Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-12

12

மீனாட்சியின் உறவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்க தம்பதிகள் உள்ளே நுழைந்தனர்.வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பியிருக்க அவர்களுக்கு நடுநாயகமாக அமர்ந்தபடி சுப்புலட்சுமி அவர்கள் திருமணம் நடந்த வரலாற்றை விவரமாக பத்தி பத்தியாக பேசிக் கொண்டிருந்தாள்.

 “இந்தப் பக்கம் கல்யாணமே வேண்டாம்னு சொல்லுறான் பையன். அந்தப் பக்கம் எனக்கு ஒன்னும் பிடிக்கலை அப்படின்னு மூஞ்ச தூக்குது பொண்ணு. இடையில ஜாதகம் ஜோசியம் சீரு செனத்தி அண்ணன் அண்ணின்னு ஆயிரம் விஷயங்கள். சொந்த பந்தத்தில் வயசை பார்த்தியா வாழ்க்கைய பாத்தியான்னு நூறு நொரனாட்டியம் சொல்ற ஆளுங்க, இத்தன பேரையும் சமாளிச்சு இந்த கண்ணாலத்த நான் நடத்தி வச்சிருக்கேனாக்கும்”

சுப்புலட்சுமி இல்லாத காலரை உயர்த்தி விட்டுக்கொண்டாள்.

இதென்ன இப்படி பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்? மகதி முகம் சுளித்தபடி பார்க்க குணாளனோ காதில் விழாதது போல் தன் கையில் இருந்த போனை நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். ட்ரே நிறைய பேப்பர் கப்புகளை அடுக்கி  காபி ஊற்றி கொண்டு வந்து ஒவ்வொருவருக்காக கொடுத்த கொண்டிருந்த சியாமளா “சுப்புக்கா இந்த கல்யாணம் உங்க முயற்சியாலா நடந்தது?” கேட்டபடி விஷமமாக மகதியை பார்த்தாள்.

 மகதி திக்கென விழித்து சும்மா இருங்கக்கா என சியாமளாவை கண்களால் கெஞ்சினாள். காபி ட்ரேயை தரையில் வைத்து விட்டு சுப்புலட்சுமி அருகில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள் சியாமளா.

” பாருங்க சுப்புக்கா, கடவுள் நாம பிறக்கும்போதே நம்ம தலையில இன்னார்க்கு இன்னார்னு எழுதி வச்சுடுறாரு.அதை நாம மனுசங்க எவ்வளவு தலைகீழ நின்னாலும் மாத்த முடியாது.எத்தனை வருஷம் போனாலும் கடைசியில்  கடவுள் எழுதினபடிதான் நடக்குது.கண்கூடா இதை பார்த்துட்டேன் நான்.நீங்களோ நானோ எதுவும் செய்யல,ஒருவேளை நம்ம மகி பொண்ணு கண்டா ஏதாவது செய்தாளோ என்னவோ!” என்று முடிக்க,

 என்னது… என்ன சொல்றீங்க… எல்லோர் கவனமும் மகதியின் பக்கம் திரும்ப அவள் தவித்தாள், குணாளன் பக்கம் பார்க்க அவன் இங்கே நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என சொல்பவன் போல் மடியேறி போய்விட்டான்.




அவன் அகன்றதும் அங்கிருந்த பெண்களுக்கு மிகுந்த தைரியம் வந்துவிட சோபாவில் அமர்ந்திருந்த மகதியை இழுத்து தரையில் அவர்களுக்கு நடுவே அமர்த்திக் கொண்டவர்கள் “சியாமளா ஏதோ சொல்றாளே… பக்கத்து பக்கத்து வீடு வேற… உங்களுக்குள்ள ஏதாவது… ஆளாளுக்கு கேள்வி கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை பலவீனமாக மறுத்தபடி தவித்தாள் மகதி.

 ” அட மகதி சின்ன பொண்ணுக்கா,பழைய கதையை விடுங்க, நேற்று இரவு என்ன நடந்தது என்று கேளுங்க” இளம் வயது பெண் ஒருத்தி வேறொரு பேச்சை ஆரம்பித்து வைக்க, எல்லா பெண்களும் அதனையே பிடித்துக் கொண்டார்கள்.

 டாக்டர் சார் எப்படி… என்ன… நேற்று என்ன நடந்தது… என்று ஏதேதோ கேள்விகளால் அவளை துளைக்க மகதிக்கு தலை வலிக்க துவங்கியது.கேலி கிண்டல் சீண்டல் என்று இருந்த பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தாம்பத்தியம் தாண்டி விரசத்தை தொட்ட போது தாங்க முடியாமல் எழுந்து விட்டாள்.சை  பெண்களா இவர்கள்? இப்படியா வெட்கமற்று பேசுவார்கள்? 

“என்னடி இப்படி மூஞ்சிய சுளிச்சுகிட்டு போறா?” ஒரு நடுத்தர வயது பெண் கேட்க, “நேத்து தானே கல்யாணம் ஆகியிருக்கு,இப்போ அப்படித்தான் இருக்கும். அடுத்த வருஷம் இந்நேரம் பாருங்க நம்மளுக்கு மேல பேசுவாள்” அவர்கள் பேசிக் கொண்டிருக்கவே மகதி மாடி ஏறி விட்டாள்.

 “அடடா தப்பிச்சு போயிட்டாளே”

” உனக்கு புரியல இதை சாக்கா வச்சு அவ புருஷன் கிட்ட போறா”

 காதுகளை மூடிக்கொண்டு படபடவென மாடியேறி வந்தவள் தயங்கி நின்றாள். அதோ அதுதான் குணாளனின் அறை. இங்கே அவள் இதற்கு முன்பும் சில முறைகள் வந்திருக்கிறாள் தமிழ்ச்செல்வன் பாடத்தில் சந்தேகம் கேட்க வருவது குணாளனிடம்தான். சில நேரங்களில் அவனோடு மகதியும் ஒட்டிக் கொள்வாள்.

 அறை வாயிலில் காற்றில் அசைந்தாடும் ஸ்கிரீனுக்கு இடையே உள்ளே அவர்கள் இருவரும் டேபிளில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருப்பதை அடிக்கடி எட்டிப் பார்ப்பாள்.அப்போதைய ஸ்டைலில் பிடரி வழிய முடி வளர்த்திருப்பான் குணாளன். பிடரி முடியை நீவியபடி அண்ணனின்  சந்தேகங்களை அவன் தீர்க்கும் விதத்தைப் பார்க்க மகதிக்கு ரொம்பவே பிடிக்கும்.

” ஏய் வெளியே உட்காருடி” உள்ளே தலை நீட்டும் தங்கையை தமிழ்ச்செல்வன் அதட்டுவான்.

“என்ன பாப்பா நீயும் பாடம் படிக்க வருகிறாயா?” என்பான் குணாளன். மறுத்தபடி இவள் ஓடி வந்து விடுவாள்.

இங்கே இதோ இந்த கண்ணாடி அவளுக்கு மிகவும் பிடிக்கும். இதை பார்ப்பதற்காகவே சிறு பிள்ளையிலிருந்து ஓடி வருவாள். 

இன்னமும் அதே பளபளப்புடன் மாடிப்படி ஏறி முடித்ததும் சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை ஆவலுடன் வருடிப் பார்த்தாள்.

கிட்டதட்ட ஒரு பக்க சுவர் முழுவதையும் ஆக்ரமித்திருந்த அந்த பெரிய கண்ணாடி,  அவளுடைய முழு உருவையும் பிரதிபலித்தது.இப்படி முழு உருவத்தை கண்ணாடியில் பார்க்கும் ஆர்வத்துடன்தான் இங்கே ஓடி வருவாள். அறைக்குள் தமிழ்ச்செல்வனும் குணாளனும் பாடம் படித்துக் கொண்டிருக்க மகதியின் பொழுதுகள் இந்த கண்ணாடி பிம்பத்தோடுதான் கழியும்.

அந்த சிறு வயது உற்சாகத்தை இப்போதும் மனதில் உணர்ந்தவள் அன்று போலவே இன்றும் முன்னால் பின்னால் என திரும்பி தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இப்போது அவள் பார்வை கண்ணாடிக்கு பக்கவாட்டிற்கு செல்ல ஒரு பரபரப்பு வந்தது. வேகமாக விழிகளை அகலத் திறந்து ஆராய்ந்தாள். அவள் தேடியது கிடைக்காமல் போக முகம் வாடியது.

 மிகப் பெரிதான அந்த கண்ணாடியை நேரடியாக சுவற்றில் மாட்ட முடியாமல் அதனைச் சுற்றி மர பட்டைகளை வைத்து அதன் மேல் மாட்டியிருப்பார்கள். மகதியின் கண்கள் அந்த மர பட்டையைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தன. திடுமென அவளுக்கு ஒன்று தோன்ற, அப்போது நான் சின்ன பிள்ளைதானே! எட்டாவதுதானே படித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு உயர்ந்திருக்க மாட்டேனே, சட்டென்று தன் உயரத்தை குறைத்துக் கொண்டு முட்டி போட்டு அமர்ந்து பார்த்தவள் முகம் மலர்ந்தாள்.

மரப்பட்டையில் அந்த கிறுக்கல்கள் தெரிந்தன.நெடுநடுவென்று உயரமாய் கையில் பிரம்போடு ஒரு ஆணுருவம். எதிரே கைகளைக் கட்டிக் கொண்டு தலைகுனிந்து நின்றபடி ஒரு சிறுமியின் உருவம். அறைக்கு உள்ளே பாடம் நடந்து கொண்டிருக்க வெளியே கண்ணாடியில் விளையாண்டு கொண்டிருந்த சிறுமி மகதி செய்த வேலை இது. ஜாமென்ட்ரி பாக்ஸை திறந்து கவராயத்தால் இப்படி கிறுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் அருகில் நிழலாட திரும்பிப் பாரத்தாள்.

குணாளன் கண்களை உருட்டியபடி நின்றிருந்தான்.”ஏய் பாப்பா என்ன பண்ற?”அவன் இன்று போல் அன்று கட்டுமஸ்தாக இல்லை, என்றாலும் உயரத்தில் குறைச்சல் இல்லை. சிறுமி மகதி அண்ணாந்து பிரமிப்பாய் பார்க்கும் அளவு ஒட்டக உயரத்தில்தான் இருப்பான். 




“வந்து…ப… படம் வரையிறேன்”

” உங்க பள்ளிக்கூடத்தில் கவராயம் வச்சுத்தான் படம் வரைய சொல்லித் தந்தாங்களா?” அதட்டியபடி அவள் காதை பிடித்து திருக மகதியின் கை கால்கள் நடுங்கத் தொடங்கின.

 அவள் உடலில் வேதியல் மாற்றங்கள் நிகழ,சுரப்பிகள் மாற… உடல் முழுவதும் வலி தோன்றியது. “அம்மா” அடிவயிற்றை எடுத்துக் கொண்டு முனகியபடி கீழே உட்கார்ந்து விட்டவளை கண்டு பதறினான் குணாளன்.

“என்னடா…என்னாச்சு?” வேகமாக அவள் தோள் பற்றி தூக்கியவனுக்கு புரிந்து போனது. அறைப் பக்கம் திரும்பி பார்த்தவன் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வனிடம் தெரிவிக்கும் விஷயம் அல்ல இது என உணர்ந்து, வலியில் துடித்தவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டு கீழே வந்து மீனாட்சியிடம் ஒப்படைத்தான்.

” அம்மா இவள் ஏஜ் அட்டென்ட் பண்ணி விட்டாள்” 

மீனாட்சியிடம் சங்கடத்துடன் கூடிய சிறு முறைப்பு.”இதெல்லாம் உனக்கு எதுக்குடா?”

“அம்மா நான் ஒரு டாக்டர். இதற்கெல்லாம் நானே ஒதுங்கிப் போகலாமா? இதெல்லாம் இயற்கைம்மா. அங்கே பாருங்கள் அவள் பயந்திருக்கிறாள், அவளிடம் பேசி புரிய வைத்து அவள் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வாருங்கள்”மாடி ஏறிய மகனை மீனாட்சி பெருமையாக பார்த்தாள்.

 முந்தைய தினமே நிகழ்ந்தது போல் அந்த சம்பவங்கள் மகதியின் மனதிற்குள் வலம் வந்து கொண்டிருக்க,அவள் இதழ்கள் அழகாக புன்னகைத்தன.லேசான செருமல் சத்தம் கேட்க பின்னால் திரும்பி பார்த்தாள்.

குணாளன் அறை வாசலில் நின்றிருந்தான்.இரு கைகளையும் கட்டிக் கொண்டு இவளையே பார்த்திருந்தான்.இவள் திரும்பியதும் ஒரு கையை அசைத்து “இங்கே வா” என்று  கூப்பிட்டான்.




What’s your Reaction?
+1
45
+1
21
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!