Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 26

  26

கழுவித்தள்ளி விட்டது மழை
சாலையையும்
உன் நேற்றைய கோபங்களையும் ,
முத்த வெப்பமுணர்நத மூக்குத்தி
மூச்சிரைக்கிறது
மோக குத்தூசிகளாய்
குத்திக் கிழிக்கும் இரவுகளுக்கு
பக்க வாத்தியமாய்,
அத்தனையையும் ஊற்றி முடித்த பின்பும்
சிறு சாரலோசை சரசமாய்
சன்னலிடை ,
மழைக்கு கறுத்த மச்சமொன்று
சாரலுக்கு சிவக்கிறது .




” நீங்களா …? நான் இங்கிருப்பது எப்படி தெரியும் …? உங்களை இனி நாளைதான் பார்க்க முடியும் என்று இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் ….”

” ம் …வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை நீ இங்கே வருவது எனக்கு தெரியும் .சொல்லு …நேற்று என்னவாயிற்று …?”

சாம்பவி நகர்ந்து அமர்ந்து ரிஷிதரனின் கைகளை பற்றிக் கொண்டாள் .

” உங்களுக்கு ரொம்ப நன்றிங்க. எல்லாமே நல்லபடியாக நடந்து முடிந்த்து .நீங்கள் நேற்று அண்ணனை பார்த்து பேசினீர்களா ….? ” ஆவலாக கேட்டாள் .

சந்திரனுக்கும் , ரிஷிதரனுக்குமிடையே கோபம் இருப்பதை அவள் அறிவாள் .தங்கை வாழ்க்கையை பாழாக்கிவிட்டான் என ரிஷிதரன் மேல் சந்திரனுக்கு கோபம் .அதே கோபம் ரிஷிதரனுக்கும் சந்திரன் மேல் இருக்கிறது என ஊகித்தாள் .ஏனென்றால் ஓரிருமுறை
சந்திரனை பற்றிய லேசான பேச்சிலேயே ரிஷிதரனின் முகம் கோபத்தில் இறுகுவதை கவனித்திருந்தாள் .

பிறந்த விட்டு ஆட்களும் , புகுந்த வீட்டு ஆட்களும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இருப்பதை எந்த பெண்தான் விரும்புவாள் .அண்ணனும் , கணவனும் ஒருவர் மேல் ஒருவர் கோபமாக இருக்கிறார்கள் என்ற விசயம் அவள் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்த்து .இப்போது கோபம் மாறி இருவரும் சுமூகமாகி விட்டனர் என்பது அவளுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது .

தனது மகிழ்ச்சியின் எதிரொலியை கணவனிடமும் எதிர்பார்த்தபடி அவனை பார்த்தாள் அவள் .

” இரண்டு பேரும் என்ன பேசினீர்கள் …? ” ஆர்வமாக கேட்டாள் .

அவளது பேச்சு காதில் விழாத்து போன்ற பாவனையில் நேரில் பார்த்தபடியிருந்தான் ரிஷிதரன் .அவனது பார்வை தள்ளி விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகளில் சாஹித்யா மேல் பதிந்த்து .கணவனின் ஆவலான பார்வையை கண்ட சாம்பவி …

” என்ன இன்னைக்கு போட்டோ எடுக்கலையா …? ” என்றாள் குறும்பாக .

” ம் ….” என பெருமூச்செறிந்தவனின் பார்வை மகளிடமே குவிந்திருந்த்து .அப்போது சாஹித்யா விளையாண்டவள் தடுமாறி மணலில் விழுந்தாள் .வேகமாக எழுந்த சாம்பவியின் கைகளை பற்றி தடுத்த ரிஷிதரன் …

” இரு அவளாக எழட்டும் ….” என்றான் .அதுபோல் கீழே விழுந்து சிறிது நேரம் சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தை …தன்னை தூக்கி விட யாரும் வர மாட்டார்கள் என எண்ணியோ என்னவோ தானாகவே எழுந்து கொண்டாள் .பெரிய மனுஷி போல் தன் கை கால்களை தானே உதறி கொண்டாள் .

அவளது அந்த பெரிய மனுஷி தோரணையில் சிரிப்புடன் சாம்பவி ரிஷிதரனை பார்க்க அவனும் முகம் முழுவதும் சிரிப்பு நிறைந்திருக்க மகளை ரசித்தபடியிருந்தான் .இப்படி தன்னையறியாமல் மகிழ்ந்து சிரிக்கும் போது இவன்தான் எவ்வளவு அழகாக இருக்கிறான் ..? சாம்பவியின் கண்கள் ஆசையுடன் கணவனை அள்ளி பருகியது .

அதே நேரம் திரும்பி அவளை பார்த்த ரிஷிதரனின் புருவங்கள் கேலியுடன் மேலெழும்பியது .அவனது கேலி பார்வையிலிருந்து தப்ப , ” பாப்பாவை தூக்கி வருகிறேன் …,” என தலை குனிந்தபடி முணுமுணுத்துவிட்டு போய் சாஹித்யாவை தூக்கினாள் சாம்பவி .

” அம்மா கண்ல தூசு …..” கண்களை தேய்த்த குழந்தையை தன் மடியில் அமர வைத்தபடி …

” இருடா …கண்ணை தேய்க்காதே .அம்மா பார்க்கிறேன் …” என்று கண்களை பார்த்துக் கொண்டிருந்த போது , ரிஷிதரன் குழந்தையின் தலையை மெல்ல கோதினான் .அவன் கைகளில் மெல்லிய நடுக்கத்தை கண்ட சாம்பவி அவனை ஆச்சரியமாக பார்த்தாள் .ரிஷிதரனுக்காவது …தயக்கமாவது …தடுமாற்றமாவது ….சாம்பவி வியந்தாள் .

” இ…இவள் ..எ…என்னிடம் வருவாளா …? இவளுக்கு என்னை தெரியுமா …? ரிஷியின் குரலிலும் , செயலிலும் உண்மையிலேயே தடுமாற்றம் .

கணவனின் தயக்கமும் பயமும் புரிந்து விட , தன் தோள்களில் முகத்தை தேய்த்தபடியிருந்த சாஹித்யாவை பற்றி திருப்பி , அவள் கண்களின் தூசியை சரி செய்துவிட்டு ….

” சாஹி …இதோ …பாருடா .இது யாருன்னு தெரியுதா …?” ரிஷிதரனைக் காட்டினாள் .




கண்களில் தூசி உறுத்தியதால் அடையாளம் சொல்வதற்காக சாஹித்யா எடுத்துக்கொண்ட அதிகமான ஓரிரு விநாடிகள் ரிஷிதரனின் மார்பு துடிப்பை அதிகரிக்க செய்த்தை சாம்பவி அவன் முகத்திலிருந்தே உணர்ந்தாள் .

ஆனால் அடையாளம் புரிபட்ட மறு நொடியே ” அப்பா ….” என்ற கத்தலுடன் கைகளை விரித்த சாஹித்யாவை கண்டதும் ரிஷிதரன் சுற்றுப்புறத்தையே மறந்தான் .
அப்படியே குழந்தையை வாரி எடுத்தவன் தனது முத்தங்களால் அவளை குளிப்பாட்டினான் .

இரண்டு வருடங்களாக பார்த்தே இராத தந்தை .இப்படி திடீரென எதிரே வந்த்துமின்றி தன் மீது ஒரேடியாக இப்படி பாசத்தை பொழிந்த்தில் சாஹித்யாவாவது சிறிது மிரட்சி அடைய வேண்டுமே .ஆனால் …ஊஹூம் ….

ஏதோ பிறந்த்திலிருந்து அப்பாவுடனேயே இருந்தவள் போல் தானும் பதிலுக்கு அப்பாவை முத்தமிடவும் , அவன் கன்னங்களை தடவவும் ,மீசையை பிடித்து இழுக்கவுமாக இருந்தாள் அவள் .மகளின் இந்த பாச செய்கைகளில் மேலும் நெகிழ்ந்த ரிஷிதரன் அவளை விட்டு விடவே மாட்டான் போல் தன்னுடன் அணைத்துக் கொண்டான் .

சை …எத்தனை முறை துடைத்தாலும் திரும்ப திரும்ப வழிந்து கண்களை மறைக்கிறதே …கண்ணீரை மாறி மாறி துடைத்தபடி இந்த காட்சியை ரசித்தபடி இருந்தாள் சாம்பவி .திடிரென ஒன்று தோன்ற தனது போனை எடுத்தவள் அப்பா , மகளின் இந்த பாசப்பிணைப்பை போட்டோவாக , வீடியோவாக மாற்ற தொடங்கினாள் .

” ஏய் என்ன பண்ற …? ” செல்லமாக அதட்டியபடி அவளை தடுத்தான் ரிஷிதரன் .

” தமிழ்நாட்டின் சிறந்த தொழிலதிபர் .அவர மகளுடன் கொஞ்சுகிற காட்சி …எல்லாருக்கும் பார்க்க கிடைக்குமா …? கிடைக்கிற நேரம் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டாமா …? …” போட்டோக்களை நிறுத்தி வீடியோவுக்கு மாறினாள் .

“உங்களை மகனாக , அண்ணனாக , கணவனாக பார்த்திருக்கிறேன் .இப்போது ஒரு தந்தையாக பார்க்கிறேன் .என் மனதில் பதிந்த்தை போனிலும் பதிய வைத்துக்கொள்கிறேன்  ” சொன்னபடி தொடர்ந்த சாம்பவியை முதலில் தடுத்தவன் , பின் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு தானே குழந்தையுடன் போட்டோவிற்கு ,வீடியோவிற்கு போஸ் கொடுத்தான் .

சாஹித்யாவிற்கு அவன் கொடுத்த முத்தங்களில் ஒன்றிரண்டு குழந்தை அறியாமலே சாம்பவிக்கும் கிடைத்தது .

” ஷ் …என்ன இது …? இங்கே வைத்துக்கொண்டா இது போலெல்லாம் செய்வார்கள் …? ” செல்லமாக கணவனை கடிந்து கொண்டாலும் கன்னங்களின் அவன் அளித்த முத்தங்களின் ஈரத்தை துடைக்க மனமின்றி மனதினால் சுவைத்துக் கொண்டிருந்தாள் சாம்பவி .

” பிறகு எங்கே வைத்து இது போலெல்லாம் செய்யலாம் பவி …? ” என ரகசியமாக கேட்டு அவளை முகம் சிவக்க வைத்தான் .

” வாங்க கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாம் …” என இருவரையும் அழைத்தபடி காரில் ஏறினான் .

ஜவுளிக்கடை , ஹோட்டல் , ஐஸ்க்ரீம் , என கிட்டதட்ட மதுரை முழுவதும் சுற்றிவிட்டு , கண்ணில் பட்ட சாமான்களையெல்லாம் மகளுக்கென வாங்கி குவித்தான் .

ஒரு நிமிடம் கூட …சாஹித்யாவை தனது கைகளை விட்டு இறக்காமல் வைத்திருந்தான் .கார் ஓட்டும்போது கூட மடியிலேயே வைத்துக்கொண்டான் .சந்தோசமாக தகப்பனையும் , மகளையும் பார்த்தபடியிருந்தாள் சாம்பவி .

” எனது குழந்தையுடனான எனது வாழ்வின் முக்கியமான இரண்டு வருடங்களை நான் இழந்துவிட்டேன் சாம்பவி …” வருந்தியபடி கார் ஓட்டியபடி  மகளை மடியிலிருந்து இறக்காமல் அணைத்தபடி இருந்தான் .சாஹித்யாவும் சொகுசாக தந்தையின் மார்பில் சாய்ந்தபடி விளையாண்டு கொண்டு வந்தாள் .

மூவருமாக சேர்ந்து உடல் அலுக்க ஊர் சுற்றிவிட்டு , மனம் நிறைக்க காரில் ஏறினர் .

,” இனி நீங்கள் வீட்டிற்கு போக வேண்டுமல்லவா …?…” குரல் தடுமாற கேட்டான் .




இதற்கு பதில் சொல்ல மனமின்றி கணவனின் தோளில் தூங்கிவிட்ட மகளை தனது மடிக்கு மாற்றிக்கொண்டு மெல்ல ” ம் ….,” என்றாள் சாம்பவி .

அப்போதும் மகளின் கால்களை வருடியபடி தனது மடி மீது தூக்கி வைத்துக்கொண்டான் ரிஷிதரன் .தீவிர யோசனையில் அவன் கைகள் தன் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை தொட போக , அவனை முறைத்தாள் சாம்பவி .

” குழந்தை இருக்கிறாள் .அவள் முன்பே சிகரெட் பிடிப்பிர்களா …? ” கோபமாக கேட்டாள் .

” இல்லை …இல்லை …” வேகமாக மறுத்தவன் சிகரெட் பாக்கெட்டை எடுத்து டேஷ்போர்டுக்குள் வைத்து பூட்டினான் .

” ஒரு நாளைக்கு எத்தனை குடிப்பீர்கள் …? எப்போது இந்த கெட்ட பழக்கத்தை விட போகிறீர்கள் …? ” கோபமாக கேட்டாள் .

” நிறைய குடிக்க மாட்டேன் பவி.எப்போதாவதுதான் .இன்று கூட காலையில் ஒன்று குடித்ததுதான் …அதன் பிறகு இப்போதுதான் தோன்றியது ….”

” இல்லை .பொய் .இப்போதுதான் கொஞ்சம் முன்னால் அங்கே ஐஸ்க்ரீம் கடையில் வைத்து சிகரெட்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனிர்கள் .நான் பார்த்தேன் …”

” ஆமாம் …ஆனால் பாப்பாவை நினைத்து வைத்துவிட்டேன் .பிடிக்கவில்லை ….”

” இதை என்னை நம்ப சொல்கிறீர்களா …? ” உதட்டை சுழித்தாள் சாம்பவி .ரிஷிதரனின் முகத்தில் குறும்புத்தனம் வந்து அமர்ந்துகொண்டது .

” நம்பாவிட்டால் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் நானிருக்கிறேன் பவி …” என்றவன் காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு , குழந்தைக்கென்று போட்டு வைத்திருந்த காரின் முன் விளக்கை அணைத்தான் .என்னவென்று சாம்பவி ஊகிக்கும் முன் அவள் இதழ்களின் மேல் தன் இதழ்களை வைத்து அழுத்தினான் .

” சிகரெட் வாடை இல்லையில்லையா …? இப்போது நம்புகிறாய்தானே ….? ” உதடுகளுக்குள் உதடுகளால் பேசினான் .

” வாயால் சொன்னால் போதாதா …? இப்படித்தான் நிரூபிக்க வேண்டுமா …? ” வெட்கத்துடன் அவனை தள்ளினாள் .

” சொன்னேனே பவி …நீதானே நம்பவில்லை …பிறகு நான் என்ன செய்யட்டும் …? ” அப்பாவி போல் கைகளை விரித்தான் .

முகம் ரத்தமாக சிவக்க முகம் திருப்பியவளை திரும்ப விடாமல் தன் பக்கம் திருப்பினான் .காரின் விளக்கை திரும்ப போட்டான் .

,” ஐய்யோ இப்போது எதற்கு ஆப் பண்ணுங்கள் …,” கூச்சத்துடன் முகத்தை மூடிய சாம்பவியின் கைகளை எடுத்து அவளது முகத்தை கூர்ந்து பாரத்தவன் ….

” என்னைப் போல் ஒரு முட்டாள் யாரும் இருக்க மாட்டான் பவி .கல்யாணம் முடிந்து மூன்று வருடம் ஆகிவிட்டது .ஒரு குழந்தையும் பிறந்து விட்டது .இன்னமும் உனக்கு முத்தமிட கூட தெரியவில்லை …இதை கூட உனக்கு கற்றுக் கொடுக்காமல் இருந்த்து எனது தவறுதானே …? ” கணவனின் சீண்டலில் சிவந்த முகத்தை மறைக்க அங்குமிங்குமாக
திரும்பி  சாம்பவி முயல , அதை எதிர்பார்த்தவன் போல் அவள் முகத்தை நகரவிடாமல் அழுத்தி பற்றி அவளது நாணத்தை ,தவிப்பை பக்கத்தில் பார்த்து ரசித்தான் .

சாம்பவி சட்டென்று காரின் விளக்கை அணைத்தாள் .

” ச்சீ ..ரொம்ப மோசம் நீங்க போங்க …,” அவனை தள்ளினாள் .

” நிறைய பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியதிருக்கிறதே பவி .எப்போது படிக்கலாம் சொல்லு …? ” அவளின் இதழ்களை வருடினான்

” ம் …ஒன்றும் தேவையில்லை …போங்க …” மடியில் தூங்கிய குழந்தையை அணைத்துக் கொண்டாள் .

” எனக்கு தேவையாக இருக்கிறதே .நான் சந்திரன் போல் அந்த அளவு பொறுமைசாலி கிடையாது பவி .ஏன் உனக்கு தேவையில்லையா …எங்கே என் முகத்தை பார்த்து சொல்லு ….” அவள் மடியில் தூக்கத்தில் நெளிந்த குழந்தையை சமாதானமாக தட்டிக்கொடுத்தபடி அவள் காதுக்குள் கிசுகிசுத்தான் ரிஷிதரன் .

” அண்ணனிடம் என்ன பேசினீர்கள் ….? ” அவளது தேவை பற்றிய அவனது ஆராயச்சியை மாற்றுவதற்காக இந்த கேள்வியை கேட்டாள் சாம்பவி .




இப்போது ரிஷிதரனின் உல்லாச மனநிலை மாறிவிட்டது .

” உன் அண்ணன் செய்த வேலைக்கு வேறொருவனாக  இருந்தால் , அவர் முகத்திலேயே விழித்திருக்க மாட்டான் .நானாக இருப்பதால் ரொம்ப பொறுமையாக இருக்கிறேன் …”

ரிஷிதரன் பேச்சை கேட்டதும் சாம்பவிக்கு கோபம் வந்த்து .

” ஏன் ..என் அண்ணன் அப்படி என்ன செய்தார் …? உங்கள் தங்கையை திருமணம் செய்யாத்தை குறையாக சொல்கிறீர்களா …? “

“இங்கே பார் சாம்பவி .நன்றாக கேட்டுக்கொள் .இனி ஒரு முறை நம் வாழ்நாளில் இந்த பேச்சு நமக்குள் வரக்கூடாது .உன் அண்ணன்  சஹானாவை திருமணம்
செய்து கொள்ளாததில் சஹானாவிற்கோ , எனக்கோ நம் வீட்டில் யாருக்குமோ எந்த வருத்தமும் கிடையாது .எல்லோருக்கும் சந்தோசமே …எங்கள் சஹானாவிற்கு ஏற்ற மாப்பிள்ளை நிச்சயம் சந்திரன் கிடையாது .இப்போது அது அல்ல பிரச்சினை …” என ஏதோ சொல்ல வந்தவனை கைகளை உயர்த்தி தடுத்தாள் சாம்பவி .

” போதும் .அதுதான் தெளிவாக எல்லாவற்றையும்  சொல்லிவிட்டீர்களே …வீடு வந்துவிட்டது .இதோ இப்படி ஓரமாக காரை நிறுத்துங்கள் .நாங்கள் இறங்கிக் கொள்கிறோம் …” என்றவளை மௌனமாக பார்த்தான் .

பிறகு காரை அவள் சொன்ன இடத்தில் நிறுத்தியவன் மடியிலிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக இறங்க போனவளின் தோள்களை தொட்டு நிறுத்தினான் .

” வேண்டாம் பவி .ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன். இவ்வளவு இனிமையோடு இருந்த நமது இந்த நாள் இப்படி ஒரு சண்டையோடு முடிய வேண்டாம் ..” என்றான் .

அவனது ரொம்ப நாட்களுக்கு பிறகு மனதை பாதிக்க ” எனக்கு மட்டும் சண்டை போட வேண்டுமென்ற ஆசையா என்ன …? ” மனதிற்குள் ஏக்கத்தை மறைத்துக் கொண்டு வெளியே இதை சொன்னாள் சாம்பவி .

அவளது பதிலில் மகிழ்ந்து போனவன் ” குட் ..இப்போ போ .நாளை ஆபிசில் பார்க்கலாம் ….” குழந்தையின் கன்னத்தை ஒரு முறை ஆசையாக வருடிவிட்டு கதவை திறந்தான் .

இறங்கும் முன் திரும்பி பார்த்த சாம்பவிக்காக இதழ்களை குவித்து காட்டி , கண்களை சிமிட்டினான் .முகம் மலர  கீழிறங்கினாள் சாம்பவி .மெல்லிய விசிலுடன் காரை கிளப்பிக் கொண்டு போனான் ரிஷிதரன் .




What’s your Reaction?
+1
48
+1
26
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!