pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 3

3

காற்றைப்போல் வெண்புகை கலந்து இருக்கிறது என் வெளி ,

வானவிற்களைத்தான் அங்கே 

விரும்புகிறேன் 

ஆனால் …

பெரும்பாலும் கரு நிலவுகள் தான் அங்கே ,

உன் சாயல் கொண்டிருக்கும் அவற்றில் பாட்டிகள் வடை சுடுவதே இல்லை.




அமிர்தக்கொடியின் தண்டுகளை உடைத்து மண்பாண்ட நீரில் போட்டு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைத்தாள் தேவயானி. நீர் நன்றாக கொதித்து பச்சை நிறத்திற்கு மாறியதும் அதனை மெல்லிய வெள்ளைத் துணியில் வடிகட்டி இன்னொரு மண்கலயத்தில் எடுத்துக் கொண்டு , சிறிது நேரம் வெளிக்காற்றில் வைத்து ஆற வைத்தாள். பின்பு அதனை ஒரு பித்தளை டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு நான்காம் எண் குடிலை நோக்கி நடந்தாள்.

அவர்களது ரிசார்ட்டில் மொத்தம் 12 குடில்கள் இருந்தன. அவை வரிசையாக வகுப்பறைகள் போல் அமைந்திருக்காது.

சங்கரனுக்கு இருந்த நிலத்தில் பெரும் பகுதியை சிறு குன்று போன்ற மலைதான் அடைத்துக் கொண்டிருந்தது .சமவெளிகளை தோட்டம் போல் உருவாக்கிய சங்கரன் தங்குவதற்கான குடில்களை அந்த சிறுகுன்றை செதுக்கி ஆங்காங்கே உண்டாக்கி இருந்தார் .ஒவ்வொரு குடிலும் சிறு மேடுகள் போல் மேலே ஏறி செல்லுமாறு அமைக்கப்பட்டிருந்தது.




அவ்வாறு ஏறிப்போக உதவும் மேடுகளை கூட படிகளாக செதுக்காமல் இயற்கையான மேடுகளாகவே விட்டிருந்தார் .அத்தோடு குடில்கள் மண் சுவர்களும் , புற்கள்  வேய்ந்த கூரைகளுமாக அந்தக் கால பர்ணசாலை போன்ற தோற்றத்திலேயே இருந்தன .இயற்கையோடு இணைந்து தனது தங்கும் விடுதி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சங்கரன் செய்திருந்த ஏற்பாடுகள் இவை.

இப்போது சுந்தரேசன் பொறுப்பிற்கு வந்த பிறகு அப்பாவின் இந்த இயற்கை தோற்றத்தை மாற்றாமல் இதிலேயே சிறிது நாகரீகத்தை புகுத்தினான். அதாவது குடிலுக்கு உள்ளே டிவி பிரிட்ஜ் எலக்ட்ரிக் கெட்டில் ஹீட்டர் போன்ற நவீன மின்சாதனங்களை கொண்டுவந்து வைத்தான் .ஆக வெளியிலிருந்து அக்கால பர்ணசாலை போல் தோற்றமளிக்கும் குடில்கள் உள்ளே சகலவிதமான நாகரீக அம்சங்களும் நிறைந்த நவீன தங்கும் இடங்களாக இருந்தன.




உண்மையைச் சொல்லப்போனால் இதுபோல பழமையும் புதுமையும் கலந்து இருந்த தோற்றமே இந்த தங்கும் விடுதியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது .மேட்டில் ஏறுவதற்கு வசதியாக ஓரமாக நட்டி வைக்கப்பட்டிருந்த மூங்கில் கம்புகளை பிடித்தபடி கையில் டிரேயோடு நான்காம் எண் குடிசைக்கு போனாள் தேவயானி.

” குட் மார்னிங் சார் .காய்ச்சல் இப்போது எப்படி இருக்கிறது  ? ” அப்போதுதான் மலர்ந்த அந்த பச்சை மலை வாசனை பூப்போல நின்று கொண்டிருந்த தேவயானியை பார்த்ததும் தனது உடல் பலவீனம் பாதியாக குறைந்தது போன்றே உணர்ந்தார் விஸ்வநாதன் .அவர் திருச்சியைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர் .கடந்த நான்கு வருடங்களாக வருடம் தவறாமல் குடும்பத்தோடு சீசனில் இங்கே வந்து விடுவார்.

” இதோ இப்படி காலங்காத்தாலே பூ ஒன்று வந்து நின்று குட்மார்னிங் சொன்னால் அதற்குப் பிறகும் எனக்கு காய்ச்சல் இருக்குமா என்ன. ? ” வேடிக்கையாக பேசியபடி படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தார்.

” நைட்  புல்லா  ஹெவியான ஃபீவர் தேவயானி .மாமா அனத்திக் கொண்டே இருந்தார் .பிறகு மாத்திரை கொடுத்து தான் தூங்க வைத்தேன் ”  என்றாள சுபா விஸ்வநாதனின் மருமகள்.

” என்ன அக்கா மாத்திரை கொடுத்தீர்களா  ? ” தேவயானி கொஞ்சம் கோபமாக கேட்டாள். இந்த மலைப் பிரதேசத்திற்கு வந்து இருக்கும் சில நாட்களாவது மாத்திரை சிரப்  என்று ஆங்கில மருத்துவத்தை கைவிட்டு இங்கிருக்கும் இயற்கை மூலிகைகளோடு வாழ்ந்து விட்டு செல்லுங்கள் என்று அவள் இங்கு வரும் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியபடி இருப்பாள்.

” எனக்கு வேறு வழி தெரியவில்லை தேவயானி.  மாமாவிற்கு உடம்பு மிகவும் முடியவில்லை .நான் என்ன செய்வது ? ” 

” இதோ இந்த கசாயத்தை குடிங்க சார் .இதற்கு பிறகு உங்களுக்கு காய்ச்சல் எப்படி வருகிறது என்று நான் பார்க்கிறேன் ” தேவயானி நீட்டிய பித்தளை தம்ளரை கொஞ்சம் பயத்துடன் எட்டிப் பார்த்தார் விஸ்வநாதன்.

” கசாயமா …?கசக்குமே …” 

” மருந்து என்றால் கசக்கத்தான் செய்யும் .உடம்பு சரியாக வேண்டாமா ?  என்ன சார் சின்ன பிள்ளை மாதிரி கேட்கிறீர்கள்  ? ” தேவயானியின் முகம் தாய்மை மிளிர்ந்த்து அக்கணம் .அத் தாய்மையை பரவசத்தோடு விழி விரித்து அனுபவித்த விஸ்வநாதன் முகத்தைச் சுளித்தபடி கஷ்டப்பட்டு அந்த கசாயத்தை குடித்து முடித்தார்.

” இது என்ன மருந்து தேவயானி ? “சுபா கேட்டாள்.

” இதன் பெயர் அமிர்தக் கொடி சுபாக்கா . காய்ச்சலுக்கு சரியான மருந்து . இன்று இரவு சாருக்கு காய்ச்சல்  வராது பாருங்களேன் ” சவால் போல் சொன்னாள்.

” அம்மா…”  என்று கத்தியபடி உள்ளே வந்தான் சுபாவின் மகன் அபிநவ்.

”  கீழே விழுந்துட்டேன். ”  ரத்தம் வந்த தனது கால் முட்டியை காண்பித்தான் .




” அய்யோ ஒரு நிமிடம் ஒரு இடத்தில் சும்மா இருக்கிறாயா …? ” மகனை திட்டியபடி  தனது ஹேண்ட் பேக்கில் இருந்து ஆயின்மென்டை எடுத்தாள் சுபா.

” அக்கா இந்த இயற்கையான இடத்தில் இருந்துகொண்டு ஆயின்மென்ட்டை எடுக்கிறீர்களே  ? ” சுபாவை தடுத்தாள் தேவயானி.

” இதோ வடிந்து கொண்டிருக்கிறதே இந்த ரத்தத்திற்கு என்ன செய்யச் சொல்கிறாய்  ? ” மகனின் காயத்தில் சுபா அடைந்திருந்த பதட்டம் தெரிந்தது.

” ஒரு நிமிடம் அக்கா .”  சொல்லிவிட்டு தங்கள் இருப்பிடம் போய் திரும்பி வந்த தேவயானி கையில் அமிர்த கொடியின் இலைகளை வைத்து இருந்தாள .கூடவே அகல் விளக்கு ஒன்று.

”  இந்த காயத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்.”  சொல்லிவிட்டு சிறிய மண் பானை ஒன்றில் அகல் விளக்கை எண்ணெய் விட்டு திரிபோட்டு ஏற்றி வைத்து பானைக்குள் குவிந்திருந்த அதன் வெப்பத்தில் அமிர்தம் கொடியின் இலையை காட்டினாள் .கதகதப்பான வெப்ப  நிலைக்கு வந்தவுடன் அதனை அபினவின் காயத்தின் மேல் ஒட்டினாள் . ப்ளாஸ்திரி  போல் காயத்தின் மேல் ஒட்டிக்கொண்டது அந்த இலை .

” இன்று ஒரு நாள் இருக்கட்டும் அக்கா .நாளை காயம்  ,இருக்கும் இடம் தெரியாமல் ஆறிவிடும் பாருங்கள் ” உறுதியாகச் சொன்னாள் .




” இந்த மூலிகை காய்ச்சலுக்கும் கேட்கும் காயத்திற்கும் போடலாமா தோவயானி ? ” சுபா ஆச்சரியமாகக் கேட்டாள்

” சுகருக்கு கூட இந்த கொடியின் தண்டுகளை பக்குவப்படுத்தி சாப்பிடலாம் அக்கா .ஆனால் அதற்கு வேப்ப மரத்தின் மீது இந்த கொடி படர்ந்து இருக்க வேண்டும் ,வேம்பின் குணத்தை  தனக்குள் வைத்திருக்கும் அமிர்தக்கொடி தண்டுகள்  சுகருக்கு நல்ல மருந்து .விசுவநாதன் சாருக்காக அதுபோன்ற கொடியைத்தான் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை ” 

” ஏதோ சொல்கிறாய். நாங்களும் நம்புகிறோம் ” சுபா சிரித்தாள்.

” உங்கள் மாமனாரின் காய்ச்சலையும் , அபினவின்  காயத்தையும் நாளை  பார்த்துவிட்டு பிறகு சொல்லுங்கள் ” புன்னகைத்துவிட்டு தேவயானி வெளியேறினாள்.

” அற்புதமான பெண் இல்லையாம்மா  ? ” விஸ்வநாதன் மருமகளிடம் தேவயானியை சிலாகித்துக் கொண்டார்.

” ம் .மிகவும் அறிவான பெண்ணும் கூட 

. ஆனால் அவளது அறிவையும் திறமையையும் இந்த காட்டுக்குள் கிடந்து வீண்டித்துக் கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது ” சுபா குறைபட்டாள் .




அவள் சொன்னதிலும் உண்மை இருக்கிறது . கல்லூரியில் எப்போதும்  முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறவள் தேவயானி .அவளது ஆர்வம் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பதே .டிகிரி முடித்ததும் அதற்கான ஏற்பாடுகளில் அவள் இருக்க சுந்தரேசன் தங்கையை தனது தொழிலுக்குள்  இழுத்துக் கொண்டான். விரிந்து கொண்டே சென்ற அவனது தொழிலுக்கு உதவ அதிகமான ஆட்கள் தேவைப்பட தங்கையை படிக்க வைப்பதாக கூறிக்கொண்டே இங்கேயே தங்க வைத்து விட்டான்.

இதில் கொஞ்சம் குறைபட்ட சொர்ணத்தை கலெக்டர்கெல்லாம் காலேஜ் போய் படிக்க வேண்டியது இல்லை அம்மா .அவ்வப்போது    ஸ்பெஷல் வகுப்பிற்கு போனால்   போதும் . நம் தேவயானி மிகவும் அறிவான பெண்.  அவள் வீட்டில் இருந்தே கூட எளிதாக படித்து விடுவாள். வேலை பார்த்துக்கொண்டே படிப்பது போன்று தானே இதுவும். நமக்கும் இங்கே கவனிப்பதற்கு ஆள் வேண்டியிருக்கிறதே ” 

என்று ஏதேதோ பேசி சமாளித்து விட்டான்

இப்போது அவர்களின் தம்பி அரவிந்த் மட்டும் மெடிக்கல்  படித்துக் கொண்டிருக்க தேவயானியும் அண்ணனுக்கு உதவியாக பச்சை மலையிலேயே தங்கி விட்டாள் .அவர்கள் பசுமை பசுமைக்குடிலும் இந்த கானகமும் தேவயானிக்கு மிகவும் பிடித்துப் போய்விட இங்கிருந்து வேறு இடம் செல்லும் எண்ணம் அவளுக்கும் வரவில்லை.

அவர்களது பசுமை குடிலுக்கு வரும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருடாவருடம் அங்கே வருபவர்கள் .அப்படி வருபவர்களுக்கு உள்ளார்ந்த உணர்வோடு சுந்தரேசனின் குடும்பமே சமைத்துப் போட்டு அன்பாக பார்த்துக் கொள்வது தொழிலையும் தாண்டி அவர்களுக்கிடையே ஒரு வகை பிரியம் வளர்ந்து விட்டிருந்தது .இதனால் ஒருவர் குடும்ப நிலையை மற்றவர் எளிதாக புரிந்து கொள்ள , நல்லவை அல்லவைகளை  ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள என ஒட்டுறவோடு இருந்தனர்.

அப்படித்தான் தேவயானியை பற்றி நன்கு அறிந்த சுபாவிற்கு அவள் தனது எதிர்காலத்தை இந்த மலைப் பகுதிக்குள் கழிப்பது முட்டாள்தனம் என்று தோன்றியது. இதனை அவள் அடிக்கடி தேவயானியிடமே மறைமுகமாக தெரிவித்திருந்தாலும் தேவயானி ஒரு புன்னகையோடு அதனை கடந்து விடுவாள். பிழைக்கத் தெரியாத பெண் என்ற பட்டத்தை சுபா தன் மனதிற்குள் தேவயானிக்கு வழங்கி வைத்திருந்தாள்.

” அவள் அம்மா அண்ணன் தம்பி என்று மிகவும் ரசித்தே இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இதில் நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறதும்மா  ? ” விசுவநாதன் சுபாவிடம் பெருமூச்சு ஒன்றுடன் பேசினார்.




” என்னவோ தேவயானி போன்ற பெண்கள் இந்தக்காலத்தில் அபூர்வம் மாமா .அவளுக்கான இடம் இதுவல்ல என்பதுதான் என் எண்ணம் .அவள் மகாராணியாக சிம்மாசனத்தில் அமர

 வேண்டியவள் .அதற்கான தகுதியும் திறமையும் அவளுக்கு இருக்கிறது. அந்த

சூழ்நிலை அவளுக்கு அமையுமாறு நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்  ” உணர்ந்து பேசினாள் சுபா.

அதே நேரத்தில் பசுமை குடிலில் வாயிலைத் தாண்டி உள்ளே வந்து ப்ரேக்கிட்டு நின்றது அந்த உயர்ரக வெளிநாட்டு கார்.  அதனை திறந்து கொண்டு வெளியே இறங்கினாள் மனோரஞ்சிதம்.

” சொர்ணம் எப்படி இருக்கிறாய்  ?” புன்னகையோடு கேட்ட மனோரஞ்சிதம்  மாலை நேர சூரியக்கதிர்  காது கம்மல் வைரத்தை ஊடுருவி வண்ண ஒளி பிம்பங்களை இரைக்க , பிரகாசத்தை தன்னைச் சுற்றி அள்ளி தெளித்தவாறு நின்றிருந்த கோலம் வணங்கத் தகுந்த அம்மன் போலிருந்தது

What’s your Reaction?
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!