gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/கௌரவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர்

நான் மகாபாரதக் கதையை ஓர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் காண்பதுண்டு.

இன்று நம்மில் பலர், “நம்ம நாடு உருப்படாம போனதுக்கு நம்ம அரசியல்வாதிகள் தான் சார் காரணம்” என்று சொல்கிறார்கள் அல்லவா? இன்றாவது ஊழல் அதிகம் செய்த ஓர் அரசியல் வாதியை அல்லது கட்சியை தேர்தலில் வீட்டுக்கனுப்பிவிட்டு ஊழலில் குறைந்த மற்றொரு அரசியல் வாதியை அல்லது கட்சியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த நம் ஜன நாயகத்தில் வழி இருக்கிறது.




ஆனால் மகாபாரதம் நடந்த அந்த துவாபர யுகத்திலோ?

அந்தக் கால கட்டத்தில் இருந்தது மன்னர் ஆட்சி மட்டுமே. சத்திரியர் குலத்தினர் மட்டுமே நாட்டை ஆளும் உரிமை படைத்தவர்களாக இருந்தார்கள். ஒரு மன்னரின் மூத்த ஆண் வாரிசே பெரும்பாலும் அடுத்த பட்டத்துக்கு வருவார். மக்களுக்கு அரசரைத் தேர்ந்தெடுக்கவோ, மோசமான அரசரை மாற்றவோ எந்த ஒரு வழியும் இல்லை.

மகாபாரதம் நடந்த அந்த காலகட்டத்தில் பாரத கண்டத்தின் பல ராஜ்ஜியங்களில் மன்னராட்சி என்பது மிகவும் தரம் தாழ்ந்த பல மன்னர்களாலேயே நடத்தப்பட்டது என்பது ஓர் எதார்த்தமாக இருந்திருக்கக் கூடும். பொதுவே ‘மன்னர் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்று சொல்வது போல், அதர்மிகள் மன்னர்களாக அமர்ந்து ஆள்கையில் சாமானிய மக்களிடையேயும் அதர்மம் மிகப் பரவலாக இருக்கும் என்பது ஏற்கக் கூடிய உண்மை அல்லவா?

இதை நாம் மறை முகமாகப் புரிந்து கொள்ள முடியும். எப்படி?

கிருஷ்ணாவதாரம் நிகழ்வதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? பூமா தேவி மகா விஷ்ணுவிடம் செய்த பிரார்த்தனை. “பூமியில் பூபாரம் அதிகமாகி விட்டது; அயோக்கியர்களும், கெடுமதியாளர்க்ளும் அசுரத் தன்மை கொண்டவர்களும் கூடிவிட்டதால் அவர்கள் பாரம் தாங்காமல் நான் தவிக்கிறேன்; தாங்கள் அவதரித்து, அவர்களை அழித்து என் பாரத்தைக் குறைக்க வேண்டும்” என்று பூமா தேவி செய்த பிரார்த்தனைக்கு மகா விஷ்ணு செவி சாய்த்ததாலேயே கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது.

கிருஷ்ணர் அவதரித்த விருஷ்ணி குலத்திலேயே என்ன நிலைமை? கம்சன், சிசுபாலன், ருக்மி, ஜராசந்தன் போன்ற பல கொடியவர்கள் மன்னர்களாக இருந்தார்கள்.

மோசமான / கொடிய மன்னர்களின் பிள்ளைகளும் மோசமானவர்களாகவே/ கொடியவர்களாகவே இருக்க வாய்ப்பு அதிகம்.

பின் மன்னர்களின் தரத்தை உயர்த்த என்ன செய்வது?

இந்த நிலையில் தான் அஸ்தினாபுரத்தில் ஓர் “புதிய உயர் நிலை சந்ததியை” மன்னர் பரம்பரையில் உருவாக்கிப் பார்க்கும் ஓர் ‘பரிசோதனை முயற்சி’ நிகழ்ந்தது என்பதாக என் கண்ணோட்டம் இருக்கிறது!

அந்தக் கால கட்டத்தில் வேதக் கல்வி கற்று, தவம் செய்து உயரிய ஆன்மீக நிலை எய்திய பிராமண ரிஷிகள் பலர் இருந்தனர். அவர்கள் அரசாட்சியோ, தொழில்/ வியாபாரமோ செய்பவர்கள் அல்ல. (வருணாசிரமப் படி பிராமணர்கள் சத்திரிய, வைசிய, சூத்திரர் செயல்களை ஏற்றெடுக்க முடியாது). ஆனாலும் அவர்கள் தம் தவ வலிமையால், ஒழுக்கத்தால், சாத்திர ஞானத்தால், மெய்ஞானத்தால், சித்திகளால் மேம்பட்டவர்களாக இருந்தார்கள்.

அப்படி ஓர் உயர் நிலையில் பிராமணர்கள் ஒரு பக்கம் இருந்தார்கள் என்றால், அவர்களையும் விட மேம்பட்ட நிலையில் வானோர்களாகிய தேவர்கள் இருந்தார்கள். அந்தக் கால கட்டத்தில் பூமியில் வாழ்வோர்க்கும் தேவர்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புகளும் உறவாடலும், சந்திப்புகளும், பரஸ்பர உதவிகளும் நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன என்பது ராமாயண, மகாபாரதக் கதைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

(ஒரு விதத்தில் அறிவியல் பூர்வமாக இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நம்மை விட எவ்வளவோ அறிவில், உணர்வில், சக்தியில் மேம்பட்டிருக்கும் வேற்று கிரக வாசிகளோடு நமக்குத் தொடர்பு இருந்தால் எப்படி இருக்கும்? அதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்!)




அப்படி ஒரு ‘மன்னர் பரம்பரைத் தர மேம்பாட்டுப் பரிசோதனை’ அஸ்தினாபுரத்தில் நடந்தது (இது என் கண்ணோட்டம்). அதை முன்னின்று நடத்தியவர் சத்தியவதி. அதற்கு முழுவதும் தம் சம்மதத்தைத் தந்தவர் பீஷ்மர்.

சந்தனுவுக்கு சத்தியவதியை மணமுடித்து வைப்பதற்காக (சந்தனு-கங்காதேவியின் மகனாகிய) பீஷ்மர் தாம் அரசுப் பதவியைத் துறப்பதாகவும், பிரம்மசரிய வாழ்க்கையை மேற்கொள்வதாகவும் சபதம் எடுத்தது தெரிந்ததே.

சத்தியவதிக்குப் பிறந்த சித்திராங்கதன், விசித்திரவீரியன் இருவருமே மாண்ட பிறகு, ஆட்சி பீடத்துக்கு வர வேறு வாரிசு இல்லாத நிலை. அப்போது தான் சத்தியவதி, தனக்கும் ரிஷி பராசரருக்கும் ஆதி காலத்தில் பிறந்த வியாச முனிவரை அழைத்து, தமது மருமகள்களான அம்பிகை, அம்பாலிகையுடன் உடல் சேர்க்கை செய்து அவர்களுக்குப் பிள்ளைப் பேறைத் தர வேண்டுகிறாள்.

தயக்கத்துடன் சம்மதிக்கிறார் வியாசர். அம்பிகை அம்பாலிகை இருவருமே விருப்பமே இன்றி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கின்றனர்.

அப்படிப் பிறந்தவர்கள் தாம் திருதிராட்டிரரும், பாண்டுவும்.

அதில் திருதிராட்டிரர் குருடர்; பாண்டுவோ வெண் குஷ்டம் உள்ளவராய் வெளுத்துப் பிறந்தவர். மூத்தவராயினும் குருடர் ஆள்வது சரிப்படாது என்பதால் இளையவரான பாண்டு அரசாட்சி செய்தார்.

ஆக, மெய்யான பாரம்பரியச் சத்திரியத் தந்தை வழி பிறந்தவர்கள் அல்லர் திருதராட்டிரரும் பாண்டுவும்!

பிராமணக் கலப்பினால் பிறந்தர்வர்கள் ஆயினும் தாய் வழி உரிமையில் அவர்கள் மன்னர்களாக ஆக அக்கால சாத்திரம் அனுமதித்தது. அந்தக் கலப்பும் பெரிதும் வெற்றி பெறவில்லை என்பதே உண்மை!

குருடர் திருதராட்டிரர் நல்ல சாத்திர ஞானம் உள்ளவராக இருந்தாலும், தர்மம், வீரியம், நேர்மை இவற்றைக் கைக்கொள்வதில் உறுதியில்லாத, பலவீன மனதினராகவே இருந்தார்.

அவர் பெற்ற துரியோதனாதியரோ, பரம அயோக்கியர்களாக, அதர்மிகளாக, கட்டுப்பாடுகள் அற்றவர்களாக இருந்தார்கள்; வளர்ந்தார்கள். ஆக, சத்தியவதியின் ‘பரிசோதனை’ தோல்வியில் தான் முடிந்தது!

பாண்டு வீரராக இருந்தும், அவர் பெற்ற ஒரு சாபத்தின் தாக்கத்தால் (ஒரு பிராமணரைப் போன்று) அரச பதவியில் நாட்டம் அற்றுத் தவ வாழ்க்கை மேற்கொள்ளத் தம் இரு மனைவியிரான குந்தி, மாத்ரியுடன் வனம் சென்று விட்டார்.

பாண்டுவுக்கு வாரிசு இல்லாமல் மரித்தால் தாம் மரித்தபின் தமது ஜீவனின் கதி என்ன ஆகும் என்று கவலை வாட்டியது. (கவனிக்க: இதுவும் ஓர் தீவிர பிராமணத் தாக்கம்!) ஆனால் அவரால் தம் சாபத்தின் காரணமாக மனைவிகளுடன் உடலுறவு கொள்ள முடியாது. (கொண்டால் அவர் மரிப்பார் என்பது சாபம்).

அவர் வற்புறுத்தலின் பேரில் தான் குந்தி தமக்கு துர்வாசரிடமிருந்து கிட்டிய மந்திரத்தை உபயோகித்து வானுலக தேவர்களான தர்ம தேவன், வாயு தேவன், மற்றும் இந்திரனை அழைத்து அவர்கள் மூலம் முறையே யுதிட்டிரன், வீமன், அர்ச்சுனனைப் பெற்றெடுத்தாள்.




அவள் மாத்ரிக்கு அம்மந்திரட்த்தைச் சொல்லித் தந்தன் மூலம் மாத்ரி அசுவினி தேவதைகள் மூலம் நகுல, சகாதேவர்களைப் பெற்றெடுத்தாள்.

இதுதான் அடுத்த ‘தர மேம்பாட்டு’ சோதனை! இந்தச் சோதனை வெற்றி பெற்றது. பாண்டுவின் மனைவியர் தேவர்கள் மூலம் பெற்றெடுத்த பஞ்சபாண்டவர்கள் அறிவு, தருமம், ஆற்றல் இவற்றில் மிகவும் மேம்பட்டு விளங்கினார்கள். இவர்கள் துரியோதனாதியரை விடப் பன்மடங்கு மேம்பட்டவர்களாக இருந்தார்கள்.

எப்படி திருதராட்டிரரும், பாண்டுவும் தந்தை வழி அல்லாது தாய் வழி உரிமையில் நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றார்களோ, அதே போலவேதான் பஞ்சபாண்டவரும் தாய்வழி வாரிசு உரிமையிலேயே அரசுக் கட்டிலில் அமரும் தகுதியைப் பெற்றார்கள்.

ஆக தந்தை வழி வாரிசு என்கிற ஓர் வாதமே இங்கு எடுபடவில்லை. காரணம், அக்கால சாத்திரங்கள் இதனை அனுமதித்திருக்கின்றன.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போர் தருமத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடந்த போர். அதில் பகவான் கிருஷ்ணர் தருமத்தின் பக்கம் இருந்தார். அவர் இருந்த அணியே வெற்றி பெற்றது. ஆக தருமம் வென்றது. அது பாண்டவர் பக்கம் இருந்தது.




கவனிக்க

மகா பாரதப் போர் மூலம் கிருஷ்ணர் கௌரவர் குலத்தை மட்டும் நாசம் செய்ய வில்லை. அனேகமாக இரு அணிக்கும் ஆதரவாகத் திரண்டிருந்த எத்தனை எத்தனையோ அரசர்களும் அவர்கள் படைகளும் முற்றிலுமாக அழிந்தனர். ஆக, இப்போரின் மூலம் கிருஷ்ணர் தாம் பூமாதேவிக்கு வாக்கு தந்தபடி பூபாரத்தைக் குறைத்தார்!

அடுத்த 40 ஆண்டுகளில் கிருஷ்ணர் தமது சொந்தக் குலத்து அரசர்கள் அத்தனை பேரையும் கலகத்தில் அழித்தார்; அவரது துவாரகையைக் கடல் கொண்டது. அவர் தம் அவதாரப் பணியை முடித்துக்கொண்டு ஒரு சாமானிய வேடன் இட்ட அம்பிற்குத் தம் உடலை உகுத்து வைகுண்டம் திரும்பினார்.

இன்னும் கவனிக்க

அரச வாரிசுகளின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் (என் கண்ணோட்டத்தில்) நடந்த ஓர் தவறு, பாண்டவர் ஐவரும் ஓரே மனைவியை மணந்தது. சமுதாய நடைமுறையை மீறி நடந்து கொள்ளும் ஓர் பலவீனம் பாண்டவர்களுக்கும் கூட இருந்தது என்பதற்கு இது ஒரு அடையாளம் என்பது என் தனிப்பட்ட கருத்து. துரௌபதி மூலம் பாண்டவர்களுக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களையும் கிருஷ்ணர் காப்பாற்ற வில்லை! மகா பாரதப் போர் முடிந்த பின் அசுவத்தாமன் நிகழ்த்திய கோரக் கொலைகளில் இந்த ஐந்து வாரிசுகளும் கொல்லப்பட்டனர்!

ஆனால், அர்சுனனின் மகனான அபிமன்யுவின் மனைவி உத்தரையில் இருந்த கர்ப்பத்தை மட்டும் கிருஷ்ணர் காப்பாற்றித் தந்தார். அப்படிப் பிறந்த பரிக்ஷித் தான் தருமர் காலத்துக்குப் பின் அஸ்தினாபுரத்து அரியணையில் அமர்ந்தது! ஆக, தேவலோக அரசனான இந்திரனின் கொள்ளுப்பேரன் தான் பிற்காலத்தில் அஸ்தினாபுரத்தை ஆண்டது எனலாமல்லவா? ஆகவே ‘தர மேம்பாடு’ ஒரு வகையில் நடந்தது எனலாம் அல்லவா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!