Serial Stories சதி வளையம்

சதி வளையம்-6

6 போஸ் விஜயம்!

“சரக்”கென்று தெருவில் நுழைந்தது போலீஸ் ஜீப். அது நிற்கும் முன் குதித்த இன்ஸ்பெக்டர் “கான்ஸ்டபிள், கூட்டம் சேர விடாதீங்க. மருதையா, சீன் ஆஃப் க்ரைம் பாருங்க. யார்ய்யா ஃபோட்டோக்ராபர்? சேது, வீட்டச் சுத்தி ஏதாவது ஃபுட்பிரிண்ட்ஸ் கிடைக்கறதா பாரு. மண்தரை பாத்தியா! கிணறு பக்கத்திலே. சான்ஸ் இருக்கு” என்று படபடவென்று உத்தரவுகளைப் பொழிந்து விட்டு, சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டார்.

“இன்ஃபர்மேஷன் கொடுத்தது யாரு?” என்று கேட்கும்போதே அவர் பார்வை தர்மா-தன்யா-தர்ஷினி மேல் விழுந்தது. லேசாகப் புருவம் மேலேறியது.

தன்யா அவருக்கு முன்னால் வந்து நின்றுகொண்டாள். “நாங்க தான் இன்ஸ்பெக்டர்” என்றாள்.

“நாங்க தான்னா? பேரு, அட்ரஸ் ஒண்ணும் கிடையாதா?” என்றார் இன்ஸ்பெக்டர் கேலியாக.

தன்யா உதட்டைக் கடித்துக் கொண்டாள். “ஸாரி. நான் தன்யா. என் கார்ட்” என்று விஸிட்டிங் கார்டை நீட்டினாள்.

மேலோட்டமாய்ப் பார்த்துவிட்டு அருகிருந்த கான்ஸ்டபிளிடம் வீசியெறிந்தார். “ஓ, டிடக்டிவ் ஏஜன்சி! இன்னைக்குத் தெருவிலே தடுக்கி விழுந்தா நீங்க தான். எப்போலேர்ந்து பொண்ணுங்கல்லாம் இதிலே இறங்கிருக்கிங்க?” என்றார்.

“நீங்க லேடி போலீஸ் எம்ப்ளாய் பண்ணினதிலேர்ந்து ஸார்” என்றான் தர்மா, அருகில் வந்தவாறே.

கோபமோ, கேலியோ ஒரு மில்லிமீட்டர் கூட இல்லாமல் அவன் பேசியிருந்தாலும், இன்ஸ்பெக்டர் முகம் சட்டென்று சுருங்கியது. “இவர் யாரு, ஆபீஸ் பாயா?” என்று கேட்டுவிட்டுத் தன் ஜோக்குக்குத் தானே இடிபோல் சிரித்தார்.

“ஐ அம் தர்மா” என்று சொல்லிவிட்டுக் கையையும் நீட்டினான் தர்மா. இன்ஸ்பெக்டர் பற்றிக் குலுக்கினார். “இன்ஸ்பெக்டர் போஸ்” என்றார் சுருக்கமாக. “ஃபோன் பண்ணினது யாரு?”

“நான் தான் ஸார்” என்றாள் தர்ஷினி.

“மிஸ் தர்ஷினி?”

“யெஸ் ஸார்.”

“ரைட். எங்க ப்ரொஸீஜர் முடிச்சுட்டு உங்க மூணு பேரையும் என்கொயர் பண்றேன். வெய்ட் பண்ணுங்க.”

சாயந்திரம் ஏழேகால் மணிக்குக் காத்திருக்க ஆரம்பித்தவர்களின் ஞாபகம் இரவு ஒன்பதரை மணிக்குத் தான் இன்ஸ்பெக்டருக்கு வந்தது.

“யாருப்பா அங்க, அந்த டிடக்டிவ்கள வரச்சொல்லு” என்றார் ஆயாசமாக.

மூன்று பேரும் காத்திருந்து காத்திருந்து பஞ்சடைத்த விழிகளும் தள்ளாடும் நடையுமாக வந்து சேர்ந்தார்கள்.

“மிஸ்… தன்யா, இல்லே? ரைட். ஏன் இந்த ஹேமாவைக் கொலை பண்ணினீங்க?”

========================




“போஸாம், போஸ்! அவன் மூஞ்சியும் அவனும்” என்று பொருமினாள் தன்யா.

வீட்டுக்கு வந்திருந்தார்கள். படுக்கப் போகக்கூடத் தோன்றாமல் ஹால் சோபாவிலேயே சாய்ந்திருந்தார்கள்.

“ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கறானாம்! அவன் கேள்வியில் இடிவிழ!” என்று சபித்தாள் தர்ஷினி.

தர்மா சிரித்தான்.

“சிரிக்காதே, பத்திக்கிட்டு வருது!” என்று எரிந்து விழுந்தாள் தன்யா.

“இங்க பாரு, இன்ஸ்பெக்டர் நம்மைச் சந்தேகப்படக் காரணம் இருக்கு. அவ வேலை முடிஞ்சு சாதாரணமா ஆறு, ஆறேகால் மணிக்கு வீட்டுக்கு வந்திடுவான்னு பக்கத்து வீடுகளிலே சொல்லியிருக்காங்க. கொலை நடந்த நேரம் உத்தேசம் அஞ்சரையிலிருந்து ஆறரை. அவள் வீட்டுக்கு வேறு யாரும் வரலை. நாம ஆறேகால் மணிக்கு அங்க போயிட்டோம். கூலா கொலை பண்ணிட்டுப் போலீசுக்கும் ஃபோன் பண்ணியிருக்கலாம் இல்லையா?”

“மோட்டிவ்? நாம அந்த ஹேமாவைக் கொல்ல என்ன காரணம்? ஏதாவது லாஜிக் வேண்டாம்? இந்த ஆம்பளைங்களே முட்டாள்த்தனமாகத் தான் யோசிப்பாங்க போல இருக்கு” என்று பொரிந்தாள் தன்யா.

“என்ன, ஸிஸ்டர்ஸ் ரொம்பக் கோபமா இருக்காப்ல இருக்கு” என்று குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

அங்கே மஃப்டி உடையும், உதட்டில் சிரிப்புமாய் நின்றிருந்தார் சாட்சாத் போஸ்.

====================

அதிர்ந்து போய் எழுந்து நின்றார்கள் தன்யாவும் தர்ஷினியும்.

“என்ன தர்மா, சொல்லலையா?” என்று கேட்டுவிட்டு இவர்கள் பக்கம் திரும்பி “ஸிஸ்டர்ஸ், நான் தர்மாவோட க்லோஸ் ஃப்ரெண்ட். அதோட பாரத புத்ராவோட தீவிர வாசகன். அங்கே போலீஸ் பட்டாளத்தோட இருந்ததால கொஞ்சம் கெடுபிடி பண்ணிட்டேன். ஸாரி” என்றார் போஸ்.

“பாரத புத்ரா ஒரு ஆன்மீக, கலாச்சார மாகசீன் ஆச்சே” என்றாள் தர்ஷினி.

“ஒரு மனிதனா எனக்கும் மோட்ச தாகம் இருக்கு. ஒரு போலீசை விட தர்மத்திலே இன்டரெஸ்ட் உள்ளவங்க யாரு? ஸோ எனக்கும் பாரத புத்ரா பிடிக்கும். என்ன தன்யா மேடம், படபட பட்டாசு மாதிரி பேசுவீங்கன்னு தர்மா சொல்வான், ஒரே சைலண்டா இருக்கீங்க?”

தன்யா தன் தலையை உதறிக்கொண்டாள். “ரஜினிகாந்த் மாதிரி அதிரடி என்ட்ரீ கொடுத்துட்டீங்களே ஸார்! இதிலே டபிள் ரோல் வேற ப்ளே பண்றீங்க. ஒருபக்கம் அடாவடி போலீஸ், இன்னொரு பக்கம், அது என்ன, மோட்ச தாகம், இருக்கிற சாது! ரொம்ப இண்டரெஸ்டிங் காரெக்டர் தான் நீங்க. ரைட், இப்போ எங்களை எதுக்குப் பார்க்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“விஷயத்துக்கு வாடாங்கறீங்க, ஓகே, வந்துடறேன். முதலில ஒரு கேள்வி. இந்த ஹேமாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ திருட்டு விஷயமா என்கொயர் பண்ண வந்ததா சொன்னீங்க. கொஞ்சம் டீடெய்ல்டா …”

“நான் சொல்றேன் போஸ்” என்று இடைப்புகுந்த தர்மா. “டாக்டர் திலீப் உனக்குத் தெரியும்” என்று ஆரம்பித்து முழுக்கதையையும் சொன்னான்.

“ஐ சீ” என்று பெருமூச்சு விட்டான் போஸ். “குறிப்பா ஹேமாவை ஏன் சந்தேகப்பட்டீங்க?” என்று கேட்டான்.

“தன்யா, நீ சொல்லு. எங்களுக்கே நீ திடீர்னு ஹேமா வீட்டுக்குப் போகணும்னு சொன்னது ஏன்னு தெரியல” என்றான் தர்மா.




தன்யா புன்னகைத்தாள். “அந்த ஹேமா மேல நான் திருடின்னு சந்தேகப்படல. அதான் பாஸ்கர் ஒரு முழ நீளத்துக்குக் காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுத்தாரே! ஆனா அவ பேச்சு கொஞ்சம் விநோதமா இருந்தது. நான் எதையும் பார்க்கல, ஆனா பார்த்திருந்தா… இதைத் திருப்பித் திருப்பிச் சொன்னா. ஒரு வேளை அன்னிக்கு இவ நிஜமாகவே தலைவலின்னு வீட்டுக்குப் போகாமத் தங்கியிருந்தா, இவ மோதிரத் திருடனைப் பார்க்க சான்ஸ் இருக்கில்லையா? அவ யாரையோ மறைமுகமா வார்ன் பண்ணறாளோன்னு சந்தேகம் வந்தது. அதான் அவளைப் பிடிச்சுக் கொஞ்சம் மிரட்டினா உண்மையைச் சொல்லிடறாளான்னு பார்க்கத் தான் ஹேமா வீட்டுக்குப் போனோம். புவர் கேர்ள்…” என்று பெருமூச்சு விட்டாள்.

“ஹேமாவுக்குத் திருடன் யார்ன்னு தெரியும்னா, மறைமுகமா ஏன் வார்ன் பண்ணணும்? நேரடியாகவே அவங்களைப் பிடிச்சுத் தரலாமே” என்றான் போஸ்.

“பிளாக்மெயில்” என்றாள் தர்ஷினி ஒற்றை வார்த்தையில்.

“என்னது? ஒரு மோதிரத்துக்காகவா ப்ளாக்மெய்ல், கொலை எல்லாம்?”

“நீங்க புரிஞ்சுக்கல இன்ஸ்பெக்டர். இந்த மோதிரத்துக்குப் பின்னாடி நிறைய விஷயம் இருக்கு. ஒண்ணு, அதோட வேல்யு. ஒரு கோடி ரூபாய் வரை கலெக்டர் மார்க்கெட்ல மதிப்பாம். இன்னொன்று, சொத்து கிடைக்கும்கற நம்பிக்கை.”

“வேறொரு காரணமும் இருக்கலாம். பாஸ்கர் கல்யாணத்தைப் பிடிக்காத யாரோ ஒருத்தர் அதை நிறுத்தணும்னு மோதிரத்தை எடுத்திருக்கலாம்.” – இது தர்ஷினி.

“திருடு வரைக்கும் நீங்க சொல்றதெல்லாம் ஓகே. ஆனா கொலை? ஒத்துக்கக் கஷ்டமாயிருக்கு. எனிவே, உங்ககிட்ட ஒரு ரிக்வஸ்ட்.”

“என்ன?” என்று மூன்று பேருமே கேட்டார்கள். ஆனால் போஸ் என்னவோ தன்யாவிடம் தான் பதில் சொன்னான்.

“இங்க பாருங்க தன்யா, இதுவரை இது ஏதோ திருட்டுக் கேஸா இருந்தது. இப்போ கொலைக் கேஸ். இதிலே தயவுசெய்து நீங்க தலையிடாதீங்க. அஃபிஷியலா நாங்க பார்த்துக்கறோம். அது தான் உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது. ப்ளீஸ்!”

தன்யா உடனே பதில் சொல்லிவிடவில்லை. சற்று யோசித்தவாறிருந்தாள். பிறகு, “ஆஃபீஸர், உங்க வேலையிலே குறுக்கிடறது எங்க நோக்கம் இல்லே. எங்க வேலை அந்த மோதிரத்தைத் தேடறது தான். அதை மட்டும் நாங்க பார்த்துக்கறோம். நீங்க அஃபிஷியல் இன்வெஸ்டிகேஷனைக் கன்டின்யூ பண்ணுங்க. ஏன் சொல்றேன்னா, மோதிரம் காணாமப் போனது பத்தி யாரும் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணல, ஸோ நீங்களும் அதை சீரியஸா எடுத்துக்க முடியாது. பட் இது ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை. அப்படியே விட்டுட முடியாது. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்” என்றாள்.

“நம்ம தன்யாவா இவ்வளவு தெளிவா பேசறா!” என்ற வியப்பு கண்ணில் தெரிய, அவளைப் பெருமிதத்தோடு பார்த்தான் தர்மா.

போஸ் அவளையே உற்றுப் பார்த்தான். பிறகு, “ஓகே” என்றான் பெருமூச்சோடு. “ஆனா ஒண்ணு”  என்றான் கண்டிப்பாக. “எந்தக் காரணம் கொண்டும் எந்த ஃபாக்டையும் மறைக்கக் கூடாது, என்ன கண்டுபிடிச்சாலும் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்திடணும். தர்மா, நீ பொறுப்பு” என்று அவன் பக்கம் திரும்பினான் போஸ்.

“சரி” என்றான் தர்மா சுருக்கமாக.

போஸ் கிளம்பிப் போனதும் “தன்யா, நாளைக்கு என்ன பிளான்?” என்று கொட்டாவியோடு கேட்டாள் தர்ஷினி.

“விஜய்!” என்றாள் தன்யா, அழுத்தமாக.




What’s your Reaction?
+1
8
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!