Serial Stories மந்திரச்சாவி

மந்திரச்சாவி-5

மந்திரம்…5

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்

போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்

நாம்விதி வேண்டும் தென்சொலின் மானிடர்

ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

 எழுவகைப் பிறப்பினுட் சிறந்த மக்கட் பிறப்பை எடுக்கும் அருமைப் பாட்டினை அருளால் பெற்ற உரனுடை உள்ளத்தார்க்கு வேறு நாம் கூறவேண்டிய விதி யாதுளது. மனையறம் பேணும் பொருட்டு அறநூல் கூறும் விதியின்படி செய்தல் வேண்டும். திருவடிப் பேற்றினை அடைதற்கு அவனருள்தரும் தமிழாகம முறைப்படி தூயோனாகிய சிவபெருமானைப் பாடிப் பரவிப் பணியுங்கள்.

***************

ஆக்கிப் பெருக்கி அமைத்தப் பாண்டத்தை அவசரக் கோலத்தில் போட்டுடைத்த கதையாய்த் தன் மகளின் வாழ்வைத் தானே கெடுத்து விட்டோமோ?

சுந்தரேசன் குமைந்தார்.

எத்தனைத் தெளிவா நீரோடை மாதிரி போய்ட்டிருந்தது வாழ்க்கை?

சொல்லப்போனால் அவர் அம்மாவுக்கும் லலிதாவுக்கும் ஆரம்பத்தில் ஒத்து வரவில்லை.ஆனால் அதைக் கூட நாசுக்காகக் கையாண்டு இருவரிடமும் நல்லபெயர் வாங்கியிருந்தார்.

அப்பா இறந்தபிறகு அம்மாவுக்கென தனி அக்கவுண்ட்.அதிலிருந்து ஒரு பைசா அவர் வாங்கியதில்லை.

அம்மாவின் சிறு தேவைகளைக் கூடத் தன் பணத்தில் தான் பூர்த்தி சொய்தார்.

வரவுக்கேற்ற செலவு செய்து தானதர்மத்துக்கு ஒரு தொகை..பெண்ணின் படிப்பு திருமணத்திற்கு ஒரு தொகை என அழகாகப் பிரித்து அதற்கேற்றபடி செலவு செய்வார்.

பேராசை இல்லாமல் அதே சமயம் ஆசைப்பட்டதை அனுபவிக்கவும் தெரிந்தவர்.அதனால் தான் மகள் கல்யிணத்தை சீரும் சிறப்புமாக செய்ய முடிந்தது.

இப்போதும் மனைவிக்கென மகளுக்கெனத் தனித்தனி டெபாஸிட் வைத்திருக்கிறார்.

எதையும் முறையோடு செய்ய விரும்பியவர்.

அதே காரணத்தினால் தான்

கார்த்திக்கின் சொத்துகளை சரி செய்து அழகாக அவன் நிர்வகிக்க ஏதுவாக முறைப்படுத்த நினைத்தார்

எந்த இடத்தில் எது தவறியது?

கார்த்திக் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மறந்து வருகிறான்.இப்போதே சரி சேய்யவிட்டால் ஸ்வேதாவின் வாழ்வு சீரழிந்து போகும்.

என்னச் செய்வது? எப்படிச் செய்வது?

பெரும் குழப்பம் ஏற்பட்டால்

 அவர் செல்லும் இடம் திருவண்ணாமலை தான் அங்கே மலையடிவாரத்தில் வாக்குச் சித்தர் ஆஷ்ரமம் இருக்கிறது.

கார்த்திக் குறித்த கவலை வந்ததும் அங்கு ஓடினார்.

இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளச் சொல்லி வாக்கு கிடைத்தது.இதோ நாம ஜபம் ஆரம்பித்து விட்டார்.

மகளின் வாழ்வு சீராக…எல்லாம் நன்மையில் முடிய தனக்குள்ளே அகழ ஆரம்பித்தார்.

லலிதாதான் விபரம் புரியாமல் புலம்புகிறாள்.

எல்லாம் கைமீறி சென்ற பின் இறைவனை நம்பி கைகூப்புவதைத் தவிர வேறு வழி?




அந்த பரிபூர்ண சரணாகதியில் அவர் சமாதானமடைந்து விட்டார்.

இனி அமைதியாய் நடப்பதை வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.

சுந்தரேசன் பேச்சை நிறுத்திவிட்டார்.

உணவும் ஒரு வேளையாகி விட்டது.

எந்நேரமும் தியானம் தான்.

மனித மனம் விசித்திரமானது.எதிர்பாராத துன்பங்களோ துயரங்களோ தாக்கும் போது சிலரை மனநிலை பிறழ வைக்கிறது.சிலரை மேலும் மேலும் மாயவலைக்குள் அமிழ்த்தி ஏமாற்று சித்துவேலைகள் பக்கம் செல்ல வைக்கிறது.சிலரையோ உள்முகமாய் ஞானத்தைத் தேட வைக்கிறது.சுந்தரேசனின் அனுபவம் அவரை முதிர்ந்து கனிந்தவராக மாற்ற எத்தனித்திருக்கிறது.

ஆண்களுக்கு வாய்க்கும் வரம் பெண்களுக்குக் கிடைப்பதில்லை.பெற்ற மனம் எந்த சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளுவதுமில்லை.மகளின் வாழ்வில் சிறு பங்கம் ஏற்பட்டாலும் பெற்றவள் துடியாய்த் துடிக்கிறாள்.

ஸ்வேதா! அந்த மந்திரவாதி சொன்ன இடத்துக்குப் போனீங்களே! ஏதாவது தெரிஞ்சதா?

அம்மா!

தாயின் குரல் கேட்டதும் ஸ்வேதா விசும்பினாள்.

என்னம்மா ஆச்சு? ஏன் அழறே? மாப்பிள்ளை நல்லாயிருக்காரா?

பதறினாள் லலிதா.

அம்மா என்ன சொல்றதுனே தெரியலை..

அந்த மாந்த்ரீகர் சொன்ன இடத்தைக் கரெக்டா கண்டு பிடிச்சு வந்திட்டோம்.

அவர் சொன்ன குறிப்புப்படி தான் அங்கே எல்லாமே இருந்தது.ஆனா…

ஆனால் என்னடி?

அங்கே தோண்டிப் பார்த்தா…

ஒரு மண்டையோடு இருந்துச்சு மா.

அடக்கடவுளே!

மாந்த்ரீகன் பொக்கிஷம் கிடைக்கும் தானே சொன்னார்.




ஆமாம் மா.இப்ப அவர்கிட்ட கேட்டா சிசுபலி கொடுக்கணும் அது இது னு சொல்றார் மா.

ஜயையோ! அதெல்லாம் செய்யக் கூடாது.மாபாவம்.

கார்த்திக் அப்ஸெட் ஆயிட்டார் மா.அவர் பணம் பறிக்கத்தான் இப்படி செய்றார் னு தெரிஞ்சு போச்சு.அந்த ஆளை சிபாரிசு பண்ண ப்ரெண்டை திட்டி விட்டுட்டார்.

இந்த காலத்திலேயும் இப்படியெல்லாம் ஏமாத்தற ஆளுங்க இருக்காங்களே.சே..

அப்பா எப்படி மா இருக்கார்?

அவர் வழக்கம் போல மோட்டுவளையை வெறிச்சிட்டு தான் இருக்கார்.

நம்ம இரண்டுபேர் நிலைமையும் இப்படி ஆச்சேடி.

நீ மாப்பிள்ளைகிட்ட பேசு.எல்லாத்தையும் விட்டுட்டு பழையபடி இங்கே எப்ப வருவீங்களோ னு இருக்கு.யார் கண் பட்டதோ எல்லாம் குலைஞ்சு போச்சு.

கவலைப்படாதே மா.நானும் இதைப் பத்தி தான் யோசிச்சிட்டிருக்கேன்.

சீக்கிரம் சரியாயிடும்.

லலிதாவை ஆறுதல்படுத்தினாலும் அடுத்து என்ன செய்வதென்று ஸ்வேதாவுக்கும் புரியவில்லை.

கார்த்திக் இதை விடுவதாயில்லை.அவன் அப்பாவின் நண்பர்கள் யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சித்தான்.சிலரிடம் பேசியும் பார்த்தான்.யாருக்கும் இந்த சாவி விபரம் எதுவும் தெரியவில்லை.

ஏற்கனவே அந்த வீட்டில் தச்சு வேலைபார்த்த ஒருவரைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்தான் சதீஷ்.

அந்த வயசாளியோ வேறு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.யாரோ இந்த வீட்டுக்கு செய்வினை செய்து விட்டதாகவும் அதனால் தான் கார்த்திக் அம்மா திடீரென இறந்து விட்டதாகவும் சொன்னார்.

இந்த காலத்தில இதையெல்லாம் யார் நம்புவாங்க?சுத்த பேத்தல்.

சும்மாயிரு ஸ்வேதா! நீங்க சொல்லுங்க பெரியவரே.அதுக்கு என்ன ஆதாரம்?

உங்கம்மா இறந்த சமயம்..அதற்கான சாங்கியம் செய்யறப்ப மேலே மச்சைப் பிரிக்கக் கூப்பிட்டாங்க.அங்க ஒரு மரப்பாச்சி பொம்மை இருந்தது .அதுக்கு அலங்காரம் பண்ணி புடவை கட்டி நெஞ்சில ஊசி குத்தி எலுமிச்சம்பழம் சொருகி வச்சிருந்தாங்க.

யார் வச்சது னு தெரியல.உங்கப்பா கூட ரொம்ப பயந்துட்டாரு.அதனால தான் உங்களை இங்கிருந்து உடனே கூப்பிட்டுட்டு போய்ட்டாரு.

ஏங்க படிச்ச நாமே இதையெல்லாம் என்கரேஜ் பண்ணக்கூடாது.

இல்லை ஸ்வேதா…உலகம் பூரா இந்த மாதிரி செயல்கள் நடந்திட்டு தான் இருக்கு.எகிப்தில கூட இந்த மாதிரி பொம்மை செஞ்சு செய்வினை வைப்பாங்க.நான் டூர் போனப்ப கேள்விப்பட்டேன்.

அப்பா யாருக்கோ துரோகம் செஞ்சிருக்காரு.அவங்க தான் இதை செஞ்சிருக்கணும்.

கார்த்திக் போகும் பாதை விபரீதமாகத் தெரிந்தது.இதை இப்படியே விட்டால் சரிவராது.

மனம் குழம்பித் தவித்தவளை அந்த ஃபோன் கால் கலைத்தது.

ஹேய் ஸ்வே! எப்படியிருக்க?சுத்தமா மறந்திட்டியா?

இல்லைடி இங்கே கிராமத்துக்கு வந்திருக்கோம்.

அட..நான் கூட என் கிராமத்தில தான் இருக்கேன்.உங்க இரண்டுபேரையும் கூப்பிடலாமேனு தான் ஃபோன் பண்ணினேன்.

பத்துநாள் இங்கேதான் இருப்பேன்.வர்றீங்களா?

வேறிடத்துக்குப் போகும் நிலையிலா இவர்கள் இருக்கிறார்கள்..




யோசித்து சொல்றேன்டி.

ஸ்வேதா ஒரு முடிவுக்கு வந்தாள்.இனியும் தாமதிப்பதில் பயனில்லை.

மறுநாள் காலையோ வேறுவிதமாக விடிந்தது.

ஸ்வேதா! நாம உடனே கேரளாவுக்கு கிளம்புறோம்.

திடீர் னு ஏன்?

அங்கே ஒரு பணிக்கர் இருக்காராம்.அவர்கிட்ட அஷ்டமங்களம் பார்த்தா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்திடுமாம்.

கார்த்திக்!

ப்ளீஸ் ஸ்வேதா! இவர் பணத்துக்கு ஆசைப்படறவரில்லை.நல்லா விசாரிச்சிட்டேன். இது தான் கடைசி.நிச்சயம் நம்ம பிரச்சினை சரியாயிடும்.

ஸ்வேதா ஏதும் பேசாமல் புறப்பட தயாரானாள்.

ஆனால் அவளுக்கு அங்கே வேறோர் அதிர்ச்சி காத்திருந்தது.




What’s your Reaction?
+1
4
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!