Serial Stories கடல் காற்று மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே – 21

21

 

 

” அம்மா …அம்மா …” எதிரே கேட்ட குரலுக்கு மலங்க மலங்க விழித்தாள் .

ஒரு நடுத்தர வயதான ஆள் எதிரே நின்றிருந்தார். ” ராயரம்மா கூப்பிடுறாங்கம்மா “

” எந்த ராயரம்மா …? “

” உங்க பாட்டியம்மாதாங்கம்மா . அதோ அங்கே காரில் இருக்குறாங்க .உங்களை கூட்டி வரச் சொன்னாங்க .வாங்கம்மா “

பாட்டி …நேற்று என்னவெல்லாம் பேசினார் .அவரிடம் போய் அவர் பேரனின் லட்சணத்தை சொல்ல வேண்டும் .நியாயம் கேட்கும் அவசரத்துடன் வேகமாக அந்த ஆள் காட்டிய திசையில் நடந்தாள் .கோவிலை விட்டு தள்ளி ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு கூட்டிப் போனான் அந்த ஆள் .




” அதோ அந்த காரில் இருக்கிறாங்கம்மா …” அவன் காட்டிய காரை நெருங்கும் போதுதான் சஷ்டிக்கு உரைத்தது .இது யார் கார் …? இதில் ஏன் பாட்டி இருக்கிறார் …? துரிதமான அவள் எட்டுக்கள் மெதுபட  ” சீக்கிரம் போங்கம்மா ” பின்னிருந்து அந்த ஆள் அவளை தள்ளினாள் .கையில் ஏதோ கம்பு வைத்திருந்தான் போலும் , அதன் அழுத்தம் அவள் முதுகில் அழுந்தப் பதிந்து வலித்தது .

” ஏய் யார் நீ …? ” சஷ்டி கோபமாக திரும்ப , ” சொல்றேன் .உள்ளே போ …” அவள் முன் கம்பை அவன் ஆட்ட , ஆடிய அந்தக் கம்பின் இடையே புகுந்து தட்டியது இன்னொரு கம்பு .

” அவுங்க வரமாட்டாங்க ” கணீரென ஒலித்த குரலில் திரும்பிப் பார்த்து ஆச்சரியமானாள் சஷ்டி .சாலப்பன் தாத்தா .

கம்பு சுற்றிய சாலப்பன் தாத்தாவின் வலிய புஜங்கள் இறுகியிருந்தன .” தள்ளி நில்லுங்க ராயரம்மா ” சொன்னபடி தன் கம்பை வேகமாக சுழற்றினார் .இப்போது அந்தக் காரிலிருந்து இன்னமும் நான்கு பேர் இறங்கி வந்தனர் .அவர்களும் கையில் கம்பு வைத்திருந்தனர் .ஒரே நேரத்தில் சாலப்பனின் தலையை உடைத்து விடும் நோக்கத்துடன் சுழற்றினர். சாலப்பன் அவர்களை எளிதாக தடுத்தார் .சக்கரமாக கம்பு சுற்றினார.

இப்போது இவர் கை நடுக்கம் எங்கே போனது …இந்தளவு மனவலிமை இருப்பதால்தான் இவரை வேலைக்கு வைத்திருக்கிறான் போலும் . அவள் மனம் கணவனிடம் போனது . அப்போது  இவரை என் பின்னால் அனுப்பியது என்னை கண்காணிக்க இல்லை …என்னை பாதுகாக்கத்தானா …? ஆனால் யாரிடமிருந்து ….யாரை நான் என்ன செய்தேன் …? அவள் மனதில் சந்திராம்பிகையின் நினைவு வந்த்து .

இந்த ஊரில் என்னுடைய ஒரே எதிரி அவள்தான் .இவர்களெல்லாம் அவளுடைய ஆட்கள்தானா ….? ஆனால் …அவள் …சஷ்டிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்த்து .

” ராயரம்மா …ராயருக்கு போன் போட்டு வரச் சொல்லுங்க ” கம்பு சுற்றிக் கொண்டே  மூச்சிரைத்தபடி கத்தினார் சாலப்பன் .

ராயரய்யாவிற்கு போனா …? அவன்  அவளுடனல்லவா போயிருக்கிறான் …? போன் செய்தால் வருவானா …? ஓ …இங்கே என்னை இந்த ரவுடிகளிடம் மாட்டி விட்டு விட்டு அவர்கள் இருவரும் ஜாலியாக ஊர் சுற்ற போய்விட்டனரா …?

” அம்மா …சீக்கிரம் …” எல்லோரையும் சமாளித்தபடி சாலப்பன் மீண்டும் கத்த , சஷ்டி மனமில்லாமல் திருமலைராயனின் எண்ணை தன் போனில் அழுத்தினாள் . ரிங் போய்கொண்டே இருக்க , இல்லை இவன் எடுக்க மாட்டான் .நான் இந்த ரவுடிகளிடம் மாட்டி சாகப் போகிறேன் …தன்னிரக்கத்தில் சஷ்டியின் மனம் கலங்க , எதிர் முனை எடுக்கப்பட்டதுமே அவளிடமிருந்து சிறு விம்மல் வெளிப்பட்டது .

” சஷ்டி …என்னடா …? என்ன ஆச்சு ..? எங்கே இருக்கிறாய் …? ” திருமலைராயன் பதறினான் .

” ஆயிரம் காளியம்மன் கோவில் பின்னால் , இங்கே சாலப்பன் …சண்டை போட்டு …” முழுதாக சொல்லாமல் திணற …

” காரில் ஏறிவிட்டேன் .ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன் ” சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் புழுதி பறக்க திரிமலைராயன் காரை அங்கே கொண்டு வந்து நிறுத்தி இறங்கிய போது நன்றாகவே இருட்டி விட்டது .




ஓடிப்போய் அவன் மார்பில் சரண்டைய துடித்த சஷ்டியின் கால்கள் வேரோடியது போல் அங்கேயே நின்றது .ஏனெனில் திருமலைராயனுடன் சந்திராம்பிகையும் சேர்ந்தேதான் வந்திருந்தாள் .அவள் சாலப்பனின் கம்பு சுற்றலை பார்த்தபடி பதட்டத்துடன் திருமலைராயனின் கையை வேறு பற்றிக் கொண்டிருந்தாள் .சஷ்டி மெல்ல பின்னடைந்து மரத்தின் பின்னால் மறைவாக நின்று கொண்டாள் .

சந்திராம்பிகையிடம் முன்னால் சுட்டிக் காட்டி திழுமலைராயன் ஏதோ சொல்ல , அவள் தலையசைத்தாள் .இப்போது திருமலைராயன் தன் காருக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்தான் .வானத்தை நோக்கி சுட்டான் .பிறகு அந்த ரவுடிகளை குறி வைத்து நின்றான் .

துப்பாக்கி சத்தத்தில் அதிர்ந்து நின்று விட்டவர்கள் , தங்களை குறி பார்த்த துப்பாக்கியை பார்த்ததும் ” ஐயா வேண்டாங்கய்யா ” அலறினார்கள் .

திருமலைராயன் சந்திராம்பிகையை பார்த்து தலையசைக்க , அவள் முன்னால் போய் கம்பு சுற்றிக் கொண்டிருந்த ஒரு ரவுடியின் சட்டையை பிடித்து உலுக்கினாள் .

” யார் உங்களை அனுப்பியது …? ” அவன் விழித்தான் .

” டேய் கரெக்டாக உன் நடு நெற்றிக்கு குறி வைத்திருக்கிறேன் . அழுத்தினேன்னா உன் மூளை சிதறும் ”  திருமலைராயன் கடுமையாக குரல் கொடுக்க , அவன் வேண்டாமென கை கூப்பினான் .

” உ …உங்கள் அப்பாதான்மா .இவுங்களை மயக்கம் கொடுத்து தூக்கி வரச் சொன்னாங்க ” அலறலொடு ஒப்பினான் .சந்திராம்பிகை பளாரென அவன் கன்னத்தில் அறைந்தள்

” சீ …ஓடிப் போங்கடா .எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று   போய் என் அப்பாவிடம் சொல்லுங்கள் .போங்கள் “

எல்லோரும் கம்பை கீழே போட்டு விட்டு ஓடிப் போயினர் .சந்திராம்பிகை திருமலைராயனிடம் திரும்பினாள் .” சாரி ராயரே …” அவன் அவளுக்கு கையசைத்து விட்டு சாலப்பன் அருகே வந்திருந்தான் .தளர்வாய் நின்று கொண்டிருந்தவரின் தோள் சேர்த்து தன்னோடு இணைத்துக் கொண்டான் .

” அசத்திட்டீங்க தாத்தா ” பாராட்டினான் .அவர் கூச்சத்துடன் பணிவாய் உடல் குறுக்கிக் கொண்டார் .” என்னங்க தம்பி என்கிட்டப் போய் இதெல்லாம் பேசிக்கிட்டு …”

சந்திராம்பிகை சஷ்டியை தேடி மரத்தின் பின்னால் வந்து விட்டாள் .” சாரி சஷ்டி .உன்னை பிடித்து வைத்துக் கொண்டு ராயரை மிரட்டி அந்த தொழிலை தடையில்லாமல் நடத்த  அப்பா ப்ளான் போட்டிருக்கிறார் .இதனை ராயர் முன்பே என்னிடம் சந்தேகமாக சொல்லிக் கொண்டிருந்தார் .நான்தான் நம்பவில்லை .சாரிம்மா …”

சஷ்டி பரவாயில்லையென தலையசைத்தாள் .அப்போது இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனரா …? அவள் மனம் நிரடியது .




” சந்திரா நீயும் எங்களோடு வா .உன்னை உங்கள் வீட்டில் இறக்கி விட்டு விடுகிறேன் ” திருமலைராயன் குரல் கொடுக்க சஷ்டியின் கையை பிடித்துக் கொண்டு சந்திராம்பிகை காருக்கு நடந்தாள் .

” ராயரய்யா என்னை உட்கார வச்சு நீங்க ஓட்டுவீங்களா …? ஙேண்டாங்கய்யா …” டிரைவிங் சீட்டில் அமர்ந்த திருமலைராயனிடம் சாலப்பன் பதற …

” என் வாழ்க்கையையே சரியான நேரத்தில் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறீர்கள் தாத்தா . அரை மணி நேரம் உங்களுக்காக நான் கார் ஓட்ட மாட்டேனா ..? பேசாமல் உட்காருங்கள் ” திருமலைராயனின் அதட்டல் தேன் துளிகளாய் சஷ்டியினுள் இறங்கியது .

இவன் வாழ்க்கையென என்னையா சொல்கிறான் …? காரோட்டிக் கொண்மிருந்தவனின் முதுகை பார்த்தபடி பின்னால் அமர்ந்திருந்தாள் சஷ்டி .

” நீ சீக்கிரமே திருமணம் செய்து கொள்வதுதான் பிரச்சனை தீரும் வழி சந்திரா …” கட்டாயம் இருந்த்து திருமலைராயனின் குரலில் .காரை ஓட்டியபடி பின்னால் அமர்ந்திருந்த சந்திராம்பிகையிடம் பேசினான்.

” அ து …அந்த ஆள் …என் அப்பா பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை …”

” அவரை நன்றாக விசாரித்து விட்டேன் .நல்ல மனிதரென்று உனக்கு ஆதாரத்துடன் சொன்னேனே …”

சந்திராம்பிகைக்கு திருமணமா …? அதற்கு திருமலைராயனே உதவுகறானா …? சஷ்டியின் மனம் வானுக்கு சிறகடித்தது .

சந்திராம்பிகை உதடு கடித்து மௌனமானாள் .போராடும் அவள் மனதை ஒரு பெண்ணாய் சஷ்டியால் புரிந்து கொள்ள முடிய , அவள் ஆதரவுடன் சந்திராம்பிகையின் கையை பற்றினாள் .சந்திராம்பிகையின் மனதில் திருமலைராயன் இருப்பதை சஷடியால் உணர முடிந்த்து .ஒரு மாத்ததிற்கு முன்பு வரை ஒருவனுடன் மணமேடை வரை வந்து விட்டு , அடுத்த மாதமே இன்னொருவனுடன் திருமணம் பேசினால்… அந்த பெண்ணின் மனம இரும்பால் செய்த்தில்லையே …




ஆதரவாக சஷடி தன்னைத் தொட்டதுமே சந்திராம்பிகை நெகிழ்ந்து அவள் தோளில் தலை சாய்ந்து கொண்டாள் . இது போலொரு ஆதரவிற்காக அவள் தவித்திருந்திருப்பாள் போலும் . முன்னொரு நாள் என் வாழ்க்கையை தட்டிப் பறித்து விட்டாயே என சஷ்டியை கத்தி சொற்களால் குத்தியவள்தான் . ஆனாலும் இப்போது தளர்ந்து தோள் சாய்ந்திருப்பவளை ஒதுக்க சஷ்டியால் முடியவில்லை .

இது போலொரு ஆதரவு அளித்தே ஆக வேண்டிய நிலையில்தான் அவனும் இருந்திருப்பானோ .சற்று முந்தைய கணவனின் தலை வருடலை மனதில் அசை போட்டபடி அவன் முதுகை  பார்த்தபடி சந்திராம்பகையின் தலையை வருடினாள் .” எல்லாம் சரியாகிவிடும் .கவலைப்படாதீர்கள் ” எதெல்லாம் சரியாகி விடுமென தெரியாமலேயே ஆறுதல் சொன்னாள் .

தெளிவான பதில் இவன்தான் சொல்லவேண்டும் .எங்கே அவன்தான் வந்த்திலிருந்து முகத்தையே பார்க்க மாட்டேனென்கிறானே …சந்திராம்பிகையின் தோள் வருடியபடி இடக் கையால் தன் மூக்கை தடவிக் கொண்டாள் .பார்த்திருப்பானா …? இருட்டில் தெரிந்திருக்குமா …?

” முடிந்து போனதை நினைத்து அழுது கொண்டிருப்பவன் முட்டாளாக இருப்பான் .கையில் கிடைக்காதென முடிவாகி விட்ட பின்னும் ,அதே நினைப்பில் இருப்பவன் முழு முட்டாள் …. நீ அப்படி  இல்லையென நினைக்கிறேன் சந்திரா …கம்மான் கெட் பேக் ப்ரம் திஸ் தாட்ஸ் …”  திருமலைராயனின் குரல் அழுத்தமாக ஒலிக்க , சந்திராம்பிகை வேகமாக தலை நிமிர்ந்து தன்னை சரிப்படுத்திக் கொள்ள முனைந்தாள் . அப்போது அவள் செயல்களில் சிறு ரோசம் தெரிந்தது .

” உன் அப்பா அந்த தொழிலில் மிகவும் வெறியாக இருக்கறார் .என்னை வைத்து நடத்த முடியவில்லை எனவுமே உடனேயே அடுத்த ஆளை ரெடி செய்துவிட்டார் .செய்யட்டும் . ஆனால் அவ்வளவு எளிதாக இந்த தொழிலை அவரால் இங்கே ஆரம்பித்து விட முடியாது .நான் விட மாட்டேன் .நான் சொல்வதெல்லாம் அவர் இப்போது உனக்காகவும் , அந்த நொழிலை நடத்துவதற்காகவுமென  முடிவு செய்திருக்கும் ரவிச்சந்திரன் நன்கு படித்த வசதியான உனக்கு ஏற்ற ஆள்தான் .உங்கள் திருமணம் முடிந்த்தும் இந்த தொழிலை அவர் ஆரம்பிக்கும் போது நான் நிச்சயம் கோர்ட்டில் ஸ்டே வாங்கி விடுவேன் .நீ அந்த நேரத்தில் உன் கணவனை கூட்டிக் கொண்டு அமெரிக்கா போய்விடு .அங்கேயே செட்டில் ஆகிவிடுங்கள் .தோள் கொடுக்க ஆள் இல்லையென்றால் உன் தந்தை அடங்கி விடுவார் …”

” நானும் இந்த ஊர்தான் ராயரே .எனக்கும் இந்த மக்கள் மேல் அக்கறை உண்டு .நீங்கள் சொன்னதை செய்ய முயல்கிறேன் …”




” முயற்சியா …?இதுதான் முடிவு …உனக்காகத்தான் உன் அப்பா மேல் கை வைக்காமல் இருக்கிறேன் .இல்லையென்றால் இன்று அவர் செய்ய  நினைத்த காரியத்திற்கு …” பேச்சை முடிக்காமல் திருமலைராயன் பற்களை நரநரக்க , சந்திராம்மிகையின் உடலினுள் நடுக்கம் ஓடியதை சஷ்டியால் உணர முடிந்த்து .

ஹப்பா …மறைமுகமாக எப்படி மிரட்டுகிறான் …? சஷ்டிக்குமே அந்தக் குரல் உள்ளே  குளிரூட்டியது .

சந்திராம்பிகையின் வீட்டு வாசலில் அவளை இறக்கி விட்டு விட்டு ” அடுத்த வாரமே உனது திருமண சேதியை எதிர்பார்க்கிறேன் ” என அவளுக்கொரு கட்டளையை பிறப்பித்து விட்டு , காரை அடுத்து சாலப்பன் வீட்டருகே நிறுத்தினான் .

” போய் தூங்கி ஓய்வெடுங்க தாத்தா ” அவரை விட்ட பின் வீடு திரும்பிய அவர்கள் காரினுள் பெரும் அமைதி நிலவியது .

What’s your Reaction?
+1
17
+1
16
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!