Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-3

3

தான் சிறுபிள்ளையாக பிறந்து சிறிது நாட்கள் வளர்ந்த இடம் என்ற ஆசையில் தான் ஏதோ ஓர் ஆர்வத்துடன் இந்த ஊருக்கு வந்திருந்தான் ஜெயசூர்யா. மற்றபடி இந்த சிறிய சொத்தை சரி செய்ய அவனே நேரடியாக வரவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஆனால் ஏனோ இந்த இடம் அவனுக்கு ராசி இல்லாதது போலவே இங்கே வந்த நாளிலிருந்து அவனுக்கு எதிர்மறையாகவே எல்லாமே நடந்து கொண்டிருப்பதாக தோன்றியது.

 அவன் நினைத்தது போன்றே மணமேடையில் மணப்பெண்ணாக அமர்ந்திருந்த சந்தியா அவளேதான். ஜெயசூர்யாவின் மனதை அசைத்துப் பார்த்தவள் முதல் நாள் ஒரு பெண்ணை பார்த்து ஆர்வம் கொண்டு மறுநாள் அவள் காதலை கண்டு மனம் நொந்து அடுத்த நாள் மணமேடையில் அவளையே மணப்பெண்ணாக பார்ப்பதென்றால்… இன்னமும் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்க வேண்டும்? ஒருவகை விரக்தியோடு மணமேடையை வெறித்திருந்தான்.

மணமகனாக சந்தியா அருகில் அமர்ந்திருந்தவன் அவனேதான். முதல் நாள் சந்தியாவுடன் ஓடிப் பிடித்து விளையாடியவன். முகம் நிறைய பெருமையும் மகிழ்ச்சியுமாய் மின்ன தலையுயர்த்தி அமர்ந்திருந்தவனை பொறாமையாய் பார்த்திருந்தான் ஜெயசூர்யா. பட்டும் நகைகளுமாக மணப்பெண் அலங்காரத்தில் பொற்சிலையாய் ஜொலித்திருந்தவள் பக்கம் கண்களை விடாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டான்.

 தவறு செய்யாதே மனமே… அடங்கு! தனக்குத்தானே பலமுறை அறிவுறுத்திக் கொண்டான். கண்களை இறுக மூடி மனதிற்குள் தன் தாயின் உருவத்தை கொண்டு வந்து என்னை மீட்டெடுங்கள் அம்மா என்று வேண்டிக் கொண்டான். இறுக விழி மூடிக்கொண்டிருந்தவனின் காதுகளுக்குள் பக்கத்தில் இருவர் பேசிக் கொண்டிருந்த பேச்சு சத்தம் கேட்டது.

 அவர்கள் விளக்கமாக பேசிக்கொண்டே போக ஜெயசூர்யாவினுள் இருந்த தவிப்பு குறைந்து கனல் உருவாகத் துவங்கியது. எவ்வளவு தைரியம்! இந்த ஜெயசூர்யாவை கேனையன் என்று நினைத்து விட்டார்களா! ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் பக்கம் தனது சேரை திருப்பிப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

” ஹலோ நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” திடுமென தங்கள் பேச்சுக்குள் நுழைந்த புதியவனை எரிச்சலாக பார்த்தனர் அவர்கள்.

” எங்கள் சம்பந்தியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று ஒருவரும் “இந்த சொத்துக்களை பற்றி பேசுகிறோம்” என்று இன்னொருவரும் அடுத்தடுத்து சொல்ல… “ஓ யார் உங்கள் சம்பந்தி?” அடுத்த கேள்வி பிறந்தது ஜெயசூர்யாவிடமிருந்து.

 “இந்த தோப்பின் சொந்தக்காரர் சுபாஷ்தான் என் சம்பந்தி. என் மகன் ரவிச்சந்திரன்தான் மாப்பிள்ளை” பெருமையாய் மீசையை முறுக்கிக் கொண்டார் ஒருவர்.

” நான் இவர் தம்பி. இந்த கல்யாணம் முடிந்ததும் இந்த தோப்பும் வீடும் எங்களுக்கு சொந்தமாகிவிடும்” இன்னொருவர் அட்டகாசமான சிரிப்புடன் உரிமை கொண்டாடினார்.

 “அடிங்… யார் சொத்துக்கு யார் உரிமை கொண்டாடுவது?” ஜெயசூர்யா விரலாட்டி மிரட்ட அந்த இருவரும் இவனை அடிப்பது போல் வந்து விட்டனர்.

” யாருய்யா நீ கல்யாணத்திற்கு வந்தோமா சாப்பிட்டோமா போனோமானில்லாம…”




“உங்கள் சம்பந்தி மிஸ்டர் சுபாஷை கூப்பிட்டு நான் யார் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்”

” அவரிடம் என்னய்யா கேட்பது, நீயே சொல்லேன். யார் நீ?” தம்பிகாரர் எழுந்து நின்று ஜெயசூர்யாவின் தோளில் கை வைத்து இழுக்க பட்டென்று அந்த கையை தட்டிவிட்ட ஜெயசூர்யா தன் ஆறடிக்கும் அதிகமான உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கர்வமாய் சொன்னான்.

” இந்த தோப்பின் சொந்தக்காரன்.நான் பிறப்பதற்கு முன்பே எனக்காக வாங்கப்பட்ட தோப்பு இது. நான் பிறந்து வளர்ந்ததே இங்கேதான்” அறிவித்துவிட்டு குரலை உயர்த்தி அலறலாய் அழைத்தான். “மிஸ்டர் சுபாஷ்”

 மணமேடையில் நின்றிருந்த சுபாஷும் சுசீலாவும் அவசரமாக ஓடி வந்தனர். “இந்த தோப்பிற்கும், தோப்பு வீட்டிற்கும் சொந்தக்காரர் யார்?” சபையில் உள்ளவர்கள் எல்லோருக்கும் கேட்குமாறு குரல் உயர்த்தி கேட்டான்.

 சுபாஷின் முகம் கறுத்தது. “தம்பி அதையெல்லாம் நாம் பிறகு பேசிக் கொள்ளலாம்.இப்போது என் மகளின் கல்யாணம் முடியட்டும்” குறைந்த குரலில் கெஞ்சலாக கேட்டார்.

கல்யாணம் முடிந்த பிறகு என்னத்தையா பேச போகிறாய்? உன் மகளின் கல்யாண சீராக இந்த தோப்பையும் வீட்டையும் தருவதாக பேசித்தானே கல்யாண ஏற்பாடு செய்தாய்? இப்போது என்னவென்றால் அந்த சொத்திலேயே வில்லங்கம் இருக்கும் போல் தெரிகிறதே” சம்மந்தி என்று சொல்லிக் கொண்டவர் எகிறினார்.

” சம்மந்தி தயவுசெய்து கோவிச்சுக்காதீங்க. நான் உங்களுக்கு எல்லா விபரமும் பிறகு சொல்றேன். முதலில் கல்யாணம் நடக்கட்டும்”

” அது எப்படிய்யா கல்யாணம் நடக்கும்? தோப்பு இல்லாவிட்டால் கல்யாணமும் கிடையாது. எனக்கு இப்போதே இந்த தோப்பு,வீடு பத்திரத்தை கொண்டு வந்து காட்டு” 

ஓரமாக முழங்கிக் கொண்டிருந்த மங்கள வாத்தியம் நிறுத்தப்பட அந்த இடம் முழுவதும் அமைதி நிலவியது. சுபாஷ் கெஞ்சுதலாக ஜெயசூர்யாவை பார்க்க அவன் இரக்கமின்றி முகத்தை கடுமையாக வைத்திருந்தான்.

” மகளின் திருமணத்திற்கு வேண்டுமென்று கெஞ்சி கேட்டிருந்தால் நானே பிச்சையாக இந்த சொத்துக்களை கொடுத்திருப்பேன். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டு நீ உன் மகளுக்கு சீர் செய்வாயானால் நிச்சயம் அதனை அனுமதிக்க மாட்டேன். சம்பந்திகள் பேசி முடிவெடுங்கள்”

 சொல்லிவிட்டு மீண்டும் சேரில் அமர்ந்து தோரணையாக கால் மேல் கால் போட்டுக் கொண்டான். திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கிடையே கசமுசா வென்ற பேச்சு சத்தம் பரவியது. ஜெயசூர்யாவின் காதில் விழுந்த பேச்சுக்களின் சாராம்சம் இதுதான்.

 தோப்பிற்கான குத்தகை உரிமையை சுபாஷிடம் கொடுத்துவிட்டு சபரிநாதன் பல வருடங்களாகவே இந்த பக்கமே வராமல் இருந்து விட்டார்.அவ்வப்போது விவரம் கேட்டுக்கொண்டு சுபாஷ் தரும் பணத்தை வாங்கிக் கொள்வதோடு சரி. ஐந்து வருடங்களுக்கு முன்பு சபரிநாதனின் மனைவி தவறி விட பிறகு இந்த சொத்துக்கள் மேல் அவருக்கு இருந்த பிடிப்பும் போய்விட்டது. சுபாஷிடம் போன் வழியாக பேசுவதை கூட விட்டுவிட்டார்.

 சுபாஷும் குத்தகை பணத்தை கூட கொண்டு வந்து கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். போக ஊருக்குள் இந்த தோப்பையும் வீட்டையும் தானே வாங்கிக் கொண்டதாக செய்தியை பரப்பி விட்டார்.ஆக கடந்த ஐந்து வருடங்களாக இந்த முந்திரி தோப்பின் சொந்தக்காரராக சுபாஷ் ஊருக்குள் அறியப்பட்டார். இந்த சொத்துக்களை காட்டித்தான் மகளுக்கு வசதியான இடத்தில் மணம் பேசி இருக்கிறார்.

இப்போது உண்மையை தெரிந்து கொண்ட மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்தை நிறுத்தவா என்று நிற்கின்றனர். 

“டேய் இந்த ப்ராடு பயலோட பொண்ணு நமக்கு வேண்டாம்.எழுந்து வாடா…” மணமேடையில் இருந்த மகனைப் பார்த்து கத்தினார் அப்பா. 

ரவிச்சந்திரன் தயக்கத்துடன் தன் அருகில் அமர்ந்திருந்தவளை திரும்பி பார்த்தான்.சந்தியா முகம் அவமானத்தில் சிவந்திருக்க கண்களை உயர்த்தாமல் பூமியை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

” அங்கே என்னடா பார்வை? எழுந்து வாடா”

 இதற்கு மேலும் தந்தையின் பேச்சை மீறும் தைரியம் ரவிச்சந்திரனுக்கு இல்லை போலும். மெல்ல எழுந்து நின்றவன் கழுத்து மாலையை சுழற்றி கீழே போட்டான். இன்னமும் சந்தியா மேலிருந்த பார்வையை விலக்க மனமில்லாமல் நடந்து மணமேடையை விட்டு கீழே இறங்கினான்.

 பத்து நிமிடங்களில் மணமகன் வீட்டினர் அந்த இடத்தை விட்டு வெளியேறி போய்விட்டனர். உண்மையான சொத்துக்காரரிடம் பேசி சொத்துக்களை வாங்க முடிந்தால் எங்களுக்கு சொல்லி விடுங்கள், உடனே வந்து என் மகன் தாலி கட்டுவான். சுபாஷிடம் அறிவித்துவிட்டு சென்றனர்.

சை… எவ்வளவு மோசமான மனிதர்கள்! வெளியேறியவர்களை வெறுப்புடன் பார்த்துவிட்டு பார்வையை திருப்பிய ஜெயசூர்யா வியந்தான்.சுபாஷ் குரோதத்துடன் இவனை பார்த்தபடி இருந்தார்.

” அடப்பாவி என் மகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே ,நன்றாக இருப்பாயா நீ?” இரு கை உயர்த்தி சாபமிட, சுசிலா குனிந்து தரையில் இருந்த மண்ணை வாரி அவன் மேல் தூற்றினாள். “உருப்பட மாட்டடா நீ”




 ஜெயசூர்யா குழம்பினான். “இங்கே பாருங்கள் இதில் என் தவறு என்ன இருக்கிறது? இந்த மாதிரி இடத்தில் உங்கள் மகள் திருமணம் முடியாமல் போனதே நல்லது என்று சந்தோஷப்படுங்கள்”

” ஆஹா என் மகள் திருமணம் நின்றதற்கு நானே கொண்டாட வேண்டுமா? மனிதனா நீ? ஒரு மணி நேரம் வாயை மூடிக் கொண்டு இருந்திருந்தாயானால் இந்நேரம் என் மகள் கழுத்தில் தாலி ஏறி இருக்குமே!”

” என்ன சார் இது? தாலி ஏறினால் போதுமா? உங்கள் மகள் நிம்மதியாக வாழ வேண்டாமா?”

” திருமணம் என்ற ஒன்று நடந்து விட்டால் எப்படியாவது அந்த வாழ்க்கையை ஆணும் பெண்ணும் வாழ்ந்து தானே தீரவேண்டும். என் மகளும் நன்றாகவேதான் வாழ்ந்திருப்பாள். நீதான் இடையில் வந்து அவள் வாழ்க்கையை கெடுத்து விட்டாய்”

 இவர்கள் அறியாமையை எப்படி போக்குவது என்று புரியாமல் விழித்தான் ஜெயசூர்யா. தொடர்ந்து சுபாஷ் பக்கத்து ஆட்கள் அனைவரும் அவனை குற்றவாளியாகவே பார்க்க…பேச ஒரு கட்டத்தில் அவனுக்கே தான் தவறுதான் செய்து விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.

மணப்பெண்ணும்,மாப்பிள்ளையும் காதலர்கள்.அந்த காதல் வரும் பிரச்சனைகளை களைந்து அவர்களை வாழ வைத்துவிடாதா என்ன?சுபாஷ் அந்த தைரியத்தில்தான் இருந்தாரோ? ஜெயசூர்யா மனம் குழம்பி நின்ற போது சுபாஷ் அவன் சட்டையை பிடித்தார்.

“என் மகளை காலம் முழுவதும் வெறும் கழுத்துடன் நிற்க வைத்து விட்டாயேடா பாவி” இதே ரீதியில் வேறு சிலரும் அவனை ஏசத் துவங்கினர். 

” எல்லோரும் வாயை மூடுங்கள். இப்போது உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்? உங்கள் வீட்டுப் பெண் கழுத்தில் குறித்த நேரத்தில் தாலி ஏற வேண்டும் அவ்வளவுதானே? அதை கட்டுபவனை பற்றிய கவலை உங்களுக்கு கிடையாது அப்படித்தானே?திருமணம் மட்டுமே உங்கள் நோக்கமென்றால் அந்த தாலியை நானே உங்கள் பெண் கழுத்தில் கட்டுகிறேன். பிறகாவது எல்லோரும் சந்தோஷப்படுங்கள்”

 அவனை அறியாமல் வந்துவிட்ட வார்த்தைகள்தாம் இவை. பேசிய 

பின்தான் தன்னுடைய பேச்சையே உணர்ந்தான். இதென்ன இப்படி பேசியிருக்கிறேன் மானசீகமாக தன்னையே அவன் கொட்டிக் கொண்ட போது “ஓஹோ, முடியாது என்று சொல்லிவிடுவோம் என்று நினைத்தாயா? நீ செய்த பாவத்திற்கு நீதான் பிராயச்சித்தமும் தேட வேண்டும். வா இப்போதே என் மகளுக்கு வாழ்க்கை கொடு”

 சுபாஷ் அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மணமேடைக்கு சென்றார்.அவர் மனதிற்குள் ஜெயசூர்யாவின் திரண்ட சொத்துக்களும் தொழில்களும் நடனமிட்டுக் கொண்டிருந்தன.நான் சபாநாயகத்தின் சம்பந்தியா? இந்த வாய்ப்பை விட அவர் தயாராக இல்லை.

 மணமேடையில் ஜெயசூர்நாவை மகளருகே தள்ளி அமர வைத்தார்.அவர் வேகத்தை நம்ப முடியாமல் ஜெயசூர்யா திகைப்புடன் பார்த்திருக்க,தள்ளியதால் அவன் தோள் மேலே உரசியதும் அவ்வளவு நேரமும் அமைதியாக தலை குனிந்து இருந்த சந்தியா பெரிய விம்மலுடன் வெடித்து அழுதாள்.

 தந்தையை நோக்கி இரு கைகளை கூப்பினாள். “அப்பா வேண்டாம்பா, மேலும் மேலும் பாவம் செய்யாதீர்கள். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்”

” ஏய் வாயை மூடு!எனக்கு எல்லாம் தெரியும். அதிகப் பிரசங்கித்தனம் செய்யாதே! ஒழுங்காக நான் காட்டுமிடத்தில் கழுத்தை நீட்ட வேண்டும்” சுபாஷ் கத்திக் கொண்டிருக்கும்போதே சுசிலா மகளின் தலையை அழுத்தி பற்றி குனிய வைத்தாள்.

“கல்யாணப் பெண்ணாக லட்சணமாக தலை குனிந்து இரு” என்றவள் “நீங்க தாலியை கட்டுங்க.கல்யாணமானால் எல்லாம் சரியாயிடும்” என்றாள் ஜெயசூர்யாவிடம். 

அழுகையில் குலுங்கி கொண்டிருந்தவளை அணைத்து தேறுதல் சொல்ல துடித்த ஜெயசூர்யா, அந்த உரிமை தனக்கு கிடைக்க இந்த தாலி அவசியம் என்பதனை உணர்ந்தான்.நிறைய குழப்பமும் பெரிய மகிழ்வுமாக சந்தியாவின் கழுத்தில் தாடியை கட்டினான்.




What’s your Reaction?
+1
27
+1
18
+1
2
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!