Serial Stories சதி வளையம்

சதி வளையம்-22

22 கலைடோஸ்கோப் – நிஜம்

“இன்ஸ்பெக்டர், அய்யாக்கண்ணுவோட பதில்களைத் தெளிவா கவனியுங்க. ஒரு நிமிஷம், அதைத் திருப்பிக் கேட்டுடலாம்” என்று தன்யா சொன்னதும் தர்ஷினி எழுந்து, தன் ‘டேப்லட்டில்’ பதிவாகியிருந்த அந்த உரையாடலை ஓட விட்டாள்.

“அன்னிக்கு முன்வாசற்கதவை எப்போ பூட்டினாங்க?”

“ஆறு மணிக்கும்மா.”

“யார் பூட்டினது?”

“சுசாதாம்மா.”

“பூட்டிட்டு வெளியே போயிட்டாங்களா?”

சிறிது மௌனம்.

“அம்மா, அவங்க பூட்டை உள்பக்கமாத் தாம்மா பூட்டினாங்க.” 

“அப்போ, அவங்க எப்போ, எப்படி வெளியில் போனாங்க?” 

“சுத்திச் சுத்தி வந்து கடைசியில் என் கிட்டயே உங்க விளையாட்டா? நடக்கட்டும்” என்றாள் சுஜாதா தன் வழக்கமான கேலியுடன்.

தன்யா அவளை லட்சியம் செய்யாமல் தொடர்ந்தாள். “என் கடைசிக் கேள்விக்கு அய்யாக்கண்ணு பதிலளிக்கவில்லை. பரவாயில்லை. நாமே பதில் சொல்லலாம். சுஜாதா ஆறுமணிக்குக் கதவை உள்பக்கமாய்ப் பூட்டியிருக்காங்க. அப்புறம் அவங்க அறைக்குப் போயிருக்கணும். ஆறேகால் வாக்கில் ரெடியாகிப் பாஸ்கர் அறைக்கு வந்திருக்காங்க….”

“ஏன், அவங்க பின்வாசல் வழியா வெளியில் வந்திருக்கக் கூடாதா?” இடைமறித்தார் இன்ஸ்பெக்டர்.

“இந்த வீட்டு அமைப்பு உங்களுக்குப் பிடிபடவில்லையா, இன்ஸ்பெக்டர்? பின்வாசல் வழியாக வரணும்னா கிச்சனில் இருந்த ஹேமாவை அவங்க தாண்டியிருக்கணும். அப்போ ஹேமா இன்னும் வீட்டுக்குப் போகலைங்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஹேமாவும் அதை மென்ஷன் பண்ணியிருப்பாள். அதோட… வேலைக்காரங்க யூஸ் பண்ற அந்த வாசலைக் கண்டிப்பா சுஜாதா யூஸ் பண்ண மாட்டாங்க. அதோட பாஸ்கர் வெளியே போயிட்டாரான்னு பார்க்கவும் அவங்க பாஸ்கர் ரூமுக்கு வந்திருக்கலாம்னு நான் ஊகிக்கறேன்.”

இன்ஸ்பெக்டர் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினார். “ஃபிகர்ஸ்” என்றார்.

தன்யா அமைதியாக உட்கார்ந்திருந்த சுஜாதாவை ஏறிட்டாள். “நீங்க உள்ளே வந்த போது அங்க பாஸ்கர் இல்ல. அதற்குள் அவர் புல்வெளிக்குப் போயிட்டார். அப்போ டேபிள் மேல (நீங்க சொன்ன மாதிரியே) ஏதோ பளபளன்னு தெரிஞ்ச்சிருக்கு. அது பாஸ்கரோட மோதிரம்னு தெரிஞ்சவுடனே அதை எடுத்து வெச்சுக்கிட்டீங்க.”

ஒரு விநாடி நிறுத்திய தன்யா தொடர்ந்தாள். “உங்க மேல எனக்கு முதல்முதல் சந்தேகம் வரக் காரணமே நீங்க சொன்ன அந்த வார்த்தைதான். ‘ஏதோ பளபளன்னு தெரிஞ்சுது’. சுஜாதா, நாம பெண்கள். ஏதாவது நகை மாதிரித் தெரிஞ்சா நிச்சயமா அது என்னன்னு பார்க்காம கடந்து போக மாட்டோம். 

“நீங்க ஏழரை மணிக்கு மறுபடி பாஸ்கர் ரூமுக்குப் போனபோது ஏதோ பளபளன்னு தெரிஞ்சதாகச் சொன்னீங்க. தவறிப்போய் உண்மையைச் சொல்லிட்டுச் சுதாரிச்சிட்டீங்களா, இல்லை உங்களுக்கு அப்புறம் உள்ளே போன யார்மேலேயாவது, ஒருவேளை டாக்டர் திலீப் மேல, பழி விழட்டும்னு அப்படிச் சொன்னீங்களான்னு தெரியல.”

“திலீப் மாட்டிக்கட்டும்னு தான் சொன்னேன்னு வெச்சிக்கங்களேன், என்ன இப்போ?” என்றாள் சுஜாதா அலட்சியமாக.

திலீப் அவளை எரித்து விடுவது போல் பார்த்தார்.

“சுஜாதா! ஒரு கொலையைப் பண்ணிட்டு என்ன அகம்பாவமாய்ப் பேசறீங்க! எழுந்திருங்க முதல்ல” என்று அதட்டினார் இன்ஸ்பெக்டர் போஸ்.




“கேள்வின்னாலே உங்களுக்குப் பிடிக்காது இன்ஸ்பெக்டர். இருந்தாலும் என் பங்குக்கு ஒரு கேள்வி கேக்கறேன். நான் தான் மோதிரத்தை எடுத்ததா தன்யா சொல்லறாங்க. அதை நான் ஏன் எடுக்கணும்? என்ன மோட்டிவ்?” என்று கேட்டாள் சுஜாதா எழுந்திருக்காமல்.

இன்ஸ்பெக்டர் அமைதியானார். இருந்தாலும் தன்யாவை நம்பிக்கையாய்ப் பார்த்தார்.

“உங்கமேல வந்த சந்தேகத்தை நாங்க ஆரம்பத்திலேயே ஒதுக்கியதற்குக் காரணம் சொல்லிட்டீங்க, சுஜாதா. நோ மோட்டிவ்! மோதிரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்களிடம் சொத்தை அளிக்கும் பழக்கம் உங்கள் கோவிலகத்தில் கிடையாது” என்றாள் தன்யா.

“பின்னே இப்போ …” என்று ஆரம்பித்தாள் சுஜாதா.

“பின்னே இப்போ ஏன் உங்களைக் கைகாட்டறோம்னா…” என்ற தன்யா “…ஒரு மோட்டிவ் கிடைத்ததாலே. தற்செயலாய்ப் பாலாஜியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் கோபத்தில் சொன்ன சில வார்த்தைகளில் கிடைத்த விஷயம் இது” என்று முடித்தாள்.

இன்ஸ்பெக்டர் தன்யாவை ஆர்வமாய்ப் பார்த்தார்.

தர்ஷினி எழுந்து வெளியே போனாள்.

“தர்ஷினி ஒருத்தரை உள்ளே கூப்பிடுவதற்காகப் போகிறாள். விட்டுப் போயிட்ட அந்த விருந்தாளியும் வந்துடட்டும்” என்றாள் தன்யா.

சில நிமிடங்கள் கழிந்தன.

தர்ஷினி ஒரு இளைஞனைக் கூட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

சுஜாதா மெலிதாக அதிர்ந்தாள்.

“யெஸ் சுஜாதா. உங்களுக்கு இவரைத் தெரியும். மிஸ்டர் ஏ எஸ் வாசுதேவன். அணிமங்கலம் சத்யநாதன் வாசுதேவன்” என்று அறிவித்தாள் தன்யா.

==============================

“உங்களில் பல பேருக்கு இவரைத் தெரியும். ஆனா மறந்துட்டீங்க, இல்லே?” என்று தன்யா கேட்டாள். சுஜாதாவின் முகத்தில் ஒரு அதீத வெறுப்புத் தோன்றியது.

“தன்யா, இவன் …” என்று ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.

“இவன் நம்ம சுஜாதாவோட தம்பி. இராஜகம்பீரமாய், அழகாய் இருக்கிறவன்னு ஸ்கூல், காலேஜ்ல பிரசித்தம். சின்ன வயசிலேர்ந்தே படிப்பில ஃபர்ஸ்ட். அடிப்பிலயும் ஃபர்ஸ்ட். புரியலையா? அடிதடி, பணம் திருடறது, கேங்க் சேர்த்துக்கறது எல்லா விவகாரமும் உண்டு. கூட்டத்தில இராஜாவா இருக்கணும்னா பணம் வேணும் இல்லையா, அப்படித்தான் திருட ஆரம்பிச்சிருக்கார் துரை.

“ரவுடி தான், ஆனா படிப்பில கெட்டி. ப்ளஸ் டூவில ஏகப்பட்ட மார்க். சென்னையில் இஞ்சினீரிங் சேர்ந்திருக்கான். ஃபர்ஸ்ட் இயர்லையே ஏதோ ஃபங்க்ஷனுக்குக் கலெக்ட் ஆன பணத்தைப் பிரின்ஸிபால் கையெழுத்துப் போட்ட செக் கொடுத்து எடுத்திருக்கான். தொகை பெரிசானதுனால பாங்க்லேர்ந்து காலேஜுக்குப் போன் பண்ணிட்டாங்க. கையெழுத்துப் போட்டது இவன் தான்னு தெரிஞ்சுடுச்சு. உடனே பாங்க் மானேஜரையும் கூர்க்காவையும் மூர்க்கமா தாக்கிட்டு தப்பியோட முயற்சி பண்ணியிருக்கான், ஆனா பிடிபட்டுட்டான். அவனைச் சிறையில் போட்டுட்டாங்க. இதனால் மிகவும் அவமானப்பட்ட அணிமங்கலம் குடும்பத்தில் அவனைத் தள்ளி வெச்சுட்டாங்க. இனிமே அவனைப் பற்றிப் பேசவும் கூடாது, அப்படி ஒருத்தன் தங்கள் குடும்பத்தில் இருந்ததாகவே காட்டிக்கக் கூடாதுன்னு முடிவெடுத்துட்டாங்க.

“ஏதோ பெட்டி வழக்கில் சிறைக்குப் போன பத்மாவின் தம்பி பாலாஜி, அங்கே வாசுவைச் சந்திச்சிருக்கான். வாசுவைப் பற்றிய எல்லா விவரமும் தெரிஞ்சுக்கிட்டான் பாலாஜி. அந்த அணிமங்கலம் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் தன் அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறார்னு வெளியே வந்ததும் தெரிஞ்சுக்கிட்டான். ஆனா தனக்கு வாசுவைத் தெரியும்னு அவன் மூச்சுக்கூட விடல. ஏன்னா, அவன் ஜெயில்ல இருந்ததும் சொல்லவேண்டியிருக்குமே!

“ஆனா பாலாஜி ஒரு தப்புப் பண்ணிட்டான். பாஸ்கர் பேரைச் சொல்லி, பல லட்ச ரூபாய் கடன் வாங்க முயற்சி பண்ணியிருக்கான் பாலாஜி. அந்த ஃபைனான்ஸ் கம்பெனிக்காரர் சதானந்தன் தம்புரானுக்குத் தெரிந்தவராகி விடவே, இந்த உண்மை வெளிப்பட்டிருக்கு. அப்பவே தம்புரான், சுஜாதா போன்றவர்கள் இந்தச் சம்பந்தத்தை மட்டம் தட்டிப் பேசியிருக்காங்க. இது பாலாஜிக்கும் தெரிந்து, பாஸ்கரிடம் சண்டை போட்டிருக்கான். பாஸ்கர் பத்மாவுக்காக பாலாஜியிடம் சமாதானமாய்ப் போய்விட்டார்.

“இந்த மோதிரம் காணாமல் போன விவகாரத்தினால் தன் அக்காவின் திருமணம் நின்றதும், பாலாஜியின் கோபம் கட்டுக்கடங்காமல் ஆகியது. தன்னை இதில் மாட்டிவிட சதானந்தன் தான் துப்பறியும் நிறுவனத்தை ஏற்பாடு செய்ததாக நினைத்தான். அந்தக் கோபத்தோடு என்னிடம் பேசியபோது, நான் அவன் சிறைக்குப் போன விவரம் எனக்குத் தெரியும் என்பதைச் சொன்னேன். அப்போதுதான் அவன் அணிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவனும் சிறைக்குப் போயிருக்கிறான் என்பதை என்னிடம் சொன்னான். வாசுவைப் பற்றி எனக்குத் தெரிந்தது.




“வாசு சிறையில் இருந்து ரிலீஸ் ஆனதும் அரக்கில் உன்னிமுகுந்தனால் மோதிரம் எடுக்கும் வேலையில் ஏவப்பட்டிருக்கிறான். தன் அக்கா சுஜாதாவிடம் உதவி கேட்டிருக்கிறான். சுஜாதாவிற்கு அதை அரக்கில் குடும்பத்திற்குக் கொடுக்க விருப்பம் இல்லை. அதனால் அவள் அதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை.

“ஆனால் அன்று மோதிரம் கவனிப்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்தபோது, அதை அடைந்தால் தன் தம்பிக்கே இந்தப் பட்டம் கிடைக்குமே என்று அவள் சற்றுச் சலனப்பட்டிருக்கிறாள். மோதிரத்தை எடுப்பதும் மறைப்பதும் வெகு சுலபமாக நடந்திருக்கிறது. 

“ஆனால் ஹேமா சுஜாதா மோதிரத்தை எடுப்பதைப் பார்த்துவிட்டாள். தான் தனியாக வீட்டில் இருந்ததாக நினைத்திருந்த ஹேமா ஏதோ சத்தம் கேட்டுப் பாஸ்கர் அறைக்குப் போயிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். சுஜாதா ஹேமாவைக் கவனிக்காமல் வெளியே போய்விட்டாள்.

“முதலில் ஹேமா இதைத் தப்பாக நினைக்கவேயில்லை. பாஸ்கரிடம் திரும்பக் கொடுப்பதற்காகவே சுஜாதா அதை எடுத்ததாக நினைத்த ஹேமா, அந்த மோதிரம் திருட்டுப் போய்விட்டதாகச் சொல்லப்பட்டபோது மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அது சுஜாதாவிடம்தான் இருக்கிறது என்பதைப் பாஸ்கரிடமும் விஜய்யிடமும் சொல்ல முயற்சித்தாள், ஆனால் பாஸ்கர் தன் பிரச்சினைகளிலேயே மூழ்கியிருந்தான், விஜய் அவளை அலட்சியப்படுத்தி அனுப்பிவிட்டான்.

“பிறகுதான் இதன்மூலம் தானும் சிறிது லாபம் சம்பாதித்தால் என்ன என்று ஹேமாவிற்குத் தோன்றியிருக்கிறது. அதனால்தான் அந்தப் பூடகச் செய்தியைச் சொன்னாள். உடனே விஷயத்தைப் புரிந்துகொண்டுவிட்ட சுஜாதா இதை வாசுவிடம் சொன்னாள். வாசு ஹேமாவைத் தீர்த்துக் கட்டிவிட்டான்.”

“நோ!” என்று வாசு ஏதோ சொல்ல முயற்சித்தான். “நீ சும்மா இரு வாசு! இதுக்கெல்லாம் இவங்க கிட்ட ஒரு ப்ரூஃபும் கிடையாது. சும்மா கல்லை எறிஞ்சு பார்க்கிறாங்க” என்று எச்சரித்தாள் சுஜாதா.

“உங்க தைரியத்தை வியக்கிறேன் சுஜாதா! ஆனா எங்க கிட்டப் ப்ருஃப் இருக்கு. ஹேமா கொலையுண்ட இடத்தில் கிடந்த அந்த வெள்ளிச் சாவி! அது சதானந்தன் தம்புரானுடையது தான். ஆனால் பல வருடங்களுக்கு முன்னாடியே அதை வாசு திருடிவிட்டான். அது ரொம்ப அழகா இருந்ததால அதை அலங்காரமா தன் கழுத்தில் போட்டுட்டிருக்கான். பாலாஜி கொடுத்த தகவல்கள், இன்னும் வாசுவை அரெஸ்ட் பண்ணின இன்ஸ்பெக்டரோட ஸ்டேட்மெண்ட், இதையெல்லாம் வெச்சு இதைத் தெரிஞ்சுக்கிட்டேன். சும்மா சொல்லக் கூடாது, அக்கா தம்பி ரெண்டு பேருக்கும் ஜுவல் விஷயத்தில் நல்ல டேஸ்ட்” என்றாள் தன்யா.

வாசு அப்படியே சுருண்டு போனான்.

சுஜாதா ஒரு பெருமூச்சு விட்டாள். “ஆல்ரைட், எல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்க, இதையும் தெரிஞ்சுக்குங்க! ஹேமாவைக் கொன்னது நான் தான்! வாசுவுக்குக் கொலை பண்ணல்லாம் தைரியம் கிடையாது. சும்மா அடிப்பான், அவ்வளவுதான். நான் ஹேமா வீட்டுக்குப் போனபோது வாசு அவளை மிரட்டிக்கிட்டிருந்தான். அவ திமிரா ஏதோ மேலமேல பேசினா. இது வேலைக்காகாதுன்னு புரிஞ்சது. வாசுவை அவளை இறுகப் பிடிச்சுக்கச் சொல்லிட்டு, கையிலே கொண்டு போயிருந்த கத்தியால் அவளைக் கொன்னுட்டேன்.”

ஏதோ வண்ணான் கணக்குச் சொல்வது போல நிதானமாய், உணர்ச்சியே இல்லாமல் சொல்லி முடித்தாள் சுஜாதா.

இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியிலிருந்து மீண்டவராக, “வாசு, இதெல்லாம் உண்மையா?” என்றார்.

வாசு தயக்கமாய்த் தலையசைத்தான்.

அவனை வெறுப்போடு பார்த்தாள் தன்யா. பிறகு இன்ஸ்பெக்டரை நோக்கி “இன்னும் ஒரு ப்ரூஃப் இருக்கு இன்ஸ்பெக்டர்! நீங்க சுஜாதாவோட லக்கேஜ்களைச் சோதனையிட்டுப் பாருங்க! அதில் ஒரு பச்சைக்கல் வைத்த பஞ்சலோக செட் இருக்கும். அதில் உள்ள இரண்டு மோதிரங்களில் ஒண்ணு கொஞ்சம் பெரிதாய், ப்ளெய்னாய் ஒரே ஒரு பச்சைக் கல் வெச்சு இருக்கும். அந்த மோதிரத்தில் மேல் கவரை நீக்கிட்டீங்கன்னா இவங்க குடும்ப மோதிரம் கிடைக்கும்!”

படபடவென்று கைதட்டல் கேட்டது. தட்டியது சுஜாதா. “நீ நிஜமாகவே ஜீனியஸ் தான்! மோதிரம் அங்கேதான் இருக்கு. கங்கிராஜுலேஷன்ஸ்!” என்றாள்.

தன்யா புன்னகைத்தாள்.

இன்ஸ்பெக்டர் சுஜாதா, வாசு அருகே சென்றார். “உங்க ரெண்டு பேரையும் …”

“ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர்” என்ற சுஜாதா சதானந்தனை நெருங்கினாள். “சித்தப்பா! எனக்குப் பட்டம் கொடுக்கலாம்னு நினைச்சீங்க! அப்பக்கூட வாசுவுக்குக் கொடுக்கலாம்னு உங்களுக்குத் தோணலையே! அவன் என்ன பெரிசா தப்புப் பண்ணிட்டான்? அப்படிப் பார்த்தா உங்க பிள்ளை என்ன யோக்கியம்? பிறந்த நாட்டை விட்டுட்டு வெளிநாட்டுக்குச் சேவகம் பண்ண நினைக்கிறானே, இந்த பாஸ்கர் என்ன யோக்கியம்? என் தம்பி ஒரு குற்றவாளியா ஆனதுக்கும், நான் கொலைகாரியா மாறினதுக்கும் முக்கிய காரணம் நீங்க தான்” என்று பொரிந்தாள். சதானந்தன் தலைகுனிந்து நின்றார்.

சுஜாதா மேஜர் கமல் அருகில் சென்றாள். “சாரிங்க, வெரி சாரி. நான் எப்போதும் வாசுவோட அக்காவாகத் தான் நடந்துக்கிட்டேனே தவிர உங்க மனைவியா உங்களுக்கு நான் எதுவுமே செய்யல. என்னை முடிஞ்சா மன்னிச்சுடுங்க, தயவுசெய்து மறந்துடுங்க” என்று அதே வெற்றுக் குரலில் சொல்லிவிட்டு, கம்பீரமாய் வாசலை நோக்கி நடந்தாள்.

வாசுவை இன்ஸ்பெக்டர் தள்ளிக்கொண்டு போனார்.

மேஜர் கமல் தரையில் முழந்தாளிட்டு அமர்ந்து சத்தம் வராமல் உடல் குலுங்கக் கதறிக் கதறி அழத் தொடங்கினார்.




What’s your Reaction?
+1
6
+1
4
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!