Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 11

11

கட்டம் கட்டி நிறுத்துகையிலும் 
வரை தாண்டி வழிந்து கொண்டேதானிருக்கிறாய்.

பாசிப் பச்சை உடலில் , அடர் பச்சை பார்டருடன் இடையிடையே  சிறு ஜெர்கான் கற்கள் மின்ன அழகாக இருந்த்து அந்த பட்டுபுடவை .வேதிகாவின் திருமணத்தோடு அமரேசன் வீட்டிலிருந்து வந்த பட்டு புடவைகளில் இதுவும் ஒன்று .திருமணத்தின் போது தெரியாத புடவையின் நேர்த்தி இப்போது தெரிந்த்து .அந்த சேலையின் பாரடருக்கு மேட்சாக கரும் பச்சை நிறத்தில்  ஜாஸ்மின்   துணி எடுத்து அந்த சேலையின் டிசைனை ஒத்த பூக்கூட்ட மாடலை ப்ளவுசிலும் தைத்திருந்தாள் .முதுகிலும் , கையிலும் கொத்தாக மலர்ந்திருந்த பூக் கூட்டங்கள் இடையிடையே கற்கள் மினுங்க அழகாக ஜொலித்தன .மீண்டுமொரு முறை அந்த சட்டையை அணிந்து பார்க்கும் ஆவல் வர , திரும்ப போட்டு பார்த்தாள் வேதிகா .

கண்ணாடியில் திரும்பி முதுகின் டிசைனை அழகு பார்த்துக் கொண்டிருந்த போது , சார்த்தி வைத்திருந்த கதவு லேசாக குட்டப்பட , யாரிது …உள்ளே வர அனுமதியெல்லாம் கேட்பது …ஆச்சரியப்பட்ட படி “கதவு திறந்துதான் இருக்கு .வாங்க ” என்றாள் .

” நான்தான் வேதா .வரவா …? ” கதவை தள்ளி திறந்த அமரேசன் படியிலேயே நின்றபடி கேட்டான் .




அவனை எதிர் பார்க்காதவள் கொஞ்சம் திணறி பிறகு ” வாங்க …” என்றாள் .

” இது உனக்காக வாங்கினேன் .பிடிக்கிறதா பாரேன் …? ” கையிலிருந்த பையை கட்டில் மேல் வைத்தவனின் கண்கள் அவள் ஜாக்கெட்டை அளவெடுத்தன .

” இதுதான் நீ கல்யாணத்திற்கு போடப் போகும் சட்டையா வேதா …? அழகாக இருக்கிறது .பின்னால் திரும்பேன் .முதுகு டிசைன் பார்க்கிறேன் …” அவள் தோள் தொட்டு பின்னால் திருப்பினான் .

” ம் …பூங்கொத்துக்கள் .நிஜம் போல் உன் சட்டையில் பரவிக் கிடக்கின்றன …” அவன் விரல்கள் அவள் முதுகு சட்டையின் கழுத்தில் ஊர்ந்தன .” இதை கட்டிக் கொள்ளவில்லையா …? …” ஜாக்கெட்டின் ரோப்பை தானே கட்டிவிட்டான் .அவள் தோள் தொட்டு திருப்பியவன் ” அப்படியே அந்த சேலையையும் கட்டி காண்பித்து விடேன் .எப்படி இருக்கறதென பார்த்து விடலாம்.அது நம் திருமணத்தின் போது சம்பந்தி சாப்பாட்டு நாளுக்காக எடுத்தது .நீதான் அன்று கட்டிக் கொள்ளவேயில்லையே .இப்போது கட்டிக் காட்டேன் . …” குழைந்தான் .

இப்போதே ஜில்லிட ஆரம்பித்திருந்த வேதிகா அவனது வேண்டுகோளில் எச்சில் விழுங்கினாள். ” ம்ஹூம் …அகல்யா கல்யாணத்திற்கு கட்டிக் கொள்கிறேன் ”  தலையசைத்து மறுத்தாள் .தன் மேலேயே குவிந்திருந்த அவன் பார்வையை மாற்ற , ” என்ன வாங்கி வந்தீர்கள் …? ” கட்டிலில் அவன் வைத்திருந்த பையை பிரித்தாள் .உள்ளே நகை பெட்டி இருந்த்து .திறந்து பார்த்தாள் .கம்மல், நெக்லஸ் , மாலை ,வளையலென ஒரு முழுமையான செட் .ஆச்சரியமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் .

” கல்யாணத்திறகு உனக்கு போடுவதற்கு நகை வேண்டுமே வேதா .அதுதான் வாங்கினேன் …” அமரேசனின்  ஆதரவு  குரலில் வேதிகாவிற்கு கண் கலங்கிவிட்டது .

உறவினர் வீட்டு திருமணம் ஒன்றிற்கு நகையில்லாமல் போய் நிற்கும் கொடுமையை ஒரு பெண்ணால் மட்டுமே உணர முடியும் .அங்கு வரும் பெண்கள் கூட்டம் முதலில் ஆராய்வது பரஸ்பரம் அடுத்த பெண்களின் கை , கழுத்து ,காதுகளைத்தான் .முந்தைய திருமணத்தில் அணிந்திருந்த நகைகளில் ஒன்று குறைந்து விட்டாலும் …” வச்சாச்சா …வருமா …முழுகிடுமா …” என்பதை ஒத்த கேள்விகள் வரும் .கிண்டல்கள் தெறிக்கும் .திருமணம் முடிந்த ஆறே மாத்த்தில் .இல்லாத நகைக்கு என்ன பதில் சொல்வதென அவள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது ….துன்பம் தீர்க்கும் மீட்பனாய் நானிருக்கிறேன் என முன் நின்ற கணவனை நெகிழ்ச்சியாய் நோக்கினாள் .




” என் நகைகளை நீங்கள் தானே அடமானம் வைக்க சொன்னீர்கள் …?”

” அது ஒரு வியாபாரியாக உனக்கு தொழில் ஆலோசனை சொன்னேன் .இப்போது ஒரு கணவனாக உன் தேவைகளை நிறைவேற்றுகிறேன் .உன் தொழிலுக்கான பணத்தை நானே கொடுத்திருப்பேன் வேதா .ஆனால் நீ அதனை ஏற்கவேண்டுமே .நீ உன் அப்பாவிடமே பணம் கேட்காமல் உன்னால் முடிந்த வரை முதல் போட்டு தொழில் செய்யும் சுயகௌரவக்காரியாயிற்றே .என்னிடம் மட்டும் வாங்கி கொள்வாயா என்ன …? அதனால்தான் உன் நகையை வைத்தே உனக்கு வழி காட்டினேன் …”

அமரேசன் அப்படியே அவள் மனநிலையை சொன்னதில் ஙேதிகாவின் மனம் தீயிடை மெழுகானது..அவளது சுய கௌரவத்தையும் மதித்து ,சபை பெருமையையும் காப்பாற்றிய கணவன் அவள் மனதில். மிக உய்ர்ந்த இடத்திற்கு போனான் .

” தெரிந்த கடைதான் வேதா .டிசைன் பிடிக்கலைன்னாமாத்திக்கலாம் .உன்னை கூட்டி போயே வாங்கியிருப்பேன் . நகைக்கென  நான் கூப்பிட்டால் நீ வருவாயோ …என்று நினைத்துதான் …” பேசியபடி நிமிர்ந்தவன் மனைவியின் நெகிழ்ச்சியை முகத்தில் தெரிந்து கொண்டான் .

” வேதா …” குழைந்த குரலில் அழைத்தபடி ஆட்காட்டி விரலால் அவள் முகம் தாங்கி நிமிர்த்தி விழிகளுக்குள் கூர்ந்தான் .முதன்முறையாக அவன் கண்களை இமைக்காமல் சந்தித்தாள் வேதா .கணவனும் , மனைவியுமாக தனி ஒரு உலகத்திற்குள் விழி வழியாகவே நுழைந்து கொண்டிருந்த போது …

” வேதிகா …” வெளியே அவளை அழைக்கும் குரல் கேட்க , இருவரும் பார்வையை திருப்பி தங்களை மீட்டுக்கொண்டனர் .கேட்ட குரலில் ஆச்சரியமடைந்த அமரேசன் …அம்மாவா …வியப்புடன் திரும்பி பார்த்தான் .வேதிகாவும்தான் .

அங்கே மங்கையர்க்கரசிதான் நின்று கொண்டிருந்தாள் .அருகருகே நின்றிருந்த கணவன் , மனைவியை கண்டதும் தயங்கி நின்றாள் .” நான் பிறகு வரவா …?” திரும்ப போனாள் .

” இல்லையில்லை .உள்ளே வாங்க …” இருவரும் ஒரே நேரத்தில் அழைக்க , தயக்கத்துடன் மகனை பார்த்தபடி உள்ளே வந்தாள் .

” உட்காருங்க அத்தை ..” கட்டிலில் கிடந்த சாமான்களை ஒதுக்கினாள் வேதிகா .

” என்ன இது …? ” மங்கையர்கரசியின் கண்கள் நகை பெட்டியில் பதிந்த்து .

” உங்கள் மகன் எனக்கு நகை வாங்கி வந்திருக்கிறார் அத்தை .பாருங்கள் …” பெட்டியை திறந்து காண்பித்தாள் .

” ஓ…ம் …சரி .நன்றாக இருக்கிறது .போட்டுக்கொள் .நான் பிறகு வருகிறேன் …” எழுந்து கொள்ள போனாள.

” நீங்கள் எதற்கு வந்தீர்கள் அம்மா …? இதென்ன கையில் …? ” அமரேசனின் பார்வை கூர்மையாக தாயை துளைத்தது கூடவே மனைவியிடம் விசாரி என்றொரு ஜாடையையும் செலுத்தினான் .சேரை இழுத்து போட்டு அம்மாவை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டான் .

உன் அம்மா …நீதான் விசாரியேன் .என்னை ஏன் சொல்கிறாய் …?  கேட்டவுடன் பதில் சொல்கிற ஆளா இவர்கள் அலுத்தபடி   ” என்ன விசயம் அத்தை …? ” மனமில்லாமல் கேட்டாள் .

” ஒன்றுமில்லைம்மா …? ” மங்கையர்க்கரசி மடியில் வைத்து இறுக்கிய மஞ்சப்பை வேதிகாவின் கவனத்தை ஈர்க்க ,




” இதில் என்ன …? கொடுங்க பார்க்கலாம் …” பையை வாங்கி பிரித்தவள் விழி விரித்தாள் .பையினுள் இருந்த பெட்டியில் நகைகள் இருந்தன. நிறைய …பெரியதும் ..சிறியதுமாக …கல் பதித்தும் , இல்லாததுமாக …கொஞ்சம் பழைய டிசைன் நகைகள் .ஒரு ஒழுங்கில்லாமல் குவியலாக பெட்டிக்குள் அடைபட்டிருந்தன .

” என் நகைகள் .உனக்கு கல்யாண வீட்டிற்கு போட்டுக் கொள்ள கொடுக்கலாமேன்னு எடுத்துட்டு வந்தேன் …” தயக்கமாக கூறினாள் மங்கையர்க்கரசி .

ஆச்சரியம் தாக்க கணவனை பார்த்தாள் , அவன் அதே பாவனையுடன் தாயை பார்த்துக் கொண்டிருந்தான் .

” அமர் வாங்கிட்டு வந்திருக்கிறது புது டிசைனாக நல்லாயிருக்கு .என் நகை கொஞ்சம் பழைய மாடல் .உனக்கு பிடிக்காது …” மாமியாரின் திணறலில் வேதிகாவிற்கு அவள் தோளணைக்கும் வேகம் வந்த்து .மருமகளுக்கு நகைகளை தூக்கி கொடுக்கும் மாமியார் .எப்பேர்பட்ட பெண் இவர் .மங்கையர்க்கரசியன் அருகே அமர்ந்து ஆதரவாக அவள் கைகளை பிடித்துக் கொண்டாள் .

” எனக்கு எப்பவுமே இந்த மாதிரி பழைய டிசைன் நகைகள் தான் பிடிக்கும் அத்தை .கொடுங்கள் போட்டு கொள்கிறேன் …” கைகளை நீட்டிக் கொண்டே கணவனை பார்த்து சரிதானே என பார்வையால் கேட்டாள் .

அவன் இன்னமும் தாயிடமிருந்து மீளா பார்வையுடன் மனைவிக்கு சரியென தலையாட்டினான் .மங்கையர்க்கரசியின் முகம் வெளிச்சம் பூசிக் கொண்டது .

” இந்த நகைகளை பற்றி சொல்லுங்களேன் அத்தை ” வேதிகா மாமியாரை மேலும் பேச்சுக்குள் இழுக்க , மங்கையர்க்கரசி உற்சாகத்துடன் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து தன் நகைகளை கட்டில் மேல் பரப்பியபடி விவரிக்க ஆரம்பித்தாள் .

” இலைத்தோடு , மாங்காய் மாலை , காசு மாலை , கல் வளையல் , நெளி மோதிரம் , அட்டிகை …”என ஒவ்வொரு நகையாக அவள் விவரிக்க …விவரிக்க அவளது முக உணர்ச்சிகளை பார்த்தபடி இருந்தனர் கணவனும் , மனைவியும் .
” என் அப்பா எனக்கு அறுபது பவுன் நகை போட்டார் .உன் மாமனார் ஒரு அறுபது பவுன் வாங்கி தந்திருப்பார் .என் நகை மொத்தம் நூற்றியிருபது பவுன் ….” பெருமையாய் அறிவித்தாள் .

” இதையெல்லாம் இதுவரை என்னிடம் நீங்கள் சொன்னதே இல்லையே அம்மா ..? ” அமரேசன் மென்மையாக கேட்டான் .

” நீ கேட்டதே இல்லையேடா …” மங்கையர்க்கரசி திருப்பினாள் .
வாயடைத்து அமர்ந்திருந்த கணவனை குறுகுறுவென பார்த்தாள் வேதிகா .நீ வழக்கமாக எதிரலிருப்பவர்கள் வாயைத்தானே அடைக்க வைப்பாய் …இன்றென்ன காற்று உனக்கெதிர் புறம் வீசுகிறது …மனைவியின் கிண்டல் பார்வையை அமரேசன் கவனிக்கவில்லை . அவன் பார்வை முழுவதும் தாயிடமே இருந்த்து .

” ம் ..தப்புத்தான் .நான் கேட்டிருக்க வேண்டும்தான் …” தலையை குனிந்து ஆமோதித்து கொண்டான் .வேதிகா கன்னத்தில் கை தாங்கி தாயையும் , மகனையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .

தரையில் பார்வை பதித்திருந்த மகனின் தலையில் பார்வையை வைத்திருந்தாள் தாய் .நிமிர்ந்த்தும் தாயின் பார்வையை சந்தித்த மகன் ,சேரிலிருந்து எழுந்து தன் அம்மாவின் கைகளை பிடித்து கொண்டு கட்டிலில் அவளருகே அமர்ந்து கொண்டான் .

” இன்னமும் கூட நான் நிறைய உங்களிடம் பேசவில்லையோ …எனத் தோன்றுகிறது அம்மா .” மங்கையர்க்கரசியின் கைகள் நடுங்கியபடி உயர்ந்து மகனின் தலையை வருடியது .

சூழ்நிலையின் கனத்தை உணர்ந்த வேதிகா எழுந்தாள் .” பேசிக் கொண்டிருங்கள் .வருகிறேன் .” தன்னை கடந்தவளின. கைகளை பற்றினான் அமரேசன .

” எங்கே போகிறாய் …உட்கார் …” உத்தரவான அவன் குரலில் முகம் சுணங்கினாள் .

” நீ அறியாமல் எந்த ரகசியம் பேச போகிறோம் வேதா …? ” பேசி
யது மங்கையர்கரசிதானா …காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டு மீண்டும் அமர்ந்து கொண்டாள் வேதிகா .

” நீங்கள் தான் பேசினீர்களா அத்தை …? “

” நானேதான் …என் நகைகளை போட்டு கொள்கிறாயா வேதாம்மா …? ” மகனின் கையையும் , மருமகளின் கையையும் தன் இரு கைகளாலும் பிடித்து கொண்டாள் .

” பின்னே …சும்மா காட்டிவிட்டு எடுத்து போய்விடலாமென நினைக்கிறீர்களா அத்தை …? நான் இது இது வேண்டுமென உங்களிடம் சண்டையிடலாமென இருந்தேன் …” வேதிகா கொஞ்சல் குரலில் கூற மங்கையர்கரசி மலர்ந்து சிரித்தாள்.




” எடுத்துக்கோம்மா .உனக்கு இல்லாத்தா…? “

” இன்னமும் எதையெல்லாம் மறைத்து வைத்திருக்கறீர்கள் அம்மா …? ” குற்றச் சாட்டுவது போலிருந்த மகனின் குரலில் மங்கயர்கரசியின் முகம் பழையபடி மரத்த தன்மைக்கு மாறியது .

அந்த மாற்றத்தை விரும்பாத வேதிகா ” பெண்கள் நாங்கள் எங்களுக்கு தேவையான நகைகளை  தனிப்பட  வைத்திருப்போம் .எல்லாவற்றையும் உங்களிடம் காட்ட வேண்டுமென்றோ , சொல்ல வேண்டிமென்றோ என்ன கட்டாயம் …? இப்படித்தான் அத்தை கணக்கு போட்டு எனது நகைகளை கொண்டு போய் அடமானத்தில்  வைத்துவிட்டார் ….” மாமியாரிடம் கணவனை குற்றம் கூறினாள் .கோபத்திற்கு பதில் அமரேசனின் முகம் மலர்ச்சிக்கு போனது .

இதற்கு எதற்கு பல்லை காட்டுகிறான் …? முழியை பார் …சொல்லவிளங்கா பார்வையுடன் தன் முகத்தில் பதிந்த கணவனின் பார்வையில் திணறியவள் ” அத்தை நீங்க என் தோட்டத்தை பார்த்திருக்கறீர்களா …வாங்க பார்க்கலாம் ” அழைத்தாள் .

” ஆமாம் அம்மா .அருமையான தோட்டம் .போய் பாருங்கள் ்குறிப்பாக அந்த மல்லிகை கொடியை கட்டாயம் பார்த்துவிடுங்கள் ….” அமரேசனின் பார்வை வேதிகாவை உணவென மென்றது.

” அப்படி என்னம்மா அந்த மல்லிகை கொடியில் விசேசம் …? ” கேட்ட மாமியாருக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் சிவந்து விட , சட்டென தலையணையை எடுத்து கணவன்முதுகில் ஒன்று போட்டாள்.
” எதையாவது உளறாதீர்கள் …”

” ஐய்யோ …என் முதுகு …போச்…அம்மா காப்பாத்துங்க …” குனிந்து கத்தியவனின்  முதுகில் கைகளால் இரண்டு வைத்தாள் .




” இதைத்தான் வேதாம்மா நீ முதலிலேயே செய்திருக்க வேண்டும் .தலையணையை எடுத்ததுதான் தப்பு …”

” ஐயோ …மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டீங்களா …? ” அமரேசனின் அலறலில் ” ஆமான்டா …” என அவள் தலையில் கொட்டினாள் மங்கையர்கரசி .இது நாள் வரை    தள்ளி நின்ற குதூகலம் திரும்ப அவர்களிடையே நுழைந்து அமர்ந்து கொண்ட போது …

” எதற்கு இப்படி கத்திக் கொண்டிருக்கிறீர்கள் …? குடும்பம் நடக்கும் வீடு போல் தெரியவில்லையே …” கரித்து கொட்டியபடி வந்து நின்றாள் திலகவதி .

What’s your Reaction?
+1
2
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!