Cinema Entertainment விமர்சனம்

‘ரூபன்’ திரைப்பட விமர்சனம்

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் தேன் எடுப்பதை வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்தைச் சார்ந்த தம்பதியான நாயகன் விஜய் பிரசாத், நாயகி காயத்ரி ரெமாவுக்கு குழந்தை இல்லாததால் ஊர் மக்கள் அவர்களை அவமதிப்பதோடு, அவர்களை ஒதுக்கியும் வைக்கிறார்கள். இதற்கிடையே தேன் எடுப்பதற்காக நடுகாட்டுக்கு செல்லும் நாயகன் விஜய் பிரசாத், அங்கு ஒரு பச்சிளம் குழந்தையை பார்க்கிறார். நடுகாட்டில் குழந்தை எப்படி வந்தது!, என்று ஆச்சரியப்படும், அவர் அந்த குழந்தையை வளர்க்கிறார்.

ரூபன்' – விமர்சனம்! – Chennai Editor




இதற்கிடையே, யானை, புலி போன்ற விலங்குகளை வேட்டையாடி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வில்லன் கோஷ்ட்டியினரின் குற்ற செயல்கள் பற்றி அறியும் நாயகன், அவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், வில்லன் கோஷ்டியினர் தாங்கள் செய்யும் தவறுகளை நாயகன் மீது போட, ஊர் மக்களும் விஜய் பிரசாத் தான் இத்தகைய குற்றங்களை செய்வதாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலைப்போடும் காலம் வர, ஊர்மக்களுடன் நாயகனும் சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார். ஆனால், ஊர் மக்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, அவரும் அவரது மகனும் மாலை போட்டு தனியாக சபரிமலை செல்ல முடிவு செய்கிறார்கள்.

இந்த சமயத்தில், காட்டுக்குள் சிலர் மர்மமான முறையில் இறந்துக்கிடக்க, அவர்களை புலி தான் கொன்றுவிட்டதாக நம்பும் வனத்துறையினர், ஊருக்குள் புலி நடமாட்டம் இருப்பதாக கூறி, கிராம மக்களின் சபரி மலை பயணத்திற்கு தடை விதிக்கிறார்கள். ஆனால், புலி இருப்பதை மறுக்கும் கிராம மக்கள், இந்த மர்ம மரணங்களுக்கு நாயகன் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கிராம மக்களின் குற்றச்சாட்டில் இருந்து நாயகன் மீண்டாரா?, மர்ம மரணங்களின் பின்னணி என்ன? என்பதை ஆன்மீகம், ஃபேண்டஸி, கமர்ஷியல் என அனைத்து அம்சங்களையும் சேர்த்து சொல்வது தான் ‘ரூபன்’.

கோடைக்கால விடுமுறை என்றாலே சிறுவர்களுக்கு ஏற்றமாதிரியான படங்களை வெளியிடுவதை ஹாலிவுட் திரையுலம் மட்டுமே சரியாக செய்து வருகிறது. தமிழ் சினிமாவில் அத்தகைய படங்கள் வருவதில்லை என்ற ஏக்கம் பலருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக உருவாகியிருக்கிறது இந்த ‘ரூபன்’.

இது ஆன்மீக படமாக மட்டும் இன்றி, ஆன்மீக சாயல் கொண்ட அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய கமர்ஷியல் ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. குறிப்பாக வனத்தை சுற்றி நடக்கும் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையோடும், சஸ்பென்ஸான காட்சிகளோடும் சொல்லியிருக்கும் இயக்குநர் ஐயப்பன், க்ளைமாக்ஸ் காட்சியில் ஆன்மீக விசயம் ஒன்றை வைத்து அசத்தியிருக்கிறார். எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்திருக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சி சுமார் 20 நிமிடங்கள் வருகிறது, அந்த 20 நிமிடங்கள் மெய்சிலிர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.




நாயகனாக நடித்திருக்கும் விஜய் பிரசாத் ஏற்கனவே ஒரு ஆன்மீகப்படத்தில் நடித்திருப்பதால், அவர் சபரிமலைக்கு மாலைபோட்டு ஐயப்ப கடவுளை பிரார்த்திக்கும் இடங்களில் இயல்பாக நடித்து கவனம் ஈர்ப்பது மட்டும் இன்றி ஆக்‌ஷன் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார். குழந்தையின்மை பிரச்சனையால் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்படும் காட்சிகளில் அவர் கலங்குவது, ரசிகர்களையும் கலங்க வைத்துவிடுகிறது.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சார்லியின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. கஞ்சா கருப்பு உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் கேமரா பசுமையின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்துபடைத்திருப்பதோடு, படம் பார்ப்பவர்களுக்கும் வனத்தில் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கிறார்.

அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதோடு, கிராபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்டத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஐயப்பன், ஒரு சாகசப் பயணத்தை கமர்ஷியலாகவும், ஃபேண்டஸியாகவும் சொல்லியிருப்பதோடு, அதில் சிறிதளவு ஆன்மீகத்தையும் சேர்த்து சொல்லி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கான படமாக கொடுத்திருக்கிறார்.

நாயகனுக்கு வனத்தில் கிடைக்கும் குழந்தையின் வளர்ச்சி, அந்த குழந்தை மூலம் கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குநர் வைத்த திருப்பம் மற்றும் அதன் மூலம் சொல்லியிருக்கும் விஸ்வரூப விசயம் போன்றவை ரசிகர்களை எழுந்து நின்று கைதட்ட வைக்கும்.

மொத்தத்தில் இந்த ‘ரூபன்’ விஸ்வரூப வெற்றி பெறுவான்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!