Serial Stories மந்திரச்சாவி

மந்திரச்சாவி-1

மந்திரம்…1

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்

தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்

தீமேவு பல்கர ணங்களுள் உற்றன

தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே  .

தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளை இறைவனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் எரி சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.

   தீபச்சுடர் ஆடாது அசங்காது ஒளிர்ந்து கொண்டிருக்க,

சுந்தரேசன் கண் மூடி அமர்ந்திருந்தார்.

லலிதாதான் அலைபாய்ந்து கொண்டிருந்தாள்.ஒரே பெண் அவள் வாழ்வு இப்படியா ஆகவேண்டும்?

ஒழுங்காய்ப் போய்க்கொண்டிருந்த வாழ்வு சீட்டுக்கட்டு போலக் கலைந்து கிடக்கிறது.கோடு போட்டது போல நேர்க்கோட்டில் நடந்து கொண்டிருந்த எல்லாம் தலைகீழாய் மாறிக் கிடக்கிறது.

சரி செய்யவேண்டியவரோ எந்நேரமும் தியானத்தில் இருக்கிறார்.

எது கேட்டாலும் பதிலில்லை.

லலிதாவும் இறைபக்தி கொண்டவள் தான்.

பக்கத்துக் கோவிலில் சஹஸ்ரநாம கமிட்டி மெம்பரும் கூட.

எல்லாம் நார்மலாக இருந்தவரை அவளும் பூஜை புனஸ்காரம் னு தெளிவாய்த்தான் இருந்தாள்.

அப்போதெல்லாம் அப்பாவும் மகளும் இவளைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.

“போகிற போக்கப் பார்த்தா லலிதாம்பாள் சக்தி பீடத்துக்கு நீங்க தான் பா டிரெஷரர்.

எனக்கு ஏதாவது பார்த்து செய்ங்க..”

நீதான் மா  நிர்வாக மேனேஜ்மென்ட்”

அம்மா..இந்த மஞ்சள் சிவப்பு இல்லாம அழகான கலர்ல டிரெஸ்கோட் கொடும்மா”

இருவரும் இவள் கோவிலுக்குக் கிளம்பினாலே கலாய்ப்பார்கள்.

இப்போதோ எல்லாம் தலைகீழ்.

இந்நேரம் ஸ்வேதா என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?.

அதிகாலையில் எழுந்திருப்பதே வேப்பங்காய் அவளுக்கு.இரவு எத்தனை நேரமானாலும் விழித்துக் கிடப்பாள்.

எழுந்ததும் எத்தனை மணியானாலும் கொதிக்க கொதிக்க காஃபி வேண்டும்.பாட்டியின் பழக்கம்.பிடிவாதத்திலும் பாட்டி மாதிரி தான்.ஆனால் பிடித்த காரியத்தை அவள் மாதிரி நேர்த்தியாய் செய்ய முடியாது.என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அவள் விதி அவளைப் பாடாய்ப் படுத்துகிறதே.




இன்னும் ரொம்ப தூரம் போகணுமா கார்த்திக்?

அவன் மெதுவாய்த் தலையசைத்தான்.

இதற்கு என்ன தான் முடிவு?

ப்ளீஸ் ஸ்வேதா! நெகட்டிவா ஏதும் பேச வேண்டாம்.

இன்னும் கொஞ்ச தூரம் தான் மேடம்.

இந்த முறை கண்டிப்பா ஒரு தீர்வு கிடைக்கும்.

சதீஷைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது.அவனும் இவர்களோடு அலைந்து கொண்டிருக்கிறான். 

சதீஷின் அப்பா கார்த்திக் வீட்டில் டிரைவராக இருந்தார்.சதீஷ் படித்ததே இவர்கள் தயவால் தான்.கடைசியில் கார்த்திக் அப்பா இறந்லபோது கூட சதீஷ் தான் இருந்தான். அந்த நன்றிக்காக அவனும் அல்லாடுகிறான். அடுத்த மாதம் துபாயில் வேலையில் சேரப் போகிறான்.அதற்குள் இந்த பிரச்சினை முடியவேண்டும்.

ஆரம்பத்தில் இதெல்லாம் சுவாரஸ்யமான விளையாட்டு போலத் தான் இருந்தது. ஆனால் நாளாக நாளாக அலுத்துப் போனது மட்டுமல்லாமல் பயம் வேறு பாடாய்ப் படுத்துகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மன நோயாளியாகி விடுவோமா என்று தவிப்பாயிருக்கிறது.

கார் கோயமுத்தூர் தாண்டி  வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

 கேரளாவின் காலை மிகவும் அழகு.

குளித்து முடித்து ஈரத் தலையோடு பெண்கள் வழியெங்கும் எதிர்ப்பட்டார்கள்.இயற்கையெழிலோடு போட்டி போடும் அழகு.

சாதாரண நாளாயிருந்தால் இதையெல்லாம் அங்குலம் அங்குலமாக ரசித்திருப்பாள்.

இன்றோ நிலைமையே வேறு.எதைத் தின்றால் பித்தம் தெளியுமோ?

பக்கத்தில் கார்த்திக் கண்களை மூடிக் கிடந்தான்.இப்போதெல்லாம் அநேக நேரம் நிஷ்டையில் தான் இருக்கிறான்.

முகமெல்லாம் கறுத்து இளைத்துப் போய் தூக்கமில்லாமல் சோர்ந்த முகம்.பார்க்க பலநாள் பஞ்சத்தில் கிடந்தவனைப் போலிருந்தான்.

இப்போது ஷைலு பார்த்தால் என்ன நினைப்பாள்.

ஸ்வேதா தனக்கு நிச்சயமான சேதியை சொன்னதுமே மாப்பிள்ளை ஃபோட்டோவைப் பார்க்கணும் னு துடித்தவள்..

இதோ பாரு ஸ்வேதா நான் ஓகே பண்ணாத்தான் ஒத்துக்கணும் என கண்டிஷன் போட்டாள். அதே போல் அவன் புரைபைலைக் கொடுத்ததும் அக்கு வேறு ஆணிவேராக அலசி தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என சர்ட்டிஃபிகேட் கொடுத்ததும் அவள் தான்.

எல்லாமே நன்றாகத்தான் நடந்தது.இரண்டு வருடம் முன்பு வரை.

கொடுத்த வைத்த ஜோடி என ஊரார் மெச்சும் அளவுக்குத் தான் இருந்தார்கள்.

ஸ்வேதா வீட்டுக்கு ஒரே பெண்.அப்பா சுந்தரேசன் வங்கி அதிகாரி.அம்மா லலிதா குடும்பத்தலைவி.(இப்படி சொல்லும் போது அம்மாவின் முகத்தில் ஒரு விசனம் ஒட்டிக்கொள்ளும்)

ஒரே பெண்ணைப் பொத்தி பொத்தி வளர்த்தார்கள்.

பாட்டி மட்டும் அவ்வப்போது கடிவாளம் போடாவிட்டால் அப்பா அவளை தரையில் கூட நடக்க விட்டிருக்க மாட்டார். அவள் ஸ்கூல் மாறினால் சிரமப்படுவாள் என்றெண்ணி தன் புரோமோஷனைக் கூட மறுத்து அதே ஊரில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.மகள் தான் தன்னுலகம் என்றிருந்தவர்களுக்கு ஸ்வேதாவும் சளைத்தவளல்ல.

தான் பொறுப்பாய் படித்து நல்ல வேலையிலும் சேர்ந்தாள்.அவர்கள் கைகாட்டிய மாப்பிள்ளையை எந்த மறுப்புமின்றி மணக்கத் தயாராயிருந்தாள்.

.நல்ல படிப்பு நல்ல வேலை கைநிறைய சம்பளம்.சொந்த ஊரில் சொத்துபத்துள்ள கௌரவமானக் குடும்பம்.என கார்த்திக் பயோடேட்டா கதவைத் தட்டியபோது ஸ்வேதா ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டாள்.

சென்னையில் இருக்கும் பையன் தான் வேண்டும். வெளிநாட்டுக்கு வர மாட்டேன் என்று.




இரண்டு பேரும் பேசிப் பழகி ஒற்றுமையாய் ஓகே சொல்ல கோலாகலமாய் கல்யாணம் நடந்தது.

பக்கத்திலேயே தனி ப்ளாட் வாங்கி சந்தோஷமாய்க் குடியேறினார்கள்.

ஐந்து நாள் வேலை.சனி ஞாயிறு அவுட்டிங்.வருடமொரு வெளிநாட்டு டூர்.திட்டம் போட்டு வாழ்வைத் தொடங்கினார்கள்.வாழ்வை நன்றாக அனுபவித்து விட்டு இரண்டு வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்திருந்தார்கள்.

லலிதாவுக்குத் தான் மனசே ஆறல.

குழந்தையைப் பெத்துக் கொடுத்திட்டு நீங்க ஊர் சுத்துங்களேன்.யார் கையைப் பிடிச்சு தடுத்தா..

எடுத்த எடுப்பில பிறந்தா தான்.நாள் தள்ளினால் நாம தேடிப் போற மாதிரி ஆயிடும்.

போம்மா பழைய காலம் மாதிரி பேசாதே.எத்தனையோ டெக்னாலஜி வந்திட்டு.எப்ப வேணா பெத்துக்கலாம்.இப்ப எங்களை ப்ரீயா விடு.

வயசானா வளர்க்குறதே கஷ்டம்.

அதை நான் பார்த்துக்கிறேன்.எதுக்கெடுத்தாலும் நொய்நொய்னு படுத்தாதே.

வழக்கம் போல் சுந்தரேசன் மகளுக்கு ஜால்ரா போட்டார்.

என்னவோ போங்க.எதுவும் காலாகாலத்தில நடக்கணும்.அப்ப தான் எல்லாம் சரியா நடக்கும்.

லலிதா மனத்தாங்கலோடு பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

அம்மா சொன்னது போல் தள்ளிப் போடாமலிருந்தால் இத்தனை இம்சையில்லையோ..இப்போது எதுவும் பிடிமானமில்லாமல் வெறுமையாய் இருக்குதே..

கார் கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள்.கேரளாவின் உட்பகுதிக்குள் வந்தாயிற்று போல.தோட்டத்துடன் கூடிய பெரியவீடுகள். கூடியவரை பசுமை போர்த்தியிருந்தன.

டீ சாப்பிடறீங்களா மேடம்? இங்கே நல்லாயிருக்கும்.

சதீஷ் கவனத்தைக் கலைத்தான்.

போய்ச்சேர இன்னும் நேரமாகுமா சதீஷ்?

ஒன் அவர்ல போயிடலாம் ..அவர் வீட்டுக்குப் போய் செகரட்டரிகிட்டே அப்பாயிண்ட்மென்ட் வாங்கிகிட்டு கோழிக்கோடு போயிடுவோம்.அங்கே என் ப்ரெண்ட் கிட்டே சொல்லி ரூம் போட சொல்லியிருக்கேன்.காலையில முதல் ஆளா வந்து பார்த்திடுவோம்.

நேர்ல தான் அப்பாயிண்ட்மென்டா? ஃபோன்ல போடலையா?

ஃபோன்ல சொல்லிட்டேன் மேம்.இருந்தாலும் நேர்ல ஆஜர் போட்டுட்டு போவோம்.அவர் இப்ப அதிகமா பார்க்கறதில்லை.ஒத்துகிட்டதே பெரிய விஷயம்.

ஒவ்வொருத்தரும் அப்படித்தான் சொல்றாங்க.ஆனா….

கார்த்திக் முகம் மாறுவதைப் பார்த்து 

மேற்கொண்டு பேசாமல் நின்றாள்.

இந்த தடவை சார் எதிர்பார்க்கிறது நடக்கும் மேம்.

அவள் பதில் சொல்லுமுன் மொபைல் அலறியது..




அம்மா!

எங்கேடி இருக்க?

கேரளா போய்ட்டிருக்கேன்.

கேரளாவா? அங்கே எதுக்கு?

கோழிக்கோடு பக்கத்தில ஒரு பணிக்கர் இருக்காராம்.அவர் எத்தனையோ தீர்க்க முடியாத பிரச்சினைகளை பிரச்சனம் பார்த்து தீர்த்திருக்காராம். எங்க பிரச்சினையை நிச்சயம் சால்வ் பண்ணிடுவார்னு சொல்றாங்க.

யார் கூட வர்றா?

சதீஷ் தான் மா.

என்னவோ போ.உங்கப்பா வாக்கில சனி இருந்திருக்கு அன்னைக்கு.

அவர் வாயை வச்சிட்டு சும்மா இருந்திருந்தா உனக்கு இத்தனை கஷ்டம் வந்திருக்காது.

விடும்மா.எது எது எப்படி நடக்கணுமோ அப்படித்தானே நடக்கும்.அப்பாவை போட்டு ஏன் வறுத்தெடுக்கிற?

அம்மாடீ..உங்கப்பாவை யார் என்ன சொல்ல முடியும்? அவர் தான் பரப்ரம்மமாயிட்டாரே.விளக்கேத்தி வச்சிட்டு அதை வெறிச்சு பார்த்திட்டே உட்கார்ந்திருக்கார்.இதை அன்னைக்கே செஞ்சிருந்தா….லலிதா விசும்ப ஆரம்பிக்க

தியானத்திலிருந்த சுந்தரேசன் உடல் விலுக்கென்று அதிர்ந்தது.

மௌனம் பரம ஔஷதம்..

விதியும் வினையும் யாரை விட்டது?நம்மால் எதுவுமே செய்ய முடியாதபோது கைகட்டி வேடிக்கை பார்ப்பதே உத்தமம்.ஆழ்கடலில் அலையை எதிர்க்கவா முடியும்?

இத்தனை பேரின் மன நிம்மதியைக் குலைத்த அந்த பிரச்சினையின் மூலகர்த்தாவான அந்த சாவி கார்த்திக்கின் மடியிலிருந்த அந்த புராதனப் பெட்டியில் உறங்கிக் கிடந்தது.




What’s your Reaction?
+1
12
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!