Serial Stories

சதி வளையம்-8

8 அய்யாக்கண்ணு சொன்னது

“உள்ளே வா, அய்யாக்கண்ணு” என்றான் தர்மா.

அய்யாக்கண்ணு உள்ளே வந்து, மூன்று பேருக்கும் பொதுவாக ஒருமுறை கைகுவித்துவிட்டு, அடக்கமாய் நின்றுகொண்டான்.

“உட்காரு” என்றாள் தன்யா. அவன் உட்காரவில்லை.

கண்கள் சிவந்திருந்தன. வேட்டி சட்டை அழுக்காயிருந்தது. முகத்தில் சோகத்தோடு சற்று கோபமும் இருந்தது. அது அவன் பேசும் போதும் வெளியானது.

“யாரு? அந்தக் குடும்பத்துக்கு நாயா உழைச்ச என் குடும்பத்தைக் கலைச்சது யாருங்க? பத்தரை மாத்துத் தங்கமுங்க என் ஏமா. அவளை இப்படிக் கொ… கொன்னு போட்டது யாருங்க? நீங்க போலீசு மாதிரி தானே? கண்டுபிடிச்சுச் சொல்லுங்கம்மா!” என்று உதடு துடிக்கக் கேட்டான்.

“நிச்சயம் கண்டுபிடிக்கத்தான் போறோம். உட்கார், அய்யாக்கண்ணு” என்றான் தர்மா.

அய்யாக்கண்ணு நிதானித்துக் கொண்டான். அப்படியே தரையில் அமர்ந்தான்.

“அய்யாக்கண்ணு, நாங்க கேட்கிற கேள்விகளுக்குப் பொறுமையாய், யோசித்துப் பதில் சொல்லணும். சரியா?” என்று கேட்டாள் தன்யா.

“சரிங்கம்மா” என்றான் அய்யாக்கண்ணு.

“பார்ட்டிக்கு எத்தனை மணிலேர்ந்து கெஸ்ட்டுங்க வர ஆரம்பிச்சாங்க?”

“ஆறு மணிலேர்ந்தே வரத் தொடங்கிட்டாங்கம்மா! சாப்பாட்டுக் கார் அஞ்சரைக்கே வந்திருச்சு.”

“நீ நிக்கற இடத்திலேர்ந்து பார்த்தா பாஸ்கரோட ரூம் வெளிக்கதவு தெரியும், இல்லே?” என்றான் தர்மா.

“நல்லா தெரியும். அதுக்கு நேரேதான் சார் நான் நிக்கறது.”

“பார்ட்டி நடக்கும்போது அந்தக் கதவு வழியா யார் யார் பாஸ்கர் ரூமுக்குள்ள போனாங்க?” – தன்யா.

“அநேகமா எல்லாருமே போனாங்கம்மா!”

“நல்லா யோசிச்சுச் சொல்லு. முதலிலே உள்ளே போனது யாரு?”

அய்யாக்கண்ணு முழுதாக ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “சின்ன ராசா” என்றான் அழுத்தமாக.

“அதாவது விஜய்?”

அவன் தலை ஆமோதித்து ஆடியது.

“அதுக்கப்புறம்?”

“பத்து நிமிசமிருக்கும், பெரியராசா உள்ளே போனாரு. கொஞ்ச நேரங்கழிச்சு ஏதோ பைல் போல, கையில் எடுத்துக்கினு வெளியே வந்தாரு.”

“அய்யாக்கண்ணு, உன்னை ஒண்ணு கேக்கட்டுமா?”

“சொல்லுங்கம்மா.”

“இப்போ பாஸ்கர் அறைக்கதவு நீ நிற்கிற இடத்திற்கு நேரே இருக்கு, நீ எல்லாம் பார்த்திருக்க. வீட்டோட முன்வாசற்கதவு? அது வழியா யாராவது உள்ளே போனா உனக்குத் தெரியாதே?”

“தெரியாது தான்மா. ஆனா புது ஆள் யாரும் உள்ளே வர முடியாது. வீட்டு மதில்சுவர் நீங்க பாத்தீங்க இல்ல? எத்தனை உயரம்? ஓ, நீங்க அன்னிக்குப் புல்வெளிலேர்ந்து யாராவது வீட்டுக்குள்ளே போயிருந்தான்னு கேக்கிங்களா? இல்லம்மா, முன் கதவை ஆறு மணிக்கே பூட்டிட்டோம். ராசாவே (பாஸ்கர்) இந்தக் கதவு வழியா தான் வெளில வந்தாரு. சுசாதாம்மா தான் கடைசியா முன் வாசல் கதவைப் பூட்டினாங்க.”




“சரி, வீட்டுப் பின் கதவு?”

“அதைச் சமையல் மாமியோ ஏமாவோ…” குரல் சிக்கிக் கொள்ள, மெதுவாய்த் தொடர்ந்தான் அய்யாக்கண்ணு, “யார் கடைசியா வராங்களோ அவங்க ஏதோ பட்டனை அமுத்திக் கதவைச் சாத்திடுவாங்க. அது பூட்டிக்கும். வெளிலேர்ந்து சாவியாலதான் திறக்க முடியும்.”

“அன்னிக்கு ஹேமா தானே அந்தக் கதவை மூடியிருக்கணும்?”

“ஆமாங்க.”

“சரி. நீ மேல சொல்லு. அப்புறம் பாஸ்கர் ரூமுக்கு யார் போனாங்க?”

“வந்துங்க, நான் பொண்ணு வீட்டுக்காரங்களை அளைச்சுக்கிட்டுப் புல்வெளில கொண்டு விட்டுட்டு வரும்போது, சுசாதாம்மா கிட்டத்தட்ட என் பின்னாடியே வந்தாங்க. நான் கேட்டுக்குப் போயிட்டேன். அவங்க ராசா ரூமுக்குப் போனாங்க. உடனே வந்துட்டாங்க. அப்புறம் கொஞ்சம் காருங்க வரிசையா வந்திருச்சு, நான் கேட்டைத் திறந்து மூடவே நேரம் சரியா இருந்தது. கொஞ்ச நேரங்கழிச்சு மேசரய்யா வெளியில வந்ததைப் பார்த்தேன். அப்புறம் டாக்டரய்யா. எட்டு மணிக்கு ராசாவும் பத்மாம்மாவும் உள்ளே போனாங்க, சிரிச்சுகிட்டே வெளியில வந்தாங்க. அப்புறம் பத்மாம்மா அம்மாவும், அவங்க அத்தைன்னு நினைக்கறேன், ரெண்டு பேரும் போனாங்க. கடைசில பத்மாம்மா தம்பியும் ராசாவும் போனாங்க.”

தர்ஷினி அவன் சொன்னதை ஒன்று விடாமல் தன் ‘டாப்’பில் குறித்துக் கொண்டாள்.

“ஒரு சந்தேகம், அய்யாக்கண்ணு” என்றாள் தன்யா. “நீ ஒரு கால் மணி நேரம் கேட்டில் இல்லையே, பொண்ணு வீட்டுக்காரங்க இருந்த அவுட் ஹவுஸ் வாசலிலே தானே இருந்தே. அந்த நேரம் யாராவது பாஸ்கர் ரூமுக்குப் போயிருந்தா?”

“அங்கிருந்தும் பாஸ்கரய்யா ரூம் கதவு தெரியும்மா. நான் அந்தப் பக்கம்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். நான் அங்கே நின்னுக்கிட்டுத் தான் சின்ன ராசாவும் பெரிய ராசாவும் உள்ளே போறதைப் பார்த்தேன்” என்றான் அய்யாக்கண்ணு தீர்மானமாக.

“நீ வேற எப்பவாவது கேட்டை விட்டுப் போனியா அய்யாக்கண்ணு?”

“இல்…” என்று ஆரம்பித்த அய்யாக்கண்ணு, “ஆமாம்மா, ஒரு தடவை போயிருந்தேன். ராசா ஒரு ஆறே கால் மணிக்கு என்னைக் கூப்பிட்டார். அவர் ரூம் வாசலுக்கு வந்தேன். ஒரு கேக்கு கையில கொடுத்து, அதை எடுத்துக்கினு புல்வெளில இருந்த டேபிள் மேல வைக்கச் சொன்னாரு. செஞ்சேன்.”

“அதுக்கப்புறம் பாஸ்கர் எப்போ வெளியில வந்தார்?”

“எனக்கு முன்னாடியே நடந்து போயிட்டாரும்மா.”

“சரி, அய்யாக்கண்ணு. இப்போ சொல்லு, பார்க்கலாம். பாஸ்கர் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“அய்யோ தங்கம்மா. அந்த மாதிரியெல்லாம் கிடைக்கவே கிடைக்காது. என்னைச் சொந்த அண்ணன் மாதிரி நடத்துவார். ஏமா கிட்ட மரியாதையா பழகுவார்….”

“சரி, பத்மாவை நீ பார்த்திருக்கியா? அவங்களைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“அவங்களும் நல்லவங்க தாம்மா. ராசாவுக்கு அவங்க மேல ரொம்பப் பிரியம். ஆனா அன்னிக்கு அவங்க குடும்பத்தோட ஏதோ சண்டை இருந்தது போல.”

“இந்த மோதிரம் களவு போனதைப் பற்றி தானே?”

“அய்யோ இல்லிங்கம்மா! அதுக்கு முன்னாடியே ஏதோ மனஸ்தாபம் இருந்தது போல. பொண்ணு வீட்டுக்காரங்க குசுகுசுன்னு பேசிக்கிட்டதிலேர்ந்து தெரிஞ்சுது. பத்மாம்மா தம்பி ஏதோ கோபமா பேசினாரு. என்ன விஷயம்னு தெரியல.”

“சரி, பெரியவரைப் பற்றிச் சொல்லு.”

“பெரிய ராசாங்களா? சிடுசிடுன்னு விழுவாரே தவிர நல்ல மனசுங்க.”

“விஜய்.”

“சின்ன ராசா ….” என்று இழுத்த அய்யாக்கண்ணு, “அவர் அவ்வளவு சொகமில்லீங்க. கண்ட கண்ட சிநேகிதம் எல்லாம் …” என்று நிறுத்திக் கொண்டான்.

“சுஜாதா.”

“அவங்க பாட்டி ராணியம்மா மாதிரியே கம்பீரம். சில நேரம் கையெடுத்துக் கும்பிடத் தோணும். ஆனா அவங்களும் ரொம்பக் கோபக்காரங்க தான். ரொம்பப் பொறுமை வேணும்மா அவங்களைச் சமாளிக்க. அவங்க புருஷன் எப்படித்தான் சமாளிக்கறாரோ? ஆனா அவர்கிட்டப் பிரியமாத்தான் இருக்காங்க.”




“அவரைப் பத்தித் தான் அடுத்துக் கேக்க நினைச்சேன்.”

“அவரும் ரொம்ப நல்லவர் தாம்மா. ஆனா இந்தத் தடவை வந்ததிலிருந்தே அய்யா ஏதோ கவலைல இருக்காப்போலே பட்டது. இல்லேன்னா ‘அய்யாக்கண்ணு, ரம்மி களிக்காம் வரு’ ன்னு தினசரி இழுத்துக்கினு போயிருவாரு.”

“ரம்மி மட்டும்தானா, இல்ல ரம்மும் உண்டா?” தன்யா புன்னகையோடு கேட்டாள்.

“எப்பவாவது உண்டும்மா” என்றான் அய்யாக்கண்ணு அசடுவழிந்து.

தன்யா சிரித்து அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள் அவளது கைபேசி ஒரு துள்ளல் வயலின் இசையை வெளியிட்டு அழைத்தது.

“யெஸ்” என்றாள் தன்யா.

“மிஸ் தன்யா, பாஸ்கர் ஹியர்” என்றது மறுமுனை.

“சொல்லுங்க மிஸ்டர் பாஸ்கர்” என்று கைபேசியை ஸ்பீக்கரில் போட்டாள் தன்யா.

“விஜய் இருக்கானா அங்க?” என்று பதட்டமாய்க் கேட்டான் பாஸ்கர்.

“இல்லையே! ஏன் அவரைக் காணோமா?” என்று அவசரமாய்க் கேட்டாள் தன்யா.

“நேத்து நைட்லேர்ந்து வீட்டுக்கே வரல. சித்தப்பா ஒரே பதட்டமாயிருக்கார். நீங்க கொஞ்சம் வரமுடியுமா?”

“உடனே வரோம். போலீசுக்குச் சொன்னீங்களா?”

“இல்ல. சித்தப்பா வேண்டாங்கறார்.”

கைபேசியை அணைத்தாள் தன்யா. அய்யாக்கண்ணு அயர்ந்து சிலையாய் நின்றான்.

“போலீசுக்கு நாம சொன்னா என்ன?” என்றாள் தர்ஷினி மெதுவாய்.

“கட்டாயம். கம்ப்ளெயிண்ட் கொடுக்க முடியாட்டியும் இன்ஃபர்மேஷன் கொடுக்கலாமே. அந்த இன்ஸ்பெக்டர் போஸ் நாம எல்லா விஷயமும் அவர்கிட்ட சொல்லணும்னு சொல்லியிருக்காரே” என்றாள் தன்யா.

தர்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

போஸ் இந்தச் செய்திக்கு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. “ஆல்ரைட், கவனிக்கறோம், தாங்க்ஸ்” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்.

“சே” என்றாள் தன்யா வெறுப்பாய். பிறகு, “வாங்க, பாஸ்கர் வீட்டுக்குப் போகலாம். அய்யாக்கண்ணு, நீயும் காரில் ஏறு” என்று சொல்லிப் புயலாய் வெளியேறினாள்.

மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள்.




 

What’s your Reaction?
+1
5
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!