gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/தொட்டியச்சி அம்மன்

கரூர் முக்கிய சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் பக்கம் நடந்து சென்றால்தான் மணவாடி கிராமம் வரும். அப்படி கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது பக்கத்தில் ஒரு ஒத்தயடி பாதை பிரிகிறது. அந்த பாதையில் நடந்து சென்றால் ஆள் அரவமற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாய் விரிந்து நிற்கும் வேப்பம்மரத்தின் அடியில் மண்ணில் சொறுகப்பட்டிருக்கும் வேல்கம்புகளும், செங்குத்தான  நான்கு பெரிய கற்களும் தெரிகின்றன. அந்த கற்கள் திருவிழா காலங்களி்ல் குடில் அமைக்க வைக்கப்பட்டவை. அந்த நான்கு கற்களுக்கும் மத்தியில் முக்கோண வடிவம் என்று கணிக்கும்படியான கற்கள் வரிசையாக இருக்கின்றன. அவை கன்னிமார்கள். வலது புறம் இருப்பது பெரியசாமி, இடது புறம் இருப்பது கருப்புசாமி, அதோ அதுதான் தொட்டியச்சி என்றார் உடன் வந்த உறவினர். சரியான களமின்மை, இதுதான் நாட்டார் தெய்வங்களின் பலமும், பலவீனமும்.




Thottichi Amman Thiru Kovil - Hindu Temple in Udayampalayam

கதை –

சுற்றிலும் அடர்ந்த காடுகளாக இருக்க, கரூர் மாநாகராக மாறியிறாத காலம். வேட்டைக்கு பழக்கம் செய்யப்பட்ட உயர் ரக நாய்களுடன் தொட்டியம் நாயக்கர்களில் ஒரு குழு வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த குழுவில் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் வீரத்துடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருமுயல்களை பிடிப்பதற்கு நிலத்தில் வலையமைத்தல், பெருமிருங்களை வேட்டையாட துப்பாக்கியை பயன்செய்தல் என பல வழிமுறைகளை கையாண்டனர். இரவு பகலாய் விலங்குகளை வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்கள் குழுவில் இருந்த பெண்ணொருத்தி வழிதவறியது தெரியவில்லை. நெடுநேரத்திற்குபின் அந்த பெண் தவறியதை அறிந்து தேடத்தொடங்கினர்.




இரவு முழுவதும் தேடியும் அவர்களுக்கு பலன்கிடைக்கவில்லை. இது அந்த குழுவில் இருந்த மற்ற பெண்களுக்கு மிகவும் வேதனை தருவதாக இருந்தது. மறுநாள் காலையில் வழிதவறியப் அந்தப் பெண் மணவாடி கிராமத்திற்கு வந்தாள். வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த சோழிய வெள்ளாள மக்கள் வேட்டை தோரனையுடன் குதிரையில் வீரத்தின் உருவாகவே வந்து நிற்கும் பெண்ணைக் கண்டு அசந்து போனார்கள். அவள் வழிதவறி அலைவதையும், அவளுடன் வந்த கூட்டம் அவளை தேடுவதையும் அறிந்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் துயர் தீர்க்க ஆட்கள் சிலரை தொட்டியம் நாயக்கர்களை தேடி அனுப்பினார்கள். அந்த ஆட்களும் விரைந்து தேடுதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு வழியாக தொட்டியம் நாயக்கர் குழுவானது கண்டுபிடிக்கப்பட்டு, வழிதவறிய அந்த வேட்டைக்காரப் பெண்ணோடு சேர்த்துவைக்கப்பட்டது. பெருநிம்மதியுடன் தங்கள் வேலையை பார்க்க திரும்பிய சோழிய வெள்ளாளர்களுக்கு தொட்டியம் நாயக்கர்களின் கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். அது இரவு முழுதும் வேறு இடத்தில் தங்கியப் பெண்ணை மீண்டும் தங்கள் குழுவுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு. அந்தப்பெண் தவறு செய்யவில்லை என்று அறிந்தும் கூட மனதினை கல்லாக்கிக் கொண்டு சமூகத்தின் கட்டுப்பாட்டினை காப்பாற்ற, அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். தன் இனமக்களின் பிரிவினை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.




இந்த செய்தி சோழிய வெள்ளாளர்களுக்கு தெரியவருகையில் மிகவும் வருத்தம் கொள்கின்றார்கள். பிள்ளைமாரான சோழிய வெள்ளாளர்கள் கன்னி தெய்வங்களை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள்.பொதுவாக தன் வீட்டு கன்னி தெய்வங்களை தங்கள் வீட்டிலேயே வைத்து வணங்குதல்தான் வழக்கம்.தங்கள் இனமில்லை என்ற போதும் தங்கள் மண்ணில் உயிர்நீத்த பெண்ணை வணங்குவதென ஒருமித்து தீர்மானித்து இன்று வரை வணங்கி வருகிறார்கள். தொட்டியச்சி என்ற தொட்டியம் நாயக்கர் சமூகத்தின் பெயரையே தெய்வத்தின் பெயராக சொல்கிறார்கள். இறந்தபோன அந்தப் பெண்ணின் உண்மைப் பெயர் தெரியவில்லை. மேலும் தொட்டியம் நாயக்கர் சமூகத்திலிருந்து ஒரு தம்பதியை அழைத்துவந்து, அவர்கள் தலைமையில் தான் தொட்டியச்சியின் திருவிழாவினை சோழிய வெள்ளாளர்கள் நடத்துகிறார்கள்.

மிகவும் சுருக்கமாக சொல்வதானல் சமூகத்தின் கட்டுப்பாட்டினால் ஒதுக்கிவைக்கப்பட்டு இறந்த போன ஒரு பெண் தெய்வமான கதைதான் தொட்டியச்சியின் கதை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!