Serial Stories வானவில் தேவதை

வானவில் தேவதை -17

17




அன்றைய அச்சம்பவத்தின் பின் சத்யேந்திரன் அவளை சந்திக்க விரும்பி அடிக்கடி தூது விட்டுக்கொண்டு இருந்தார் .ஆனால் சபர்மதி அதற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை .ஏற்கெனவே அன்று பூரணசந்திரனிடம் அதிகம் பேசி விட்டோ மோ என்ற மன உளைச்சல் இருந்தாள். இதில் இவர் வேறு என்று அலுத்துக்கொண்டாள்.

 

முதலிரண்டு நாட்கள் பூரணனை பற்றி நினைக்காமலிருக்க முயன்றாள். மூன்றாவது நாள் அவன் அப்படியெல்லாம் அவன் அக்கா குடும்பத்தை விட்டு விட மாட்டானென்று நினைத்தாள். நான்காம்நாள் அவனால்தான் நான் வேலை பார்த்த சேனலாலும் , பெருந்தேவியாலும் தூக்கி எறியப்பட்டேன் என மனதுக்கு தனக்கு  தானே நினைவு படுத்திக்கொண்டாள் .ஐந்தாம் நாள் இந்த குடும்பத்துடன் என்னை சேர்க்க தாலி பிச்சை போட தயாரானான் , காதலெனும் பொய் சொல்லி ….பொய்தானே அல்லது இல்லையில்லை பொய்தான்  என உறுதி செய்து கொண்டாள். ஆறாம்நாள் எப்படியும் வருவான் மீண்டுமொரு முறை அவனுடன் தெளிவாக பேச வேண்டும் என எண்ணிக்கொண்டாள் .ஏழாம்நாள் ஒரு வாரமாயிற்றே ஒரு வேளை வர மாட்டானே என லேசாக கலங்கினாள் .

 

அன்று மதிய உணவின் பின் , சிறிது சோம்பலாக ஹாலில் இருந்த டிவியில் இலக்கின்றி சேனல்களை மாற்றி கொண்டிருந்தாள் .மெதுவாக

அவளருகில் வந்து அமர்ந்தான் ராஜன் .

 

” ஹாய் சிஸ  என்ன பண்ற ?”

 

ராஜனுடன் வெளியே போய்விட்டு வந்த நாளன்று பூரணசந்திரன் இவனை அழைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அதிலிருந்து ராஜன் சபர்மதியிடம் அதிகம் பேசுவதில்லை. நேரில் பார்க்க நேர்ந்தால் ஒரு அரைப்புன்னகையோடு சரி.

 

உன் மாமன் சொன்னான் என்று என்னிடம் பேசாமலேயே திரிந்தாயே …இன்றென்ன …என்று நினைத்தபடி , “பொழுது போகலை டிவி பார்க்கிறேன் ” என்றாள் .

 


“ஓ…அப்போ நாம் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு வரலாமா ?”

 

சபர்மதி யோசித்தாள் .” ஒருமணி நேரத்தில் வந்து விடலாம் ” என்றான் .

 

அம்சவல்லி வீட்டிலிருக்கும் நாட்களில் மதியம் இரண்டு மணிநேரம் தூக்கத்திற்கு போய் விடுவாள் .இன்றும் அறைக்குள் உறக்கத்திற்கு போய்விட்டாள் .தருமனுக்கு தூக்கத்திற்கு மருந்து கொடுக்கப்படுவதால் அவனும், நாளெல்லாம் அவனுடன் போராடுவதால் அனுசூயாவும் மதிய உணவுக்கு பின் சிறு தூக்கம் தூங்குவது வழக்கம் .எனவே வீடு மிக அமைதியில் இருந்தது .மற்றவர் எழும் முன் ராஜனோடு ஒரு ரவுண்ட் வெளியே போய் வந்தாலென்ன என்றெண்ணினாள் சபர்மதி .

 

மேலும் இனி ஒரு போனை அவளுக்கு தரக்கூடியவன் ராஜன்தான் .எனவே ” போகலாமே. ..எனக் கிளம்பிவிட்டாள் “

 

காரை தயாராக செட்டிலிருந்து கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தான் ராஜன் . ” என்ன முன்பே எடுத்து வந்து விட்டீர்களா ”  எனக் கேட்டபடி காரில் அமர்ந்துகொண்டாள் சபர்மதி .

 

” ம் …என்றபடி காரை எடுத்தான் .அவளது மீடியா பற்றி அதிக விவரங்களை கேட்டபடி காரை செலுத்தினான் .சபர்மதியும் தனது அனுபவங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள் .

” என்னுடைய நண்பர்கள் சிலர் நீ ஒரு தொலைக்காட்சி நடிகை என்றதும் உன்னைக் காண மிக ஆவலுடன் இருக்கின்றனர் .அவர்களை சந்திக்கலாமா ? எனக்கேட்டான் .

 

” அன்று பார்த்தோமே அவர்களா …”அவளுக்கு அன்று பார்த்தவர்களை பிடிக்கவேயில்லை .

 

” இல்லை இவர்கள் வேறு .. “

 

” ஓ…சரி பார்க்கலாம் “

 

பேச்சு சுவாரசியத்தில் கார் ஏதோ அடர்ந்த காட்டு பகுதிக்கு போவதை முதலில் கவனிக்கவில்லை சபர்மதி .

 

” எங்கே போகிறீர்கள் …?”

 


” என் நண்பர்கள் இங்குதான் இருக்கிறார்கள் சிஸ். …”

 

ராஜனின் மூன்று நண்பர்களும் மிக கண்ணிய தோற்றம் காட்டினர் .போட்டி போட்டுக் கொண்டு அவளுடன் பேசினர் .கை குலுக்கினர் .தாங்கள் அவளது ரசிகர்களென சொல்லிக் கொண்டனர் . அவளை அறிமுகம் செய்வித்ததற்காக ராஜனுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர் .போட்டோ எடுத்துக்கொள்ள கேட்டபோது சபர்மதி சிறிது தயங்கினாள் .

 

” நம்ம நண்பர்கள்தான் சபர்மதி  ஒன்றும் பயமில்லை என்ற ராஜன் வா நானும் இருக்கிறேன் என அவளை தன்னருகே வைத்துக்கொண்டான் .அவனை ஒட்டி நின்று சில போட்டோக்களை விருப்பமின்றி எடுத்தாள் சபர்மதி .பிறகு ….

 

ஒரு போட்டோவின் போது அவளருகில் நின்ற ஒருவன் சட்டென அவளை அணைக்க முயல அவனைப் பிடித்து தள்ளி கன்னத்தில் அறைந்தாள் சபர்மதி .தொடர்ந்து அவனை பட்பட்டென அறைந்தான் ராஜன் .

 

” என்னங்கடா கொழுப்பா ? ரொம்ப ஆசைப்பட்டீங்கன்னு என் தங்கையை அழைத்து வந்தால்  உங்கள் சாக்கடை புத்தியை காட்டுறீங்களே நாய்களா , இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் .வா சபர்மதி ” என அவள் கைகளை பிடித்தபடி காருக்கு நடக்க …

 

” அவ்வளவு சீக்கிரமா உங்களை விட மாட்டோம் மச்சான் ” குரல் மரங்களுக்கு பின்னிருந்து வந்தது .

அன்று ராஜனின்  நண்பர்கள் …

 

” டேய் நீங்க எங்கடா இங்கே …ஊருக்கு போறதா சொன்னீங்க “

 

” இப்படி ஒரு பிகரை என்னடா கையருகில் வைத்துக்கொண்டு எந்த ஊரிலும் எங்களுக்கு வேலை .அன்னைக்கே உன்கிட்ட மெல்ல பேசிப்பார்த்தோம் .நீ தங்கை தங்கைன்னு உருகிட்டு இருந்த .அதனால்தான் எல்லோருமாக திட்டம் போட்டு வுங்களை சுத்தி வளைத்திருக்கிறோம் .”

 

என்னடா உளர்றிங்க உன் தங்கை நடிகைதானே . அவளுடன் பேசனும் .போட்டோ எடுக்கனும்னுதானே சொன்னீங்க. ..

 

” ஆமா மச்சி போட்டோதான் ….ஆனா இப்போ எடுத்தோமே அந்த மாதிரி போட்டோ இல்லை .இவளை எங்கள் எல்லோருடனும் சேர்த்து விதம் விதமாக …போட்டோ. …வீடியோ தனியாக …சேர்ந்து …அதோ அந்த  பாறை மேல் .இதோ இந்த மரத்தடியில் “

 இவள் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பதால் அந்த போட்டோக்களுக்கு வீடியோக்களுக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா ?

அசிங்கமாக கண்ணை சிமிட்டி அவன் விகாரமாக இளிக்க …

 


நடுங்கதொடங்கினாள் சபர்மதி .ஐயோ …என்ன நடக்கிறது ? அன்றே பூரணசந்திரன் சொன்னானே .ராஜனுடன் சேராதே என்று. கேட்காமல் வந்துவிட்டு இன்று இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கிறேனே …தவித்தாள ்சபர்மதி

 

கார் சாவி…. காரில்தானே இருக்கிறது .வேகமாக காரை நோக்கி ஓடப்போனவள் தலை முடி பற்றி இழுக்கப்பட்டது ஒரு முரடனால் .

அதே நேரம் அவள் சுடிதார் சால் உருவப்பட , “முருகா ! வேலவா ! காப்பாற்றப்பா ” என அலறத்தொடங்கினாள் சபர்மதி .

 

ராஜனை இருவர் பிடித்து மரத்தில் கட்டி விட அவன் கண்களில் நீர் வடிய ” டேய் வேணான்டா, என்  தங்கைடா , விட்டுடுங்கடா “என கதறிக்கொண்டிருந்தான் .

 

மூன்று பேர் “வாங்கடா கொஞ்சம் சுருதி ஏத்திட்டு வருவோம் “என்றபடி ஒயின் பாட்டில்களுடன் ஒரு பாறை பின்னால் போய் விட்டனர் .

 

இருவர் சேர்ந்து சபர்மதியை பிடித்துகொள்ள கேமெராவுடன் ஒருவனும் தனது சட்டையை சுழற்றியபடி ஒருவனுமாக சபர்மதியை நெருங்கினர் .இதோ நெருங்கும் இவனை ஓங்கி மிதித்துவிட்டு ஓட வேண்டும் .அதிக தூரம் ஓட முடியாது .அவர்கள் ஏழுபேர் .எப்படியும் பிடித்து விடுவார்கள் .அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது செய்து உயிரை விட்டு விட வேண்டியதுதான் .” இவ்வாறு எண்ணியபடி கண்களை இறுக மூடியபடி அந்த ரவுடி அருகில் வர காத்திருந்தாள் சபர்மதி .

 

சூடாக எதுவோ அவள் முகத்தில் பட்டது .தொட்டு பார்த்தாள் .ரத்தம் ….தொடர்ந்து அலறலுடன் ஒவ்வொருவராக நான்கு பேரும் சாய்ந்து கொண்டிருக்க , பெரிய கட்டை ஒன்றை சுழட்டியபடி அவர்களை அடித்து கொண்டிருந்தவன் …..

 

தர்மசேகரன் ….ஆம் அவனேதான் …வீட்டை. விட்டு வெளியேறும் ஆசையில் ராஜனுடன் சபர்மதி காரில்  ஏறும்போது இவனும் ஏறி பின்சீட்டினடியில் மறைந்திருந்தான் போலும் .

 

ஆச்சரியத்தில் விழி விரிந்தது சபர்மதிக்கு .அவனோ ” ஏன்டா என் தங்கச்சியை அடிக்கிற …என்றபடி அவர்களை மேலும் அடிக்க கட்டையை ஓங்குகிறான் .அதற்குள் சத்தம் கேட்டு பாறையின் பின் இருந்த மூவரும் வந்துவிட ஒருவன் ” டேய் இந்தப்பைத்தியக்காரன் இங்கே எங்கடா வந்தான் ? ” என்றான் .

 

” இந்த தம்பி அரை லூசு , அந்த அண்ணன் முழு லூசை அதுக்கே தெரியாமல் ஏத்திட்டு வந்திருக்கு போலடா .”

 

” சரி  வாங்கடா

அவனையும் ஒரு மரத்தில் பிடித்து கட்டுவோம் “

 

அந்த மூன்று பேரும் தர்மசேகரனை நோக்கி வர…

 


” கட்டலாமே அதற்கு முன் இங்கே என்ன இருக்குன்னு பாருங்கள் ….”

கீழிருந்து எழுந்த நால்வரும் , இப்போது வந்த மூவருமாக திரும்பி பார்க்க ….போலீஸ் …

 

” என்னடா மாப்பிள்ளைங்களா ….போகலாமாடா ” இனஸ்பெக்டர் நக்கலாக கேட்க அவர் கையிலிருந்த துப்பாக்கிக்கு பயந்தபடி கைகளை உயர்த்தினர் ஏழு பேரும் .

 

” ஆதாரம் வேணும்னு கேட்டீங்க சார் .கண்ணெதிரே காட்டிட்டேன் .இனி இவர்களை ….” என்றபடி வந்தவன் பூரணசந்திரன்தான் .

 

ஒருவர் கழித்து அவனைப்பார்க்கவும் கண் கலங்கியது சபர்மதிக்கு .அவன் அவளை மறக்கவில்லை .அவள் முட்டாள்தனமாக ஏதாவது செய்தாலும் அவளை கண்காணித்தபடி இருந்து இறுதியில் காப்பாற்றி விட்டான் .

 

ஏதோ ஒரு மனநிறைவுடன் இப்படி நினைத்தவள் அப்படியென்றால் சென்னையில் அவளை வேவு பார்த்ததும் இது போல்தானோ …?

அப்படித்தான் என்று சபர்மதிக்கு உறுதிபட  தொடங்கியது .இதோ வந்துவிட்டான் அவனிடமே கேட்டுவிடுவோமென சபர்மதி நிற்க அவன் இன்ஸ்பெக்டரிடம் நன்றி கூறிக்கொண்டிருந்தான் .

 

” சார் நீங்க கவலைப்படாதீங்க ….இனி நான் பார்த்துக்கொள்கிறேன்.இடையில் அந்த காட்டெருமை கூட்டம் வராவிட்டால் நாம் இன்னும் கொஞ்சம் விரைவாக வந்திருக்கலாம். மேடத்திற்கும் இவ்வளவு தொல்லை இருந்திருக்காது ” என்றார் இன்ஸ்பெக்டர் .

 

” அதுதான் நாம் எதிர்பாராத விதத்தில் தர்மன் இடையில் வந்து அவன் தங்கையை காப்பாற்றி விட்டானே சார் ” பூரணசந்திரன் பெருமையாக தர்மனை பார்த்தான் .

 

தர்மன் தன் சட்டையை சுழற்றி சபர்மதிக்கு போர்த்தி விட்டு ” உன் சட்டை கிழிஞ்சிடுச்சே , குளிருமே …இதை போட்டுக்கோ தங்கச்சி ” என்று கொண்டிருந்தான் .

 

இன்ஸ்பெக்டர் புன்னகையுடன் அதைப்பார்த்து ” லவ்வபுல் பிரதர் ” என்றார் .”பின் நீங்க பார்த்து போங்க சார் “என்று விட்டு அந்த ரவுடிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார் .

 

” நீ உன் காரை எடுத்துட்டு வா ….” என்று ராஜனிடம் கூறி விட்டு , சபர்மதி பக்கம் திரும்பாமலேயே சற்று மறைவாக நிறுத்தியிருந்த தன் காரை எடுத்து வந்து அதில் “ஏறுங்க” என்றான் . சபர்மதி , தர்மனுடன் ஏறினாள் .

 

வீடு வரும் வரை ஒன்றும் பேசவில்லை .வந்ததும் நேரே அவுட்ஹவுஸ் சென்றான் .அங்கு அனுசூயா சத்யேந்திரனுக்கு பிஸியோதெரபி பண்ணிக்கொண்டிருக்க  உடன்  அதிசயமாக  அம்சவல்லியும் இருந்தாள் . இவர்களின்  காயங்களை பார்த்து பதறினாள் .தான் மருந்து கொடுத்து உறங்க வைத்த தர்மன் எங்கிருந்தோ ரத்தக்காயத்துடன் வந்து நிற்கிறானே என அனுசூயா விழித்தாள் .

 


” என்னப்பா என்ன ஆச்சு ?,”பதறினாள் அம்சவல்லி .

 

பதிலேதும் சொல்லாமல் வாசலை பார்த்தபடி நின்றான் பூரணன் .அனுசூயா மருந்தை எடுத்து வந்து தர்மனுக்கும் , சபர்மதிக்கும் தடவலானாள் .

 

காரை செட்டில்  நிறுத்திவிட்டு தயங்கியபடியே உள்ளே நுழைந்த ராஜனை ஓங்கி அறைந்தான் பூரணசந்திரன் .அவன் சுருண்டு சோபாவில் விழுந்தான் .

 

சத்யேந்திரனும்அம்சவல்லியும் பதறினர் .அம்சவல்லி ” டேய் என்னடா பண்ணி தொலைஞ்ச ?,” ராஜனை உலுக்கினாள் .அவன் கண்கலங்கியபடி தலை குனிந்திருந்தான் .

 

“நான் …நான் சொல்றேன் …”முன்னால் வந்தான் தர்மன் .” அப்பா தம்பியும், தங்கச்சியும் கார்ல ஏறி வெளில போனாங்களா…நானும் போகலாம்னு கார்ல சீட்டுக்கடியில் அவுங்களுக்கு தெரியாம ஒளிஞ்சிக்கிட்டேன் .அங்க ஒரு காட்டுக்குள்ள நிறைய கெட்ட பசங்க தம்பியை கட்டிப்போட்டுட்டு தங்கச்சியை அடிக்க போனாங்களா ..நான் ஒரு கட்டையை எடுத்து அவுங்களையெல்லாம் அடிச்சு தங்கச்சியை காப்பாத்திட்டேன் ” தனது சாகசங்களை குழந்தையின் குதூகலத்துடன் விவரித்தான் தர்மசேகரன் .

 

வாஞ்சையுடன் தரமசேகரனை பார்த்த அம்சவல்லி வேகமாக திரும்பி ராஜசேகரனை கன்னத்தில் அறைந்தாள் .”அந்த பாழாய் போன நண்பரகளை விட்டு விடுன்னு எத்தனை தடவை பூரணன் சென்னான் கேட்டாயா ?” என்றாள் .

 


” இல்லம்மா இனி விட்டுடுறேன்மா அவுங்க பக்கமே இனி திரும்ப மாட்டேன்மா  ” அழுகையின் ஊடே உறுதியளித்தான் ராஜன் .

 

ஒரு நிம்மதி தெரிந்தது பூரணசந்திரனிடம் .சத்யேந்திரனை நோக்கி ” மச்சான் ராஜனை பற்றி இனி கவலைப்பட வேண்டியிருக்காது .தொழிலை பார்ப்பதோ ,மேற்கொண்டு படிப்பதோ அவன் விருப்பம் போல் செய்து கொள்ளட்டும் .தர்மனுக்கு ஒரு புது வகை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் .அவர் அடுத்த வாரம் வந்து இங்கேயே தங்கி அவனை குணமாக்க முயற்சிப்பார் .

தொழிலை கவனிக்க எனக்கு மிக நம்பிக்கையான ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறேன் .அவர் உங்கள் ஆலோசனையின்படி நன்றாகவே தொழில் நடத்துவார் .நம்பிக்கையானவர் .”என முடித்தான் .

அம்சவல்லியிடம் ” அக்கா என்னால் முடிந்தவரை உங்கள் குடும்பத்தை கட்டியிருக்கிறேன் .இனி அதனை சிதற விடாது பார்த்துக்கொள்ளுங்கள் .இப்போது எனது கடமைக்காக எனக்கு விடை கொடுங்கள் ” என்றவன் சத்யேந்திரன் ,அம்சவல்லியிடம் காலில் பணிந்து ஆசி பெற்றான் .

 இதோ அடுத்து என் பக்கம் திரும்ப போகிறான் என சபர்மதி எதிர்பார்த்திருக்க , அனுசூயாவிடம் ஒரு சிறு தலையசைப்பில் விடை பெற்றவன் சபர்மதி பக்கம் கண்ணை கூட திருப்பாமல் போய் விட்டான் .போயே விட்டான் .




What’s your Reaction?
+1
23
+1
30
+1
2
+1
0
+1
0
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!