Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 7

 7

அந்த கேள்விக்கு பதில் கேட்டால் என்ன சொல்வது …? என்ற யோசனையுடனேயே போனை ஆன் செய்தாள் வைசாலி .

” வைசாலி நேற்று உனக்கு  ஏதோ பிரச்சினை போல் தோன்றியதேடா …? இப்போது எதுவும் …நான் அதற்கு என்ன செய்யட்டும் சொல்லு …” ஹலோ சொன்னதும் கேட்டான் மனோகரன் .

எந்த பிரச்சனை …? எதை சொல்கிறான் …? முயன்று யோசித்து அந்த கேமிரா அஸிஸ்டென்ட் பார்வையை நினைவிற்கு கொண்டு வந்து ” அது ஒன்றுமில்லைப்பா .சும்மா ..சின்ன பிரச்சினைதான் .இப்போது ஒன்றுமில்லை ” என்றாள் .

மீண்டும் பிரச்சினையில்லைதானே என அவளிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு , சிறு தொந்தரவென்றாலும் தன்னிடம் உடனே கூறிவிட வேண்டுமென செல்லமாக அதட்டிவிட்டு வேறு பேச துவங்கினான் .




நல்லவேளை இவன் அந்த கேள்வியை மறந்து விட்டான் என நிம்மதி மூச்சு விட்டு விட்டு அவன் பேச்சில் இலகுவாக கலக்க துவங்கினாள் .தனது அன்றைய நிகழ்வுகளை உற்சாகமாக பகிர்ந்து கொண்டவன் , தனது தொழில் வெற்றிகளை அவளிடம் இயல்பாக கூறினான் .

அவன் குடும்பம் , அம்மா , அப்பா , தங்கையென அனைத்து விபரங்களையும் கூறியவன் , வைசாலி குடும்ப விபரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டான் .சமீபத்தில்தான் அறிமுகமானவர்கள் போல் இல்லாமல் , நெடுநாள் பழகிய உறவினர்கள் போல் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர் .

அன்று காரை விட்டு இறங்கி வர மனமில்லாமல் உள்ளேயே அமர்ந்திருந்தவனா இவன்…? என வைசாலிக்கு சந்தேகம் வந்த்து .

” ஏய் என்ன யோசனை …? “

” இல்லை  இப்போது இவ்வளவு ப்ரீயாக பேசுகிறீர்களே .அன்று நான் அத்தனை தடவை அழைத்தும் , வெளியே அவ்வளவு கலாட்டா நடந்து கொண்டிருந்தாலும் , இறங்காமல் காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்தீர்களே ” சிறு மனத்தாங்கலுடன் கேட்டாள் .

” ஆமாம் அன்று கார் கண்ணாடி வழியே பார்த்த போது நீ சரியாக தெரியவில்லையே .ஹெல்மெட் வேறு போட்டிருந்தாய் .நிலவு மேகத்திற்குள் மறைந்திருக்கும் போது அதன் பிரகாசத்தை என்னால் எப்படி உணர்ந்து கொண்டிருக்க முடியும் …? ” குறும்பாக கூறினான் .

” ஆரம்பித்து விட்டீர்களா …? “

” எதை ..? “

” ம் …உளறலை …”

” வெறுமனே குரலை  மட்டும் கேட்டு என்ன உளற …? அதெல்லாம் நேரில் வந்து உன்னை …உன் அந்த கருவண்டு கண்களை , இளம் பஞ்சு உதடுகளை , அந்த கன்னக் குழியை … பார்த்த  பிறகு …”




” போதும் …போதும் ..போனிலேயே இவ்வளவு உளறல் .நேரில் என்றால் …ஐயோ …வேண்டாம் …”

” என்ன வேண்டாம் …? நானா …” என கேட்டு நிறுத்தி பின் ” நான் வர வேண்டாமா …? ” என்றான் .

” ஆமாம் இப்படி உளறுவதாக இருந்தால் அப்படித்தான் …”

” எப்படித்தான் ….? “

எப்போது வருவான் என உள்ளூற ஏக்கம் கனன்று கொண்டிருக்கையில்  வராதே என்று  தன் வாயால் எப்படி சொல்லுவாள் …? ஆனால் அவன் விடுபவன் போல் தெரியவில்லை .

” ஏன் மௌனமாகி விட்டாய் .சாலி சொல்லுடா .எப்படித்தான் ..? “

” எனக்கு தெரியாது .நான் போனை கட் பண்ண போகிறேன் ..”

” அப்படியா …? கட் பண்ணிவிடுவாயா நீ …? ம் …எனக்கு எவ்வளவு பதில் சொல்லவேண்டியிருக்கிறது .அதையெல்லாம் சொல்லாமலா …? “

” என்னது …என்ன கேள்வி …? என்ன பதில் …? நீங்கள் பேசுவதே புரியவில்லையே …”

” ஓ…வாய் பேச்சு புரியாதா உனக்கு …! அப்போது இனி நேரில் வந்த்தும் வாயால் பேசப்போவதில்லை நான் …”

பிறகு என்ன செய்யப்போகிறான் என கேட்க வாயெடுத்து விட்டு , உதட்டை கடித்து வாயை மூடிக்கொண்டாள் .வேண்டாம் , இவன் வில்லங்கம் பிடித்தவன் …எதையாவது ஏடாகூடமாக சொல்லி வைப்பான் .

” அதென்ன பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென மௌனம் ஆகி விடுகிறாய் .என் கேள்விக்கும் பதில் சொல்வதில்லை .கேள்வி கேட்பாயென பார்த்தால் அதையும் செய்வதில்லை …” சலித்துக்கொண்டான் .

” சரி ..சரி …எதற்காக உதட்டினை அந்த கடி கடித்துக் கொண்டிருக்கிறாய் .விட்டுவிடு ….” என்றான் இலகுவாக .

” அதெப்படி உங்களுக்கு தெரியும் …? ஏதோ வீடியோ காலிங் போல தெளிவாக சொல்கிறீர்களே …! ! “

” ஆமாம் இப்போது உன் உருவம் அப்படியே என் மனதினுள் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது .கண்களையும் , உதடுகளையும் , கன்னக்குழியையும் சொல்லிவிட்டு முக்கியமானதை விட்டு விட்டேனே …உன் மூக்கில் குட்டியாக போட்டிருக்கிறாயே அந்த மூக்குத்தி….அதற்குக் கூட என் உளறலில் பங்குண்டு தெரியுமா …? “

” மொத்தமாக ஒரு ஐந்து நிமிடம் என்னை பார்த்திருப்பீர்களா …? அதற்குள் மூக்குத்தி வரை கவனித்திருக்கீர்களே …”

” அப்படியா …? ஐந்தே நிமிடம்தானா …நாம் பார்த்தது …? எனக்கென்னவோ ஆண்டாண்டு காலமாக பார்த்து பழகியது போல் அல்லவா தோன்றுகிறது ..? உனக்கு தோன்றவில்லையா சாலி …? “

இதற்கு பதில் சொல்லும் திராணியின்றி ” ம் ….” என்றாள் .

” வெறுமனே ” ம் ” மட்டும்தானா ….? நான் இங்கு யானைப்பசியில் இருக்கிறேன்டா .இந்த ஒற்றையெழுத்து பதில் பத்தாது எனக்கு …சொல்லு ..நிறைய சொல்லு ….”

” இப்போது மணி என்ன உங்களுக்கு …? நேரமாகவில்லை ….தூக்கம் வரவில்லையா …? “




” ம் …சரி அப்போது சொல்ல மாட்டாய் .தூக்கம் எங்கே வருகிறது .என்று உன்னை சிக்னலில் பார்த்தேனோ …அன்றே தூக்கம் தூர போய்விட்டது … “

” மனு ..ப்ளீஸ் நாம் வேறு ஏதாவது பேசலாமே …”

” ஏய் …சொல்லு …சொல்லு ..திரும்ப சொல்லு எப்படி அழைத்தாய் என்னை …? “

போச்சு சும்மாவே …பேச்சிலேயே மடக்கிக் கொண்டிருந்தான் .இனி அவ்வளவுதான் …எப்படி என்னையறியாமல் அப்படி அழைத்தேன் என நினைத்தபடி ” அந்த கான்ட்ராக்டை நீங்கள் பிடித்தது பெரிய விசயமாக தெரியவில்லை எனக்கு .நாலே நாலு வார்த்தைகளிலேயே எதிராளியை வீழ்த்தி விடுகிறீர்கள் .அக்ரிமென்டில் என்ன எழுதியிருக்கிறது என பார்க்காமலேயே சைன் பண்ணியிருப்பார்களே ….”

” ஒரு விசயம் பேசிக்கொண்டிருக்கும் போது சம்பந்தமில்லாமல் வேறு விசயத்திற்கு தாவி விடுகிறாயே …” குறைபட்டு்கொண்டான் .

” எல்லாம் சம்பந்தமாகத்தான் பேசுகிறேன் ..” முணுமுணுத்தாள் .

” என்ன சம்பந்தம் சாலி …? நம் இருவருக்குள்ளும் …ம் …” மீண்டும் சீண்டினான் .

” அது எனக்கு தெரியாது ..”

” எது தெரியாது ..? நமக்குள்ளேயான சம்பந்தமா ..? நான் சொல்லட்டுமா …? “

” வேண்டாம் ..வேண்டாம் ” இவன் என்ன சொல்லி வைப்பானோ …என்று எண்ணியபடி அவசரமாக மறுத்தாள் .

” ஓ…போனில் வேண்டாம் என்கிறாயா …? சரிதான் நான் நேரிலேயே வந்து …” என அவன் கூறிக் கொண்டிருக்கும்.போதே …

” எப்போது வருகிறீர்கள் …? ” என அவசரமாக கேட்டுவிட்டு மீண்டும் உதட்டைக் கடித்துக் கொண்டாள் .

ஒரு நிமிடம் மௌனமானவன் ” இப்போது இந்த கான்ட்ராக்ட் கிடைத்திருக்கிறதில்லையாடா ….அதனால் நிறைய வேலை இருக்கிறது .ஒரு மாதம் வரை கூட ஆகலாம் .ஆனால் முடிந்தவரை  …சீக்கிரம் முடித்துவிட்டு ..இரண்டு வாரங்களில் வரப் பார்க்கிறேன் .என்ன …? ” என்றான் .

அவ்வளவு நாட்களாகுமா …? என மனதினுள் எண்ணியபடி ” பரவாயில்லை வேலை முக்கியம் .அதனை முடித்துவிட்டே வாருங்கள் ” என்றுவிட்டு போனை வைத்தாள் .

அப்போதும் கட் செய்யமாட்டேன் என அடம்பிடித்து , சிறிதுநேரம் அவளை சீண்டிவிட்டே போனை வைத்தான் மனோகரன் .

_——_————-

சிக்னலில் பச்சை எரியவும் வண்டியை எடுத்தவள் ,மனோகரனின் பேச்சுக்களை மனதில் ஓட்டியபடி  ஒரே வாரத்தில் எப்படி இப்படி மாறினேன் என தன்னைத் தானே வியந்து கொண்டாள் .மனோகரன் ஒரு வாரமாக தினமும் பேசிக் கொண்டிருந்தான் .அவளுக்கு வேலையற்ற நேரமாக பார்த்து விழித்திருந்து மணிக்கணக்கில் பேசினான் .

போய் தூங்குங்கள் என்றால் …அதற்குள்ளாகவா … என்பான் .அப்போது பேச ஆரம்பித்து ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும் . , போன் பில் எகிற போகிறது என்றால் …இதெல்லாம் ஒரு மேட்டரா ..? என்பான் .

ஒரு பெண் தன் இணையிடம் முதலில் எதிர்பார்ப்பது தனக்கும் , தன் பெண்மைக்குமான பாதுகாப்பையே …அன்போ ..பாசமோ …காதலோ….மற்றவையெல்லாம் அதற்கு பின்தான் .

சந்தித்த முதல் நாளிலேயே தனக்குரிய பாதுகாப்பை வழங்கிய அந்த ஆண்மையின் கம்பீரத்தில் தன்னை தொலைத்திருந்தாள் வைசாலி .அவ்வளவு கேவலமாக பேசியவர்களை வீடு தேடி வந்து கிட்டதட்ட மண்டியிட வைத்தானே …என நினைத்து ..நினைத்து நெகிழ்ந்தாள் .

இந்த அவனின் அன்பின் பிறகு எந்த ஒரு பிரச்சினையையும்  தலை நிமிர்ந்து தைரியமாக நோக்கும் திடம் அவளுள் வந்திருந்த்து .தவறான நோக்கத்தில் மேனியில் படியும் அருவெறுப்பான பார்வைகளை கண்டு கூசி ஒதுங்காமல் , என்னடா செய்வாய் …? என தைரியமாக எதிர்நோக்க முடிந்த்து .

கோபத்தோடு பார்ப்பவர்களை , போடா எனக்கு என்னவன் இருக்கிறான் ..அவன் பார்த்துக் கொள்வான் உன்னை …என திமிராக ஒதுக்க முடிந்த்து .




எங்கோ ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருந்து கொண்டு தனது பேச்சினாலேயே தைரியத்தையும் , வல்லமையையும் அவளுக்கு வழங்கிக் கொண்டிருந்தான் மனோகரன் .இந்த கொடுப்பினை எல்லா பெண்களுக்கும் வாய்ப்பதில்லை .இது போல் ஒரு வரம் வாய்க்க பெற்ற பெண்கள்தான் சமுதாயத்தில் நிறைய சாதிக்கின்றனர் .

இதோ இவனது துணை மட்டுமிருந்தால் போதுமே …இந்த மூன்று உலகங்களையும் நான் வென்று விடுவேனே ..என நினைத்துக் கொண்டாள் வைசாலி .

அதையேதான் அவனும் உன்னிடம் நிறைய திறமை இருக்கிறதுடா சாலி ..நீ நிறைய சாதிக்கவேண்டும் என ் கூறிக்கொண்டிருந்தான் .

அப்படி என்ன திறமையை கண்டானோ…? என எண்ணியபடி ” ஓ…சாதிக்கிறேனே …நீங்கள் கூட இருந்தால் எதையும் சாதிப்பேன் “

” நீ என் கூட இருந்தால் நானும் கூட சாதிப்பேன் வைசாலி “

” அப்படியா ..! இருந்துவிட்டால் போச்சு …”  சிரித்தாள் .

” ஏய் …நான் எவ்வளவு சின்சியராக பேசிக் கொண்டிருக்கிறேன் .நீ கிண்டல் செய்கிறாயா …? “

” கிண்டலா …!  சே ..சே இல்லைப்பா …நானும் உண்மையாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன் .

” நிச்சயமாக …எப்போதும் எந்த நிலையிலும் ,என்னுடன் இருப்பாயா …? “

அன்று அவன் ஏன் அப்படி கேட்டான் என தெரியவில்லை .அப்படி குரல் நெகிழ கேட்பவனுக்கு எதிர்மறை பதிலளிக்க வைசாலியால் முடியவில்லை .

” நிச்சயம் எந்தவொரு நிலையிலும் உங்களை விட்டு பிரிய வேண்டுமென நினைக்க மாட்டேன் ” உறுதியளித்தாள் .

ஆனால் அது போன்ற ஒரு நிலை வந்தபோது ,முன்பு தானளித்த உறுதி மறந்து  மனோகரை பிரிந்தே ஆக வேண்டும் என்ற உறுதிக்கு வைசாலி வந்தாள் .

What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!