Serial Stories Uncategorized

கோகுலம் காலனி-13

13

எதிர்காற்று முகத்திலறைய அடிக்கடி நந்தகுமாருடன் உராய்ந்தபடி சென்று கொண்டிருந்த இந்த பைக் பயணத்தை இந்த நிமிடம் வரை ராகவியால் நம்ப முடியவில்லை .

” எங்கே தம்பி …? ” ஆட்சேபத்துடன் கூடிய கேள்வியை செண்பகம் எழுப்பினாள்தான் .

” முரளி பற்றி எனக்கு ஒரு ஐடியா இருக்கிறது ஆன்ட்டி .உறுதியாக தெரியவில்லையென்றாலும்  நாம் அதனை டிரை பண்ணி பார்க்காமல் இருக்க முடியாது .அதற்காக வெளியே சில இடங்களுக்கு போக வேண்டும் .அங்கே சில போது முரளியின் தங்கையாக ராகவி தேவைப்படலாம் .அதற்காகத்தான் …” 

செண்பகம் சம்மதித்து விட்டாள் .அவளுக்கு ஊருக்கு போயிருக்கும் கணவர் வீடு திரும்பும் முன் , அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் அவள் மகன் வீடு வந்து விட வேண்டும் .கூடவே ” அனுப்பி விடு செண்பா ” என தோள் பற்றி தைரியம் சொன்ன தோழியின் நம்பிக்கை வேறு .

நந்தகுமாரின் ஸ்டார்ட் பண்ணிய பைக்கில் ஏறப் போன போது , பக்கத்து வீட்டு கீதா இருவரையும் நிஜமாகவே ” ஆ ” என திறந்த வாயோடு பார்த்தாள் .ராகவி சட்டென திரும்ப வீட்டிற்குள் ஓடினாள் .

” அம்மா பக்கத்து வீட்டு கீதா நம்ம வீட்டையே வேவு பார்த்துட்டு நிற்கிறாள் . நிச்சயம் இப்போ உள்ளே வருவாள் .ஆன்ட்டி அவளும் , அவள் அம்மாவும் இங்கே வந்தார்களென்றால் இரண்டே நிமிடத்தில் நடப்பவைகள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடுவார்கள் .பிறகு காலனி முழுவதும் பரவி விடும் …” 

சற்று இளைப்பாறலில் இருந்த செண்பகத்தின் அழுகை மீண்டும் தொடங்கியது .” அழாதே செண்பா .எவள் இங்கே வருகிறாள்னு பார்க்கிறேன் …” சுந்தராம்பாள் அதட்டி விட்டு , விடு விடுவென வாசலுக்கு வந்தாள் .அங்கே கீதாவும் , அவள் அம்மாவும் இவர்கள் வீட்டிற்குள் நுழைய தயாராக வந்து கொண்டிருந்தார்கள் .




” கலாவதி எங்கே கிளம்பி விட்டாய் …? ” நேராக இங்கேயே வந்து கொண்டிருந்த கீதாவின் தாயின்  வழியை மறித்து நின்று கொண்டு கேட்டாள் .

” நானாக்கா …நான் …சும்மா …இப்படியே …வந்து செண்பகாக்காகிட்ட  ஒரு விபரம் கேட்கலாம்னு வந்தேன் …”இழுத்தபடி உள்ளே நுழைய முயன்றவளின் முன் குறுக்காக கை நீட்டி வாசல் கேட்டை பிடித்துக் கொண்டாள் .

” செண்பாவிறகு காய்ச்சல் .உள்ளே தூங்குகிறாள் ” 

” ஐயோ …காய்ச்சலா …எப்போ …? நேற்று உங்க கூட சண்டை போடும் போது கூட நல்லாத்தானே இருந்தார்கள் …” மெல்ல அவர்களது சண்டையை நினைவுபடுத்தினாள் .

” ஆமாம்…சண்டை போட்டோம் போ …பெரிய சண்டை …அது ஏதோ சின்னப்புள்ளைங்க சண்டை . அந்த பீத்த சண்டைக்கு  வருசம் வருசமா பழகுன எங்க பழக்கம் மாறிடுமாக்கும் …” 

தெருவாசிகள் கொஞ்சம் தவறினாலும் ஒருவர் கழுத்தை ஒருவர் நெரிக்கும் ஆத்திரத்தில் நேற்று இருவரும் இருந்தனர் .இன்று அது பீத்த சண்டையாமே …கலாவதியும் , கீதாவும் அயர்ந்து பார்த்தனர் .

” இங்கே என்னடா வாய் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் …? போய் டாக்டரை கூட்டி வாயேன் …இதோ இவளையும் கூடக் கூட்டிப் போ .அவளுக்குத்தான் டாக்டர் வீடு தெரியும் …” ஓரமாக நின்று கொண்டிருந்த நந்தகுமாரையும் , ராகவியையும் விரட்டி தன் சொல்லின் கீழ்தான் இருவருமாக வெளியே செல்கின்றனர் என தெரியப்படுத்தினாள் .

” ஏய் கீதா அயர்ன் மேன் எங்கே நின்னு அயர்ன் பண்ணிட்டு இருக்கிறான் …? எல்லோர் வீட்டிலும் துணி வாங்கியிருக்கிறான் .என் வீட்டிறகு மட்டும் வரவில்லை . அவனை பார்த்து இங்கே அனுப்பி விடு …போ …” சுந்தராம்பாளின் மிரட்டும் சத்தம் பின்னால் கேட்டுக் கொண்டிருக்க , இருவரும் பைக்கில் ஏறி வந்து விட்டனர் .

” ஆன்ட்டி கரெக்டாக சமாளித்தார்கள்ல …? ” காற்று அலைக்கழித்த தன் குரலை காக்க உயர்த்தி பேசினாள் ராகவி .

” ம் .கொஞ்ச நேரம் முன்பு அவர்களுக்குத்தானே பதிலுக்கு பதில் கொடுக்க யோசித்துக் கொண்டிருந்தாய் …? ” 

ராகவி வாயை மூடிக்கொண்டாள் . மெல்ல ” சாரி ” என்றாள் .

நந்தகுமார் பதில் பேசாமல் வண்டியை முடுக்கினான் .

” அண்ணனுக்கு போன் செய்யலாமா …? ” 

” போன் செய்து …என்ன கேட்பாய் …? எங்கே இருக்கிறாய் என்றா …? உண்மையை சொல்வானா …? முதலில் போனை எடுப்பானா …? ” 

” ஏதாவது செய்ய வேண்டுமே …அண்ணனிடம் பேசினால் எதுவும் ஐடியா கிடைக்கலாமென நினைத்தேன் ” ரகவியின் குரல் இறங்கிவிட்டது .

” ஏதாவது செய்வதாக இருந்தாலும் நிறைய யோசித்துத்தான் செய்ய வேண்டும் ” 

” அண்ணன் விசயத்தில் உங்கள் ப்ளான் என்ன ? ” 

” என் கணிப்புபடி உன் அண்ணா இங்கே நம் ஊரில்தான் எங்கோ தங்கியிருக்கிறான் . ஏதோ ஓர் வெளியூருக்கு போக ப்ளான் செயதிருக்கிறான் .அவன் ஊரை விட்டு ஙெளியேறும் முன்பு அவனை பிடித்து விட்டோமானால் அவன் பயணத்தை தடுத்து விடலாம் …” 

” ஓ … எப்படி சொல்கிறீர்கள் …? ” 

” இரண்டு நாட்கள் கழித்து அயர்ன் பண்ண டோபி வருவான் என்றே அப்போது  நீங்கள் பார்ப்பதற்காகவே அந்த லெட்டரை அங்கே வைத்து விட்டு போயிருக்கிறான் .அந்த இடைவெளி அவனுக்கு தேவைப்பட்டிருக்கிறது.   இப்போது இன்றே …அவன் வீட்டை விட்டு கிளம்பிப் போன சில மணி நேரங்களிலேயே அவனை நாம் தெரிந்து கொண்டது அவனுக்கு தெரியக்கூடாது .நாம் சத்தமில்லாமல் அவனை நெருங்க வேண்டும் …” 




” அது எப்படி நந்தா …? அண்ணன் லவ் பண்ணும் பெண்ணை பற்றி ஒன்றுமே தெரியாது . எப்படி அவர்களை கண்டுபிடிக்க முடியும் ..? ” 

” முயன்றால் எல்லாம் முடியும் . முடிய வேண்டும் .முரளி செய்வது தவறு .அவனிடம் பேசி தவறை உணர வைக்க வேண்டும் .அதற்கு முதலில் அவனை சந்திக்க வேண்டும் ….” பேசியபடி பைக்கை ஒரு பார்க்கின் முன் நிறுத்தினான் .

” அங்கே வீட்டில் சரியாக யோசிக்க முடியவில்லை ராகவி .இங்கே உட்கார்ந்து நிதானமாக யோசிப்போம் .முரளியின் சமீபகால நடவடிக்கைகளை மனதிற்குள் ஓட்டிப் பாரு .ஏதாவது தோணினால் சொல்லு …” பார்க் பெஞ்சில் சாய்ந்து அமர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டான் .

ராகவியும் கண்களை மூடிக் கொண்டாள் .அண்ணனுடன் பேசிய …இருந்த… நேரங்களை மனதிற்குள் கொண்டு வந்தாள் . ஐந்தே நிமிடங்களில் கண்களை திறந்தாள் .

” அண்ணனுக்கு சரியான வேலை அமையவில்லை என்ற வருத்தம் நிறைய இருந்தது நந்தா .ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக அந்த கவலை அவனுக்கு குறைந்த்து போல் எனக்கு ஓர் எண்ணம் .எப்படி என்று கேட்காதீர்கள் .இதுவென குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை .ஆனால் எனக்கு உறுதியாகவே தோன்றுகிறது .” 

” ம் …சோ ..முரளி அவனது எதிர்காலத்தை பற்றி ஏதோ ஓர் திட்டமிடலை வைத்திருந்திருக்கிறான் . என்னிடம் கூட வேலை விசயமாக ரொம்ப இன்டரெஸ்ட் காட்டவே இல்லை .” 

” பிறகு ஏன் அவனை திரும்ப திரும்ப வேலைக்கு வற்புறுத்திக் கொண்டிருந்தீர்கள் …? ” 

அதை சொல்லித்தானே அவனை வைத்து உன்னை அடிக்கடி பார்க்க …பேச எனக்கு முடிந்தது .நந்தகுமார் மனதிற்குள் சொல்லிக் கொண்டான் .இதை வெளியே சொல்லும் சூழல் இப்போது இல்லை …ராகவி அறைந்தாலும் அறைவாள் என தோன்றியதால் வாயை இறுக மூடிக் கொண்டு விட்டான் .

” அவனது நடவடிக்கைகளை மிகவும் ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறான் . எங்கள் ப்ரெண்ட்ஸ்களில் அவனுக்கு நெருக்கமான ஓரிரண்டு பேருக்கு போன் செய்து சாதாரணமாக பேசிப் பார்த்தேன் .அவனது விசயங்கள் யாருக்குமே தெரியவில்லை .இன்று அவன் பிக்னிக் போவது கூட அவர்களுக்கு தெரியவில்லை ” 

” பிக்னிக் போவதாக இருந்தால்தானே அதனை சொல்லியிருப்பான் .ப்ராடு பய …” ராகவி எரிச்சலாக முணுமுணுத்தாள் .

நந்தகுமார் ஆறுதலாக அவள் தோள் தட்டினான் .” ரிலாக்ஸ் ராகா .நாம் அவனுக்கு புரிய வைக்கலாம் ” 

” எங்கே புரிய வைக்க …? அதற்கு முதலில் அவன் நம்  கண்களில் பட வேண்டுமே .” 

” எனக்கு நம்பிக்கை இருக்கிறது ராகா .நாம் கண்டுபிடித்து விடலாம் …எங்கேயாவது …ஏதாவது …ம் ….” நெற்றியை தேய்த்தவன் மலர்ந்தான் .

” ராகா நான் இங்கே திரும்ப வந்த்தும் முதன் முதலில் உன் அண்ணனை நம் காலனி கோவிலில்தான் பார்த்தேன் .வாடா டீக்கடைக்கு போகலாமென்று கூப்பிட்ட போது …ஒரு மாதிரி முழித்தான் . நீ போடா …ஐந்து நிமிடத்தில் பின்னாலேயே வருகிறேன்னு ரொம்ப தயங்கினான் .நானதான் வலுக்கட்டாயமாக இழுத்து போய் வண்டியில் ஏற்றினேன் ….அப்போது கோவிலில்….” மண்டையை தட்டியபடி யோசித்தவன் பட்டென எழுந்தான் .

” வா ராகா .கோவிலுக்கு போய் பார்க்கலாம் ” அவள் கை பிடித்து எழுப்பி அழைத்து போனான் .

” இதோ இந்த துளசி செடி பக்கத்தில்தான் தயக்கத்தோடு நின்று சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான் .இப்போது யோசித்து பார்த்தால்…இதோ இந்த செடிக்கு பின்னால் ஒரு தாவணியோ , சேலையோ , ஷாலோ …லேசாக தெரிந்த ஞாபகம் வருகறது ” 

” அப்போது அது தான் அந்த பெண் எனகிறீர்களா …? ” 

” இருக்கலாம் .வா …” கோவில் குருக்களிடம் போனான் .

பொதுவான விசாரிப்புகளின் பின் ராகவியின் கையை நிமிண்டினான் .” என் அண்ணன் நேற்று வந்தாரா குருக்களே …?” ராகவி சாதாரணமாக விசாரித்தாள் .

” உன் அண்ணன் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வந்துடுவார் குழந்தே .நேற்றுக் கூட வந்தாரே …பாவம் வேலை கிடைக்கலைன்னு அவருக்கு வருத்தம் .நான் ஆறுதல் சொல்வேன் .அதோ அந்த துளசி புதர் பக்கத்திலே போய் உட்கார்ந்து  கண்ணை மூடி தியானம் பண்ணின்டிருப்பார் .மனது அமைதியாகறதுன்னுவார் …நீங்களும் டிரை பண்ணி பாருங்கோளேன் …” குருக்கள் கை காட்ட ராகவிக்கு சப்பென்றானது .

” ப்ச் இங்கே உட்கார்ந்து அண்ணன் யோகா பண்ணியிருக்கிறான் நந்தா .நீங்கள் பார்த்த அன்று கூட யோகா  பண்ணிவிட்டு வருவதற்காகவே உங்களை முன்னால் போக சொல்லியிருக்கலாம் ” 

” ம் …அந்த யோகாவை நாமும் செய்து பார்க்கலாமே …” நந்தகுமார் ராகவி உட்கார இடம் காட்டியபடி   சொல்ல ராகவி அந்த செடியருகே அமர்ந்தாள் .அவளுக்கு மறுபுறம் நந்தகுமாரும் அமர்ந்தான் .இருவரும் கண்களை மூடிக் கொண்டனர் .

ஐந்து நிமிடம் கண்களை மூடியும் மனதை ஒருமிக்க முடியாமல் ராகவியின் மனது அலை பாய்ந்த்து .அம்மா , அப்பா , வீடு என அலைந்து அண்ணனின் அடாத செயலில் மனம் வெகுண்டு ,இறுதியில் நந்தகுமாரிடம் வந்து நிலைத்தது . மூடிய இமைகளின் ஆரஞ்சு பின்னணிகளின் பின்பு ….பொறுப்பாய் கஞ்சி வைத்து ஆற்றி அவளுக்கு நீட்டியவன் , திடுமென அவள் கன்னத்தில் முத்தமிட்டான் .

ராகவி பட்டென விழி திறந்து கொண்டாள் .சை …என்ன இது …கோவிலில் வைத்து இப்படி கண்ட நினைவுகள் …தன்னையே வைதபடி பக்கத்தில் திரும்பிப் பார்க்க , நந்தகுமார் அசையாமல் தியானத்தில் அமர்ந்திருந்தான் .அமைதி வழியும் அவனது முகம் ஏதோ ஓர் வசீகரமூட்ட   ராகவி விழியகற்ற முடியாமல் அவனை பார்த்தபடி இருந்தாள் .

” டேய் நந்தா என்னடா காலங்கார்த்தாலே இங்கே வந்து உட்கார்ந்து தியானத்தில் இறங்கிட்ட …? அந்த முரளியை மாதிரி நீயும் மாறிட்டாயா …? ” கேட்டபடி வந்து நின்றான் காலனி தோழன் ஒருவன் .

” ஆமாம்டா .நீ கொஞ்ச நேரம் என்னை டிஸ்டெர்ப் பண்ணாமல் போ …” கண்களை திறக்காமலேயே பதிலளித்தான் நந்தகுமார் .அவன் தோள்களை குலுக்கிக் கொண்டு போனான் .

” நம்ம சுந்தராம்பாள் மகன்தானே …எப்படி அமைதியாக உட்கார்ந்திருக்கிறான் பாரேன் . பாரின்ல போய் ஹோட்டல் நடத்தி பெட்டி பெட்டியாக பணம் கொண்டு வந்திருக்கிறான் .இவன் பேச்சுத்தான் இப்போது நம்ம காலனி முழுவதும் ….” பேசியபடி பெண்கள் கூட்டம் ஒன்று கடந்து போனது .

இளம் பெண்கள் கூட்டம் ஒன்று நந்தகுமாரை கண்களால் விழுங்கியபடி போனது . ” ,சோ மேன்லியா …” காற்றில் கலந்த கமெண்ட்டில் ராகவிக்கு ஆத்திரம் வந்தது. இவன் இப்போது எதற்கு எல்லோருக்கும் தெரிகிற மாதிரி உத்தமன் போஸ் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் …? பட்டென இரு கைகளாலும் தரையை ஓங்கி அடித்தாள் .

நந்தகுமார் கண்களை திறந்தான் . இவள் பக்கம் திரும்பாமலேயே கேட்டான் .” ஏதாவது உணர்ந்தாயா ராகா …? ” 

” உன் வெட்டி பந்தாவை…காலனி ஆட்களை வசப்படுத்தும் உன் வித்தையை  நன்றாக தெரிந்து கொண்டேன் …” படபடத்து விட்டு வேகமாக எழுந்து கோவிலை விட்டு வெளியேறினாள் ராகவி. 




 

What’s your Reaction?
+1
20
+1
13
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!