Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 11

11

அந்தி சிவப்பு போல் ஆழ்ந்து பரவிக்கொண்டு
தீர விசாரித்ததில் தீவிர அன்பென்கிறாய் ,
சரிதான் போ என தலையசைத்து மறுக்கையில்
சரித்திரம் சொல்லி சட்டென சரிக்கிறாய் ,
சங்கடங்களற்ற உன்
சாமர்த்திய களவாடல்களில் ,
மெய்களின் விலாச தேடல் மறந்து
மெய்களின் விலாசத்தேடலில்
தானே தேன் சிந்துகின்றன
மஞ்சள் நிற தாமரைகள் ….




அவளது  கையின் மேல் அழுத்தமாக பதிந்த கணவனின் கை அழுத்தம் அவன் மனநிலையை சாம்பவிக்கு உணர்த்தியது .இந்த நான்கு நாட்களில் கணவனுடனான நெருக்கமான பழக்கங்களில் அவனது உணர்ச்சிகளை அறிந்து கொள்ள படித்திருந்தாள் சாம்பவி .

உள்ளத்து உணர்ச்சிகளை அறியாவிட்டாலும் , உடலின் நெகிழ்ச்சிகளை அறிய படித்திருந்தனர் இருவரும் .நம் பண்பாட்டில் பெற்றோர் பார்த்து மணம் முடிக்கும் திருமணங்களில் முதலில் இது போன்ற உடல் பாஷைகள்தான் கணவனையும் , மனைவியையும் நெருக்கமாக்குகின்றன .அது போன்றதோர் நிலைதான் இப்போது ரிஷிதரன் , சாம்பவிக்குள்ளும் .

இந்த பிடி கணவனின் தேவையை உணர்த்த படபடத்தது சாம்பவியின் உள்ளம் .சஹானாவின் அறையினுள் இருந்தனர் இருவரும் .அவள் வெளியேறி விட , புதுத்தம்பதிகள் இப்போது தனிமையில் . மணமாகி நான்கு நாட்களேயான புதுத் தம்பதிகளுக்கு சிறு தனிமை கிடைத்தாலும. என்ன நடக்கும் …? அதுதான் இப்போது அங்கு நடந்து கொண்டிருந்த்து .

வலது கையால் மனைவியின் கையை பற்றியிருந்த ரிஷிதரன் , இடது கையை சுதந்திரமாக அவள் இடையினில் உலவ விட்டான் .உடல் சிலிர்த்து அவள் மேலும் தலை குனிய , அவளை மிக நெருங்கி அவள் கன்னத்தில் தன் இதழ்களை உரசியபடி …

” எப்போது பார்த்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறாயே .நாளை கோவா போய்விடுவோம் .அங்கே என்னிடமிருந்து நீ எங்கே ஓடுகிறாய் என்று பார்க்கிறேன் …” பேசி முடித்ததும் அவன் இதழ்கள் அழுத்தமாக சாம்பவியின் கன்னத்தில் பதிந்தன.

கதவு சும்மா சாத்தி வைக்கப்பட்டிருக்கிறதே….யாராவது திறந்து வந்து விடுவார்களோ …? பதைபதைப்புடன் கதவை பார்த்தபடி கணவனின் முத்தத்தில் சிலிர்த்தாள் சாம்பவி .

” அனுமதி கேட்காமல் இங்கே பட்டென யாரும் வந்துவிட மாட்டார்கள் …” தன் வீட்டின் நடைமுறை உரைத்தவன் மனைவியின் தலையை நிமிர்த்த முயன்றான் .

” என்னை பார் பவி ….” என்றான் கொஞ்சலுடன் .பார்க்க வேண்டுமென்றுதான் சாம்பவியும் நினைத்தாள் .ஆனால் இது போன்ற கிறக்க குரலுடன் கொஞ்சலுடன் ரிஷிதரன் நெருங்கும் போது அவனை நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லாது போய்விடும் அவளுக்கு .




இதில் …அவர்களிருவரும் தனிமையில் இருக்கும் போது இப்படி ” பவி …” என்று வேறு புதிதாக ஒரு பெயர் கண்டுபிடித்து அழைத்தான் அவன் .அந்த மாதிரி இதழ் அழைப்புடன் …உடல் அழைப்பும் சேர்ந்து கொள்ள வேட்கையுடன் அவன் நெருங்கும் தருணங்களில் தன்னையே மறக்க தொடங்கினாள் சாம்பவி .

தன் நினைவே இல்லாத போது , அவன் நினைவோ …பிற நினைவோ …வருவதென்பதேது …? எனவே இந்த நான்கு நாட்களில் கணவனின் முக குறிப்பை விட , உடல் குறிப்புகளைத்தான் அதிகம் அறிந்திருந்தாள் அவள் .எப்போதும் போல் இப்போதும் முகமேறாமல் அவனது கழுத்து வளைவிலேயே நின்று போனது அவளது பார்வை .

இன்னமும் ஓட்டிக்  கொண்டிருந்த புதுமணப்பெண் அலங்காரமும் , அருவியாய்  இரு தோள்களில் வழிந்த மல்லிகையின் மணமுமாக சிவந்த இதழகள் துடிக்க  தலை குனிந்து நின்ற மனைவியை கண்டதும் , அவளை தன் முகம் பார்த்து பேச வைக்க வேண்டும் என்ற ரிஷிதரனின் எண்ணமும் மாயமாகி போனது .

இதோ …பெண்மையின் இலக்கணங்களுடன் மணம் மணக்க ….மனம் மயக்க அவன் முன்னால் நிற்பவள் அவனுக்கு உரிமையானவள் .அவன் மனைவி …என்ற எண்ணம் மட்டுமே அந்நேரம் தோன்ற அவன் கணவனாக மாறி அவள் இதழ்களை நோக்கி குனிந்தான் .

இதழ் சிவக்க சிவக்க …உயிரோடு , உள்ளத்தையும் சேர்த்து உறிஞ்சுவது போன்ற கணவனின் வழக்கமான ஆழ்ந்த முத்தத்தில் , உடல் நசுங்கி , இதழ் கசங்கி மூச்சு வாங்கினாள் சாம்பவி .உடல் அதிர சாம்பவி வாங்கிய மூச்சு வாங்கல் , ரிஷிதரனுக்கு மேலும் போதையேற்ற பேச்செல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோமென , மனைவியை இறுக்க அணைத்தான் அவன் .

அவர்களின் முதலிரவிலிருந்து இதே நிலைதான் இருவருக்குள்ளும் .சாம்பவியின் பயந்த சுபாவத்தை உணர்ந்திருந்த ரிஷிதரன் மெதுவாக அவளை பேசி சரிசெய்து தன் வசமாக்க வேண்டுமென்றுதான் பொறுப்பாக  நினைத்திருந்தான் . ஆனால் மென்னடையுடன் உள்ளே வந்து உடல் பதற சிறு பரிதவிப்புடன் நின்றவளை கண்டதும் பொறுப்பெல்லாம் பறந்து விட காதல் மட்டுமே அருவியாக வடிந்த்து .

அவள் பயத்தை போக்கவென்று எண்ணி , முதலில் மென்மையாக ஆரம்பித்த அணைப்புதான் …பிறகு வலிமையாகி , வன்மையாகி …அவன் அவளை விட்டு விலகிய போது சன்னல் வழியே வெளிச்சம் தெரிய ஆரம்பித்து விட்டது .அப்போதும் அவளை விட மனமின்றி தழுவியிருந்த கணவனிடமிருந்து சிறிது சிரமப்பட்டே பிரிந்தாள் சாம்பவி .

பழக்கமற்றதாய் இந்த ஆணின் அருகாமை , அதிலும் இந்த வேகம் …அவள் மனதோடு உடலையும் சிவக்கடித்துக் கொண்டிருந்த்து .சிறிது உடல் வலியோடு ஷவரின் அடியில் நின்றவளது உள்ளம் முதல் நாளிரவை எண்ணிப் பார்க்க கூட கொஞ்சம் அச்சத்தோடு நிறைய கூச்சம் கொண்டது .




எப்படி அவன் முகத்தில் விழிப்பது …? என்ன பேசுவது …? இந்த கூச்சத்தோடு அவள் அவன் பார்வையிலேயே படாமல் ஓடினாள் .வீடு முழுவதும் நிறைந்திருந்த உறவினர்கள் அவளுக்கு உதவ , சாம்பவி ரிஷிதரனின் கண்ணில் படுவதையே தவிர்த்து மறைந்தாள் .

சாம்பவியின் மனநிலையை  உணராத ரிஷிதரன் இளமையின் வேகத்தோடு மனைவியை விழிகளால் தேடினான் .அந்த தேடலிலேயே அவன் தேவையை உணர்ந்தவள் பார்வையில் படாமல் பதுங்கினாள் .சாம்பவி வீட்டிலிருந்து ரிஷிதரன் வீட்டிற்கு வந்த பிறகும் இதே நிலைதான் நீடித்தது .

பகலில் கணவனின் அருகே வருவதை கூட , மிக சாமர்த்தியமாக தவிர்த்தாள் சாம்பவி  . இருவரும் நினைத்திருந்தால் சூழ்நிலையை சாதகமாக்கி தனிமையில் சந்தித்திருக்கலாம் .ஆனால் எங்கே சாம்பவிதான் தனியே ஓடி விடுவதிலேயே குறியாய் இருந்தாளே ….பலதடவை தனது பார்வையால் தன்னை அவளுக்கு உணர்த்தி விட முயன்ற ரிஷிதரனுக்கு பலத்த தோல்வி .அவள்தான் நிமிர்ந்து அவன் முகத்தை பார்ப்பதே இல்லையே .

வேறு வழியில்லாமல் தயங்கி …தயங்கி இரவில் அவன் அறைக்கு வரும் மனைவியை அமர வைத்து பேசிக் கொண்டிருக்கும்  அளவு நிதானம் ரிஷிதரனிடம் இல்லை .இரவுகளில் அவனது ஆராய்தல் வேறுவிதமாய் போனது .எங்கே போய்விடுவாள் …? இதோ இந்த திருமண பரபரப்பு ஓய்ந்த்தும் யாரிடம் போய் அவள் ஒளிந்து கொள்வாள் …? ஹனிமூன் ட்ரிப்பில் யார் பின்னால் போய் ஒளிவாள் .அங்கே பார்த்துக் கொள்கிறேன் …என்ற நினைப்புடன் தற்போதைய தனது காதல் தேவைகளை மட்டுமே அவன் நிறைவேற்றிக் கொண்டிருந்தான் .

அப்படியில்லாது வெட்கத்தை விட்டு சாம்பவியும் , வேகத்தை குறைத்து ரிஷிதரனும் ஒருவரோடொருவர் சிறிது பேசிக்கொண்டிருந்தார்களானால் , அவர்கள் வாழ்க்கை வேறு விதமாக அமைந்திருக்கும் .ஆனால் விதி வலியது …போல் ..சாம்பவியின் தலையில் விதித்திருந்த்துதான் நடந்த்து .

இதோ இப்போதும் இருக்குமிடம் உணராது தீவிரமாக தன்னுள் மூழ்க துடித்த கணவனிடமிருந்து விடுபட போராடினாள் சாம்பவி .

” விடுங்க யாராவது வந்துவிட போகிறார்கள் …”

” யாரும் வரமாட்டார்கள் என்று சொன்னேனே ….” தனது வேகத்தை சிறிதும் குறைக்கவில்லை அவன் .

” இது சஹானாவின் அறை .அவள் திடீரென …”

” வரமாட்டாள் .நம் இருவரையும் இங்கே விட்டு விட்டு அவளாகத்தானே வெளியே போனாள் …” வரம்புகளை மீறத் துவங்கின அவன் கரங்கள் .




வெட்கமும் , கூச்சமும் , பயமும் இவற்றின் மேலாக படிந்து பரவ ஆரம்பித்து விட்ட லேசான விருப்பமுமாக ,சாம்பவி மெல்ல கணவனுள் அடங்க ஆரம்பித்தாள் .

” என் கண்ணில் படாமலேயே ஓடி …ஓடி ஒளிகிறாயா …? அடுத்த வாரம் வைத்திருந்த கோவா ட்ரிப்பை உனக்காகத்தான் இந்த வாரத்திற்கு மாற்றி வைத்தேன் .நீ அங்கே வா …உன்னை அங்கே வைத்து …ஒரு வழி பண்ணுகிறேன் …” என்றவன் வாயால் சொன்னது அவளது பேசக் கூட யோசிக்கும் கூச்சத்தைத்தான் .
ஆனால் அவன் கைகளோ ஒரு வழி பண்ணப் போகும் விசயம் வேறென்று அவளுக்கு உணர்த்திக்கொண்டிருந்தன.

இது போன்ற அவனது வேகமான பேச்சுக்களும் , செய்கைகளும்தான் சாம்பவியை அவனிடம் மிகவும் கூச்சம் கொள்ள வைத்து தள்ளி நிற்க வைத்தது .ஆசையை அமிழ்த்திய வெட்கத்துடன் அவள் தடுமாறிய போது அவளை காப்பது போல் அவளது செல்போன் ஒலித்தது .அதனை அலட்சியப்படுத்தி அவள் கழுத்து வளைவில் முகம் பதித்தான் ரிஷிதரன் .

” போன் வருதுங்க .விடுங்க பேசனும் …”

” நோ ….” அணைப்பை தீவிரமாக்கி அவளுடன் பிணைந்தான் .

” ப்ளீஸ் ….” குரலை குறைத்து குழைந்தாள் சாம்பவி .எதிர்த்து நிற்பதை விட , கொஞ்சம் குறைந்து தணிந்து விட்டால் ,…இது சாம்பவியின் பாணி .மற்ற இடங்களில் எப்படியோ ….ரிஷிதரனிடம் சாம்பவியின் இந்த பாணிக்கு மதிப்பிருந்த்து .

” ம் ….” சிறு உறுமலுடன் தனது ஏமாற்றத்தை மறைத்தவன் , அவளது இடையை சுற்றியிருந்த  தனது கரங்களால் வலிக்கும்படி அவள் இடையை அழுத்தியபடி அவள் இடுப்பில் சொருகியிருந்த செல்போன் பவுச்சை எடுத்தான் .தானே போனை எடுத்து நம்பரை பார்த்தான் .

” உன் அம்மாதான் .சீக்கிரம் பேசு …” என போனை ஆன் செய்து அவள் காதில் வைத்தான் .மற்றொரு கையால் மீண்டும் இடையை வளைத்து அவளை தன்னருகே இழுத்துக் கொண்டான் .

இவன் இப்படி முகத்தோடு முகத்தை வைத்து உரசிக் கொண்டு நின்றானானால் எப்படி போன் பேசுவது …? என்ன இது …அம்மாவுடன் பேசக் கூட விடாமல் …சிறு சிணுக்கம் படர்ந்த்து சாம்பவியின் மனதில் .

” அம்மா …சொல்லுங்கம்மா ..எப்படி இருக்கீங்க …? “

” பாப்பு ….” மரகதவல்லியின் குரலில் அழுகை இருந்த்து .
” என்னம்மா …ஏன் உங்கள் குரல் ஒரு மாதிரி இருக்கிறது …? உடம்பு சரியில்லையா உங்களுக்கு ….? ” பதட்டத்தோடு கேட்டாள் சாம்பவி .

இப்போது சாம்பவியை சுற்றி வளைத்திருந்த ரிஷிதரன் தோள்களை லேசாக குலுக்கியபடி தனது பிடியை தளர்த்திக் கொண்டான் .பேசு …என அவளிடம் சைகை செய்து விட்டு அறையை விட்டு வெளியேறினான் .

அம்மாவிடம் உடல்நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன் .என்ன ஏதென்று ஒரு வார்த்தை கேட்காமல் அவன் பாட்டிற்கு போகிறானே ..போகும் கணவனின் முதுகை வெறித்தாள் சாம்பவி .




What’s your Reaction?
+1
25
+1
21
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!