Entertainment Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-17

(17)

ஹால் முழுவதும் ஜேக ஜோதியாக விளக்குகள் ஜொலித்தது. ஏற்கனவே கிழக்கு பார்த்த வாசல் என்பதால் வெளிச்சம் பிரகாசமாக இருந்தது. அதை இன்னும் அதிகப் படுத்தியது விளக்குகள்.

அலங்கார வளைவுகள், தோரணங்கள் அதில் இன்னும் மின்னியது. சன்னமாய் வயலின் இசை இளையராஜா பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்தது. அதையும் மீறி எதோ ஒரு மொபைலில் குத்துப்பாட்டு போட்டு குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்தது.

கீமோவினால் தலை மொட்டையாகி இருந்த சில குழந்தைகள் ஒன்றுக்கொன்று மொட்ஸ், மொட்டை என்று அழைத்து கேலி செய்து கொண்டிருந்தது. சேர்கள் நிரம்பி இருந்தது.

உள்ளே நுழைந்த வாசுதேவன் குடும்பத்தைப் பார்த்து உற்சாகத்துடன் ஓடி வந்தார் சிதம்பரம்.

“வாங்க, வாங்க.– அவர் குரலில் நம்ப முடியாத குஷி.

அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். சிவகாமி வரவில்லை. கௌதம் மட்டும் அப்பாவின் நிழலாகத் தொடர்ந்தான்.

வசந்தாமணி கையில் பூச்சரத்துடன் வந்தார். தங்கம் கையில் கொடுத்து, குங்குமம், சந்தானம் கொடுத்து முன் வரிசைக்கு அழைத்துச் சென்றார். பின் தொடர்ந்த மைதிலி, சத்யாவை, “அவங்களுக்கு ஏதானும் உதவி செய் என்று அனுப்பினார் அப்பா.

சத்யாவுக்கு நம்ப முடியாத அதிசயமாக இருந்தது. அப்பாவா? சிவசுவைப் பார்க்கக் கூடாது என்று கூறியவர் இன்று அவன் ஆரம்பிக்கும் சேவை மையத்திற்கு அவளை அழைத்து வந்திருக்கிறார்.

அவளுக்குச் சிறிது யோசனைதான். ஆனால் அப்பா “நாம குடும்பத்தோடு போறோம் என்றதும் தயங்கி வந்தாள்.

“வாங்க, வாங்க.– சிவசு வந்தான். அப்பாவின் கை பிடித்து குலுக்கினான். அப்பா அவன் தோளை தட்டித் தந்தார்.

“அருமையான விஷயம் சிவசு இது. பெரிய மனசு இது. வாழ்த்துகள்.

“இல்லை சார். இந்த குழந்தைகளுக்கு எங்களால் முடிந்த சின்ன சேவை.

“கடவுள் உன்னை நிறைய ஆசிர்வதிப்பார் சிவசு.

“உங்க ஆசிர்வாதம் வேணும் சார். பெரியவர்கள் ஆசிர்வாதமே கடவுளோட ஆசிக்குச் சமம்.– சிவசு அவர் கால் தொட்டு வணங்கினான். அப்பா அவனை எழுப்பி அனைத்துக் கொண்டார்.

வியப்போடு பார்த்தாள் சத்யா.





எப்படி இந்த மாற்றம்? என்று தெரியவில்லை என்றாலும் சிவசுவைப் பற்றிய அவர் பார்வை மாறியிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு விரும்பத்தகாத வெறுப்பு இன்று மறைந்திருக்கிறது.

“எல்லோரும் கண்டிப்பாக வரணும் என்று மீண்டும் வீட்டுக்கு வந்து அழைத்தார் சிதம்பரம். “நீதான் ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கணும் சத்யா– என்றார்.

நிறையப் பெரிய மனிதர்கள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ க்கள், டாக்டர்கள் என்று குழுமியிருந்தார்கள். அனைவருக்கும் டீ தந்த பிறகு சிதம்பரம் தங்கள் சேவை அமைப்பு பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் விரிவாகப் பேசினார்.

அப்பா நிரம்பி இருந்த ஹாலைச் சுற்றி பார்வையை ஓட்டினார். மிகப் பெரிய ஹால். ஆயிரம் பேர் அமரலாம். சிலர் நின்று கொண்டிருந்தார்கள். வரிசையாக அறைகள். அடுத்தடுத்து மாடியிலும் கட்ட ஏற்பாடு செய்கிறோம் என்றிருந்தார் சிதம்பரம்.

எவ்வளவு உயர்ந்த சேவை! அப்பாவுக்குச் சிலிர்த்தது. லேசாகக் கண்ணீர் தளும்பியது.

“என்னப்பா?- விஜய்.

“இல்லை விஜய். இந்தச் சேவை அமைப்பைப் பார்க்கும்போது நாமெல்லாம் வேஸ்டுன்னு தோணுது. சமுதாயத்துக்குச் செய்யறதுதான் மனித வாழ்வின் அர்த்தம். நாம என்ன செஞ்சிருக்கோம்?

“இவங்களோடு நம்மை இணைச்சுக்கலாம் அப்பா.

“ஏதானும் செய்யணும் விஜய். இந்த மாதிரிக் குழந்தைகளுக்குன்னு.

“ஒரு அஞ்சு குழந்தைகளோட படிப்புச் செலவை எத்துக்கலாம்பா

அதை அப்பா மேடையிலும் அறிவித்தார்.

சத்யாவை அழைத்து ரிப்பன் வெட்டி திறப்பு விழா முடிந்ததும், சிதம்பரம் அப்பாவை மேடைக்குப் பேச அழைத்தார்.

அப்பா ஒரு தீர்மானத்துடன் பேச ஆரம்பித்தார்.

“அனைவருக்கும் வணக்கம். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. வாழ்விற்கு அர்த்தம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிதம்பரம் குடும்பத்தினர். தனக்கு என்று வாழ்பவர்கள் முன் மனித குலத்தின் மேன்மைக்காக பாடுபடும் இவர்களே ஆலயத்தில் இருக்கும் தெய்வங்கள்.

எப்படி வாழ்வது என்பதற்கு இவர்களே உதாரணம். அழியாப் புகழை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

அப்பா கண் அசைத்து சத்யாவை அருகில் அழைத்தார்.

“சத்யா என் மகள். சிதம்பரம் தன் மகன் சிவசுவுக்கு பெண் கேட்டார். ஆனால் ஊர் பேர் தெரியாத ஒருவனுக்குப் பெண் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன். ஆனால் இப்போ சொல்றேன். சிவசுவை விட என் மகளுக்குப் பொருத்தமான கணவன் வேறு யாரும் இல்லை. நல்ல எண்ணங்களும், பண்புகளும் கொண்ட ஒரு உயர்ந்த மனிதனுக்கு என் பொண்ணைக் கொடுக்கறேன்னு இந்த மேடையில் கம்பீரமா, கர்வமா அறிவிக்கிறேன்.

தன்னை மறந்து விசில் அடித்தான் விஜய்.

சிதம்பரம் ஓடி வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டார். “சிவசு இங்க வா– அப்பா அழைத்ததும் சிவசு இருகை கூப்பியபடி அவரருகில் வந்தான்.

“இந்த மேடையே மணமேடையா நினைச்சு உன்னைக் கேக்கறேன். என் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கச் சம்மதமா?

“உங்களுக்கு மாப்பிள்ளையா வரச் சம்மதம் சார்.

“நல்ல பதில். உனக்கு சத்யா?

“உங்க பேச்சை நான் தட்டியிருக்கேனாப்பா.– சத்யா குரல் ததும்ப அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள். அப்பா, இருவரையும் அனைத்துக் கொண்டார்.

“இங்க நின்னு நிறைஞ்ச மனசோடு நான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறேன். வந்திருக்கிற பெரியவங்க எல்லோரும் என் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்யுங்க.

ஹால் படபடவென்று கை தட்டியது.





விஜய் எட்டிக் குதித்து மேடை ஏறினான்.

“வீட்டுக்கு வர மாப்பிள்ளை இத்தனை நல்ல விஷயம் செய்யறப்போ, நான் என் பங்குக்கு ஏதானும் செய்யணும்ல. வருஷம் ஒரு அஞ்சு குழந்தைகளின் படிப்புச் செலவை நாங்க ஏத்துக்கறோம். மாப்ளை இதான் உனக்கு என் கல்யாணப் பரிசு.– உற்சாகத்தில் குதித்தாடினான் விஜய். அங்கிருந்த அனைவருக்கும் அவனின் உற்சாகம் தொற்றிக் கொள்ள, அந்த ஹால் திருமண வீடாக மாறியது. சிறப்பு விருந்தினர்கள் போன பின் “டேய்ய் பசங்களா, வாங்கடா என்று கூப்பிட்டு விஜய் அவர்களுடன் டேன்ஸ் ஆட, மைதிலி, சத்யாவை இழுத்துக் கொண்டு அவர்களுடன் கலந்தாள்.

சத்யா அப்பாவின் அருகில் வந்தாள்.

“திருப்தியா?– அப்பா புன்னகையோடு கேட்டார்.

“தேங்க்ஸ்பா.

“ச்சீ. எனக்கு எதுக்குடா தேங்க்ஸ் எல்லாம். உன் மகிழ்ச்சி என் கடமை.

“கௌதமை எப்படி சமாளிக்கப் போறீங்க?நகைத்தார்.

“அப்பா, மர்மமாகப் புன்னகைத்தார்.




What’s your Reaction?
+1
12
+1
19
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!