Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 20

20

விடாது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
நீயற்ற பொழுதுகளின் கனத்தினை ,
நீர் தேடும் வேரென
நீண்டு கொண்டே செல்கின்றன அவை ,
கண்கள் பார்க்காது காற்றோடு பேசுமெனை
அளவற்ற பரிவோடு பார்க்கிறாய் ,
திடீரென தெறித்து விழுகின்றன
ஈரம் கசியும் சொற்கள் ,
காற்றிற்குள் ஒளிந்திருக்கும் நீர்த்துளிகள்
பிரவாகமாகின்றன நீர்வீழ்ச்சியென ,
பொங்கி வரும் காட்டாற்றில்
சிறு குழந்தை சுவர்க்கிறுக்கலானது என் கோபம் ,
கூரான மலை முகட்டில் பூத்திருக்கும்
கள்ளூறும் மஞ்சள் மலரென்னை
எப்படியேனும் பறித்தெடுத்து விடு .




” குழந்தையை பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லையா …? ” மரகதவல்லி நம்ப முடியாமல் கேட்டாள் .

” ம் ….” என்ற ஒற்றை எழுத்து பதிலுடன் தனது லேப்டாப்பினுள் நுழைந்து கொண்டாள் சாம்பவி .

” ம் …எப்படித்தான் இப்படி கல் மனதுடன் இருக்க முடிகிறதோ ..? ” மரகதவல்லி பெருமூச்செறிந்தாள் .

கல் மனதா அவனுக்கு …? ஒத்துக்கொள்ள முடியாமல் இன்னமும் தொண்டைக்குள் துவர்த்துக்கொண்டே இனித்துக் கொண்டிருந்த்து கொடுக்காபுளியின் சுவை .
கை நிறைய பழங்களை கொடுத்துவிட்டு காரில் முன்னால் ஏறி காரின் முன் கண்ணாடியை சரி செய்து அவளை பார்த்தான் .கண்ணாடி வழியே அவனது பார்வையை சந்தித்ததும் தனது கையிலிருந்த கொடுக்காபுளியின் தோலை பிரித்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் சாம்பவி .அதில் அவன் முகம் மலரந்தாற் போலிருந்த்து .

பக்கத்தில் இருந்த சஹானாவிடமும் நீட்டினாள் ” எடுத்துக்கொள் …”

அவள் கைகளை தள்ளினாள் சஹானா ” எனக்கு இது பிடிக்காது .வேண்டாம் …”

” என்ன சாம்பவி வேண்டுபவர்களுக்கு கொடுக்க மாட்டேனென்கிறீர்கள் .வேண்டாமென்பவர்களை வருந்தி உபசரித்துக் கொண்டிருக்கிறீர்கள் …” முன் சீட்டில் அமர்ந்திருந்த  ஷ்ராவத் திரும்பி  கேட்டான் .

” சாப்பிட்டு பாருங்கள்  .வித்தியாசமான டேஸ்ட்டாக இருக்கும் .” அவனிடமும் நீட்டினாள் .

” யெஸ் …இட்ஸ் எ டிபரன்ட் டேஸ்ட் …” என்றான் தின்று பார்த்துவிட்டு …

” உங்களுக்கு …” என ரிஷிதரனிடம் நீட்ட , அவன் கவனிக்காத்து போல் கார் ஓட்டிக் கொண்டிருந்தான் .

” ரிஷி …சாம்பவி கூப்பிடுகிறார்கள் பார் …” ஷ்ராவத் அவன் தோள்களை தட்டினான் .

” அப்படியா …கூப்பிட்டார்களா …? எப்படி ….என் காதில் விழவில்லையே ….? “




அவனை பெயர் சொல்லி கூப்பிடவில்லையாம் .செல்ல கோபத்துடன் பார்த்தவளை கண்ணாடியில் பார்த்து கண்சிமிட்டினான் அவன் .அதில் திடுக்கிட்டவள் கைகளை பின்னால் இழுக்க முனைந்தபோது , தன் கையை நீட்டி ஒரு பழத்தை எடுத்துக்கொண்டான் .இப்போது சாம்பவியின் முகம் மலர்ந்த்து .

” நான் வேண்டுமானால் அவரிடம் பேசிப்பார்க்கட்டுமா …? ” அவள் அருகில் அமர்ந்த சந்திரன் கேட்டான் .

” என்ன பேசப்போகிறீர்கள் அண்ணா …? “

” அது …வந்து ..சடகோபன் மாமா ..திடீரென உன் தாலியை ….'”

” வேண்டாம் அண்ணா ….”

” இல்லை பாப்பு அவர்களுக்கு அதுதான் கோபமாக இருக்கலாமில்லையா …? அதனை நாம் தெளிவுபடுத்தி விட்டோமானால் ….”

” அப்படி உள்ளதை எல்லாம் அவர்களிடம் வரி மாறாமல் ஒப்புவித்து பெறும் வாழ்க்கை மட்டும் எத்தனை நாள் அண்ணா நிலைக்கும் ..? “

” நீ பேசுவது சரியில்லை பாப்பு …” மாணிக்கவாசகம் கோபமாக கூறினார் .

” இல்லை அப்பா .எனக்கு சரியென்று பட்டதைத்தான் பேசுகிறேன் .”

சாம்பவி மனதில் அப்படித்தான் நினைத்தாள் ்இல்லையென்றால் தனது அன்றைய நிலையை என்றோ சஹானாவிடம் சொல்லியிருப்பாள் .அவர்கள் வீட்டினர் அனைவருமே சாம்பவியே தனது தாலியை சுழட்டிக் கொடுத்து விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பார்களென அவளுக்கு தெரியும் .ஏனோ அப்படியில்லை என அவர்களிடம் நிரூபிக்க வேண்டுமென சாம்பவிக்கு தோன்றவில்லை .

குறிப்பாக ரிஷிதரன் ….தாலி கட்டி ஒரு வாரமே ஆன புத்தம் புது மனைவியை என்ன ஆனாள் …என்று கூட பார்க்காமல் தள்ளியிருந்தவன் .பிறகு தனக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பதை அறிந்தும் அதை பற்றி இதோ இன்று வரை விசாரிக்காதவன் .அவன் தங்கையோ வெளிப்படையாகவே குழந்தைக்கு அப்பா யார் என கேட்கிறாள் …? இதனையே அவனும் கேட்க மாட்டானென என்ன நிச்சயம் …?

ஓரளவுக்கு அவளுடன. ஒத்து போகும். அண்ணனும் , தங்கையுமே இப்படி என்றால் மஞ்சுளாவையும் , தனசேகரையும் பற்றி சொல்லவே வேண்டியதில்லை .இது போன்ற ஒரு குடும்பத்தின் முன் போய் நின்று அன்று எனக்கே தெரியாமல் என் தாலி செயினை சுழட்டி விட்டார்கள் என்றோ …இதோ உங்கள் வீட்டு பிள்ளை என்று சாஹித்யாவை காட்டியோ … வாழ்க்கையை பிச்சையாக பெற சாம்பவி விரும்பவில்லை .




என்னை பொறுத்தவரை நான் செய்த்து சரி ்அன்று என் சூழ்நிலை அப்படி .இதோ கம்பீரமாக உன் குழந்தையுடன் இருக்கிறேன்! ்உனக்கு பிடித்தால் வந்து என்னை அழைத்து செல் .இதைத்தான் அந்த குடும்பத்தனர் ஒவ்வொரு வரிடமும சொல்ல விரும்பினாள் .எனவே எனக்காக யாரும் அங்கே போய் பேசக்கூடாது என உறுதியாக நின்றாள் .இது இப்போதைய புது சாம்பவியின் கம்பீர நிலை .

முன்பு தொய்ந்திருந்த பலவீனமான நாட்களில் தனக்கென அவர்களிடம் பேச சென்று தன் குடும்பத்தினர் பெற்ற அவமானங்களை அவள் அறிவாள் .மீண்டும் அது போன்ற நிலையை வரவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் .இது சடகோபன் மாமாவிற்கும் சேர்த்துதான் .

நிமிர்வுடன் அமர்ந்து லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்த தங்கையை பெருமையுடன் பார்த்தான் சந்திரன் .

” நீ ரொம்ப மாறிவிட்டாய் பாப்பு ….” வருத்தமில்லை அவன் குரலில் .பெருமிதம் தெரிந்த்து .

” இவ்வளவு தீவிரம் இந்த விசயத்தில் தேவையா …சாம்பவி …? ” தண்ணீர் குடிக்க அடுப்படிக்குள் போன போது கேட்டாள் மாலினி.

” என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக தேவை …” அழுத்தமாக கூறினாள் சாம்பவி .

” ஆனால் எதற்கும் ஒரு அளவு வேண்டும்மா .உனது வாக்குவாதங்கள் எல்லாம் உன் மாமனார் , மாமியார் , நாத்தனாருக்கு ஒத்து போகலாம் .உன் கணவரை இதில் நீ சேர்க்க முடியாது …'”

” நீ சொல்ல வருவது எனக்கு புரியவில்லை அண்ணி …”

” கணவன் , மனைவி உறவு எந்த நியாயங்களுக்கும் , கட்டுப்படாத்து சாம்பவி …உனது இந்த அதிகார ஆளுமைக்குள் உன் கணவரை இழுக்க பார்க்காதே …” எச்சரிக்கை போல் சொன்னாள் .

” மூன்று வருடங்களாக அவரும் என்னைப் பற்றிய எண்ணமில்லாமல்தான் இருந்திருக்கிறார் ….”

” அவர் பக்கம் அதற்கு ஒரு நியாயம் இருக்கலாம் அல்லவா …? “

” ம் ..பெரிய நியாயம் …பொண்டாட்டி , பிள்ளையென நினைப்பற்று இருந்த்தற்கு அவரால் என்ன காரணம் சொல்ல முடியும் …? “




” ஏன் …பிள்ளை பிறந்த்தையோ , உண்டானதையோ நீ சொன்னாயா …என கேட்கலாமில்லையா …? “

” அதை தகவலாக சொல்லும் நிலையில்தானே என்னை வைத்திருந்தீர்களென கேட்பேனே …”

” நானா போகச் சொன்னேனென்றால் ….”

சாம்பவி குழம்பினாள் .அவன்தான் போக சொன்னான் .ஆனால் போய் பார்த்துவிட்டு வா ..என்றுதான் சொன்னான் .பிறகு நடந்த பேச்சு வார்தநைகள் எல்லாம் இரு பக்கத்து பெரியவர்கள் மூலம்தான் நடந்த்து .அது ஏடாகூடமாகி முடிந்து விட்டது .கூடவே இந்த தாலி செயினை கொண்டு போய் கொடுத்தது வேறு ….

சாம்பவிக்கு நினைக்க நினைக்க தலை வலிப்பது போலிருந்த்து .

” எல்லோருக்கும் ஒரு காபி சொல்லு ஷ்ரத் …” ரிஷிதரன் குரல் கொடுத்தான் .

அவர்கள் நால்வரும் ஆபிஸ் அறையில் டேபிளை சுற்றி அமர்ந்து பேப்பரை விரித்து வைத்து அந்த வீட்டை புதுப்பிப்பதற்கான பேச்சுக்களில் இருந்தனர் .

அருகில் அமர்ந்திருந்த ரிஷியை பார்த்ததும் சாம்பவியின் மனதில் முதல் நாள் மாலை வீட்டில் நடந்த நிகழ்வுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டது .கவனம் சிதறி தலையை பற்றிய அவளை பார்த்துதான் ரிஷி காபி சொன்னான் .

” அந்த கிணற்றை எடுத்துவிட வேண்டும் .போரிங் போட்டு மோட்டார் மாட்டி விடலாம் …” காபியை உறிஞ்சியபடி கூறினாள் சஹானா .

” வேண்டாமே அதற்கு பதில் அதற்கு பளிச்சென்ற வண்ணத்தில் பெயின்ட் அடித்து அழகு படுத்தி, மூடி போட்டு , தண்ணிருக்கு மோட்டார் மாட்டி ,சுற்றிலும் தொட்டி செடிகளை வைத்து அழகுபடுத்தினால் வித்தியாசமாக இருக்கும் .கிணற்று சுவருக்கு நமது டைல்ஸை ஒட்டலாம் .கிணற்றை சுற்றி தரையில் செராமிக் டைல்ஸ் ஒட்டி ….” சாம்பவி சொல்லிக் கொண்டே போக ….

” ஒரு கிணற்றுக்கு இவ்வளவு அலங்காரமா …? ” எரிச்சலுடன் கேட்டாள் சஹானா .

” அதனை ஒரு மினி பார்க் மாதிரி மாற்ற வேண்டுமென்கிறீர்கள் …,” ஷ்ராவத் சிரித்தபடி கேட்டான் .

ரிஷிதரனிடமிருந்து பதில் வராமல் போக அவனை திரும்பி பார்த்தாள் .அவன் அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் .

” என்ன ரசனை உனக்கு ….!!” என்றான் .




சிறு கூச்சத்துடன் தலையை குனிந்து கொண்டவள் அடுத்த வேலைக்கு போனாள் .அடுத்து அங்கேயிருந்த ஊஞ்சலை சுழட்டியே ஆக வேண்டும் என்றாள் சஹானா .சுழட்டவே கூடாது என்றாள் சாம்பவி .

” நீ அந்த ஊஞ்சலை சரியாக பார்க்கவில்லை சஹானா .அதன் சங்கிலிகளில் கூட நுண்மையான வேலைப்பாடு உண்டு ்சிறு சிறு அன்னப்பறவைகள் அந்த சங்கிலியின. ஒவ்வொரு கண்ணியிலும் இருக்கும் .நான்கு கண்ணிக்கு ஒரு மணி இருக்கும் ஊஞ்சல் ஆடும் போது அது மெல்லிய சத்தமெழுப்பும் .ஊஞ்சல் பலகை சுத்தமான தேக்கு ..இது போன்று ஒரு ஊஞ்சல் தேடினாலும் கிடைக்காது …அதனை சுழட்ட நான் விடமாட்டேன் …”

பலத்த விவாத்த்திற்கு பிறகு ஊஞ்சல் அதே இடத்தில் இருக்கட்டுமென முடிவு செய்யபட்டது .

எழுந்து நின்று வரைந்திருந்த  பேப்பரில் மற்ற திட்டங்களையும் விளக்கி முடித்தவள் உட்கார்ந்து இருக்கையில் பின்னால் சாய்ந்து அமர்ந்து காபியை உறிஞ்சிய போது …

” உன்னுடைய ரசனைகள் எல்லாம் வெறுமனே இந்த கல், மண் , பலகை இவைகளிடமதானா …. உணர்ச்சியுள்ள மனிதனிடம் கிடையாதா …? ” காபியை குடிப்பதான பாவனையில் ரிஷிதரன் இதனை கேட்க சாம்பவிக்கு காபி புரையேறியது .

ஷ்ராவத்தும் , சஹானாவும் வேறொரு விவாத்ததில் ஆழ்ந்திரக்க , ரிஷியின் கேள்வக்கு என்ன பதில் அளிப்பது என தெரியாமல் திணறினாள் சாம்பவி .

தனது இருக்கையோடு அவள்புறம் சாய்ந்த ரிஷிதரன் ” உன்னிடம்தான் கேட்கிறேன் .முகம் பார்க்க மறுத்து காரில் ஆடிய குருவியை பார்த்துக் கொண்டிருந்தவள் நீதானா …நம்ப முடியவில்லை என்னால் …”

ரிஷிதரனின் நினைவூட்டல் அவனது அன்றைய ஆவேச முத்தத்தையும் நினைவிற்கு கொண்டு வர சாம்பவியின் முகம் ரத்த நிறமானது .அதனையும் அவன் ரசனையோடு பார்ப்பதை உணர்ந்தவள் தனது முகத்தை மறைக்கும் வழியறியாது தவித்தாள் .

அப்போது தனது ஒற்றைவிரலை நீட்டி அவளது கன்னத்தை மெல்ல தொட்டான் ரிஷிதரன் .நெஞ்சம் படபடக்க அவசரமாக நிமிர்ந்து எதிரே பார்த்துவிட்டு ஷ்ரத்தும் , சஹியும் லேப்டாப்பில் ஏதோ பார்த்தபடி இருக்க நிம்மதி மூச்சுவிட்டாள் .

” தள்ளி உட்காருங்கள் …” அடிக்குரலில் கூறினாள் .உடனே அவன் தள்ளி அமர்ந்த்தும் ,அதற்கும் சந்தேகப்பட்டாள் .அப்படி சொன்னவுடன் கேட்கும் ரகம் இவனில்லையே ….

அவள் சந்தேகம் மெய்யே என்பது போல் பின்னால் தள்ளி இருக்கையில் சரிந்து அமர்ந்த ரிஷிதரன் தனது செப்பல்களை சுழட்டிவிட்டு கால்களை நீட்டி வெற்று கால்களால் சாம்பவியின் கால்களை தீண்டினான் .

சிலிரென்று பனிக்கட்டி தீண்டிய உணர்வில் காலை எடுக்க முயன்றவளை விடாமல் அவள் கால்களின் மேல் தன் கால்களை அழுத்தமாக வைத்து அழுத்தினான் .பெருவிரலால் பாதங்களை கொலுசிலிருந்து விரல் வரை வருடினான் .




” ஏங்க சும்மாயிருங்க ….” கைகள் நடுங்க எதிரில் ஒரு பார்வையும் , ரிஷியின் மேல் ஒரு பார்வையுமாக தடுமாறியபடி  அவனிடமிருந்து பாதங்களை உருவ முயன்றாள் .

திடீரென ரிஷியின் வருடல் நின்றது .தயக்கத்துடன் நின்று அவள் கால்களின் மேலேயே சில நொடி படிந்திருந்த்து .

” சஹி வால் டைல்ஸை உயரமாக மேலே அடுக்க சொல்லியிருந்தேன் .சரியாக அடுக்குகிறார்களா என்று பார்த்துவிட்டு வா …” அவளை வெளியே அனுப்பினான் .

ஷ்ரத் …என ஆரம்பித்தவனை …” வெளியே எலிவேசன் மாடலை ஒட்ட வைக்க வேண்டும் .நானே போய் செக் பண்ணிகிறேன் …” அவனாகவே வெளியேறினான் .

அவன் போன மறு விநாடி சட்டென கீழே குனிந்த ரிஷி , சாம்பவியின் கால் மேல் கிடந்த புடவையை லேசாக உயர்த்தி அவள் பாதங்களை பார்த்தான் .பிறகு அவள் கால்களை பற்றி தூக்கி தனது மடியில் வைத்துக்கொண்டான் .

புரியாத அவன் செய்கைகளில் குழம்பிய சாம்பவி அவனை பார்க்க அவன் சாம்பவி கால் மெட்டியை வருடிக் கொண்டிருந்தான் .

” இதனை சுழட்டவில்லையா …? ” என்றான் .

” அதைப் போல் இதை சுழட்ட ஆள் இல்லை ….” எண்ணி முடித்த பிறகே அதையே வாய் விட்டும் சொல்லிவிட்டதை உணர்ந்தாள் .

” என்ன நடந்த்து சாம்பவி …? ” ரிஷிதரனின் கைகள் சாம்பவியின் கால் விரல்கள் ஒவ்வொன்றாக  நீவத்துவங்கின .

முன்பு சாம்பவியிடம் ரிஷியின் அணுகல் இந்த அளவு நிதானமாக இதமாக இருந்த்தில்லை .காட்டாறு போல் வேகமும் , வீரியமுமாக அவளை அடித்து , புரட்டி செல்வதிலேயே குறியாக இருப்பான் .இவனது இயல்பு எது …? இதுவா …? அதுவா …..?

அவள் அறிந்தவரை ரிஷிதரன் வேகமானவன் .அவன் ஒரு விசயத்தில் இந்தளவு நிதானம் காட்டினானென்றால் அதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கும் .அது ….நடந்த்தை அறிந்து கொள்ளும் அவனது ஆர்வமாக கூட இருக்கலாம் .

என்னென்னவோ நடந்துவிட்டது .இந்த கேள்வியை கேட்க இவனுக்கு மூன்று வருடங்களா …? இன்னமும் இவன் சாஹித்யாவை பற்றி ஒரு வார்த்தை விசாரிக்கவில்லை …

திடீரென ஒரு எரிச்சல் பற்றிக்கொள்ள அவனது மடியிலிருந்த தன் பாதங்களை சட்டென எடுத்தவள் , ” வெளியே வேலை இருக்கிறது ….” நடந்து விட்டாள் .




ரிஷிதரன் இனி தன்னை விட்டு விலகி இருப்பானென்ற நம்பிக்கை சாம்பவிக்கு இல்லை . ஏனென்றால் அவள் கால்களில் மெட்டியை பார்த்த அன்றிலிருந்து , அவனது பார்வை ஒவ்வொரு நொடியும் நான் உன் கணவன் என அவளுக்கு உணர்த்தியபடி இருந்த்து .

ஒரு இறுகிய அணைப்பிற்கு , ஆழ்ந்த முத்தத்திற்கு …என தனது ஆசைகளை கண்களின் வழி அவளுக்கு சொன்னபடியிருந்தான் .மனம் நிறைய இது போல் ஆசைகள் ததும்பி வழிந்தாலும் , அதை வெளிக்காட்டாமல் அவனை கண்களாலேயே தூர நிறுத்தியிருந்தாள் சாம்பவி .

இன்னமும் இவன் முழுமையாக நான் எதிர்பார்க்கும் என் கணவனாக மாறவில்லை .முன்பு பார்த்த அதே ரிஷிதரன்தான் .உடல் தேவைகளுக்காக மனைவியை நெருங்கும் சராசரி  ஆண் ….

அத்தோடு அவளது மனதை உறுத்திக்கொண்டிருக்கும் விசயம் ஒன்றிருக்கிறது .இன்னும் நிறைய மாற்றங்கள் நடக்க வேண்டியதாயிருக்கிறது என எண்ணிக்கொண்டாள் அவள் .




What’s your Reaction?
+1
49
+1
33
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Vid
Vid
1 year ago

Mam can you please upload Pachai malai poovu part 2 and final episodes of MAya nathi onru?

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!