Serial Stories

சதி வளையம்-10

10 ராஜாங்கம் யாருக்கு?

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், இந்தப் பாவி இன்னும் என்ன பண்ணி வெச்சிருக்கான்? ஏதாவது அரெஸ்ட் கிரெஸ்ட் பண்ணப் போறீங்களா?” என்று குமுறினார் சதானந்தன்.

“இந்தத் தடவை வார்னிங்கோட விட்டுடறோம் சார், ஆனா பையனைக் கொஞ்சம் கண்டியுங்க. அவன் எங்கே இருந்தான் தெரியுமா?” என்று சொல்லிச் சற்று இடைவெளிவிட்டு, ஒரு பிரபல நடிகையின் பேரைக் கூறினார் போஸ். “அவங்க குடுத்த பார்ட்டியில கேட் கிராஷ் பண்ணியிருக்கான். அவங்களே ரொம்பப் போதையில இருந்ததுனாலே இவனை உள்ளே விட்டுட்டாங்க. ஒரே ஆட்டம் பாட்டம்னு ஏக கலாட்டா. கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு. இங்கே இவன் பேர் அடிபடறது இதுதான் முதல் தடவைங்கறதுனாலே …”

“சரி இன்ஸ்பெக்டர். நான் பார்த்துக்கறேன். நன்னி” என்று தமிழும் மலையாளமுமாகப் போஸுக்கு விடைகொடுத்தார் சதானந்தன்.

போஸ் மூவருக்கும் விஷ் பண்ணிவிட்டு வெளியேறினார்.

சதானந்தன் சிறிது நேரம் அசையாமல் நின்றார். பிறகு உணர்வுக்கு வந்து தன்யா தர்ஷினி இருவரையும் பார்த்தார். “உங்களை உள்ளே கூப்பிட்டதுக்குக் காரணம்…”

“சொல்ல வேண்டாம் ஹைனஸ். மோதிரம் திருட்டுப் போன அன்னிக்கு நீங்க பாஸ்கர் ரூமுக்குப் போன போது அங்கே மோதிரம் இல்ல. அதை விஜய் எடுத்திருப்பான்னு நீங்க நினைக்கறீங்க. அது தானே சொல்ல வந்தீங்க?” தன்யா அழுத்தமாகக் கேட்டாள்.

சதானந்தன் பிரமித்தார். “என் மனசைப் படிச்ச மாதிரி பேசறே. ஒரே ஒரு திருத்தம். என் பிள்ளை எடுத்திருப்பான்னு நான் முதலிலே நினைச்சது வாஸ்தவம்தான். அப்புறம் அப்படி நினைக்கல. அப்படி நினைச்சிருந்தா …” கொஞ்சம் தயங்கித் தொடர்ந்தார். “… பாஸ்கர் கொடுத்த ராஜ பட்டத்தை அவனுக்காக ஏத்துக்கிட்டிருக்க மாட்டேன்.”

இந்தக் கடைசி வாக்கியத்தை எந்தக் காரணத்தினாலோ தன்யாவால் நம்பாமல் இருக்க முடியவில்லை. சதானந்தனின் வெறுப்பில் தன்மானம் இருந்தது, கோபத்தில் நேர்மை இருந்தது.

“என் உருப்படாத பிள்ளைக்காக அப்படி ஒரு பொய் சொன்னதுக்காக வெட்கப்படறேன். உண்மை தெரிஞ்சா யார் அந்த மோதிரத்தை எடுத்திருப்பாங்கறதுக்கு உனக்கு வேற க்ளூ கிடைக்கலாம் இல்லையா? அதான் உங்கிட்ட உண்மையைச் சொல்லிடலாம்னு …”

“தாங்க்ஸ் யுவர் ஹைனஸ். இந்த மோதிரத்தை யார் எடுத்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்க? சொல்லலாமா?”

“சொல்லலாம். ஆனா இப்போ இல்லே. ஒரு முக்கியமான ஜோலி இருக்கு. அதுக்கப்புறம் நாம மறுபடி பேசலாம்” தன்யாவுக்குப் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் “பாஸ்கரா!” என்று உரத்த குரலில் கூப்பிட்டார் சதானந்தன்.

பாஸ்கர் ஓடி வந்தான். அவனை மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.

கூட்டமாக எல்லோரும் நுழைந்தார்கள். சதானந்தன் முதுகைக் காட்டிக் கொண்டு ஜன்னலைப் பார்த்துக் கொண்டு நின்றார். விஜய்யை வீட்டின் உள்ளே படுக்க விட்டு விட்டு மேஜர் கமலும் வந்துவிட்டார். போஸ்கூட இன்னும் கிளம்பவில்லை போலும், உள்ளே வந்தார். நண்பர்கள் மூவரும் – தர்மா, திலீப், போஸ் – ஒன்றாக நின்று கொண்டார்கள்.

சில விநாடிகள் குசுகுசுவென்று பேச்சுச் சத்தம். சதானந்தன் மெதுவாகத் திரும்பியதும் பேச்சுச் சத்தம் அடங்கியது.

“சுத்தி வளைக்க எனக்கு விருப்பம் இல்லே” என்று மெதுவாக ஆரம்பித்தார் சதானந்தன். “பட்டத்தை ஏத்துக்க வேண்டிய பாஸ்கரன் வேண்டாம்னு சொல்லிட்டான். விஜய் …” ஒரு பெருமூச்சுடன் “விஜய்க்குப் பட்டங்கட்ட எனக்கு இஷ்டம் இல்லே.”




“சித்தப்பா!” என்றார்கள் பாஸ்கரும் சுஜாதாவும், அதிர்ந்து போய்.

“பின்னே! இவன் யோக்கியதையைத்தான் பார்த்தாச்சே” என்றார் சதானந்தன் வெறுப்புடன்.

“சித்தப்பா, அவன் சின்னப் பையன். அவசரப்பட்டு இப்படியெல்லாம் முடிவு பண்ணாதீங்க …” என்று பாஸ்கர் சொல்வதற்குள் குறுக்கிட்டார் சதானந்தன். “அவசரப்படலேடா, நன்னாயிட்டு ஆலோசிச்சுத் தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். என் மகனை எனக்குத் தெரியும். அவனைத் திருத்தறது சுலபமில்ல. எப்படியானாலும் கையிலே அதிகாரத்தைக் கொடுத்தா இவன் இன்னும்தான் கெட்டுப் போவான்.”

“இப்போ உங்ககிட்ட தானே சித்தப்பா அதிகாரம் இருக்கு? இன்னும் கொஞ்ச நாளில் …” என்று ஆரம்பித்த சுஜாதாவையும் முடிக்க விடவில்லை சதானந்தன். “இல்லேம்மா. எனக்கு நம்பிக்கை விட்டுப் போச்சு. இவன் கஷ்டப்பட்டாதான் இவனுக்குப் புத்தி வரும். தன் காலில் நின்னாதான் பொறுப்பு வரும். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.”

“என்ன முடிவு சித்தப்பா?”

சபை முழுவதையும் ஒரு நோட்டம் விட்ட சதானந்தன், “இந்தப் பட்டத்தை உனக்குத்தான் கொடுக்கப் போறேன்” என்றார்.

அவர் பார்வை சுஜாதா மீது படிந்திருந்தது.

===================

எல்லோரும் தன்னை நோக்குவதை உணர்ந்து சுஜாதா பதறினாள். “என்ன சித்தப்பா சொல்றீங்க? நம்ம ராஜ்ஜியத்தில் பெண்ணுங்க பட்டத்திற்கு வர முடியாதே?” என்றாள்.

“அதெல்லாம் மாற வேண்டிய காலம் வந்தாச்சு சுஜாதா. நீ கெட்டிக்காரி, பொறுப்பானவள். நீ தாரளமா பட்டமேத்துக்கலாம்.”

“அப்படி இல்ல சித்தப்பா, நான் இவரைக் கேட்டு …” என்று சுஜாதா ஏதோ சொல்ல வருவதற்குள் “ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிசிஷன். சூப்பர் சித்தப்பா!” என்று கூவினான் பாஸ்கர்.

“இரு பாஸ்கர். இவர் என்ன சொல்றாருன்னு …” என்று சுஜாதா மறுபடியும் ஆரம்பித்தாள்.

“இது உங்க குடும்ப சொத்து, நீங்க எப்படி முடிவு பண்ணினாலும் சரி. சுஜாதாவால இதை மானேஜ் பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் கமல். முகத்தில் பெருமை தெரிந்தது.

“அவ்வளவு தானே! என்னம்மா, இனிமே ஏத்துக்கறியா?” என்றார் சதானந்தன்.

சுஜாதா மெதுவாகத் தலையாட்டினாள்.




 

What’s your Reaction?
+1
9
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!