Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-10

10

மனம் மயக்கும் மல்லிகை பந்தலில்
கணம் கொதிக்கும் காவிய நதிகளை பாய்ச்சுகிறாய் ,
நிமிடங்களை நிறுத்தி
பொழுதுகளை நீட்டித்திட ,
சுவர்கடிகாரத்தை இறைஞ்சுகிறேன் .

திரும்பவும் அலட்சியப்படுத்தி போகிறாயா …? போடா போ …இனியொருதரம் என்னிடம் பேசவென்று வந்து நின்று பார் .அப்போது இருக்கிறது உனக்கு …பொருமியபடி உள்ளே போனாள் மீரா .

” பிரவீணா , திவ்யா …” என குரல் கொடுத்தபடி வந்தான் குமரேசன் .

” வாங்கண்ணா …சாப்பிட வாங்க ” வரவேற்றாள் மீரா .

” சாப்பிட்டுத்தாம்மா வர்றேன் .பிரவீணாவை எங்கே …? “

” அண்ணி பாட்டிகிட்ட பேசிட்டிருக்காங்க .போய் பாருங்க …”

” இல்லையில்லை .நான் போகலை .எனக்கு வெளியே நிறைய வேலை இருக்குது .நான் இங்கே இருக்கேன் .நீ போய் கூட்டிட்டு வாம்மா ” குமரேசன் சோபாவில அமர்ந்துகொண்டான் .

பாட்டியை பார்க்க போக சொன்னால் இவனுக்கு எதற்கு இந்த பதட்டம் என எண்ணியபடி ” காபி போட்ட்டுமாண்ணா ….? ” என்றாள் .

” நீ முதலில் போய் பிரவீணாவையும் , திவ்யாவையும் கூட்டிட்டு வா …மற்றதெல்லாம் பிறகு பார்க்கலாம் .” குமரேசன் குரலில் இழுத்து பிடித்து வைத்த பொறுமை தெரிந்தது .

அவனை விநோதமாக பார்த்தபடி பாட்டி வீட்டிற்கு போனாள் மீரா .அங்கே பாட்டியின் கட்டிலில் அமர்ந்து பாட்டி கையை பிடித்தபடி குறைந்த குரலில் பேசிக்கொண்டிருந்தாள் பிரவீணா .திவ்யா தள்ளி ஒரு சேரில் அமர்ந்திருந்தாள் .

” அண்ணி அண்ணன் வந்திருக்காங்க .உங்களை கூப்பிடுறாங்க …” வீட்டு வாசலில் நின்று பிரவீணாவிடம் சொன்னாள் .

” அவனை இங்கே வரச்சொல்லு .நான் அவனிடம் பேசனும் …” என்றார் கருணாகரி .

” நான் சொன்னேன் பாட்டி .அவருக்கு ஏதோ அவசரமான வேலை இருக்கிறதாம் .ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் .அண்ணி உங்களை சீக்கிரம் வரச்சொன்னார் …”

” நான் கிளம்புகிறேன் பாட்டி .இன்னொரு நாள் பேசலாம் …திவ்யா வாடி ” பிரவீணா வெளியேறினாள் .

அவள் பின்னாலேயே போகப் போன மீராவை ” நில்லும்மா …” என நிறுத்தினாள் கருணாகரி .

” என்னம்மா வீட்டில் வேலை அதிகமா…? ஒருதரம் கூட என்னை பார்க்க வரவில்லையே நீ …? “

” அதெல்லாம் இல்லை பாட்டி .நான் பிறகு வருகிறேன் .அண்ணனுக்கு காபி போடவேண்டும் ….” மீரா நடந்தாள்.
உண்மையில் அவளுக்கு பாட்டியிடம் பேச அவ்வளவாக விருப்பமில்லாமலேயே இருந்தது . இவரால்தானே இப்படி ஒரு விருப்பமில்லாத வாழ்வை நந்தகுமார் வாழவேண்டியதாயிற்று என நினைத்தாள்.அதன்பிறகும் பாட்டியை பார்க்க மீரா போகவில்லை .

அன்று என்னவோ மீராவிற்கு அம்மா வீட்டிற்கு போகவேண்டும் போலிருந்தது . மத்தியான வேலை முடிந்ததும் சுந்தரியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள் .

அம்மா கையால் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்தபடியே காலை நீட்டி ஹாலில் படுத்துக்கொண்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்த போது ” அக்கா ..” என கத்தியபடி வினோத் வந்தான் .அவனது கல்லூரி கதைகளை  கேட்டபடி மாலை ஸ்னாக்சை ஒரு பிடிபிடித்தனர் அக்காவும் தம்பியும் …

” அக்கா உனக்கு ஒன்று தெரியுமா …? நான் கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்ந்திருக்கிறேன் ….”

” ஏய் படிக்கிறதை விட்டுட்டு இதெல்லாம் எதற்கடா …? “




” அதெல்லாம் கரெக்டா படிச்சிடுவேன் .எங்க கோச் என்ன சொன்னார் தெரியுமா …? நான் ரொம்ப நல்லா பேட் பண்றேனாம் .ஒருநாள் நிச்சயம் நம்ம இந்தியா டீம்ல சேர்ந்து நம்ம நாட்டுக்காக விளையாடுவேன்னு சொன்னாரு …”

” அடப்பாவி இதென்னடா நம்ம நாட்டுக்கு வந்த கேடு காலம் …” மீரா தலையில் கைவைத்து போலியாய் பெருமூச்சு விட்டாள் .

” ஏய் குரங்கே உனக்கென்ன திமிரா …? ” சாதாரணமாக வினோத் மீராவிடம் பேசும் முறை இதுதான் .ஆனால் இப்போதோ  அக்கா திருமணமாகி இன்னொரு வீட்டிற்கு போய்விட்டாள் .அவளில்லாத தனிமை அவனை அழுத்த அந்த குரங்கு , நாயெல்லாம் அன்பான அக்காவாக மாறியிருந்தது .ஆனால் இன்று மீராவின் சீண்டலில் அக்கா திரும்பவும் ஒவ்வொரு மிருகமாக மாறிக்கொண்டிருந்தாள் .

” எனக்கில்லடா நாயே உனக்குத்தான் கொழுப்பு …” மீராவும் பதிலுக்கு எகிறினாள் .

” எருமை மாடே எத்தனை தடவை உன்னை சொல்றேன் என் விசயத்தில் தலையிடாதேன்னு .ஒரு தடவையாவது உன் மரமண்டையில் ஏறுதா …? “

சரிதான் போடா கழுதை .நான் அப்படித்தான்டா பேசுவேன்.என்னடா பண்ணுவ …? ” சொன்னதோட ஆட்காட்டி விரலை கொக்கியாக்கி தம்பியை பார்த்து ” வெவ்வெவ்வே.” என வக்கலம் காட்டினாள் மீரா .

என்ன நடந்தாலும் சரிதான் என்ற முடிவோடு அக்காவின் மேல் பாய்ந்து அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு அவள் முதுகில் மொத்த தொடங்கினான் வினோத் .

” வக்கலமா காட்டுற …? இனிக் காட்டுவியா …? “

கிச்சனிலிருந்து வந்த அன்பரசி இவர்களை பார்த்து அதிர்ந்து வினோத்தின் முதுகில் ஓங்கி ஒரு அறைவிட்டு விலக்கினாள் .

” டேய் பொம்பளை பிள்ளை மேல கை நீட்டுவியா …? அதுவும் அவள் கல்யாணமான பொண்ணு .உனக்கெதுக்குடா கை இப்படி நீளுது …? ” மேலும் இரண்டு அடி வைத்தாள் .

” அப்போ அவளை பொம்பளை புள்ளையா லட்சணமா இருக்க சொல்லுங்க.எப்போ பாரு என் கூட வம்பிழுத்துட்டு அலையிறா .இதோ இப்படி வக்கலம் காட்டுறாம்மா …” அவளைப் போன்றே செய்து காட்டினான் .

” சரிதான் போடா .நீ உள்ளே போ….” அன்பரசி மகனை வைதாள் .

” ம்க்கும் …எப்போ பாரு அவளுக்கே சப்போர்ட் பண்ணுங்க ….” என்றபடி உள்ளே போக போனவன் நின்று அவள் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு உள்ளே ஓடினான் .

” டேய் ….” என்றபடி ஆவேசமாக அவனை பிடிக்க எழுந்த மீராவை பிடித்து இழுத்து அமர வைத்த அன்பரசி ” ஏய் மீரா என்னடி இது சின்னக்குழந்தையாட்டம் ….” எனக் கடிந்தாள் .

” அம்மா …சும்மாம்மா …விளையாட்டுக்கு ….” என்றபடி அப்படியே அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டாள் .

” ரொம்ப நாளாச்சும்மா .தம்பி கூட சண்டை போட்டு .அதுதான் வேணும்னே அவன்கிட்ட வம்பிழுத்தேன் …”

” இனி இப்படியெல்லாம் விளையாடாதே மீரா .அவன்பாட்டுக்கு கை நீட்டுறான் பாரேன் .உனக்கு ஒரு காயம் வந்தால் உங்கள் வீட்டு ஆட்களுக்கு யார் பதில் சொல்வது …? ” மீராவின் தலையை வருடியபடி அன்பரசி சொல்ல …அப்போ நீங்க என் வீட்டு ஆட்கள் இல்லையா …?என்ற கேள்வி மீராவின் மனதில் எழுந்தது .

” அதெல்லாம் நாங்க ஒண்ணும் சொல்ல மாட்டோம் .நீங்க கன்ட்டினியூ பண்ணுங்க ….” நந்தகுமாரின் குரல் .

சோபாவில் அமர்ந்திருந்த அம்மாவும் ,மகளும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தனர் .

” வாங்க ….வாங்க …” என்ற பதட்டமான அழைப்போடு அன்பரசி உள்ளே போய்விட்டாள்.

” நீங்கள் எப்போது வந்தீர்கள் …? ” சந்தேகமாக கேட்டாள் மீரா .

அவளுக்கு எதிர் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு , அவளை குறும்பாக பார்த்தபடி ” கொஞ்ச நேரத்திற்கு முன்பு இங்கே நாய் , கழுதை , எருமை , குரங்கெல்லாம் வலம் வந்ததே அப்பவே வந்துட்டேன் ….” என்றான் .

மீராவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது .சை …இப்படி இவன் முன்னால் போய் சின்னப்பிள்ளைத்தனமாக சண்டை போட்டுக்கொண்டிருந்து விட்டேனே …அவனை முறைத்தாள் .

” வந்தவர் உடனே உள்ளே வர வேண்டியதுதானே .அதென்ன வாசலில் நின்று உள்ளே நடக்கறதை நோட்டம விடுறது …”

“இந்த தெரு முனை திரும்பும்போதே உங்க சண்டை சத்தம்  காதில் விழுந்திடுச்சு .இங்கே வந்ததும் இரண்டு தடவை கூப்பிட்டுக் கூட பார்த்தேனே …நீங்க இரண்டு பேரும் என்னை எங்கே கவனித்தீர்கள் ….உன் முடியை நான் பிடிக்கவா ..என் முடியை நீ பிடிக்கவா என தீவிரமாக இருந்தீர்கள் …”

அப்படியா இவன் கூப்பிடுவது கூடக் கேட்காமல் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம் …என்று நகத்தை கடித்தபடி ஒரு நிமிடம் யோசித்த மீரா …பிறகு சை ..நான் அந்த அளவு பொறுப்பற்றவள் கிடையாது …தனக்கு தானே ஒரு சர்ட்டிபிகேட்டை அவசரமாக வழங்கிக்கொண்டு …

” பொய் …நீங்க பொய் சொல்றீங்க …” விரலை அவன்புறம் நீட்டி கோபித்தாள் .

” இல்லைம்மா நிஜம்தான் ….நீ இப்படி பண்ணும்போது கூட ஒரு தடவை கூப்பிட்டேனே ….” நந்தகுமார் அவளைப்போன்றே விரலை ஆட்டி வக்கலம் போல் சைகை செய்தான் .

ஐய்யோ அதையும் பார்த்தானா …கூச்சத்தில் முகம் சிவக்க முகத்தை கைகளால் மூடியபடி சோபாவில் அமர்ந்துவிட்டாள் மீரா .

” அதென்ன மீரா அங்கே நம்ம வீட்டில் அவ்வளவு அமைதியாக இருக்கிறாய் .இங்கே என்னவென்றால் …கண்ணகிக்கு அடுத்த வாரிசாக அவதாரம் எடுத்திருக்கிறாய் .உண்மையில் உன் உண்மையான உருவம்தான் எது …? அமைதியான மீராவா …ஆக்ரோசமான கண்ணகியா …? ” தான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து நகர்ந்து நுனிக்கு வந்து எதிர் சோபாவில் தலையை பிடித்து அமர்ந்திருந்த மீராவை நெருங்கி குனிந்து கேட்டான் நந்தகுமார் .

அவனது அந்த கேலி கோபமூட்ட சட்டென வினோத்தின் நினைவில் அவன் கைகளில் அடித்துவிட்டாள் .” கொழுப்புடா உனக்கு …” என்ற வார்த்தைகளோடு .அடித்த பிறகே தான் செய்த தவறு புரிய அவள் விழிக்க ஆரம்பக்கும்போது ….

” மீரா என்ன இது …? கையும் …வாயும் நீளுது ….மாப்பிள்ளைகிட்ட சாரி கேளு …” கோபமாக வந்தாள் அன்பரசி .

” அட இதிலென்ன அத்தை இருக்கு .சும்மா ஒரு கேலிதானே …” அன்பரசியின் கோபத்தை நந்தகுமார் சமாளிக்கும்போதே …..




குற்றவுணர்வுடன் ” சாரி …” என்றாள் மீரா .

” அவள் சின்ன பிள்ளை மாதிரி மாப்பிள்ளை .நீங்க தப்பா எடுத்துக்காதீங்க …” அன்பரசி தடுமாறினாள் .

” அட விடுங்கத்தை .சாதாரண விசயத்தை பெரிசாக்கிட்டு …அதென்ன காபிதானே .கொடுங்க ..குடிச்சிட்டு நாங்க கிளம்புறோம் …”

” இன்னைக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க …? ” அவனுடன் வண்டியில் போகும் போது கேட்டாள் .

” இன்று காலையிலேயே எனக்கு ஒரு பட்சி சொன்னதே ….டேய் நந்தகுமார் பொண்டாட்டி இல்லாமல் உன்னால் வீட்டிற்கு போக முடியாது அதனால் போகிற வழியிலேயே அவளை கூட்டிட்டு போயிடுன்னு .அதுதான் வீட்டிற்கு கூட போகலை நேரா இங்கேதான் வர்றேன் .உன்னைக் கூட்டிட்டு போக ….”

“நான் இன்று அம்மா வீட்டிற்கு வரப்போவது உங்களுக்கு எப்படி தெரியும் …? “

” தெரியும் மீரா .உனக்கு இன்று என் மேல் கொஞ்சமே கொஞ்சம் கோபம் இருந்தது .அதனால் நீ இங்கேதான் வந்திருப்பாயென்று எனக்கு தெரியும் “

” அ…அதெல்லாம் ஒண்ணுமில்லை .நான் இன்னைக்கு இல்லை நேற்று  வந்து …ம் …உங்க அக்கா ..இல்லை பிரவீணா அண்ணி நம்ம வீட்டிற்கு வந்திருந்தார்களே …அதைப்பார்த்ததும் எனக்கும் அம்மாவை பார்க்க வேண்டும் போலிருந்தது .அதனால்தான் வந்தேன் …” அப்பாடி ஒரு வழியாக சமாளித்தாயிற்று என அவள் பெருமூச்சு விடும்போதே ….நந்தகுமாரின் மெல்லிய சிரிப்பு கேட்டது .

” அக்கா நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம் நீயும் உன் அம்மாவை பார்க்க போவதென்றால் …வாரத்திற்கு நான்கு நாட்கள் நீ உன் அம்மா வீட்டில்தான் இருக்கவேண்டும் .கல்யாணமாகி பதினைந்து வருடமாகிவிட்டது .இன்னமும் சின்ன விசயத்திற்கெல்லாம் கோபித்துக்கொண்டு அக்கா இங்கே வந்துவிடுவாள் .பின்னாலேயே அவளை சமாதானப்படுத்தி கூட்டிப் போக மச்சானும் வந்துவிடுவார் ….”

” ஓ…ஆனால் அப்படி சின்ன விசயத்திற்கெல்லாம் சண்டை போடுமளவு சிறுபிள்ளைத்தனம் அவர்களிடம் இல்லையே ….” யோசனையோடு கூறினாள் .

” ஆமாம் ஆமாம் ..உன்னளவு சிறுபிள்ளைத்தனம் அக்காவிடம் கிடையாது …” கிண்டலாக சொன்னான் .

அவன் தோள்களில் அடிக்கும் வேகத்தில் உயர்ந்துவிட்ட கைகளை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தாள் .சும்மாவே சின்ன பிள்ளையென கிண்டல் செய்து கொண்டிருக்கிறான் .

” வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன் மீரா .கிள்ளுவது , அடிப்பது போன்ற எண்ணங்கள் எதுவுமிருந்தால் நம் வீட்டில் போய் வைத்துக் கொள்ளலாம்மா …ப்ளீஸ் ….” கெஞ்சுதல் சிறிதுமின்றி கெஞ்சும் குரல் .

” சரிதான் போடா …” தனது கோபத்தை தலைகுனிந்து முணுமுணுத்து குறைத்துக்கொண்டாள் .

” என்ன சொன்னாய் மீரா ….? எதிர் காற்றில் ஒன்றும் கேட்கவில்லை …” பின்னால் சாய்ந்து அவள் குரலை கேட்க முயன்றவனை …

” ஒழுங்காக முன்னால் பார்த்து வண்டி ஓட்டுங்க …” நுனிவிரல்களால் அவன் தோள்களை பிடித்து தள்ளிவிட்டாள் .

” காலையில் ஏன் அவ்வளவு கோபமாக போய்விட்டீர்கள் …? “

பதிலேதுமில்லாமல் அமைதியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான் .இவ்வளவு நேரம் நான் பேசியது காதில்  விழுந்ததே .இப்போது மட்டும் விழவில்லையாக்கும் …மீரா பொருமிய போது நந்தகுமார் திடீரென ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்திய இடம் அந்த பார்க் .அதென்ன எப்போது பார்த்தாலும் பார்க்கில் வைத்தே பேசுவது ….

” நான் பார்க்கிற்கெல்லாம் வரமாட்டேன் …” கால்களை தரையில் அழுத்தி ஊன்றிக்கொண்டாள் .

” அங்கே யார் போகப்போவது .நான் அங்கே போகப்போகிறேன் …வா …” என முன்னே நடந்தபடி நந்தகுமார் காட்டிய இடத்தில் பார்க்கிற்கு எதிரே அந்த  ஐஸ்க்ரீம் கடை இருந்தது .

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க இந்த ஐஸ்க்ரீம் சமாதானமா …அப்படி ஒன்றும் எனக்கு ஐஸ்க்ரீம் தேவையில்லை .மீரா நகராமல் நின்றாள் .

” சாக்கோபார் உனக்கு பிடிக்கும்தானே ….? “முன்னால் நடந்தபடி நந்தகுமார் கேட்ட கேள்வி , ஐஸ்க்ரீம் வேண்டாமென்று கூறிவிட வேண்டுமென்ற மீராவின் எண்ணத்தை மாற்றியது .

ஒரே ஒரு சின்ன ஐஸ்க்ரீம் மட்டும் சாப்பிட்டு கொள்ளலாம் ..தன்னை தானே சமாதானித்துக்கொண்டு அவனுடன் நடந்தாள் .

” இரண்டு சாக்கோபார் …” ஆர்டர் செய்தான் .ஐஸ்க்ரீமின் கவரை பிரித்து அவளிடம் ஒன்று நீட்டினான் .தனக்கு ஒன்று பிரித்துக்கொண்டான் .அவளை பார்க்காமல் ஐஸ்க்ரீமை பார்த்தபடி ஏதோ யோசனையில் இருந்தான் .

நீ ஐஸ்க்ரீமை குடுக்கும் ஐடியாவில் இருந்தால் எனக்கு ஒன்றுமில்லை …மனதிற்குள் நினைத்தபடி தனது ஐஸ்க்ரீமை சாப்பிட ஆரம்பித்தாள் மீரா .விழிகளை சுழற்றி அந்த கடையை பார்த்தாள் .அந்த கடைக்கு அதற்கு முன்பும் பலமுறை வந்திருக்கிறாள் .அப்பா ..அம்மாவுடன் …தம்பியுடன் .ஓரிருமுறை தோழிகளுடன் கூட .

ஆனால் கணவனுடன் இப்போது வந்திருப்பது ..ஏனோ ஒரு புது உணர்வை தோற்றுவித்தது .ஏதோ ஒரு சிலிர்ப்பு .அவன் உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறான் .நீ ஐஸ்க்ரீமை விட மோசமாக உருகிக்கொண்டிருக்கிறாய் .எதிரிலிருப்பவளை உணராமல் எங்கோ வெறித்தபடியிருந்தவனை பார்த்த மீராவின் மனசாட்சி கேலி செய்தது .

” அப்பா கடுமையான உழைப்பாளி மீரா ….” நந்தகுமார் உருக ஆரம்பித்த ஐஸ்க்ரீமை வாய்க்குள் வைத்தபடி பேச ஆரம்பித்தான் .மீரா அவன் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள் .




What’s your Reaction?
+1
28
+1
24
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
1 month ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!