Author's Wall Serial Stories Short Stories sirukathai

காவியக் காதல்

ஹாய் ப்ரெண்ட்ஸ் ,

நம் தளத்திற்கு ஒரு புதிய எழுத்தாளரை  அறிமுகம் செய்விக்கிறேன் . வரலாற்றின் மேல் அதீத ஆர்வம் கொண்ட எழுத்தாளர் இவர். நிறைய வரலாற்று தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் .இவரது படைப்புகளும் வரலாற்றை அடிப்படையாகவே கொண்டிருக்கின்றன .இது இவரது முதல் படைப்பு. அம்பாகாபதி – அமராவதி கதை நாம் எல்லோரும் அறிந்த்துதான் .இந்த காதலர் தினத்தில் அந்த சரித்திர காதலர்களின் கதையை மீண்டும் ஒரு முறை படிப்பதில் ஒரு மகிழ்வுதானே…? இதோ நீங்களும் வாசியுங்கள் .புது எழுத்தாளருக்கான உங்கள் ஆதரவையும் கொடுங்கள் தோழமைகளே …

காவியக் காதல்

மாமன்னன் குலோத்துங்கனின் அரசபை. ரத்தினமும் வைரமும் இழைக்கப்பட்ட  சிம்மாசனத்தில் சிம்மம் என்ன வீற்றிருந்தார் குலோத்துங்கன்.




அன்று ஒரு நீதி வழக்கு விசாரணை. அந்த தர்பார் மண்டபத்தில் சேனாதிபதியும், மந்திரிகளும், பொதுமக்களும் மட்டுமல்ல கவிச்சக்ரவர்த்தியாம் கம்பனும், தலைசிறந்த கவியாம் ஒட்டக்கூத்தரும்  இருந்தனர்.

தர்பார் மண்டபத்தின் மேல் மாடத்திலிருந்து அரண்மனை பெண்டீர் வழக்கு விசாரணையை காண கூடியிருந்தனர். அழகின் ஓவியமாய் பெண்ணொருத்தி அவர்களுள் அழுது அழுது வீங்கிய முகத்துடன் காணப்பட்டார்.

அந்த மாதரசி தன் எழில் தன்னை தொலைத்து இருந்தாள். அலங்காரங்கள் ஏதுமின்றி நீரூற்றி அழிக்கப்பட்ட வண்ணச் சித்திரம் போல் அவள் தோற்றம் இருந்தது. இருப்பினும் அவள் எழில் முகம் கண்டு எவரும் ஒரு வினாடி பார்வையைப் பிரிது ஒரு பக்கம் நகர்த்த திணறி தான் போவார்கள்.

ம்ம்ம்…..வழக்கு விசாரணை ஆரம்பம் ஆகட்டும் கர்ஜித்தான் குலோத்துங்கன்.

மன்னனின் இடப்புறம் அரியணையில் அமர்ந்திருந்த ஒட்டக்கூத்தர் இந்த உத்தரவுக்காக காத்திருந்தது போல் துள்ளி எழுந்து அவையின் நடுவில் வந்தார்.

காவலரை நோக்கி உத்தரவு பிறப்பிக்கும் வண்ணம் இழுத்து வாருங்கள் அந்த கயவனை? என்று முழங்கினார்.

காவலர்கள் சடுதியில் விரைந்தனர் .அரண்மனை தர்பார் மண்டபத்தில் தற்போது கை கால்கள் மட்டுமின்றி கழுத்திலும் இரும்பு வளையம் பூட்டப்பட்டு உடல் முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவன் இழுத்து வரப்பட்டான். அந்த இளைஞனின் முகத்தில் தெய்வீகக் கலை பொதிந்து இருந்தது.

கனம் நிறைந்த அந்த சங்கிலியை தாங்கியிருந்த அவன் கழுத்து தொய்ந்து இருக்கவில்லை. போர் முடிக்கும் வீரனின் சிரம் என சீறி நின்றது. அவனுடைய விழிகளில் கலக்கம்,பயம்,மிரட்சி ஏதேனும் ம்ம்ம்கூம்ம்ம்…. சிறிதுமில்லை அன்று பிறந்த பிள்ளையின் பொன்முகம் போல் புன்னகை தவழ நின்றிருந்தான் அந்த இளைஞன்.

அவன் நிலை கண்ட கவிச்சக்கரவர்த்தி துணுக்குற்று எழுந்தார். இது என்ன மடமை யார் செய்த காரியம் இது? என் மகன் என்ன அரசியல் குற்றவாளியா? சோழப் பேரரசுக்கு எதிராக சதி ஏதும் புரிந்தானா?கவி புரிவது தவிர அவன் வேறொன்றும் அறிய மாட்டானே?அவன் விற்போர் புரிபவன் அல்ல, சொற்போர் புரிபவன்.

தமிழுக்கு குலோத்துங்கன் அரசபை அளிக்கும் மரியாதை இதுவோ?தமிழ் பாடும் புலவருக்கு சங்கிலியால் பிணைத்து சன்மானம் அளிப்பாயோ மன்னவா?குமுறினார் கம்பர்.

குலோத்துங்கன் முகத்தில் சிறிதேனும் மாற்றம் ஏற்படவில்லை. கவிச் சக்கரவர்த்தியார் கவலை கொள்ள வேண்டாம்.வழக்கின் முடிவில் குற்றவாளிகள் மட்டும் தண்டிக்கப்படுவர் .இது தர்பார் மண்டபம், இந்த மண்டபத்திலேயே தந்தை,மகன், தாய், சகோதரி, சகோதரன் போன்ற உறவுகளுக்கு இடமில்லை அவ்வாறு இடம் தந்தால் நீதி செய்ய முடியாது.

எனவே கம்பனார் சிறிது அமைதி காக்க வேண்டும்.

இருப்பினும். அம்பிகாபதியை சங்கிலியால் பினணத்த இந்த செயல் என்னுடைய அனுமதியின் பெயரில் நிகழ்ந்தது அல்ல. இது யாருடைய உத்தரவின்படி நிகழ்த்தப்பட்டது என்பது தெரியவில்லை. முதலில் இந்த அவை அதை தெரிந்து கொள்ள விரும்புகிறது.

அரசனின் அந்தக் கேள்விக்கு அவையில் உடனே முன் வந்து நின்றார் ஒட்டக்கூத்தர் .மன்னர் பெருமானுக்கு வணக்கம் ! அந்த ஏற்பாடு செய்தவன் நானே! நான் தான்.




அம்பிகாபதியை சங்கிலியால் பிணைத்து அழைத்து வரும்படி உத்தரவு பிறப்பித்தது தாங்களா!? கம்பர் மேலும் கோபமானார்.

சங்கிலியால் பிணைத்து இழுத்து வர அம்பிகாபதி செய்த குற்றம் என்ன ஒட்டக்கூத்தரே!?? என்று

கொதித்தார் கம்பர்.

இடையே புகுந்தார் மன்னர். கவிஞர்கள் அமைதி காக்கவும். இது விசாரணை மண்டபம். அரசு அனுமதியின்றி யாரும் இங்கே பேசுதல் ஆகாது.  தங்களுக்குள் போர் நடத்திக் கொள்ள இது கவி மன்றம் அல்ல என்று எச்சரிக்கும் விதமாக குலோத்துங்கன் பேசினார்.

பின்னர் காவலர்களை நோக்கி அம்பிகாபதியை பிணைத்திருந்த சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கட்டளையிட்டார்.

தர்பார் மண்டபத்தின் மேல் மாடத்திலிருந்து இங்கே நடந்த விசயங்களை பார்த்துக் கொண்டிருந்த அந்த மாதரசி சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த அந்த வாலிபனை கண்டவுடன் மயக்கம் அடையும்  நிலைமைக்கு சென்றிருந்தார். வேல் போன்ற அவர் விழிகள் மெல்லத் சொருக தன்னிலை மறந்த நிலையில் வேரற்ற மரம் போல் விழும் நிலைக்கு சென்றார். ஆனால் அவரைத் தாங்கிப் பிடித்த அரண்மனை மகளிர் அமராவதி அமராவதி விழித்துக்கொள் என்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.

இப்பொழுது அம்பிகாபதியின் சங்கிலி பிணைப்பு விடுவிக்கப்பட்டு இருந்தது.  அந்த மாதரசி முகத்திலும் சிறிதளவு நிம்மதி தெரிந்தது.

குலோத்துங்கன் மீண்டும் பேசலானார். கூறுங்கள் ஒட்டக்கூத்தரே இந்த வழக்கைத் தொடுத்தவர் நீங்கள் தான். தாங்கள் என்ன கண்டீர்கள். எதற்காக தாங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளீர்கள். இந்த வழக்கைத் தொடுத்தன் நோக்கமென்ன அனைத்தையும் விளக்கமாக இந்த சபையில் தாங்கள் தெரியப்படுத்தலாம்.

ஒட்டக்கூத்தர் ஓரடி முன்னால் வந்து பேசலானார். மன்னர் மன்னா இதோ தங்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும்  இந்த அம்பிகாவதி அப்படி ஒன்றும் நல்லவன் அல்ல. இவன் பெண்கள் பின்னால் அலையக்கூடிய பெண் பித்தன். இது மட்டுமன்றி பல்வேறு பெண்கள் இவனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  

    இந்த விசயங்களை முன்னரே தெரிந்து தான் நான் உங்களிடம் நம் இளவரசியார் அமராவதியை கம்பர் இடம் கல்வி கற்க செல்வதை தடை செய்ய கூறினேன் . ஆனால் நான் தவறு ஒன்றை இழைத்து விட்டேன். மன்னவா நான்அப்போழுதே  இந்த அம்பிகாவதியின் இந்த குணங்களை தங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். நான் அவற்றை தெரியப்படுத்தாமல் இளவரசி அவரிடம் கல்வி கற்க செல்ல வேண்டாம் என்று மட்டுமே கூறினேன். அதனால் அன்றோ இன்று இந்த பிழை நேர்ந்தது.

    

    என்ன பிழை நேர்ந்துவிட்டது ஒட்டக்கூத்தரே!!??!

   

    இதை சொல்லவும் எனக்கு கூச்சமாக உள்ளது மன்னா. ஆனால் மன்னா! இந்தப் பாதகன் அம்பிகாவதி  நம் இளவரசியின் மனதை கெடுத்து விட்டான்.

   

    ம் ..ம் மேலே சொல்லுங்கள்…

    

    என்னத்தை கூறுவது மன்னவா இந்தப் பாதகனும் நம் இளவரசியும் ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருக்கும் பொழுது அரசு அதிகாரிகளின் முன்னிலையில் கையும் களவுமாய் இவனை கைப்பற்றினேன்.

   

    இப்பொழுது வழக்கு இது தான் காதல் என்ற பெயரில் நயவஞ்சகமாக இளவரசியின் மனதை கெடுத்த பாவியாவான் இவன்.  இதற்கு தங்களிடம் ஒரு நல்ல தீர்ப்பை வேண்டியே இந்த வழக்கை நான் தொடுத்துள்ளேன். சோழப் பேரரசிடமே  தன் காம விளையாட்டை விளையாட துணிந்த இவன் எப்பேர்பட்ட அயோக்கியன். இவன் மரண தண்டனை பெறுவதற்கு முழு தகுதியானவன் ஆவான்.இப்பொழுது மன்னனின் தீர்ப்புக்காக இந்த அவை காத்திருக்கிறது.

    

  குலோத்துங்கன் அம்பிகாபதியின் பக்கம் திரும்பி நீ என்ன சொல்கிறாய் அம்பிகாபதி சொல்?? என்றான்.




    இந்த வழக்கில் என்னைத் தவிர சம்பந்தப்பட்ட இளவரசி ஏன் இங்கே அழைத்து வரப்படவில்லை. வழக்கு என்று வந்தவுடன் இருவரையும் விசாரித்து பின்னரே நியாயமான தீர்ப்பு வழங்க முடியும் அல்லவா??.

   

     அம்பிகாவதி நான் உன்னிடம் கேட்டது உன் தன்னிலை விளக்கம் மட்டுமே! இந்த வழக்கை எப்படி சரியாக நடத்துவது என்பதான யோசனை அல்ல அதை நீ உணர வேண்டும் கர்ஜித்தான் குலோத்துங்கன்.

     

     இங்கு தொடுக்கப் பட்டுள்ள வழக்கின் முழுமையை நீ இன்னும் உணரவில்லை. இது உனக்கும் அமராவதிக்கும் இடையேயான காதலின் உண்மையை அறிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட வழக்கு அல்ல.

  

     இது அம்பிகாவதி ஆகிய நீ காமலோலனாக  இருந்து சோழநாட்டுப் பெண்களிடம் உம்முடைய லீலை வெளிப்படுத்தினாய் என்றும் அவர்களில் ஒருத்தியாக சோழ இளவரசியையும் பயன்படுத்த எத்தனித்தாய் என்றும் மாபெரும் குற்றச்சாட்டு உன் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. காதல் குறித்த விசாரணை என்றால் அம்பிகாபதியையும் அமராவதியும் இணைத்து வைத்து விசாரணை செய்யலாம். ஆனால் இது அத்தகைய குற்றச்சாட்டு அல்ல. இதன்படி பார்த்தோமேயானால் நீ அரசியல் குற்றங்களுக்கும் மிகுதியான மிக மோசமான குற்றத்தை செய்தவன் ஆகிறாய். எனவே, ஒட்டக்கூத்தரின் கருத்துப்படி நீ மரண தண்டனை பெறுவதற்கு முழுவதும் தகுதியானவன்  தான். உன்னை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துக் கொள்ள உன்னால் தர முடிந்த விளக்கங்களை நீ தரலாம். இது உனக்கான நேரம் சொல்.

    

தாமரை போல் மலர்ந்திருந்த அம்பிகாபதியின் முகம் சிறிதளவேனும் மாற்றம் கொள்ளவில்லை. குற்றத்தை யார் வேண்டுமானாலும் சுமத்த இயலும் மன்னவா. ஆனால், ஆதாரத்தின் அடிப்படையிலேயே குற்றங்கள் நிரூபிக்க பட வேண்டும் . ஆதாரங்கள் என்ன? என்று பதில் வினா தொடுத்தான்.

     

என்ன ஆதாரம் வேண்டும் உனக்கு? கொதித்தெழுந்தார் ஒட்டக்கூத்தர். இதோ பார் பாடல்கள் என்ற பெயரில் நீ உளறிக்கொட்டியபவை அனைத்திலுமே காமம் வழிகிறது இது ஒன்று போதாதா உன் குணநலனை அரசனுக்கு எடுத்துக்காட்ட? ஓலைச் சுவடிக் கட்டு ஒன்றை அம்பிகாபதியின் முகத்தில் விசிறி அடித்தார் ஒட்டக்கூத்தர்.

ஓஹோ பாடல்களை எழுதி விடுவதால் மட்டுமே நான் குற்றவாளி ஆகி விடுவேனோ?  சோழநாட்டுப் பெண்டிர் பலருடைய வாழ்வைக் கெடுத்தவன் நான் என்று கூறினீர்களே அப்படி எவரையேனும் ஆதாரமாக இங்கே தங்களால் கொண்டு வந்து நிறுத்த முடியுமா?

  ஆ ஹா அது எப்படி சாத்தியம். இந்தப் பாதகனுடைய வார்த்தையிலும் கவிதை என்ற இவனுடைய உளறல்களையும் நம்பி தன்னுடைய அனைத்தையும் இழந்த, “கவனித்து கொள்ளுங்கள் மன்னா!” அனைத்தையும் இழந்த பெண்கள், எப்படி இந்த அரசவை வந்து தன் நிலை இழந்ததை தங்கள் முன்னால் சொல்ல வருவார்கள்.

   ஏன் கவிச் சக்கரவர்த்தியின் மகன் என்று பெருமை பீத்தீக் கொள்ளும் இந்த அம்பிகாவதி எதற்காக ஒரு பாடல் கூட காதலை தவிர்த்து காதல் என்று சொல்ல முடியாது மன்னா. அனைத்துமே காம ரசம் சொட்டும் பாடல்கள் காதல் பாடல்கள் அல்ல. இப்படி பாடல்களை மட்டுமே எழுத காரணம் என்ன?

  உள்ளத்தில் உள்ளதே எழுத்தில் வரும் மன்னா தன்னிடம் கல்வி கற்க வந்த பெண் தன் பெண்ணுக்கு ஒப்பானவர். அப்படி பார்த்தோம் என்றால் அமராவதி இந்த அம்பிகாபதியின் சகோதரியாக கருதப்பட வேண்டியவர். அப்படிப்பட்ட பெண்ணிடம் எப்படி இவனால் காதல் கொள்ள முடிந்தது.

   கல்வி கற்பிக்கும் நிலையில் இருந்த இவன் தன்னிடம் கல்வி கற்கும் ஒரு மாணவியுடன் காதலை எப்படி வெளிப்படுத்தி இருக்க முடியும்.இதிலிருந்தே தெரியவில்லையா மன்னா இது காதல் அல்ல. இந்தப் பாதகன் விணையாய் விதைத்த விதை.

    இப்பொழுது குலோத்துங்கன் அம்பிகாபதியின் பக்கம் திரும்பினார் அம்பிகாபதி முகத்தில் சிறிதளவேனும் ஒளி குன்றவில்லை. அவன் விழிகளில் தெரிந்த அந்த சுடர் மறைந்துவிடவில்லை. அன்று மலர்ந்த தாமரை போலிருந்த அந்த முகம் வாடி விடவுமில்லை.

   




அப்பொழுது நான் எழுதிய பாடல்களை வைத்து எனக்கு மரணத்தை தண்டனையாக அல்லது பரிசாக வழங்க சொல்லி மன்னரை நிர்பந்திக்கிறார்கள் அப்படித்தானே ஒட்டக்கூத்தரே?..

   

இந்த குலோத்துங்கனை எவராலும் ஒரு தீர்ப்பை வழங்க சொல்லி நிர்பந்திக்க முடியாது அம்பிகாபதி.

ஒட்டக்கூத்தர் உன் மீது சுமத்தி இருக்கும் குற்றமானது சிறிது அந்தரங்கமானது அப்படிப்பட்ட குற்றத்திற்கு ஆதாரமாக பெண்கள் எவரும் அரசவைக்கு வரமாட்டார்கள் என்று கூறும் அவர் கருத்து ஏற்றுக்கொள்ள தக்கதாகவே இருக்கிறது.

    

தவிர நீ எழுதிய பாடல் அனைத்துமே  காமக்கலப்பு உடைய பாடல்களாகவே என் கண்களுக்கும் புலப்படுகிறது. ஒருவனின் உள்மனதை வெளிக்காட்டும் கண்ணாடியாக அவனுடைய எழுத்துக்கள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

அம்பிகாவதி நீ இது வரை இறைவனைத் துதித்தோ, பொதுநலம் குறித்தோ எந்த ஒரு பாடல்களும் பாடாதது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

     அது மட்டுமன்றி நீ பாடிய காதல் பாடல்கள் அனைத்திலும் விரசம் பரவி இருப்பது உண்மையே. அது ஒட்டக்கூத்தரின் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

     பார் போற்றும் ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்து படித்த சக்கரவர்த்தியின் மகன் நான்.

    

        இது உன்னைப் பற்றிய விசாரணை உன் தந்தையைப் பற்றியது அல்ல வெகுண்டார் ஒட்டக்கூத்தர்.

        ஆமாம் ஆமாம் ராமனின் பட்டாபிஷேகத்தின் போது அவன் சிரசில் மணிமுடி சூட்டி வைத்தவர்கள் சடையப்ப வள்ளல் வம்சத்தவர்  அல்லவா?  குலோத்துங்கசோழன் கம்பரைப் பார்த்து எள்ளி நகையாடும் விதமாக கேள்வியை தொடுத்தான்.

      இல்லை மன்னவா நான் அவ்வாறு கவி எழுதியதற்கு காரணம்—

       போதும் கம்பரே நாம் உம்மிடம் விளக்கம் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது வழக்கு சம்பந்தமாக மட்டுமே பேசுவோம்.

     புலிக்குப் பிறந்தது பூனையாகுமா மன்னவா. என் மகனால் இவ்வுலகம் முழுவதும் உள்ள எதனைப் பற்றியும் கவிதை எழுத முடியும் எந்த விசயத்தையும்  பாட முடியும். அவன் கவியரசன்.

       அப்படியா நிச்சயமாகவா தங்கள் மகனால் உலக விசயம் எதைப் பற்றியும்  காமம் கலக்காமல் பாடல்கள் இயற்ற முடியுமா இது சாத்தியமா உங்கள் மகனின் அறிவுக்கு இது பொருத்தமானது தானா?.




      முடியாது மன்னவா இந்த மூடன் எதைப்பற்றி பாடினாலும் அதில் காமச் சுவையை சேர்த்தே பாடி தொலைப்பான். அவனால் தனிப்பட்ட முறையில் எந்த பாடல்களையும் காமம் கலக்காமல் இயற்றவே முடியாது. அது எனக்கு நன்றாக தெரியும் ஒட்டக்கூத்தர் முந்தினார்.

     முடியும் மன்னவா எப்படிப்பட்ட பாடல்களையும் இயற்ற என்னால் முடியும்.

     ஒன்றல்ல இரண்டல்ல அப்பனே  100 பாடல்கள் நூறு பாடல்களை ஒரு நாளிகை நேரத்திற்குள் சிறிதும் காமம் கலக்காமல் உன்னால் இயற்ற முடியுமா?  கொக்கரித்தார் ஒட்டக்கூத்தர்.

      மன்னர் அம்பிகாபதியின் பக்கம் திரும்பி, சொல்லு அம்பிகாவதி உன்னால் பாடல்கள் இயற்ற முடியுமா ?

     

    ஏன் முடியாது?என்றான் அம்பிகாபதி.

      உன்னால் முடியாது அம்பிகாவதி சவால் விடும் வண்ணமாக சொன்னார்  ஒட்டக்கூத்தர்.

ஒட்டக்கூத்தரின் இந்த சவால் கம்பரையோ அல்லது கம்பரின் மகன் அம்பிகாபதியையோ சிறிதும் சலனப் படுத்தவில்லை. இவ்வளவுதானா என்னுடைய மைல்கல் என்பது போன்ற எண்ணத்துடன் இருவருமே ஒட்டக்கூத்தரை நிமிர்ந்து பார்த்தனர்.

     சொல்லு அம்பிகாபதி ஒட்டக்கூத்தர் உனக்கு விடுத்திருக்கும் சவால் உனக்கு சம்மதமா?

   ஆகா அருமையான சவால் மன்னவா!!

இந்த சவாலில் நான் வெற்றி பெற்றால் எனக்கு கிடைப்பது என்ன? முகத்தின் புன்னகை சிறிதும் மாறாமல் அரசனிடம் கேட்டான் அம்பிகாபதி.

    அவனுடைய கேள்வியால் எள்ளளவும் பாதிப்பு ஏற்படாமல் குலோத்துங்கன் “பரிசு!!!! இந்த போட்டியில் நீ வெற்றி பெற்றால் உனக்கு இந்த குலோத்துங்கன் வழங்கும் பரிசு??!! அமராவதி”. ஆம்! சோழ குலத்தவன் நான். சோழ வம்சத்தவர்கள் எந்தக் காலத்திலும் காதலுக்கு எதிராக இருந்ததில்லை. இந்தப் போட்டியில் நீ வெற்றி பெறும் பட்சத்தில் உன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து நீ விடுபடுகிறாய். எனவே உனக்கு பரிசாக அமராவதியையே திருமணம் செய்து வைக்கிறேன்.

     போட்டியை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்-அம்பிகாபதி கூறினான்

  ஆனால் இந்தப் போட்டியிலேயே நீ தோல்வியுற்றால் என்ன நடக்கும் தெரியுமா?

   என் தலையை இந்த சோழ மண்ணிலே உருழட்டும்.

சபாஷ் தோடை தட்டினான் குலோத்துங்கன்.

ஒரு நாளிகை பொழுதுக்குள் 100 பாடல்கள் நூறு பாடல்களும் சிறிதும் காமரசம் இன்றி நீ இயற்ற வேண்டும். மீண்டும் ஞாபகப் படுத்தும் விதமாக இடையே புகுந்தார் ஒட்டக்கூத்தர்.

அவருடைய முகத்தில் இப்பொழுது சிறிதளவு கலவரம் தெரிய ஆரம்பித்தது. அம்பிகாவதி அவரைப் பார்த்து திரும்பி 100 தானே ஒட்டக்கூத்தரே ஒரு நாழிகைப் பொழுது மிகவும் அதிகம். இப்பொழுதே நான் கவிபாட தொடங்கலாமா?என்றான் அம்பிகாபதி.

மேற்கூறிய இந்த சம்பாஷணைகள் நடந்து கொண்டிருந்த போது மேல் மாடத்தில் நின்று கொண்டிருந்த அமராவதி பையப் பைய யாரும் அறியாத வண்ணம் நகர்ந்து வந்து மேல் மாடத்திலிருந்து கீழே இறங்கி அரசவை மண்டபத்தின் ஒரு ஓரத்திலேயே திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த ஒரு அறையின் உள்ளே வந்து நின்றாள். இப்பொழுது அலைபாயும் மனதுடன் இருந்தாள் அமராவதி.

     அவளுக்கு நிச்சயம் தெரியும் இந்தப் போட்டியில் அம்பிகாவதி நிச்சயமாக வெற்றி பெறுவான்.கொடுத்த வாக்கை மீறுகிறவறல்ல தன் தந்தை. எனவே, தங்கள் திருமணம் இனிதே நடந்து முடியும் இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அந்த நொடிப் பொழுது வந்தவுடன் விரைந்து சென்று அம்பிகாபதியை




ஆரத் தழுவிக்கொள்ள அமராவதி ஆவல் பூண்டாள்.

அதன்பொருட்டே மேல் மாடத்திலிருந்து மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து திரைச்சீலைகள் பின்னே ஒளிந்து கொண்டாள். அங்கு வந்த உடனேயே  செடிப் பெண்களை அழைத்து 100 புஷ்பங்கள் கொண்டு வருமாறு ஆணையிட்டாள். அவர்கள் ஒரு தாம்பாளம் நிறைய 100 மலர்களை எண்ணிக் கொண்டு வந்து அமராவதியின் அருகில் வைத்தனர்.

அம்பிகாவதி பாடல்களை பாட ஆரம்பித்தான். நகரும் மேகக்கூட்டம் நிற்கவும் பறக்கும் பட்சிகள் அசைவின்றி கிடக்கவும் அப்படி ஒரு காண கீதத்தை அவன் இசைக்கலனான். அவன் பாடல்களிலே மெய்மறந்து அந்த அவை கூட்டம் தன்னிலை இழக்க ஆரம்பித்தது. துளியும் விரசம் இன்றி அவ்வளவு அழகான பாடல்களை அவன் பாடித் தள்ளிக் கொண்டிருந்தான்.

ஆஹா என்ன உன் திறமையை அம்பிகாபதி என்று மனதிற்குள்ளேயே அவனை பாராட்டி னார் மன்னர்.

இது வரையில் அவனை வாரி தூற்றிய ஒட்டக்கூத்தரும் தலையசைத்து அந்தப் பாடல்களில் தன்னை இழக்கலானார். ஒட்டு மொத்த அரசபையும் அவனுடைய பாடல்களில் மெய் மறந்து நிற்க, தன் நிலை இழக்காத அமராவதி, அம்பிகாபதி பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு மலர்களாக தாம்பூலத்தில் இருந்து எடுத்து மறுபுறம் வைக்கிறாள். அவ்வாறு அமராவதி பூக்களை மாற்றி வைக்க வைக்க பூக்கள் மெதுவாக வேறிடத்திற்கு மாறின. இறுதியாக கடைசி பூவான நூறாவது பூவை எடுத்து  அடுத்த இடத்திற்கு மாற்றி வைத்தாள் அமராவதி. அது வரை அமைதி காத்த அமராவதி   ஒரு கனமும் தாமதிக்க மனமில்லாமல் திரைச்சீலையில் இருந்து வெளிப்பட்டு துள்ளி ஓடினாள்.

அம்பிகாபதியின் முன்னே  ஓடி வந்த அமராவதி தாவி அணைத்து வாரி அவனை தன்னுள் புதைத்துக் கொண்டாள். ஒட்டுமொத்த அரசவையும் வியந்து பார்த்த வண்ணம் இருக்க அம்பிகாவதி காமரசம் சொட்டும் காம பாடல்களை பொழியலானான்.

சற்றே பருத்த தனமே குலங்கத் தரளவடம்

துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்

நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்

பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே.

என அமராவதியை வருணித்துப் பாடி விடுகின்றான். 

ஆனால் உண்மையில் அம்பிகாவதி நூறு பாடல்களை பாடி முடிக்க வில்லை. உண்மையாக அம்பிகாபதி பாடியது 99 பாடல் மட்டுமே நூறாவது பாடலை அம்பிகாவதி இன்னும் பாட வேண்டியது இருந்தது. 

     அம்பிகாபதி பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து அமராவதி கூட்டி விட்டதனால் இந்தப் பிழை நேர்ந்துவிட்டது.




      காப்புச் செய்யுள் கணக்கில் வராது அல்லவா அப்படி இருக்கும் பொழுது 100 பாடல்கள் கணக்கு கொள்வது எங்கனம் சில வினாடிகள் கழித்தே காதலர் இருவரும் தம் நினைவிற்கு வந்தனர்.

  

   அப்பொழுதுதான்  அம்பிகாபதி தன் நிலை உணரலானான். தான் இழைத்த பிழை என்னவென்பதை உணர்ந்த அம்பிகாபதி அமராவதியை நோக்க, அவளோ இன்னும் பரந்து விரிந்த அவன் மார்பில் சாய்ந்த வண்ணமே இருந்தாள்.

                அம்பிகாபதி தன்னை விட்டு விலகுவதை  கண்டு சுதாரித்து நிமிர்ந்து பார்த்தாள். அப்பொழுதே தன் நிலை உணர்ந்து வெட்கம் பிடுங்கித் தின்ன அவனை விட்டு விலகினாள்.

                 ஒட்டக்கூத்தர் குதித்து எழுந்தார். பார்த்தீர்களா அரசே! என்ன தான் இவன் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொண்டாலும் ஒரு பெண்ணின் அருகாமை இவனின் சாயத்தை வெளுக்க செய்தது. கண்டீர்களா?மன்னா?

                

          இதுவே இவனது உண்மை முகம். இது காறும் இவன் நம்மிடையே நடித்த நடிப்பு அம்பலப்பட்டு விட்டது. அதற்கு இப்போது நாம் இளவரசியாக காரணமாகவும் அமைந்து விட்டார். இதில் இளவரசியின் பங்கும் இருந்தது கண்டு நான் உண்மையிலேயே மகிழ்வடைகிறேன்.

         

           அமராவதி குழம்பினால் என்ன உளறுகிறார் இந்த ஒட்டக்கூத்தர். நான் எந்த வகையில் எதற்க்கு காரணமானேன் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இங்கே என் தந்தை என்னுடைய திருமணத்தை அறிவிப்பார் என்றல்லவா காத்துக்கொண்டு நான் நிற்க்கின்றேன். இந்த ஒட்டக்கூத்தர் என்னென்னவோ கூறுகிறாரே எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

           

கம்பர் இடைபுகுந்து 99 பாடல்களை இடைவெளி இல்லாமல் வெறும் முக்கால் நாளிகை தாண்டிய நிலையில் முடித்து விட்ட என் மகனால் இன்னும் ஒரு பாடலை முடிக்க முடியாதா என்றார்.

   ஆ… இது என்ன சிறுபிள்ளைத்தனம். நம்முடைய சவால் என்ன அதை உணர வேண்டாமா? நூறு பாடல்களைப் பாட வேண்டும் என்பது தானே!. இங்கே சவால். அதை முடிக்காமல் நான் இவ்வளவு நேரத்திற்குள் 99 பாடல்களை முடித்து விட்டேனே என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்.

             என்ன அம்பிகாவதி  99 பாடல்கள் தான் பாடியுள்ளாரா? நான்  எவ்வளவு பெரிய பிசகு செய்து விட்டேன்.

              மன்னர் அம்பிகாவதியை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்பதை எவராலும் கண்டு கொள்ள முடியவில்லை.  அதன் அர்த்தம் ஒருவருக்கும் விளங்கவில்லை.

              அப்பா! நீங்கள் சிறிது பொறுமை கொள்ளுங்கள். ஒட்டக்கூத்தர் சொல்வது நியாயம் தான் இப்பொழுது போட்டியில் நான் தோற்றுவிட்டேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் எனக்கு விடுக்கபட்ட சவாலை நிறைவேற்றுவது ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு இருந்திருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் இந்த விளக்கங்களால் என் தோல்வி வெற்றியாக மாற்றி விடாது. இந்தத் தோல்வியை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

                பிறகு என்ன செய்யப் போகிறாய் அம்பிகாபதி முழங்கினார் குலோத்துங்கன்.

                நாளைய விடியலை இந்த அம்பிகாவதி பார்க்கக்கூடாது. தண்டனைக்கு தயாராக நிற்கிறேன். இரண்டு கைகளையும் விரித்து தன் தோல்வியை ஒப்புக் கொண்டு எந்தவித சலனமும் இல்லாமல் பூமிக்கு இறங்கி வந்த ஒரு தேவதூதன் போல் நின்று கொண்டிருந்தான் அம்பிகாபதி.

                  

ஐயோ இது வேண்டாம் அலறினாள் அமராவதி. அவள் அலர அலர துள்ளத் துடிக்க அங்கிருந்து அரண்மனை சேடிப் பெண்களாலும் மற்றும் அரச பெண்களாலும் இழுத்து செல்லப்பட்டாள்.




அவை களையட்டும் காலையில் தண்டனை நிறைவேறட்டும். உத்தரவிட்டு விட்டு சிம்மாசனத்தில் இருந்து எழுந்தான் குலோத்துங்கன்.

   அந்த ஓரிரவு ஓராயிரம் யுகங்களாக கறைந்தது அமராவதிக்கு. அழுது அழுது கண்களில் நீர் வற்றி இருந்தது. தன் கைகளால் தன் முகத்தில் தானே அரைந்து கொண்டதனால் முகம் சிவந்து காணப்பட்டன. தலை கலைந்து அலங்கோலமாக நின்றாள். பொழுது விடுந்து வரும் பொழுது வெறி கொண்டவள் போல் காணப்பட்டாள்.

     இரவு முழுவதும் அமராவதியை அடக்கி வைப்பதற்கு அரண்மனைப் பெண்டிர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. பொழுது புலர்ந்ததும் கொலைக்களம் நோக்கி விரைந்து ஓடலனாள் அமராவதி.

        அங்கே அவள் செல்வதற்குள் எல்லாம் முடிந்து போயிருந்தது. இறந்து போயிருந்த அம்பிகாபதியின் உடலின் மேல் தடாலென விழுந்தாள். விழுந்த வேகத்தில் தன் உயிர் துறந்தாள்.

                   அம்பிகாவதி !!!அமராவதி!!! இருவரும் காவியம் ஆயினர்.

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!