Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-8

8

“வரும் ஞாயிற்றுக்கிழமை பூ வைக்கிறோம். அடுத்த மாதம் 28ஆம் தேதி கல்யாணம்” ரூபாவதிக்கு தகவல் கொடுக்கப்பட கோபத்தில் கத்தினாள் “நான் இந்த வீட்டு மருமகள். எல்லா விஷயங்களையும் நீங்களே முடிவு செய்துவிட்டு எனக்கு தகவல் மட்டும் தான் கொடுப்பீர்களா?”

” நீயே கடைக்கும் வீட்டுக்குமாக அல்லாடிக் கொண்டிருக்கிறாய், இதில் இந்த வேலை வேறு உனக்கு எதற்கு என்றுதான் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்மா” சுகவனம் சொல்ல வாய் அடைத்துப் போனாள்.

மாமனார் அவர் வார்த்தையை வைத்தே அவளை மடக்கி விட்டாரே! 

“உங்கள் தங்கைக்கு எத்தனை பவுன் போடுகிறீர்கள்?” அடுத்த விசாரணையை கணவனிடம் ஆரம்பித்தாள்.  

“உன்னிடம் பணமாக நகையாக எவ்வளவு இருக்கிறது?” தமிழ்ச்செல்வன் பதிலுக்கு விசாரிக்க மிரண்டாள்.

 “எதற்கு கேட்கிறீர்கள்?”

” இதுவரை மகதி திருமண நகைகள், செலவு என்று எதையும் நான் அப்பாவிடம் கேட்கவில்லை.இப்போது உனக்காக கேட்கப் போய், இவ்வளவு குறைகிறது அவ்வளவு வேண்டும் என்று கேட்டுவிட்டாரானால் உன்னுடைய நகைகளை கொடுப்பதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லைதானே?”

 அவ்வளவுதான் ரூபாவதி வாயை அழுத்தி மூடிக் கொண்டாள். உன் தங்கையை பற்றி ஒரு வார்த்தை கேட்டேறென்றால் ஏனென்று கேள் என மிக அமைதியான மருமகளாகிப் போனாள். தமிழ்ச்செல்வன் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான்.வெல்டன் தமிழ் தன் முதுகில் தானே தட்டிக் கொண்டான்.

 அன்று காலையிலேயே “உனக்கு கொஞ்சம் புது சேலைகள் வாங்க வேண்டும் மகி, இன்று ஒரு நாள் உன்னுடைய கிளாசுக்கு லீவு போடு” சௌபாக்கியம் சொல்ல ரூபாவதிக்கு புரு புருத்தது. எத்தனை சேலைகள்… எவ்வளவு விலையில்… ஏற்கனவே பீரோ நிறைய அடுக்கி வைத்திருக்கிறாள். இன்னமும் புதிதாக எதற்காம்? 

ரூபாவதியின் மனது கிடந்து அடித்துக் கொண்டது.”நானும் வரட்டுமா அத்தை?” தேன் குரலில் கேட்டாள்.

” ஐயோ நீ எதற்கம்மா? உனக்கு உன்னுடைய வேலை இருக்கிறது. அங்கெல்லாம் அலைய வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” சௌபாக்கியம் சொல்ல பல்லை கடித்த படி கடைக்கு கிளம்பி போனாள். 

மதிய உணவு நேரம் மீனாட்சி மருத்துவமனைக்குள் இருந்து வந்த நர்ஸ் சியாமளா “இந்த மருந்தெல்லாம் வாங்க வேண்டுமாம் சார். டாக்டர் சார் லிஸ்ட் கொடுத்து இருக்கிறார். எதுவும் விபரம் வேண்டும் என்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னார். மெடிக்கல் ரெப்ஸ் நாளை கடைக்கு வருவார்கள். விலை விவரம் டிஸ்கவுண்ட் எல்லாம் உங்களையே பேசி விடச் சொன்னார்” என்றபடி மருந்துகளின் லிஸ்ட்டை கொடுத்தாள்.

” இல்லை சிஸ்டர் டிஸ்கவுண்ட்ஸ் எல்லாம் நான் டாக்டர் சார் வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும். மெடிக்கல் ரெப்ஸ் வரும் போது நானும் ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறேன்” என்றான் தமிழ் செல்வன்.

” சரிதான் சார். அப்புறம் என் காதிற்கு ஒரு விஷயம் காற்றுவாக்கில்  வந்தது அது உண்மைதானா சார்?”சியாமளா கேட்க,ரோலிங் சேரில் ஆடியபடி போனில் சாட்ஸ் பார்த்துக் கொண்டிருந்த ரூபாவதி மெல்ல எழுந்து வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டாள்.




 “நம்ம டாக்டர் சாருக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடக்கிறதாமே?”

” உங்களுக்கு யார் சொன்னார்கள் சிஸ்டர் ?டாக்டர் சாரா?”

” அவர் என்று வாயைத் திறந்து பேசி இருக்கிறார்? நான் ஊருக்குள் கேள்விப்பட்டேன்”

” ஓ அப்படியா இதோ இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரியும்” தமிழ்ச்செல்வன் சொல்ல, “என்ன சார் உங்களுக்கு தெரியாமல் எப்படி… நான் கேள்விப்பட்டது நிஜம்தானா?” சியாமளா துருவ ,தமிழ்ச்செல்வன் “நீங்கள் என்ன கேள்விப்பட்டிருந்தாலும் சிஸ்டர், நம் டாக்டர் சார்  சொன்னால்தான் அது நிஜம்.நீங்கள் டாக்டரிடம் கேட்டுக் கொள்ளுங்களேன்” என்று முடித்தான்.

 “நீங்கள் ரொம்ப விவரம் தான் சார். நம்ம ஆனந்தம் சில்க்ஸ்ல உங்க அம்மாவும் தங்கையும் நிறைய புடவைகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதுதான் உங்கள் வீட்டிலும் கல்யாணம் வந்துவிட்டதோ என்று கேட்டேன்”

” இதை நீங்கள் அம்மாவிடமே கேட்டிருக்கலாமே?”

” ம்க்கும் வாயை திறக்க மாட்டீர்களே! இதோ இப்போதே ஜவுளிக்கடைக்கே போய் உங்கள் அம்மாவிடமே கேட்டுக் கொள்கிறேன் ” சியாமளா கிளம்பி போய்விட ரூபாவதியும் வேகமாக கிளம்பினாள்.

” இந்த பில்களை சரிபார் ரூபா. எங்கே போகிறாய்?”

” ஒரு முக்கியமான வேலை.இதோ வந்துவிடுகிறேன்”

 தமிழ்ச்செல்வன் தலையில் அடித்துக் கொண்டான் “இவளை திருத்தவே முடியாது. கம்ப்யூட்டர் ஸ்கிரீனை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.

 ஆனந்தம் சில்க்ஸ் கடைத்தெருவின் இறுதி மூலையில் இருந்தது.ரூபாவதி வேகமாக குறுக்கு வழியில் புகுந்து சென்றபோதும் சியாமளா முன்பே சென்று கடையில் இருந்த சௌபாக்கியம் மகதீியிடம் பேசிக் கொண்டிருந்தாள். மூவரும் சிரித்து பேசுவதை எரிச்சலாக பார்த்தாள் ரூபாவதி.பில் போட்டு முடித்து மாமியாரும் நாத்தனாரும் இரண்டு கைநிறையும் அளவிற்கு தூக்கிக் கொண்டிருந்த கட்டைப்பைகள் ரூபாவதியின் எரிச்சலை அதிகப்படுத்தியது. எவ்வளவுதான் வாங்கினார்கள் இரண்டு பேரும்…?

 மூவரும் பேசியபடி வாசலுக்கு வர ரூபாவதி மறைந்து கொண்டாள்.”அம்மா நான் ஆட்டோ கூப்பிடுகிறேன். நீங்கள் பாத்ரூம் போய்விட்டு வாருங்கள்” தாயின் கையில் இருந்த பாரங்களை இறக்கி கீழே தன்னருகே வைத்துக் கொண்டாள் மகதி. 

சௌபாக்கியம் கடைக்குள் போக சியாமளா மகதியின் தோளில் இடித்தாள். “மகதி நீ பெரிய ஆள்தான்மா. ஒரு வழியா உன்னுடைய ஆசை நிறைவேற்றிக் கொண்டாய் போலவே”

 மகதி பதறினாள்.” அக்கா  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எதையாவது பேசாதீர்கள்”

” நான் என்ன தப்பாக பேசினேன்? நீ பதினைந்து வயதிலேயே நம்ம டாக்டர் சாரை லவ் பண்ணியது எனக்கு தெரியும்.அப்போதே தைரியமாக அவரிடம் காதலை சொன்னவள் தானே நீ…!”சியாமளா பேசிக் கொண்டே போக மகதி பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.

 எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரூபாவதியின் விழிகள் பெரிதாய் விரிந்தன. ஆஹா இந்த உத்தம சிகாமணியின் பின்னால் இப்படி ஒரு காதல் கதை இருக்கிறதா? ரூபாவதியின் மூளை அடுத்தடுத்த திட்டங்களை போடத் துவங்கியது. அன்று மாலை அவள் வேகமாக சென்ற இடம் குணாளனின் வீடு.

“வணக்கம்மா என்னை தெரியும்தானே? ஹெட்மாஸ்டர் சுகவனத்தின் மருமகள்.உங்களிடம் ஒரு விசயம் பேச வேண்டுமே” என்று மீனாட்சியின் முன் நின்றாள்.




What’s your Reaction?
+1
40
+1
28
+1
1
+1
3
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!