Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது -8

8

 

” மாஸ்க் மட்டும் போதாது . இந்த டிரஸ்ஸும் போட்டுக்கனும் ” மாஸ்க் அணிந்து வெளியே வந்தவளை சாத்விக்கின் குரல் தடுக்க , மீண்டும் அறைக்குள் நுழைந்து உடல் முழுமைக்குமான கவச உடையை மாட்டினாள் .

 

” கோவிட் மிக கொடுமையான வியாதி .அது இப்போது நம் நாடு முழுவதும் பரவியிருப்பது வருத்தத்திற்குரிய செய்தி .இந்த நேரத்தில் மருத்துவர்களாகிய நமது சேவை நம் மக்களுக்கு மிகவும் தேவை .எனவே ஒவ்வொரு மருத்துவரின் உயிரும் ஒரு பொக்கிசம் போல .நம்மை நாம் வெகு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் ” அவனுடன் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த டாக்டர் , நர்சுகளுக்கு பொதுவாக ஆங்கிலத்தில் பேசியபடி நடந்த சாத்விக்கின் விழிகள் சுகந்தியின் மீதே இருந்தது .




சேதுபதியின் அறைக்குள் நுழையப் போனவளின் இடைப் பகுதி இழுக்கப்பட , வெகுண்டு திரும்பியவள் , அவளது கவச உடையின் இடைப்பகுதி பெல்ட்டை பற்றி நின்றிருந்த சாத்விக்கை கோபமாக பார்த்தாள் .

 

” நமக்கு மிகவும் பிரியமானவர்கள்தான் .ஆனாலும் நோய் என்று வந்த பிறகு நாம் வெகு ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் ” சுகந்தி அலட்சியமாக பிணைக்காமல் விட்டிருந்த அவளது இடுப்பு பெல்ட்டை தானே  இழுத்துக் கட்டினான் .

 

முன்பே உள்ளே சென்றிருந்தவர்களுடன் வேகமாக போய் இணைந்து கொண்டாள். சண்டை போடுவதற்கென்றேனும் சாத்விக்கின் முகம் பார்த்து பேச விரும்பவில்லை அவள் .

 

மது சிந்தும் மலர் மொய்க்கும் வண்டாய் சாத்விக்கின் விழிகள் சதா இவள் மீது .அன்று சேதுபதியிடம் பேசிய பிறகு மலர்ந்த முறுவலுடன் வந்தவனின் முகம் பிறகு வந்த நாட்கள் முழுவதுமே வாடவில்லை .சாத்விக்கிற்கு செருப்பால் அடித்தது போல் புத்தி சொன்னதாக சேதுபதி சொல்லியிருக்க , இவனுக்கெதற்கு எப்போதும் இந்த இளிப்பு ? சுகந்திக்கு புரியவில்லை .




இதோ இப்போது கூட …அவனது புன்னகையை எதிர்பார்த்து ஏறிட்டுப் பார்த்தவள் துணுக்குற்றாள் .நெற்றியில் வரி வரியாக சுருக்கங்கள் விழ , சுருங்கிய கண்ணோரங்களும் கறுத்த முகமுமாய் கவலை காட்டி நின்றிருந்தான் அவன் .சுகந்தி பார்த்ததுமே தானும் அவளை பார்த்தவன் புன்னகைக்க முயன்று தோற்றான் .

 

” சளி மாதிரி எடுக்க ஏற்பாடு பண்ணுங்க ” நர்சுகளிடம் உத்தரவு சொல்லிவிட்டு , கடுமையான காய்ச்சலுடன் படுத்திருந்தவரை பார்த்தபடி வெளியேறினான் .

 

” அ…அங்கிளுக்கு கொரோனா வந்திருக்கலாம்னு நினைக்கிறீ்ங்களா டாக்டர் ? ” வேக நடையுடன் நடந்து கொண்டிருந்தவனுக்கு இணையாக நடக்க முயன்றவளுக்கு மூச்சிரைத்தது.

 

” ம் …சந்தேகம் இருக்கு .பார்க்கலாம் .ரிசல்ட் வரட்டும் ” என்றபடி மாடியேற லிப்ட் பட்டனை அழுத்தியபடி …

 

” இன்று ஸ்பெஷல் டியூட்டி கிடையாது டாக்டர் .நீங்கள் சீக்கிரமே வீட்டிற்கு போகலாம் ” என்றான் புன்னகையோடு .

 

” நமது தேசத்திற்கு இது சோதனையான காலம் டாக்டர் .இப்போது நேரம் பார்த்து வேலை செய்பவர் உண்மையான மருத்துவராக இருக்க முடியாது .எந்த நேரத்திலும் வேலை செய்ய நான் தயாராயிருக்கிறேன் .”




சாத்விக்கின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது .” குட் ” என மெச்சினான் .

 

” ஸ்பெசல் ரூம் தவிர எங்கு வரவும் நான் தயங்குவதில்லை ” கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் குத்தினாள் .

 

” பிடிக்காத விசயம் நடந்தால் , போடா முட்டாள் பயலே ! என்று விட்டு போய் கொண்டே இருக்க வேண்டியதுதானே ? எதற்கு இத்தனை டென்சன் ? ” நிதானமாக ஆனால் குழைவாக குழந்தைக்கு போல் கேட்டான் .

 

எவ்வளவு எளிதாக சொல்கிறான் ? அடிபட்டவளுக்கல்லவா மன வேதனை தெரியும் ? அவனது பாவனை சுகந்திக்கு கடுப்பைக் கொடுக்க , வந்து நின்ற லிப்டினுள் அவன் நுழையும் நேரம் வலது கை நீட்டி அவனை வைதாள் .

 

” போடா முட்டாப்பயலே ! உனக்கெல்லாம் என் நிழல்  பக்கத்தில் வரும் தகுதி கூட கிடையாது ”

 

இதனை எதிர்பார்க்காத சாத்விக் திகைத்த முகத்துடன் அவளைப் பார்த்தபடி நின்ற போது லிப்ட் மேலேறிவிட்டது .




சில நாட்களுக்கு பிறகு அன்று இரவு சுகந்தியால் நிம்மதியாக தூங்க முடிந்தது .ஆனால் அப்படி நீ தூங்கிவிட முடியாதடி , என விதி அவளைப் பார்த்து சிரித்தது . அந்த நள்ளிரவு வேளையில் அவளது போன் ஒலித்தது.

 

” சுகி ” போனில் சாத்விக்கின் குரல் கரகரத்தது

 

” டாக்டர் ! என்னாயிற்று டாக்டர் ? ”

 

” சுகி …அ…அங்கிள் நம்மை விட்டு போய்விட்டார் ”

 

” சாத்வி .நீ…நீங்க விளையாடவில்லையே ? ”

 

” இல்லைடா .நான் இப்போ நம்ம ஹாஸ்பிடலில் தான் இருக்கிறேன் .எவ்வளவோ முயற்சி செய்தேன் .மூச்சிரைப்பு , காய்ச்சல் அவரால் தாங்க முடியவில்லை .”

 

” நான் இப்போதே வருகிறேன் சாத்வி .அங்கிளை நான் பார்க்க வேண்டும் ”




” வேண்டாம்டா .நீ வந்தாலும் அவரை பார்க்க முடியாது .அவர் பாடியை ஐசொலேட் செய்து வைத்திருக்கிறோம் .அவர் சொந்தங்களே கூட அவரைப் பார்க்க முடியாது .பாடியை நாம் கவர்ன்மென்டிடம் ஒப்படைக்க வேண்டும் .புரிகிறதா ? ”

 

” இல்லை …ஐயோ …இது என்ன கொடுமை சாத்வி ? எவ்வளவு பெரிய மனிதர் ! எத்தனை பேருக்கு ஊருக்குள் உதவியிருக்கிறார் ! எத்தனை உறவுகள் ! அத்தனையும் விட்டு விட்டு இப்படி அநாதை போல் …” மேலே பேச முடியாமல் கதறிவிட்டாள் .

 

” சுகி …ப்ளீஸ் அழாதேடா ! எ…எனக்கு உன்னிடம் பேசினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென தோன்றியது .அதுதான் போன் செய்தேன் .இப்போது நீ இங்கே வந்து ஆகப் போவது எதுவுமில்லை .தைரியமாக இரு .நாளை பார்க்கலாம் ”

 

மீத இரவை வழிந்து கொண்டேயிருந்த கண்ணீருடன் கடந்தாள் .மறுநாள் காலை விசயம் தெரிந்ததும் சுந்தரபுருசனும், அலர்மேல்மங்கையும் அதிர்ந்து நின்றனர் .

 

” என்னங்க சார் வியாதி இது ? சயன்ஸ் முன்னேறியாச்சு ! மெடிக்கல் முன்னேறியாச்சுன்னு மார் தட்டுறோமே ! இதற்கு ஒரு பதில் சொல்லத் தெரியுதா நமக்கு ?” மாடசாமி வேதனையுடன் ஆத்திரப்பட்டான் .




” எங்கேப்பா எவ்வளவுதான் அறிவியல் முன்னேறினாலும் மனிதனின் மரணத்தை ஜெயிக்கும் சக்தி யாருக்கும் இல்லையே ”

 

” இல்லை சார் .இருக்கிறது .முன்பு இருந்திருக்கிறது .நமது முட்டாள்தனத்தால் அந்த வளங்களையெல்லாம் இழந்து இப்போது அடுத்த நாட்டிடம் கையேந்திக் கொண்டிருக்கிறோம் ”

 

” என்னப்பா சொல்கிறாய் ? ”

 

” ஆமாம் சார் .எப்பேர்பட்ட உயிர்கொல்லி நோய்க்கும் மருந்து எங்களிடம் உண்டு சார் .இதற்கும் ….”

 

சுகந்தி எழுந்து கொண்டாள் .வழக்கமான அவர்களது மலைப்பிரதேச மகிமையை மாடசாமி ஆரம்பித்து விட்டதாக எண்ணினாள் .இப்போது அவனது சொந்த ஊர் பெருமை கேட்கும் மனநிலை அவளுக்கில்லை .

 

” அப்பா நான் ஹாஸ்பிடல் கிளம்புகிறேன் ”

 

” நைட் தூங்கவேயில்லையா ? ” மருத்துவமனையில் அவளை எதிர் கொண்டதும் சாத்விக் அவள் முகம் பார்த்து அதட்டினான் .இரவு உறக்கம் தொலைத்த அறிகுறிகள் அவன் முகத்திலும் .

 




” அங்கிள் …” மேலே பேசும் முன் வெடித்த விம்மலை அடக்க அவள் மௌனமாக , மெல்ல அவள் கை தட்டி சமாதானம் செய்தான் .

 

” எல்லாம் முடிந்து விட்டது. அ…அவர் உடலை முனிசிபாலிட்டியில் ஒப்படைத்தாகிவிட்டது .நான் உடனிருந்து உடலுக்கான சாஸ்திரங்களை குறைவில்லாமல் செய்யப் போகிறேன் .நீ உள்ளே போய் டெஸ்ட் செய்து கொள் ”

 

என்ன சோதனை எனக் கேட்கும் முன் நடந்து விட்டிருந்தவனின் தளர்ந்த நடையை பார்த்தபடி நின்றிருந்தவளை அழைத்து கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது .

 

அவளுக்கு மட்டுமின்றி மருத்துவமனையில் வேலை பார்த்த அனைவருக்குமே  டெஸ்ட் எடுக்கப்பட்டது .அதன் முடிவைப் பற்றி அவளுக்கெந்த கவலையும் இல்லை .ஏன் அவளுக்கே  அக் கொடிய வியாதி வந்திருந்தால் கூட வருந்தியிருக்க மாட்டாள் .




ஆனால் …சாத்விக்கிற்கு அந்த உயிர் கொல்லி நோய் வந்திருப்பதை அறிந்த போது ….

 

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!