Serial Stories vanavil devathai வானவில் தேவதை

வானவில்  தேவதை – 10

பத்து

 

 

இவன் எங்கே இங்கே ? இவனுக்கு தன்னை தெரியுமா ? ஏதோ வெகுநாட்கள் பழகியவன் போல் பேசுகிறானே …

 

அக்காவா ? யார் ஒருவேளை அந்த அக்காதானா ? அவள் நினைப்பை மெய்யாக்குவது போல் “வாப்பா வா வா எப்ப வந்த ? ” என வரவேற்றபடி உள்ளிருந்து வந்தாள் அந்த பேரிளம்பெண் .

 




“நான் வந்து ஒருமணி நேரமாச்சு .வீட்டுக்குள் யார் வர்றா ? யார் போறான்னு கூட தெரியாத அளவுக்கு என்ன வேலை பார்க்கிறீங்க நீங்க ?” என அதட்டினான் .” தீபக் எங்கே ? ” அடுத்த அதட்டல் .

 

அந்த அம்மா எப்படியும் இவனை விட இருபது வயதாவது மூத்திருக்கலாம் .

இப்படி அதட்டுகிறானே ,வயதுக்குரிய மரியாதை கூட இல்லாமல் ….

 

“அவன் உன்னை தேடித்தான் ….”இழுத்தாள் அந்த அம்மா .

 

“நான் பின்னால் மச்சானுடன் பேசிக்கொண்டிருந்தேன் .அங்கேதான் உங்களுக்கு வேலை இருக்காதே ” குரலில் குத்தல் இருக்கிறதோ …

 

அவள் புறம் கை காட்டி “இவள் வந்த விபரம் தெரியுமல்லவா ,எவ்வளவு நேரமாக நிற்க வைத்திருக்கிறீர்கள் “




நெடுநேரம் கழித்து தனக்கு ஆதரவாக ஒருவன் பேசுவதே சபர்மதிக்கு ஆறுதலாயிருந்தது .

 

அவனுக்கு பதில் கூறாமல் தலை குனிந்தபடி ஏதோ தெளிவற்று முணுமுணுத்தாள் அப்பெண் .

 

” போதும் அந்த விபரங்கள் எல்லாம் எனக்கும் தெரியும் ” அடிக்குரலில் கடிந்தான் அவளை .

திரும்பி இவளை நோக்கி “சபர்மதி நான் பூரணசந்திரன் .இவர்கள் என் அக்கா அம்சவல்லி .” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தீபக்குமார் உள்ளே நுழைந்தான் .

இவரை உனக்கு தெரியுமே ” என அறிமுக படலத்தை முடித்தான் .

 




தீபக்குமார் பல மாதங்களாக எனக்கு பழக்கம் .இப்போது நீ அறிமுகப்படுத்துகிறாயா ? முதலில் நீ யார் ? பெயர் சொன்னவுடன் தெரியுமளவுக்கு பெரிய ஆளா ? அப்படி எனக்கு உன் பெயர் தெரியவில்லையே ? என பல கேள்விகளை எழுப்பினாள் சபர்மதி தனக்குள்ளாகவே.

 

” உனக்குள் தோன்றும் எல்லா கேள்விகளுக்கும் ,நாளை தெளிவாக பதிலளிக்கப்படும் ” என்றான் அவள் முகத்தை கூர்ந்தபடி பூரணசந்திரன் .

 

உள்ளே திரும்பி “அனுசூயா “என அழைத்தான் .சுமார் இருபத்தியிரண்டு  மதிக்கக்கூடிய ஒரு பெண் .துடைத்து வைத்த குத்துவிளக்கு என்பார்களே அது போல் இருந்தாள் .இந்த வர்ணனையை முன்பு கேட்கும் போது இது என்ன வர்ணனை என சபர்மதி முகம் சுழித்ததுண்டு .ஆனால் இப்போது அந்த பெண்ணை கண்டதும் இவ்வரணனை தானே அவள் நெஞ்சில் எழுந்தது .

 




மிக எளிமையான நூல்புடவை ஒன்றை நேர்த்தியாக கட்டியிருந்தாள் .தலை கொள்ளா முடியை இறுக்கி பின்னலிட்டிருந்தாள் .வசீகரமான கண்கள் .ஆனால் அதில் ஓர் மூலையில் சிறிது சோகம் ஒட்டிக்கொண்டிருப்பது போல் தோன்றியது .

 

“வணக்கம் “அவளை நோக்கி கை கூப்பினாள் அனுசூயா .சிநேகமாக புன்னகைத்தாள் .முதன் முதலாக இந்த வீட்டில் தன்னை நோக்கி ஒரு பெண் நட்புக்கரம் நீட்டியதில் மகிழ்ந்த சபர்மதி மகிழ்ச்சியாக கை குவித்தாள் .

 

“அனுசூயா முதல்ல சபர்மதிக்கு  கீழே

பாத்ரூம்  காட்டு .அப்புறமா இப்போதைக்கு உன்னோட ரூமுக்கு பக்கத்து ரூமை ஒதுக்கி கொடு .இன்றிரவிற்கு மட்டும் .இதெல்லாம் முன்பே பார்த்திருக்க வேண்டாமா ? “

 

“இல்லைண்ணா அது வந்து ….”என்று இழுத்த அனுசூயாவின் பார்வை அம்சவல்லியை அடைந்து நின்றது .

அடுத்து பூரணசந்திரன் தன் புறம் திரும்பும் முன் ” இந்த காவேரியை சப்பாத்திக்கு கூடுதலா கொஞ்சம் மாவு பிசைய சொல்லனும் .போய் என்னன்னு பார்க்கிறேன் ” என்று எதையோ உளறியபடி உள்ளே ஓடிவிட்டாள் அம்சவல்லி .

 




“இங்கே வாங்க ” என்றபடி சபர்மதியின் பேக்கை வாங்க வந்த அனுசூயாவிடம் பேக்கை மறுத்தபடி அவள் பின் நடந்தாள் சபர்மதி .

 

“அத்தை சொல்லலைன்னாலும் நானே இந்த அறையை உங்களுக்கு காலையிலேயே ஏற்பாடு பண்ணிட்டேன் .உள்ளேயே பாத்ரூம் இருக்கு .பக்கத்தில் உள்ளது என்னோட அறை .வேறேதும் தேவைன்னா என்னைக கூப்பிடுங்க” புன்னகைத்து விலகினாள் .

 

இந்தப்பெண் எப்படி ஒரு புன்னகையை எப்போதும் உதட்டிலேயே ஒட்ட வைத்திருக்கிறாள் ? இந்தக்கலையை இவளிடமிருந்து நானும் படிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள் சபர்மதி .

 

அறையினுள் இருந்த கட்டிலை பார்த்ததும் சிறிது நேரம் சாய்ந்தால் என்ன என தோன்றியது .வேறு உடை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் பத்து நிமிடத்தில் தன்னை திருத்திக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள் .தலையணையில் லேசாக சாய்ந்தபடி அமர்ந்து உடலை தளர்வாக விட்டவள் கண்களை லேசாக மூடிக்கொண்டாள் .

 

இன்னமும் மலையேறிய கார் பயண அதிர்வுகள் உடலெங்கும் .இமைகள் மூடிய உடன் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் பூரணசந்திரன் .என்ன அழகான தமிழ்பெயர் .அவனும் பூரணமான சந்திரனை போலத்தான் இருக்கிறான் என எண்ணிக்கொண்டாள் .

 

அவளை கண்டவுடன் எவ்வளவு நேரம் நிற்கிறாய் என்ற கரிசனம் , அவளது தேவை உணர்ந்து பாத்ரூம் காட்ட சொல்லிய தன்மை ,எல்லாமாக அவன் மீதான மதிப்பை உயர்த்தியது .




 

ஆழ்ந்த அமைதியில் உள்ளம் அமிழ கண்கள் தானாகவே சொருகின .

 

“வீல் ” என்ற அலறல் …அது ஆணுடையதா …பெண்ணுடையதா ,தொடர்ந்து தடதடவென யாரோ மாடியில் ஓடும் சத்தம் .வீட்டின் வெளிப்புறமும் ஏதோ ஓசைகள் .அறைக்கதவை திறந்து வெளியேற ஏனோ தயங்கினாள் சபர்மதி .அறியாத இடம் …போய் என்ன கேட்க ? திக்திக்கென துடிக்கும் இதயத்துடன் சிறிது நேரம் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள் .

 

ஒரு அரைமணி நேரத்திற்கு பின் வெளியே சந்தடி அடங்கியதை கவனித்தவள் மெல்ல கதவை திறந்தாள் .அரை குறை இருளுடன் ஹால் சோகையாக இருந்தது .ஆளரவமே இல்லை .மெல்ல வெளியே வந்தாள் .மாடியிலிருந்து தானே சத்தம் வந்தது .மேலே போய் பார்க்கலாமா யோசித்தபடி ஓரமாக ஒதுங்கி நின்றாள் .

 

பக்கத்து அறையிலிருந்து ஒரு உருவம் வெளியேறியது .அது அனுசூயாவின் அறைதானே , அவள் நினைத்தது சரியே போல் வந்ததும் அனுசூயா தான் .இவளிடமே கேட்கலாமே …

 

“என்ன அனுசூயா என்ன சத்தம் ?”

 

தட்டென்று பிரேக் அடித்தாற்போல் நின்றாள் அனுசூயா .தன்னிச்சையாக அவள் கைகளை பின்னால் மறைத்துக்கொண்டாள் .சபர்மதி ஓர இருளில் நின்றதால் அவள் கவனிக்கவில்லை போலும் .

 




” ஒன்றுமில்லையே ,நீங்கள் ஏன் வெளியே வந்தீர்கள் ? உள்ளே போய் ஓய்வெடுங்கள் .இரவு உணவு உங்கள் அறைக்கே வந்துவிடும் ” என்றாள் டைப் மெஷினின் வேகத்துடன் .

 

“இல்லை படுத்துதான் இருந்தேன் .ஏதோ சத்தம் …”

 

“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு .நாம் நாளை காலையில் மற்றதை பேசுவோம் ” என முடித்து விட்டு உள்ளே போய்விட்டாள் .

 

” என்ன இந்த பெண் இப்படி தடுமாறுகிறதே ” உள் ளே படுக்கையில் அமர்ந்தபடி யோசித்தாள் .ஒரு பத்து நிமிடங்கள் சென்றிருக்கும் .என்னவென்று அனுசூயாவிடமே கேட்டு விடுவோமென எண்ணி சபர்மதி கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தாள் .

 

கையில் ஏதோ பாத்திரத்தை வைத்தபடி மாடியேறிக்கொண்டிருந்தாள அனுசூயா .மாடியிலிருக்கும் யாருக்கோ எதுவோ கொண்டு போகிறாள் என்றுதான் முதலில் நினைத்தாள் சபர்மதி .ஆனால் இரண்டு படிகளுக்கு ஒரு தரம் நின்று சுற்றுமுற்றும் பார்த்து தன்னை யாரும் கவனிக்கவில்லை என உறுதிப்படுத்தியபடி அவள் மாடியேறிய விதம் சபரமதியை சந்தேகம் கொள்ள வைத்தது .

 

அப்படி எதை மறைக்கிறது இந்த பெண் ? …..அது சரி…. தானே இங்கே வந்தது ஏதோ வேலைக்காக ,மட்டுமின்றி நான் இந்த வீட்டு முதலாளிக்கு லட்சக்கணக்கில் கடன் பட்டுள்ளேன் .இதெல்லாம் பெரிய இடம் .இங்கு நடப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் தனக்கு நல்லது.திடுமென இப்படி ஒரு ஞானோதயம் தோன்ற பேசாமல் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள் .

 




அடுத்த அரைமணியில் அறைக்கதவை தட்டி அவளுக்கான இரவு உணவை கொடுத்த அனுசூயா தனது பழைய வாடா புன்னகையை முகத்தில் அணிந்திருந்தாள் .பதிலுக்கு புன்னகைத்து அவளிடமிருந்து உணவை வாங்கிக்கொண்டு இனிய இரவுக்கு வாழ்த்தி விட்டு கதவை பூட்டினாள் சபர்மதி .

 

சாப்பிட்டு படுத்தவுடன் கண்கள் சுற்றியது .கொஞ்ச நாட்களாகவே சரியான உறக்கம் கிடையாது அவளுக்கு .இன்று என்னவோ தாய்வீட்டையடைந்த நிம்மதி தோன்றியது .வெகு நாட்கள் கழித்து ஆழ்ந்து உறங்கத்துவங்கினாள் சபர்மதி .

 

வண்ண வண்ண பூக்கள் நிறைந்த சோலையொன்றின் நடுவே போய்கொண்டிருந்த போது மயிலொன்று தோகை விரித்தாடியது அதன் அழகில் லயித்தபடி நின்ற சபர்மதியுடன் அனுசூயாவும் கைகோர்த்து கொண்டாள் .ஆடுவதோடு நிறுத்தாமல் மயில் பாடவும் தொடங்க அனுசூயா கரைந்து மறைந்து விட ஓடத்தொடங்கினாள் சபர்மதி .தூரத்தில் தெரிந்த பூரணசந்திரன் தொட தொட தூரமாகி போனான் .தடுக்கி விழுந்த சபர்மதியின் தலையின் மேல் பல குதிரைகள் ஓடத்துவங்கின .

 

திடுக்கென விழித்துக்கொண்டாள் சபர்மதி .இன்னமும் தலை மேல் குதிரைகள் ஓடுகின்றனவா ? இல்லை மாடியில் யாரோ தடதடவென ஓடுகின்றனர் .கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தாள் .

 

“அட ஒண்ணுமில்லம்மா வழக்கமான கதைதான் .நீயே புதுசு .உனக்கு ஏன் இந்த தலைவேதனை .போய் படும்மா .” வேலைக்காரி போல் தோற்றமளித்த ஒரு பெண் கூறியபடி மாடியேறினாள் .

 

அதன்பிறகு நல்ல தூக்கமில்லை சபர்மதிக்கு .காலையில் அனுசூயாவிடம் விபரம் கேட்க வேண்டுமென எண்ணிக்கொண்டாள் .

 

மறுநாள் அவள் கேட்க தேவையின்றி அனுசூயாவே காலை காபியுடன் ஓரளவு வீட்டின் விபரங்களையும் அவளுக்கு அளித்தாள் .

 




வீட்டின் தலைவர் சத்யேந்திரன் .நோயுற்று பின்னால் அவுட்ஹவுசில் படுக்கையாக இருக்கிறார் .மனைவி அம்சவல்லி .இரண்டு பையன்கள தர்மசேகரன் ,ராஜசேகரன் .ராஜசேகரன் இப்போதுதான் பாரினில் படிப்பு முடித்துவிட்டு தொழிலுக்குள் நுழைந்திருக்கிறான் .தர்மசேகரனுக்கு சிறு மனப்பிறழ்வு ஏற்பட்டிருப்பதால் அவனை வீட்டிலேயே வைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள் .அனுசூயா அக்குடும்பத்திற்கு தூரத்து உறவுப்பெண் .தர்மசேகரனை பார்த்துக்கொள்ளவே இங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறாள் .

 

தர்மசேகரனை பற்றி கூறியபோது அனுசூயா மிக தயங்கினாள் .தர்மசேகரனின் மனபிறழ்வு நோயை சபர்மதி எளிதாக எடுத்துக்கொண்டதை பார்த்து வியப்புடன் அவளை நோக்கினாள் அனுசூயா .

 

” உடலுக்கு சிறு ஓய்வு தேவைப்படும் போது நமது உடல் சிறிது ஸ்டிரைக் பண்ணும் .அது போல் மனதுக்கு ஓய்வு தேவைப்படும் போது நாம் அதனை கண்டுகொள்வதில்லை .அதனை மனது நமக்கு கொஞ்சம் அடித்து  உணர்த்துகிறது .அதுவே இம்மனப்பிறழ்வு .இதனை பெரிதாக பேச என்ன இருக்கிறது ?” புன்னகையோடு கேட்டாள் சபர்மதி .

 




பேச வார்த்தைகளற்று சபர்மதியின் கைகளை அழுத்தி பற்றிக்கொண்டாள் அனுசூயா .தனது சாதாரண உறவினனுக்காக

தான் கவனிக்கும் நோயாளிக்காக என்பதையும் தாண்டி அந்த அழுத்தத்தில் ஏதோ செய்தியிருப்பதாக சபர்மதிக்கு தோன்றியது .

 

இந்தக்குடும்பத்தில் எனக்கு என்ன வேலை இருக்கக்கூடும் ? .பூரணசந்திரனுக்கும் இக்குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் ? இக்கேள்விகளுக்கான விடையளிக்க அனுசூயா அங்கே இருக்கவில்லை .வேலையிருப்பதாக கூறி சென்றுவிட்டாள் .இருந்திருந்தாலும் தனது இந்த கேள்விகளுக்கு அவள் விடையளித்திருப்பாளென சபர்மதிக்கு தோன்றவில்லை .

 

இதற்கான விடை காலை உணவுக்கு பின் பூரணசந்திரன் வாயிலாக வீட்டின் தலைவரை சபர்மதி சந்தித்த போது தெரிய வந்தது .

 

அப்போது உடனடியாக இந்த சோலைவனத்தை விட்டு வெளியேறியே ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாள் சபர்மதி .




What’s your Reaction?
+1
18
+1
41
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!