Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 22 (நிறைவு)

22

 

” இந்தப் பால் முழுவதையும் ஒரு சொட்டு விடாமல் குடித்து விட வேண்டுமாம் .அத்தை கொடுத்து விட்டிருக்கிறார்கள் .எவ்வளவு பெரிய டம்ளர் பாருங்கள் .இதை நான் எப்படி குடிப்பது ? ” சிணுங்கலாக கணவனிடம் புகார் கூறினாள் வாசுகி.

அவன் அவளது பேச்சு காதிலேயே விழாதது போல் அமர்ந்து இருந்தான்.

 




” தேவ் உங்களிடம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ” 

 

” யாரோ ஒருவரைப் பற்றிய புகழ்தல் பேச்சில் எனக்கு அக்கறை இல்லை ” விட்டேற்றியாய் பதில் சொன்னான் தேவராஜன்.

 

 

” அப்பா எவ்வளவு கோபம் வருகிறது உங்களுக்கு ? ” வாசுகி செல்லமாக கணவனின் மீசையைப் பிடித்து இழுத்தாள்.

 

” ஏய் போடி அந்த பக்கம் .எப்போது பார்த்தாலும் எனக்கு எதிர் பேசிக்கொண்டு ….” குறையோடு முகம் திருப்பிக் கொண்டவனின்  கன்னம் பற்றி  திருப்பி வெற்றியோடு முட்டினாள் .

 

” என் தேவ குமாரனுக்கு என்ன கோபம் ? “

 

” ஏய் என் பெயரை இப்படி மாற்றி சொல்வதில் உனக்கு என்னடி அப்படி ஒரு ஆனந்தம் ? ” 

 

” அது என்னவோ தேவராஜனைவிட தேவகுமாரன் உங்களுக்கு பொருத்தமாக தெரிந்தது. நான் முதன் முதலில் உங்களை  என்  அம்மா வீட்டில் சந்தித்தபோது அப்படித்தான் ஒரு தேவ குமாரனை போலத்தான் எனக்குத் தெரிந்தீர்கள் ” 

 

” பார்ரா என்னை இந்த அளவு ரசித்துப் பார்த்துவிட்டு காதலித்தேனா  என்று சந்தேகம் கேட்கிறாய் ” 

 

” இதுதான் காதலா தேவ்எனக்குத் தெரியவில்லையே ” அப்பாவியாய் விழி விரித்தாள் வாசுகி.

 

” காதல் என்றால் என்னவென்று காட்டட்டுமா ? ” வேகமாக நெருங்கிய கணவனை போலியான அச்சத்துடன் பார்த்தாள்.

 

” காதல் காதல் என்று அடிக்கடி பிதற்றிக் கொண்டு இருந்துவிட்டு உங்களுக்கு ஒரு காரியமாக வேண்டும் என்றதும் எளிதாக என்னை எங்கள் அம்மா வீட்டிற்கு விரட்டி விடுவீர்களா ? ” 

 

தேவராஜன் பெருமூச்சுவிட்டான். வாசுகியை மேலிழுத்து தன் மார்பில் போட்டு அணைத்துக் கொண்டான். ”  இந்த விவரம் நான் உனக்கு தெளிவாக்க வேண்டும் வசு. நமது திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்து கொண்டிருந்தாய் .அது ஏதோ சிறுபிள்ளைத்தனம் என்று வலுக்கட்டாயமாக உன் கழுத்தில் தாலி கட்டி விட்டு தவறு செய்து விட்டோமோ .. என்ற கவலை எனக்கு அப்போது வந்திருந்தது. ஏனென்றால் நீ நம் திருமணத்தின் பின்பு என்னிடம் இருந்து ஏதேதோ காரணம் காட்டி விலகி போனாய்.

 




ஆனால் அன்று  நாம் இருவருமாக கோவிலுக்கு சினிமாவிற்கு என்று போய் விட்டு வந்தோமே அந்த நாளில் இது போல் உன் மேல் இருந்த சந்தேகங்கள் எல்லாம் எனக்கு மறைந்துவிட்டன .நாம் இருவரும் ஒருவரை ஒருவர் மிக விரும்புவதை அன்று மனமாற  உணந்து கொண்டேன். அன்று இரவே உன்னிடம் மனம் விட்டு பேச நினைத்திருந்தேன். ஆனால் நீ மீண்டும் தனியே படுத்துக் கொண்டாய் .இதன் பிறகு நான் உன்னை சரியாக கவனிக்க ஆரம்பித்தேன்.

 

நீ முன்பே சொன்ன குற்றச்சாட்டுகளை யோசிக்க தொடங்கினேன். அதில் உண்மை இருக்குமோ என்ற எண்ணத்துடன் யோசிக்க ஆரம்பித்தேன் .இங்கே நீ மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியதுஇந்த சூழ்நிலையை விட்டு உன்னை சில காலம் விலக்கி வைக்க நினைத்தேன் .அதனாலேயே உன்னை உன் அம்மா .வீட்டிற்கு அனுப்பினேன் .அதற்கு அன்றைய சூழல் எனக்கு ஒத்துப் போனது” .

 

” ராதாவை பற்றி ஏன் என்னிடம் சொல்லவில்லை ? ” வாசுகி கேட்க அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான் தேவராஜன்

 

” ஏண்டி அவள் சாப்பிட வழியில்லாமல் நடு ரோட்டில் மயங்கி சாய்கிறாள் .அவளை அழைத்துக் கொண்டு போய் ஒரு ஜூஸ் வாங்கி கொடுத்தால் இப்படித்தான் தப்புத்தப்பாக அவள் வீடு தேடிப் போய் பேசுவாயா நீ ? ” 

 

” எனக்கு அன்று நீங்கள் இருவரும் ரோட்டோரம் பேசிக்கொண்டு நடந்ததைப் பார்த்த போது நாம் இருவரும் ரோட்டில் பேசிக்கொண்டு நடந்தது நினைவு வந்துவிட்டது .அதனால் மனதை ஏதோ செய்தது ”  தனது செயலுக்கு விளக்கம் கொடுத்தவள்  அந்த ராதா உங்களை எப்படி காதலித்தால் என்று எனக்குத் தானே தெரியும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

 

ம்உன் சந்தேகமும் அன்றைய பொழுதிற்கு நன்மையாக தான் தெரிந்தது .அதைச் சாக்கிட்டு உன்னை வீட்டை விட்டு அனுப்ப முடிந்தது .” 

 

” அன்று நான் உங்களுக்கு எவ்வளவு தெளிவாக உங்கள் அம்மாவை பற்றி  ஆதாரங்களோடு சொன்னேன் .நம்பவே இல்லையே நீங்கள் ” வருத்தத்தோடு பேசினாள்.

 

” அன்று மட்டும் இல்லை வசு .அதற்கு முன்பும் நீ அம்மாவை பற்றி திலகாவை பற்றி குறை சொல்லும் போதெல்லாம் நான் ஒரேடியாக உன்னை மறுப்பதன் காரணம் உனக்கு மாமியார் நாத்தனார் போன்ற உறவுகளின் மீது அந்த அளவு பிடித்தம் இல்லை என்று முன்பே நான் கணித்து வைத்திருந்த்துதான் ” 

 

” அட இது எப்போது ? ” 

 

” முதலில் தியேட்டரில் நாம் சந்தித்தபோது நீங்கள் உங்கள் தோழிகளுக்குள் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தீர்கள் . படத்தில் ஏதோ ஒரு மாமியார் வந்தபோது நான் எல்லாம் என் மாமியாரை வீட்டை விட்டு விரட்டி விடுவேன். நாத்தனாரை நாட்டை விட்டே விரட்டி விடுவேன் என்று உங்களுக்குள் கேலி  பேசி சிரித்துக்கொண்டீர்கள் . அதில் உனது குரல் தான் ஓங்கி ஒலித்தது. பிறகு ஒருநாள் உங்கள் வீட்டிற்கு வரும்போது இதே போலத்தான் ஏதோ நீ பேசிக் கொண்டிருந்தாய். அதனை முன் வாசலில் நின்று கேட்டுவிட்டு பிறகு பின் வாசல் வழியாக உள்ளே வந்தேன். இதுபோன்ற சம்பவங்களால் இயல்பாக கணவன் வீட்டினரை குறை சொல்லும் பெண் என்று  உன்னை எண்ணி கொண்டு இருந்தேன் .அதனால்தான் நீ அம்மாவை பற்றி தம்பி தங்கையை பற்றி என்ன குறை சொன்னாலும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தேன் ” 

 

” அடக்கடவுளே சும்மா விளையாட்டிற்காக பேசியது இப்படி எனக்கு வினையாகி போனதே ” வாசுகி போலியாக தலையில் கை வைத்துக் கொண்டாள்.

 




” ஆனால் அன்று நீ  ஆதாரங்கள் என்று என்னிடம் சொன்ன போது உன் பக்கமும் நியாயம் இருப்பதை நான் உணர ஆரம்பித்தேன் . அந்தச் சூழ்நிலையில் உன்னை இங்கே வைத்திருக்க விரும்பவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உன் அப்பாவுடன் அனுப்பிவைத்தேன். அதன் பிறகு என் வீட்டில் அம்மாவையும் அவர்கள் சொந்தக்கார பெண்ணையும் கவனிக்க தொடங்கினேன் .நீ சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்று புரிந்து கொண்டேன் ” 

 

இவர்களுக்காக நான் குழந்தையையே ஐந்து வருடங்கள் தள்ளிப்போட இவர்கள்

 எனக்கு குழந்தை இல்லாமல் பண்ணுவார்களா என்ற வேகத்தில் தான் உன்னை தேடி வந்து…” 

 

” குழந்தைக்கு ஏற்பாடு செய்து கொண்டீர்களாக்கும்  ” வாசுகி செல்லமாக முறைக்க தேவராஜன் மென்மையாக அவள் வயிற்றை வருடினான்.

 

” நம் குழந்தை வசு . இதனை சில வருடங்கள் தள்ளிப் போட நினைத்ததே தவறுதான். நம் ஐந்தாண்டு திட்டத்தை எல்லாம் உடைத்து குழந்தை உருவாவதற்கான நேரம் இயல்பாக அமைந்து விட்டது பார்த்தாயா ? “

 

ம்க்கும்எல்லாத்தையும் முன்னதாக திட்டம் போட்டு நடத்திவிட்டு தானாக அமைந்தது போல் இது என்ன நாடகம் ? ” 

 

” உன்னை தேடி தேடி உன் அம்மா வீட்டிற்கு வந்ததெல்லாம் திட்டம் போட்டது கிடையாது வசு .அது என் மனம் சொன்னபடி தானே  நடந்தது தான் .என்னை அறியாமலேயே என் கால்கள் உன்னைத் தேடி தேடி அங்கே ஓடி வந்தன தெரியுமா ? “

 

” அதெல்லாம் இருக்கட்டும் தேவ் .கடைசியாக அந்த பொய்அதை ஏன் சொன்னீர்கள்நான் எப்படி துடித்து போனேன் தெரியுமா ? ” வாசுகிக்கு  இப்போதும் கண்ணில் நீர்வந்தது.

 

” அம்மாவிற்கு உணமே   உணர்த்த எனக்கு வேறு வழி தெரியவில்லை வசு. நீ குழந்தை உண்டாகி இருப்பது தெரிந்ததும் அம்மா உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடுவார்கள் என்று தெரியும் .அப்போது அவர்களது அடிமன எண்ணங்களை  முழுதாக தெரிந்து கொள்ளத்தான் அப்படி ஒரு பொய் சொல்ல நானும் உன் அப்பாவும் தீர்மானித்தோம் ” 

 

” ஓஹோ அப்பாவும் இதில் உங்களோடு கூட்டா? ” 

 

” அவரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லாவிட்டால் அவர் மகளை என்னை சந்திக்க விடுவாராஅந்த அளவு என் மீது கோபத்தில் இருந்தார் ” 

 

”  அன்று நீங்கள் சொன்ன அந்த பொய்யினால் தான் உங்கள் அம்மா மனம் மாறினார்கள் என்று நினைக்கிறீர்களா ? ” 

 

அவர்கள் மனம் மாறவேண்டும் திருந்த வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது.

என்னை வைத்து பெரிய அளவில் ஐந்தாண்டு திட்டம் போட்டார்களே  நானே இல்லாமல் போய்விட்டால் அவர்கள் திட்டம் எல்லாம் காணாமல் போய்விடுமே .. . தங்க முட்டை இடும் வாத்து நான் என்பதை அவர்களுக்கு உணர்த்த நினைத்தேன் . அம்மா நிதர்சனத்தை உணர்ந்து கொண்டார்கள்மனதளவில் பலமாக அடிபட்டு போனார்கள் .அதன் விளைவுதான் என் கால்களில் கூட விழ துணிந்தார்கள்.”

 

இல்லை .உங்கள் எண்ணம் தவறு தேவ் .பாசமே இல்லாத மனது இத்தனை வருடம் மகனை வளர்த்து ஆளாக்கி இருக்காது .இத்தனை வருடங்களில் உங்கள் அம்மாவின் பாசத்தில் சிறு பிழையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? ” 

 

தேவராஜன் மௌனமாக இருந்தான்.

 

” உண்மையை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள எப்போதும் தயங்கக்கூடாது தேவ் . உங்கள் பாசத்தை நீங்கள் அம்மாவிற்கு தெளிவாக காட்டி இருக்க வேண்டுமே தவிர இப்படி மிரட்டி இருக்கக் கூடாது ” 

 

”  என்னுடைய அந்தப் பணியைத்தான் நீ எடுத்துக் கொண்டாயேஎன் புருஷனையா  குறை சொல்கிறீர்கள் என்று என்னைப்பற்றி அம்மாவிற்கு புட்டுப்புட்டு வைத்தாயே . உன் விளக்கத்தில் நானே பிரமித்து நின்று இருந்தேன் வசு . அப்போது எனக்கு அம்மாவின் மேல் மேலும் மேலும் வெறுப்பு வந்தது . ” 

 

” இதெல்லாம் தப்பு தேவ் .கணவனை இழந்த பிறகு வாழ்வில் பிடிப்பாக பெண்களுக்கு இருப்பவர்கள் பிள்ளைகள் தான். அவர்களை தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள் .உங்கள் அம்மாவிடம் அந்த எண்ணம் கொஞ்சம் அதிகம் .அவ்வளவுதானே தவிர அவர்கள் பெரிய வில்லி எல்லாம் கிடையாது .நீங்கள் அவர்களை…  முழுவதும் மாறிவிட்ட அவர்களை இப்போதும் தவிர்ப்பது சரி கிடையாது ” 

 

சொன்ன மனைவியை இழுத்து இறுக அணைத்தான் தேவராஜன் .” எவ்வளவு உயர்ந்த எண்ணம் உனக்கு வசு. .உன்னை போய் குடும்பத்தை பிரித்து விடுவாய் என்று நான் தவறாக நினைத்தேனே ” 




அப்போது என் மீது இப்படி ஒரு அபிப்ராயம் வைத்துக்கொண்டு என்னை எப்படி திருமணம் முடிக்க விரும்பினீர்கள் ? ” 

 

” அதற்குக் காரணம் காதல். உண்மையான காதல் தன் இணையிடம் குற்றம் குறைகளை பொருட்படுத்தாது வசு. வான் மழை போல் தூய்மையானவள்  நீ .தூய்மையில் உனக்கு நான் ஈடாவேனோ  என்னவோஎன் காதல் ஈடு செய்யும் ..மழைத்துளி போல் தூய்மையானது என் நேசம் ” 

 

உணர்வு பொங்க பேசிக்கொண்டிருந்த கணவனின் இதழ்கள் மேல் தன் இதழ்களை வைத்து அழுந்த மூடினாள் வாசுகி.

 

” நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்த முத்தம் ” 

 

” அடிப்பாவி எப்போது  கேட்டதற்கு எப்போது கொடுக்கிறாய் ? ” 

 

” கேட்டபோதெல்லாம் கிடைத்து விட்டால் அதன் மேல் இருக்கும் கவர்ச்சி போய் விடுமே ” 

 

” எனக்கென்னவோ நமக்குள் இந்த கவர்ச்சி இன்னும் ஒரு ஐம்பது வருடங்களுக்கு போகாது என்றே தோன்றுகிறது”  கண்சிமிட்டி அழைத்தவனின் மார்பில் தஞ்சம் அடைந்தாள் வாசுகி.

 

அப்போது படபடவென அவர்கள் அறைக்கதவு தட்டப்பட தேவராஜனின் முகத்தில் வெறுப்பு வெளிப்படையாக தெரிந்தது.

 

” திருந்தி விட்டதாக சொன்ன உன் மாமியாரின் வேலைதான் இது .

 எதுவாக இருந்தாலும் இரண்டே வார்த்தைகளில் பேசி அனுப்பிவிட்டு வா .அவர்கள் முகத்தில் விழிக்கவே எனக்கு பிடிக்கவில்லை ” காழ்ப்புடன் பேசி விட்டு வாசலுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டான்.

 

” அண்ணா அம்மாவிற்கு உடம்பு சரியில்லை மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ”  திலகா பதட்டத்துடன் நிற்க வாசுகி பதற தேவராஜன் கொஞ்சம் தயங்கி பிறகு

வேகமாக கீழே ஓடினான்.

 

” அம்மா உங்களுக்கு என்ன ஆயிற்று  ? கவலைப்படாதீர்கள்இதோ இப்போதே ஹாஸ்பிடல் போய் விடலாம் . கௌதம் டாக்சிக்கு சொல்லு ” 

தாயை குழந்தையாக்கி கைகளில் ஏந்திக்கொண்டு மருத்துவமனை கிளம்பிய கணவனை பெருமிதத்துடன் பார்த்திருந்தாள் வாசுகி.

 

இப்போதுதான்  இன்னமும் அதிகமாக அவளுக்கு கணவன் மேல் காதல் வந்தது.

 

 

                                             – நிறைவு – 




 

 

 

 

What’s your Reaction?
+1
21
+1
13
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!