Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது -9

9

 

மின்மினிதான் அந்த தகவலை சுகந்திக்கு போனில் சொன்னாள் .மருத்துவமனையில் வேலை பார்த்த எல்லோருக்கும் எடுத்த டெஸ்டில் ஒரு சிலருக்கு பாசிடிவ் வந்திருக்க அதில் சாத்விக்கும் ஒருவன் .

 

தகவல் கேட்டதும் சுகந்திக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை .அதெப்படி …பாதுகாப்பு முன்னேற்பாடுகளை முறையாக கடைபிடித்த சாத்விக்கிற்கு எப்படி அந்த நோய் வர முடியும் ?




சோதனை முடிவிற்கு முதல்நாள் சுகந்திக்கு இரவுப்பணி . அதனால் மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தற்போதைய நெருக்கடி நிலையை மனதில் கொண்டு அரைநாள் விடுமுறை போதுமென்று சொல்லியிருந்தாள் .மதிய உணவிற்குப் பின் மருத்துவமனை கிளம்பிக் கொண்டிருந்த போதுதான் அந்த தகவலை கொடுத்தாள் மின்மினி .

 

ஓட்டமும் , நடையுமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவளை எதிர் கொண்டவள் மின்மினிதான் .

 

” டாக்டருக்கு எப்படி இருக்குது ? இப்போது எங்கே இருக்கிறார் ? ”

 

” அவரை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் . டாக்டர் ஷியாமும் , ஸ்வேதா மேடமும் அவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள் ”




” எங்கே இருக்கிறார் ? ”

 

” செகன்ட் ப்ளோர் , கார்னர் ரூம் ”

 

அங்கே ஏன் ? யோசித்தபடி போய் பார்த்த சுகந்தி திகைத்தாள் .அந்த அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும் கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளிருப்பவை வெளி தெரியும் .அங்கேதான் சாத்விக் இருந்தான் .வெளியில் அவனை பார்த்தபடி நிறைய டாக்டர்கள் மற்றும் நர்சுகள் . சில மீடியாக்கள் கேமெரா சுமந்தபடி …




கண்ணாடி சுவர் முன் நின்றபடி ஸ்வேதா தன் மகனின் நிலைமையை , உடல் பாதிப்பை அங்கிருந்தோருக்கு விளக்கிக் கொண்டிருந்தாள் .அதாவது சாத்விக் அங்கே காட்சிப் பொருளாக்கப்பட்டிருந்தான் .

 

சுகந்தி ஸ்வேதாவை வெறித்தாள் .சே …என்ன தாய் இவள் ? மகனுக்கு உயிரையே குடிக்கும் நோய் வந்துள்ளது .இதனையும் வியாபாரம் ஆக்குவாளா ?

 

ஸ்வேதா நிச்சயம் தன் மகனை இந்த நோயிலிருந்து மீட்டுக் கொணர்வதாக சவாலிட்டுக் கொண்டிருந்தாள் . சுகந்திக்கு இப்போது புரிந்தது .சேதுபதி ஐயாவை நோயிலிருந்து காப்பாற்ற முடியாமல் போனதால் அவர்கள் மருத்துவமனைக்கு ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை நீக்க ,இதோ இப்போது மகனின் உயிரை பணயம் வைத்திருக்கிறாள் .

 

” பெற்ற மகனிடம் கூடவா உங்கள் வியாபாரம் ? ” நேருக்கு நேர் நின்று சீறியவளை கண்டு கொள்ளாது தனது மதிய உணவை திறந்து வைத்து உண்ணலானாள் ஸ்வேதா .




” சாத்விக் முழு ஆரோக்யமான ஆண் .கொரோனா அவனை ஒன்றும் செய்யாது என்று நம்புவோம் ” உணவு முடித்து கை கழுவிக் கொண்டிருந்த ஷியாம் பதில் சொன்னார் .

 

” அதற்காக அவரது நோயை இப்படி விளம்பரப்படுத்துவீர்களா ? ”

 

” யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து மருத்துவம் செய்ய இது என்ன தப்பான வியாதியா ? ஒரு டாக்டருக்கே வந்திருக்கும் நோயை எப்படி நாம் சரிப்படுத்துகிறோம் என்பதனை உலகுக்கு காட்டவேண்டும். இது மருத்துவ உலகிற்கு ஒரு படிப்பினை .சாதாரண மக்களுக்கோ மன தைரியம் ”

 

” அது மட்டும்தானா ? சேதுபதி அங்கிள் மரணத்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரை மாற்றத்தானே இந்த விளம்பர ஏற்பாடு ? ”

 

” அப்படியே இருந்தால்தான் என்ன ? இப்போதெல்லாம் ஒரு நாளின்  இருபத்திநான்கு மணி நேரமும் உழைக்கிறோம் . எங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறென்ன ? ”  இப்போது சீறியவள் ஸ்வேதா .




எதையும் ,எந்த சூழலையும் காசாக்க துடிக்கும்  இந்த வியாபாரிகளிடம் பேச தன்னால் முடியாதென சோர்ந்த சுகந்தி வெளியேறினாள் .சாத்விக்கின் அறை கூட்டம் கலைந்து அமைதியாயிருந்தது.

மெல்ல கண்ணாடிச்சுவர் முன் போய் நின்றாள் .

 

ஏதோ தடிமனான மெடிக்கல் புத்தகத்தில் ஆழ்ந்திருந்த சாத்விக் இவளைப் பார்த்ததும் எழுந்து வந்தான் .மிகவும் வாடியிருந்தான் .தலை கலைந்து , கண்கள் சிவந்து , உடைகள் கசங்கி …இப்படி அவனைப் பார்க்க பிடிக்காது போக கலங்கிய கண்களை முகம் திருப்பி மறைத்தாள் .

 

ஒன்றுமில்லை …தைரியமாக இரு – சாத்விக் உள்ளிருந்து சைகை சொன்னான் .

 

உள்ளே வரப் போகிறேன் – சுகந்தி பதில் சைகை செய்ய பதறி மறுத்தான் .

 

முக கவசம் , உடை அணிந்து கொள்கிறேன் .ப்ளீஸ் – கெஞ்சுதலாக சைகை சொன்னவளுக்கு பதிலாக போன் செய்தான் .

 

” வேண்டாம் சுகி .இது தொற்று வியாதி .இங்கே எனக்கு நானேதான் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .எந்த மருத்துவருமே உள்ளே வருவதில்லை .கொரோனாவிற்கு இதுதான் முதன்மையான தீர்வு .நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் , சமூக இடைவெளி போன்றவை நிச்சயம் பின்பற்ற வேண்டியவை .மருத்துவர்களாக இருந்து கொண்டு நாமே விதிகளை மீறலாமா ? ” மென் தென்றலாய் வருடிய அவன் குரலை காதில் கேட்டபடி விழி சிமிட்டாமல் அவனைப் பார்த்திருந்தாள் .




இவன் அவள் மனதை நோகடித்தவன் , அந்தக்  கொடிய சொற்களை இவன் உதிர்த்த அன்றிலிருந்து இவன் மேலிருந்த காதல் மடிந்து விட்டதாகத்தான் நினைத்திருந்தாள் .ஆனால் கப்பும் , கிளையுமாக ஆலமாய் அது தழைத்திருப்பதை இப்போதுதான் உணர்ந்தாள் .

 

சாத்விக் தனது கையை கண்ணாடிச்சுவரின் மீது பதித்தான் .கண்களை சுகந்தியின் விழி மீது பதித்தான் .தன்னையறியாமலேயே தன் கையை அவன் கை மீது பதித்தாள் சுகந்தி .தடிமனான கண்ணாடி இரு கைகளுக்கிடையிலும் .ஆனாலும் அவன் கையின் வெப்பம் தன் கையினுள் இதமாக ஊடுறுவதாக உணர்ந்தாள் .ஏனோ அந்தக் கதகதப்பு அவளுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.

 

அன்று இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் , திடுமென ஒன்று தோன்ற வேகமாக எழுந்து வாசல் கதவை திறந்து மாடியேறி , மாடசாமி தங்கியிருந்த அறை வாசலை தட்டினாள் .

 

” டாக்டர் , என்ன இந்த நேரத்தில் ? ”

 

” உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் சாமி .உள்ளே போகலாமா ? ” கேட்டபடி அவனது அறைக்குள் நுழைந்தாள் .

 

” சொல்லுங்க டாக்டர் ” மாடசாமி வேகமாக சட்டை அணிந்து கொண்டான் .




” எல்லா நோய்க்கும் மருந்து உங்கள் மலையில் இருக்கிறதென்றீர்களே ! உண்மையா சாமி ”

 

” மறுக்க முடியாத உண்மை .ஆனால் நீங்கள் திடீரென அதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள் டாக்டர் ? ”

 

” என்ன சாமி இப்படிக் கேட்கிறீர்கள் ? நம் நாடு இப்போது இருக்கும் நிலைமை உங்களுக்குத் தெரியும்தானே ? எத்தனை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் .அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது நம் போன்ற மருத்துவர்களின் கடமையில்லையா சாமி ? ”

 

” கடமைதான் .ஆனால் இந்த மூலிகையால் நோய் குணமாகும் என்று நானோ , என் பக்கத்து ஆட்களோ சொன்னால் உங்கள் மருத்துவர்கள் நம்புவார்களாக்கும் ? ”

 

” ஐயோ சாமி இப்போது  எதை தின்றால் பித்தம் தெளியும் … என்ற தவிப்பான நிலையில் இருக்கிறது மருத்துவம் .இப்போது நீங்கள் செய்யும் சிறு உதவி கூட நம் நாட்டு மக்களை இல்லை இந்த உலக மக்களையே கூட உயிரோடு நடமாட வைக்கும் .இந்த நேரத்தில் என் பக்கம் …உன் பக்கமென்ற பேதம் வேண்டாமே ப்ளீஸ் ”

 

” ம் .நீங்கள் கேட்டுக் கொண்டதன் பிறகு என்னிடம் மறுப்பு கிடையாது டாக்டர். நாம் எங்களது மலைக்கு போகலாம் .எங்க பொறையன் கிட்ட கேட்டா  தெரியும் .அவருக்குத் தான் எங்கள் மலைக்காட்டு மூலிகைகள் அத்துபடி ”

 

” அது யார் பொறையன் ? ”




” அவர் எங்கள் இன மக்கள் தலைவர் .அந்தக் காலத்தில் எங்கள் கொல்லிமலையை ஆண்ட அரசன் பெயர் பொறையன் .அவர் குடும்ப  வழி வந்த ஆண் வாரிசுகள்தான் வழி வழியாக எங்கள் தலைவர் .அவர்கள் எல்லோருடைய பெயரும் பொறையன்தான் ”

 

மாடசாமியின் இனத்திற்குரிய வித்தியாச பழக்க வழக்கங்களை உள்வாங்கி தலையசைத்தாள் .

 

மறுநாள் தந்தை , தாயிடம் மாடசாமியின் கிராமத்திற்கு செல்லும் முடிவை சொல்ல , உடனே ஏற்றுக் கொண்டனர் .

 

” மக்களை வெளியே நடமாட விடாமல் வீட்டிற்குள் முடக்கிப் போட்டிருக்கும் இந்த வியாதியை நிச்சயம் நாம் ஒழிக்க வேண்டும்மா .நீ மாடசாமியோடு போய் வா ” சுந்தரபுருசன் அனுமதி அளித்தார் .




ஆனால் சாத்விக்  மறுத்தான் .” அவ்வளவு தூரம் , உன்னை தனியாக அனுப்ப நான் சம்மதிக்க மாட்டேன் சுகி ”

 

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!