அவனை… எப்படியாவது அவனிடமிருந்து என் குட்டிச் சாத்தானை மீட்டுக் கொண்டு வந்திடணும்”

வேகமாய் எழுந்து மெயின் கேட்டைத் தாண்டி தெருவில் ஓடினான் கோடங்கி ராஜய்யன்.

சற்றுத் தொலைவில் ஒரு சிறிய உருவம் தன் மூட்டையைக் குடைந்து கொண்டிருப்பதைக் கண்டதும், நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு நின்றான்.




அவன் மனதில் தாறுமாறாய் எண்ணங்கள் ஓடின.

“அந்தக் குள்ள உருவத்தைப் பார்க்கும் போது நிச்சயம் அது பாலக்காட்டு மித்திரன் போலத்தான் தெரியுது… அவன் எதுக்கு என்னைத் தேடி இங்க வந்து என்னோட மூட்டையிலிருக்கும் குட்டிச் சாத்தானைத் திருடணும்… அதை எனக்குக் குடுத்தவனே அவன்தான்… அப்படியிருக்கும் போது…”

குழம்பிய மனநிலையுடன் அந்தச் சிறிய உருவத்தை நோக்கி நடந்தான் ராஜய்யன்.

அருகில் செல்லச் செல்ல, தான் எண்ணியது போல் அது பாலக்காட்டு மித்திரன் அல்ல என்பதை உணர்ந்து நடையை நிதானப்படுத்திக் கொண்டு, மெல்ல அந்த உருவத்தை நெருங்கினான்.

சட்டென்று அதன் தோளைப் பற்றி, “ஏய்…. யார் நீ?” என்று கத்தல் குரலில் கேட்டான் ராஜய்யன்.

பயந்து போன சரவணன், ஓட ஆரம்பித்தான். 

தன் பையையும் எடுத்துக் கொண்டு அந்த உருவம் ஓடுவதைக் கண்டு குழப்பமான ராஜய்யன் துரத்த ஆரம்பித்தான். சிறுவனின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓட முடியாத ராஜய்யன், தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே ஒரு சவமேட்டின் மீது அமர்ந்து, ஓடும் அந்த உருவத்தையே கவலையுடன் பார்த்தான்.

அப்போது அவனை மகிழ்விக்கும் விதமாய், தன் கையிலிருந்த பையைத் தூக்கி வீசியபடி ஓடினான் சரவணன்.  தன் தாயின் மஞ்சள் நிற சேலையைக் கைப்பற்றிய பின் அந்த துணி மூட்டை அவனுக்கெதற்கு?

 வீசப்பட்ட துணி மூட்டை ஒரு புதருக்குள் விழுந்து விட, வேகமாய் எழுந்தோடி அதைக் கையிலெடுத்தான் ராஜய்யன்.  எடுத்தவுடன் முதல் வேலையாய் அதனுள்ளிருந்த அந்த நல்ல குட்டிச்சத்தான் பத்திரமாய் உள்ளதா எனச் சோதித்தான்.

இருந்தது.

“அப்பாடா” என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்ட ராஜய்யன், “சரி… ஊருக்குள்ளார போயி ஒரு ரெண்டு தெருவுக்காவது குறி சொல்லிட்டு வந்துடலாம்!… குத்தாட்டி நட்சத்திரத்தைப் பார்த்திட்டு குறி சொல்லாமப் போயிட்டா… அது பெரிய குத்தமாயிடுமே” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தனது மூட்டையிலிருந்து உடுக்கையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ஊரை நோக்கி நடை போட்டான் கோடங்கி ராஜய்யன். 

தாயின் சேலை கைக்குக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அந்தச் சுடுகாட்டிலிருந்த ஒரு சவ மேட்டின் மீது, சேலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்கிப் போனான் சரவணன்.  அந்த சவ மேட்டினுள் தான் தன் தாய் எலும்புக் கூடாய் இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.




What’s your Reaction?
+1
8
+1
13
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!