Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 23

   23

சாத்தியமில்லையென சலித்த பொழுதுகள்
சாஸ்வதமாய் நிற்கின்றன
சாமர்த்திய சந்தனம் பூசிக்கொண்டு ,
சூழ்ந்திருக்கும் சத்தங்களுக்கிடையே
முன்தின விரல்களை நினைவூட்டுகிறது
அந்த தேனருந்தும் பட்டாம்பூச்சி ,
பாடிப் பறக்கும் அந்த வரிக்குயில்
கவனப்படுத்துகிறது
களைத்து சரிந்த பொழுதுகளை ,
விரிந்திருக்கும் மணல்வெளிக்குள்
துழாவுகிறேன்
நான் தொலைந்த கணங்களை .




ஸ்கூட்டியை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு …முன்னால் நின்றிருந்த சாஹித்யாவை கைகளில் அள்ளிக்கொண்டாள் சாம்பவி .பால் மணக்கும் குழந்தையின் கன்னங்களை முகர்ந்தபடி அழுத்தமான முத்தமொன்றை பதித்தாள் .

” செல்லக்குட்டி சாமி கும்பிடலாமா …? …”

” ம் …தொப்பாம் பாக்லாம் ….” மழலையில் கொஞ்சினாள் குழந்தை.

சாக்லேட் தித்திப்பாய் வந்து விழுந்த குழந்தையின் மழலை …நெஞ்சை பரவசப்படுத்த …

” என் கண்ணு …செல்லம் …தங்கம்….என மகளை கொஞ்சியபடி மீனாட்சியம்மன் கோவிலினுள் நுழைந்தாள் .என்னவென்று சொல்ல தெரியாமலேயே அவள் மனதில் ஒரு வெறுமை நிறைந்திருந்த்து .

இரண்டு நாட்களாக பழையபடி விலகல் இல்லையென்றாலும் இந்த மேடம் , ங்க களையெல்லாம் விட்டுவிட்டு ஒழுங்காக முகம் பார்த்து பேசிக்கொண்டிருந்தான் ரிஷிதரன் .ஆனால் கணவனென்ற உரிமையுடனான் பழைய சீண்டல்களை நிறுத்திக்கொண்டான் .

ம் …அப்படியே இரு …என மனதிற்குள் திருப்தியென எண்ணிக்கொண்டாலும் , சாம்பவிக்கு எதையோ இழந்த்து போன்ற எண்ணம் வந்து கொண்டேயிருந்த்து .

சஹானா அன்று ஆஸ்பத்திரியில் வைத்து தனை மறந்து நலம் விசாரித்துவிட்டு , பிறகு ஏதோ தப்பு செய்த்து போல் அதிகமாக தள்ளி போய்கொண்டிருந்தாள் .இந்த அண்ணன் , தங்கையை எப்படி வழிக்கு கொண்டு வர …? நினைத்தாலே மலையை புரட்டுவது போலிருந்த்து சாம்பவிக்கு .

இதோ …ஒரு கடவுளை போல் …ஆசீர்வதிக்க வந்த தேவதை போல் பரவசமூட்டும் இந்த குழந்தையை மறக்கவோ , விலக்கவோ எப்படி மனம் வந்த்து ….? தவறென்பது என்னிடம் வேண்டுமானால் இருக்கலாம் .இந்த குழந்தை என்ன செய்த்து …?

அன்று சஹானா குழந்தையை தள்ளியது நினைவில் வந்த்து .குழந்தைகள் மேலெல்லாம் அவளுக்கு என்றுமே இன்ட்ரெஸ்ட் இருந்த்தில்லை  .ஆனால் சொந்த அண்ணன் குழந்தை மீது கூடவா …பாசமின்றி போய்விடும் .

அவள்தான் இந்த குழந்தைக்கு அப்பா யார் என்று கேட்டாளே ….அவளது அன்றைய கேள்வியில் இப்போதும்  குலுங்கிய சாம்பவியின் உள்ளம் , அன்று காயத்திற்கு மருந்திட்ட சஹானாவின் பரிவில் ஒன்ற மறுத்தது .கூடவே ரிஷிதரனின் அன்பிலும் .




அவனும்தான் …பதறியது போல் மருந்திட வந்தானே ..இன்று வரை சாஹித்யாவை பற்றி ஒரு வார்த்தை கேட்டிருப்பானா ….? பிள்ளையாருக்கு தோப்புகரணம் போட மகளுக்கு கற்று கொடுத்தபடி பார்வையை திருப்பிய சாம்பவி திடுக்கிட்டாள் .

அதோ …அது சஹானாதானே …இவளென்ன கோவிலுக்கெல்லாம் வந்நிருக்கிறாள்.ஓரு வேளை மிகவும் கவலையில் இருக்கிறாளே ….இல்லாவிட்டால் கோவிலுக்கு வர மாட்டாளே …

சிறிதுநேரம் முன்பு தோழியை பற்றி மனதில் ஓடிய அதிருப்தி மறைந்து போய் பேசலாமா ….என்ன கவலையோ ….? என்ற எண்ணம் தோன்றியது .குழந்தையை காட்டி என்னை மயக்க பார்க்கிறாயா …என்ற அவளது பேச்சு நினைவு வர, சாஹித்யாவை தூக்கிக் கொண்டு அவள் கண்களில் படாமல் ஒளிந்து நடந்தாள் .

சே என்ன இது நிம்மதியாக சாமி கூட கும்பிட விடாமல் ..என எண்ணியபடி …பேசாமல் நடந்த அன்னையை சாஹித்யாவிற்கு பிடிக்காமல் போனது .

” ம் மா …ம் ..ம் …கத..கத …” கொஞ்சலாக பேசியபடி தனது முகத்தை அம்மாவின் முகத்தில் வைத்து தேய்த்தாள் .இது போன்ற குழந்தையின்  செய்கைகள் சாம்பவிக்கு சாஹித்யாவின் தந்தையை நினைவுபடுத்தும் .அவனும் இப்படித்தான் தனக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் கெஞ்சி …கொஞ்சி …உரசி …சாதித்துக கொள்வான் .

நினைவுகளின் தொடர்ச்சியாக அவனது கொஞ்சல்களும் , உரசல்களும் மனதில் வலம் வருவதை தடுக்க …பெருமூச்சுடன் குழந்தை கேட்ட கதையை சொல்ல ஆரம்பித்தாள் .

ஒவ்வொரு சந்நிதி முன் நிற்கும் போதும் அந்தந்த தெய்வங்களுக்கரிய கதை .வாராவாரம் கோவிலுக்கு வரும் போது கூறுவதுதான் ்ஆனால் சாஹித்யாவிற்கு சலிக்காது .திரும்ப திரும்ப அதே கதையை …அப்போதுதான் கேட்பது போல் கேட்பாள் .இந்த கதைகள் எந்த அளவு அவளுக்கு புரியுமோ …? தெரியாது .ஆனால் புரிந்த்து போல் கேட்பாள் .பெரிய மனுஷியாக தலையை தலையை ஆட்டிக்கொள்ள வேறு செய்வாள் .

இப்போதும் பொம்மை போல் கருவிழிகளை விரித்தபடி கதை கேட்கும் மகளை மீண்டும் வாரி அணைத்து முத்தமிடும் ஆவலை அடக்கியபடி , கதைகளை கூறி ஒவ்வொரு சந்நிதியாக சுற்றி வந்தனர் .இங்கே சஹானாவை காணவில்லை . போய்விட்டாளோ என்னவோ …என எண்ணியபடி துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கு போட்டு வணங்கிவிட்டு, அம்மன் பாத்த்தில் கிடந்த  குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் , வகிட்டிலும் வைத்துக்கொண்டாள் .

நவக்கிரகங்களை ஒவ்வொரு கிரகங்களின் பெயரையும் சொல்லியபடி அம்மாவும் , மகளும் ஒன்பது முறை சுற்றி வந்தனர் .பிறகு வரிசையில் நின்று அம்மனை தரிசித்து விட்டு தேங்காய் , பழம் வாங்கிக் கொண்டு , சாஹித்யாவிற்கு பிடித்த தெப்ப குள படிக்கட்டில் வந்து உட்கார்ந்தனர் .வாழைப்பழ்த்தை சிறிது பிய்த்து குழந்தைக்கு ஊட்டினாள் .

அப்போது தன் பெற்றோர்களுடன் கோவிலுக்கு வந்திருந்த ஒரு குழந்தைக்கு , சாஹித்யாவை கண்டதும் அவளுடன் விளையாடும் ஆசை வர அவர்கள் அருகே வந்து கைகளை தட்டி சாஹித்யாவுடன்  விளையாட ஆரம்பித்தது .கையிலிருந்த விபூதி , குங்குமத்தை மடிக்க துண்டு பேப்பர் தேடினாள் சாம்பவி .




அதோ அங்கே வைத்திருக்கிறார்கள் என எடுக்க எழுந்தவள் , ” பாப்பா …குட்டி பாப்பாவை பார்த்துக்கோ .இப்போ வந்திடுறேன் …” என அந்த குழந்தையிடம் சொல்லிவிட்டு  போய் பேப்பரை எடுத்து பிரசாத்த்தை மடித்தாள் .

அங்கிருந்து திரும்பி விளையாடும் குழந்தைகளை கவனித்தவள் அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்த போது , பக்கவாட்டு தூண் மறைவிலிருந்து ஏதோ அசைவு தெரிந்த்து..சட்டென கொஞ்சம் ஒதுங்கி நின்று கவனித்த சாம்பவி பிரமித்தாள் .

அங்கே …தூண் மறைவில் நின்றவன் ரிஷிதரன் .கையில் போன் வைத்திருந்தான் .அவன் பார்வை முழுவதும் சாஹித்யாவின் மீது குவிந்திருந்த்து .தனது போன் மூலம் குழந்தையை போட்டோக்கள்   எடுத்துக் கொண்டிருந்தான் .

முதலில் ஆச்சரியப்பட்ட சாம்பவிக்கு பின் கோபம் வந்த்து .இவன் ஏன் பெற்ற குழந்தையை இப்படி திருட்டுத்தனமாக ஒளிந்திருந்து பார்க்கிறான் .

வேகமாக நடந்து சென்று அவன் போனை மறைத்தாற் போல் நின்றாள் .ஆவலுடன் குழந்தையை படமெடுத்து கொண்டிருந்தவன் , திடீரென மனைவி முன்னால் வந்து நிற்கவும் திகைத்தான் .

” என்ன செய்கிறீர்கள் ….? ” குற்றவாளி போல் அவனை கேள்வி கேட்டாள் .

பதில் சொல்லாமல் குழந்தையின் பக்கம் பார்வையை ஓட்டியவனிடம் சிறு பரபரப்பு வந்த்து .

” சாம்பவி இங்கே இந்த தூணின்  பின்புறம் வந்து விடு …” சொன்னதோடு அவள் கைகளை பிடித்து தன்னருகே இழுத்துக் கொண்டான் .

” ம்ப்ச் …என்ன இது …? ” என்று எரிச்சலடைந்தவளுக்கு ….

” அங்கே பார் ….” என காட்டினான் .

அங்கே சஹானா சாமி கும்பிட்டபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் .சாஹித்யாவை பார்த்து விட்டாள் .சுற்று முற்றும் பார்த்தாள் .தயங்கினாள் .அவள் தன்னை தேடுகிறாள் என உணர்ந்த சாம்பவி இன்னமும் உள்ளே தள்ளி , ரிஷிதரனின் அருகே அவனை லேசாக உரசியபடி நின்று கொண்டாள் .

” கோவிலுக்கு இருவரும் சேர்ந்துதான் வந்தோம் .நான் பாப்பாவை போட்டோ எடுப்பதற்காக இங்கே நின்று கொண்டேன் ..அவள் உள்ளே போனாள் …” விளக்கினான் .

அவன் கையிலிருந்த போனை வாங்கி பார்த்தாள் சாம்பவி .அதில் அவள் கோவிலினுள் நுழைந்த்திலிருந்து சாஹித்யாவிற்கு கதை சொல்லியபடி கோவிலை சுற்றி வந்த்து வரை எல்லாமே போட்டோவாக இருந்த்து .ஆச்சரியமாக திரும்பி அவனை பார்த்தாள் .ரிஷிதரனின் கவனம் சஹானா , குழந்தை மேல் இருந்த்து .




மற்றொரு குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த அண்ணன் மகளை ஆசையோடு பார்த்தபடி சாஹித்யா சற்று தள்ளி தானும் ஒரு படிக்கட்டில் அமர்ந்துவிட்டாள் .ஐந்து நிமிடங்களில் அந்த குழந்தையை அதன் அம்மா அழைக்க அந்த குழந்தை “பாப்பா டாட்டா “என்றுவிட்டு போய்விட்டாள் .

இவ்வளஙு நேரம் விளையாடிய துணை திடீரென போய்விட , சாஹித்யா சுற்றிலும் தன் அன்னையை தேடி பார்த்துவிட்டு அவள் இல்லாததால் மெல்ல அழ ஆரம்பித்தாள் .வேகமாக குழந்தையிடம் போக வெளியேறிய சாம்பவியை மீண்டும் தடுத்தான் ரிஷிதரன் .

” இரு பவி …நான் சஹானா என்ன பண்ணுகிறாளென்று பார்க்க வேண்டும்  ப்ளீஸ் ஒரு பைவ் மினிட்ஸ் ….” என்றான் கெஞ்சுதலாக ….

அரை மனதுடன் அழும் குழந்தையை பார்த்தபடி மறைந்து நின்றாள் சாம்பவி .

குழந்தை அழவும் திடுக்கிட்ட சஹானா சுற்று முற்றும் திரும்பி சாம்பவியை தேடினாள் .அவளை காணாது விழித்தபடி நின்றவள் சாஹித்யா அழுதபடி மெல்ல எழுந்து நடக்க ஆரம்பிக்க , அவள் படிகளில் உருண்டு விட போகிறாளென்ற பயத்துடன் விரைந்து சென்று குழந்தையை அள்ளிக் கொண்டாள் .

முகத்தில் ஆத்திரத்துடன் ” இடியட் குழந்தையை விட்டுவிட்டு எங்கே போய் தொலைந்தாள் …? ” அவளது இதழசைவை காற்று அரைகுறையாக இவர்களுக்கு கடத்தியது .

” அச்சோ …அழாதீங்க செல்லம் …எதுக்கு அழுறீங்க …பாப்பு குட்டிக்கு என்ன வேண்டும் …? ஐஸ்க்ரீமா …சாக்லேட்டா …? ” கண்களை சுற்றிலும் ஓட்டியபடி குழந்தையை சமாதானப்படுத்த முயன்றாள்.

திடீரென வந்து நின்று தன்னை தூக்கிய ஆளை சாஹித்யா உற்று பார்க்க ….

” என்னடா ..என்னை தெரியலையா …?….நான் …” என அவள் ஆரம்பித்தபோது ….அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண் நின்று சஹானாவை உற்று பார்த்தாள் .

” வணக்கம்மா …நல்லாயிருக்கிங்களா …? என்னை தெரியுதா …? நான் நம்ம கம்பெனியில் கொஞ்சநாள் கூட்டுற வேலை செய்தேனே .முத்தம்மா …எனக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் சம்பளத்தோடு கூட கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ணுனீங்களே …” அந்த வயதான பெண் கைகளை கும்பிட்டபடி நினைவுபடுத்தினாள் .

” ஓ…ஆமாம் நினைவிருக்கிறது .எப்படி இருக்கிறீர்கள் …? உடம்பு சரியாயிடுச்சா …? “




” இப்போ பரவாயில்லைங்கம்மா .நீங்க கொடுத்த பணம் வைத்தியத்துக்கு ரொம்ப உபகாரமா இருந்த்து .என்னங்கம்மா உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா ..? சொல்லவேயில்லையே …? உங்க குழந்தைதானே இது …? அப்படியே உங்களையே உரிச்சி வச்சிருக்குது …ஏன் அழுது …? சாஹித்யாவின கன்னத்தை கிள்ளி தன் இதழ்களில் ஒட்ட வைத்தபடி கேட்டாள் .

” எனக்கு கல்யாணமாகவில்லை .இது …எ…என் குழந்தையில்லை ….”

” அப்போ …பாப்பா யாரு …? உங்க முக ஜாடை அப்படியே தெரியுதே …”

” எ…என் …அண்ணன் குழந்தை …” தடுமாறி பதில் சொன்னாள் .

” அதுதான் …அத்தை ஜாடையில் மருமகள் போல ….நல்லாயிரு கண்ணு .நீங்களும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோங்கம்மா …நான் வர்றேன் ….” போய்விட்டாள் .

அவள் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்த சஹானா ..குழந்தையை உற்று பார்த்தாள் .பிறகு தனது போனை எடுத்து அதிலுருந்த தனது சிறுவயது புகைப்படங்களை பார்த்தாள் .தன்னையும் சாஹித்யாவையும் ஒத்து பார்த்துக்கொண்டாள் .அவள் கண்கள் நிறைந்தன.

குழந்தையின் முகத்தை தன்புறம் திருப்பி ” சாஹிம்மா ..நான்  அத்தைடா …அன்னைக்கு கோவிலில் வைத்து உன் அம்மாவுடன் பார்த்தாயே ..நான்தான் உன் அத்தை …” என்றாள் .

சாஹித்யாவிற்கு இப்போது அடையாளம் பிடிபட்டுவிட …கைகளை விரித்து ” அத்தை ….” என்றாள் .

சஹானா பாசத்துடன் கண்கள் கலங்க குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள் .கன்னத்தில் முத்தமிட்டாள் ” அத்தைக்கு முத்தம் …” என குழந்தையிடம் கேட்டு வாங்கினாள் .

தனது கன்னங்கள் துடைக்கப்படும் ஸ்பரிசம் உணர்ந்து திரும்பினாள் சாம்பவி .

” இப்பொழுது சிரிக்க வேண்டும் பவி .அழக்கூடாது …” என வழிந்த அவளது கண்ணீரை துடைத்தான் ரிஷிதரன் .

சாம்பவிக்கு இருந்த சந்தோசத்திற்கு ரிஷிதரனை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்த்து .ஆனால் நிற்குமிடம் கோவிலாயிற்றே …அவளது மன ஓட்டத்தை அறிந்தவன் போல் , அவள் கன்னங்களில் மெல்ல தட்டிய ரிஷிதரன் …

” குழந்தையிடம் போ பவி …நாம் பிறகு பேசலாம் …” என்றான் .

முத்தமும் …கொஞ்சலுமாக குழந்தையிடம் ஆழ்ந்திருந்த சஹானா …திடீரென சாஹித்யா கைகளை நீட்டி ” அம்மா …” எனவும் திடுக்கிட்டு திரும்பினாள் .

இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தாள் சாம்பவி .ஒரு நிமிடம் செய்வதறியாது விழித்தவள் மறுநிமிடம் தொண்டையை செருமி தலையை உலுக்கி தன்னை கம்பீரமாக மாற்றிக் கொண்டாள் .




” குழந்தையை ஒழுங்காக பார்த்துக்கொள்ள தெரியாதவளெல்லாம் எதற்கு வெளியே அழைத்து வருகிறாய் …?்நான் பார்க்கவில்லையென்றால் குழந்தை இந்த படியில் உருண்டிருக்கும் .பிடி உன் பிள்ளையை ….” வெடுக்கென குழந்தையை அவள் கையில் திணித்துவிட்டு வேகமாக நடந்தாள் .

” நான் ஒன்றும் கேட்கமாட்டேன் சஹி .நீ மெதுவாகவே போகலாம் …” சாம்பவி கேலியுடன் குரல் கொடுத்தாள் .

திரும்பி அவளை முறைத்துவிட்டு மேலும் வேகமாக நடந்து …இல்லை ஓடிவிட்டாள் சஹானா .

” போடி போ …எத்தனை நாள் நீ இப்படி உன்னையே மறைத்துக்கொண்டு பொய்யாய் திரிகிறாய் என நானும் பார்க்கிறேன் …” தனக்குள் நினைத்துக் கொண்டாள் சாம்பவி .

கோவிலுக்குள் வரும்போது இருந்த வெறுமையான மனநிலைக்கு மாறாக இப்போது மனம் முழுவதும் நிறைந்திருந்த்து அவளுக்கு .




What’s your Reaction?
+1
54
+1
29
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!