Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-15

15

முதலில் மூக்கும் மூக்கும்தான் உரசிக் கொண்டன் பிறகுதான் மெல்ல இதழ்கள் ஒன்றை ஒன்று நெருங்க ர்ர் என்ற ஏசியின் சத்தத்தை தவிர பின் டிராப்  சைலன்ஸ் தியேட்டருக்குள். பெற்றோர் இல்லாமல் தோழிகளுடன் பார்க்கும்போது ஒரு வேளை இந்த நெருக்கமான காதல் காட்சியை மகதியால் ரசித்து இருக்க முடியுமோ என்னவோ…

 ஆனால் இப்போது கணவனின் அருகாமையில் இந்த காட்சி அவளில் ஒருவித பதட்டத்தையும் பரபரப்பையும் உண்டாக்க உடல் சில்லிட்டது. மாற்றாக அவள் கையை உரசிய அவன் கை கொதித்துக் கொண்டிருந்தது.படம் ஆரம்பித்ததிலிருந்து லேசு பாசாக அவளை உரசியபடியிருந்த கை இப்போது சப்பென அவள் கையுடன் அழுத்தமாக ஒட்டிக் கொண்டது.

அந்த சூடு வினாடியில் இவள் உடல் முழுவதும் பரவ,சில்லிப்பு மாறி சிலிர்த்து கொதிக்க தொடங்கியது அவள் உடலும்.முத்து முத்தாக முகமெங்கும் வியர்க்க தொடங்க,குணாளன் அவளை மிக நெருங்கி முகமருகே குனிந்தான். “என்ன பண்ணுது? ஏன் இப்படி வியர்க்கிறது உனக்கு?”

 இதைக் கேட்க எதற்கடா இவ்வளவு பக்கத்தில் வருகிறாய்? இருக்கையில் பின் சாய்ந்து தன்னை அழுத்தியபடி தலையசைத்து ஒன்றுமில்ல என்றாள் ஜாடையில். குணாளன் அவள் கன்னத்தை தொட்டுப் பார்த்து “திரும்பவும் காய்ச்சல் வந்து விட்டதா?” என்றான்.

 அடேய் தொடாதடா மனதிற்குள் அலறியபடி,  இன்னமும் தன்னை இருக்கைக்குள் அவள் குறுக்க, அவன்  இதழ் குவித்து அவள் நெற்றியில் ஊதினான்.” எவ்வளவு வியர்வை ?” அக்கறையாய் கவலை காட்டினான்.

புதிதாக திருமணமானவர்கள் சேர்ந்து சினிமாவிற்கு போக வேண்டும் என்பது எவன் சொன்ன ஐடியா..? சினிமாவிற்கு டிக்கெட் புக் செய்து அனுப்பி வைத்த மாமியாரை மனதிற்குள் தாளித்து கொட்டினாள் மகதி. திரையில் ஹீரோவும் ஹீரோயினும் போர்வையால் தங்களை முழுவதுமாக மூடிக்கொண்டிருக்க, வெளிநாட்டில் பாடல் காட்சி ஒன்று ஆரம்பமாக தொடங்கியது.

“உனக்கு உடம்பு அவ்வளவு சரியில்லை போல் தெரிகிறது. வீட்டிற்கு போகலாமா?” குணாளன் கேட்க வேகமாக தலையாட்டி எழுந்து விட்டாள். நல்ல வேளை கண்ட கண்ட சீன்களில் இருந்தெல்லாம் காப்பாற்றி விட்டான், கணவனை பெருமையாக நினைத்தபடி இருந்தவள் வீடு நெருங்கியதும்தான் விழித்தாள். இப்போது எதற்காக அவசரமாக வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறான்? ஏதேதோ யூகங்களுடன் வயிற்றை புரட்ட மீனாட்சி இருவரையும் கண்களை சுருக்கி பார்த்தாள்.




“சீக்கிரம் வந்து விட்டீர்கள் போல..சினிமா அதற்குள்ளா முடிந்து விட்டது?”

” உங்க மருமகளுக்கு காய்ச்சல் வர்ற சிம்டம்ஸ் எல்லாம் வந்துடுச்சு. அதான் கூட்டிட்டு வந்துட்டேன்” சொன்னபடி குணாளன் மாடி ஏறினான்.

மீனாட்சி இவள் அருகே வந்து உடலை தொட்டுப் பார்த்து “ஜில்லுன்னு இருக்குது. காய்ச்சல் எங்கே இருக்காம்? இவறெல்லாம் ஒரு டாக்டர்! நீ பாலை எடுத்துக் கொண்டு போய் கொடும்மா. நான் போய் படுக்கிறேன்” என்றபடி போய்விட்டாள்.

 பதக் பதக்கென்று துடித்த நெஞ்சத்துடன் மாடி ஏறினாள் மகதி. அறைக்குள் குணாளன் இல்லை. எங்கே போய் விட்டான்… மகதி எட்டிப் பார்க்க பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். மகதியின் விழிகள் ஆசையுடன் அந்த ஊஞ்சலை வருடியது.

 சிறு வயதில் இருந்தே அந்த ஊஞ்சல் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.ஒருமுறை குணாளன் அறைக்குள் இல்லாத நேரத்தில் ஆசையுடன் அந்த ஊஞ்சலில் ஏறி அமர்ந்து வேகமாக ஆடிக்கொண்டிருந்த போது பின்னிருந்து அவளை அப்படியே தூக்கினான் அவன்.  “பாப்பா இந்த ஊஞ்சலில்லெல்லாம் உட்காரக் கூடாது.ஓடு” அவனின் உயர்ந்த குரலில் அலறியடித்து ஓடிவிட்டாள்.இப்போதும் இங்கு வந்ததிலிருந்து பால்கனி பக்கமே வரவில்லை. 

குணாளன் மேலே சட்டை இல்லாது ஒரு துண்டை மட்டும் போர்த்தியிருந்தான். அவனது அகன்ற மார்பை மூட முயன்று முடியாது தோல்வியுடன் அவன் மேனியில் துவண்டு கிடந்தது அந்த மெல்லிய துண்டு. “இன்று வெயில் அதிகம்.ஒரே வெக்கை” மேலே இருந்த துண்டை எடுத்து அவன் துடைத்துக் கொள்ள, படபடப்புடன் பார்வையை திருப்பிக் கொண்டாள் மகதி.

“இந்த ஊஞ்சல் உனக்கு ரொம்பவும் பிடிக்கும்தானே?” கால்களை தரையில் ஊன்றி விடுத்து மெல்ல ஆடியபடி கேட்டான்.

“பிடிக்காது. பால் வைத்திருக்கிறேன் வந்து குடியுங்கள்” சொல்லிவிட்டு தனது வழக்கமான இடத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து பாலை குடித்துக் கொண்டிருந்தவனை மெல்ல ஓரக்கண் திறந்து பார்த்தாள்.

அவன் முதுகு காட்டி அமர்ந்திருக்க பரந்த அவனது முதுகில் பார்வை பட்டதும் அதிர்ந்தாள். வேகமாக எழுந்தமருந்து “என்னங்க இது ?” என்றாள் பதட்டத்துடன்.

 தலையை மட்டும் திருப்பி “என்ன?” என்றான். “இதென்ன உங்கள் முதுகெல்லாம் இப்படி… என்ன  தழும்பு இது..?”  கேட்கும்போதே குரல் கரகரக்க,அவனை அணுகி மெல்ல முதுகில் கை வைத்தாள். உடன் அவன் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தாள்.




” எப்படிங்க இது..?” அடுத்த நொடி அழுது விடுபவள் போல் நின்றவளின்  கைப்பற்றி கட்டிலில் அமர்த்திக் கொண்டவன் “இது மிலிட்டரியில் எனக்கு கிடைத்த வீர தழும்பு” என்றான்.

” நீங்கள் மிலிட்டரி டாக்டர் தானே? காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுதானே உங்கள் வேலை. உங்களையும் சண்டை போட சொல்வார்களா?”

 குணாளன் மெல்ல தலையசைத்தான். “மிலிட்டரி டாக்டர் என்றாலும் சில அடிப்படை ராணுவ பயிற்சிகள் அவர்களுக்கும் உண்டு. சில நேரங்களில் நாங்களும் போர் செய்ய வேண்டியிருக்கும்.பனியில் மாட்டிக்கொண்ட இரண்டு வீரர்களை காப்பாற்றுவதற்காக டாக்டர் என்ற முறையில் நான் செல்ல வேண்டியதிருந்தது.குண்டு பாய்ந்து நகர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர்களை அந்த இடத்திலேயே ஆபரேசன் செய்து குண்டுகளை அகற்றி தையல் போட்டு ட்ரெஸ்ஸிங் செய்து காப்பாற்றினேன். பிறகு அவர்களை பாதுகாப்பாக இராணுவ ஜீப்பில் ஏற்றிவிட்டு நானும் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக என் காலடியில் பனி உருகி கீழிறங்க துவங்கியது. இடுப்பளவு பனியில் புதைந்து செய்வதறியாது நின்று கொண்டிருந்தேன். நான் காப்பாற்றிய வீரர்களுக்கும் ஜீப்பிலிருந்து இறங்கி வர முடியாத நிலைமை. உரத்த குரலில் அருகில் இருந்த கிராம மக்களை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இரவு முழுவதும் நடுக்கும் குளிரில் அப்படி அழைத்துக் கொண்டே இருந்தேன். விடியும் தருவாயில்தான் அவர்களுக்கு கேட்டு வந்து எங்களை விடுவித்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். அப்போது இரவு முழுவதும் என் முதுகில் அட்டைப் பூச்சிகள் ஒட்டிக்கொண்டு கடித்த தடங்கள்தான் இவை.அப்போது அவற்றை உதற முடியவில்லை. வலியை தாங்கிக் கொண்டு கத்தியபடி இருந்தேன்” 

குணாளன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சிறு விம்மலுடன் அவன் முதுகை அணைத்துக் கொண்டாள் மகதி. “எவ்வளவு கஷ்டம்? ஏன் இப்படி எங்களையெல்லாம் விட்டுவிட்டு போனீர்கள்?” சரசரவென கண்ணீர் வடிந்த அவள் முகத்தை வேடிக்கை பார்த்தவன் செல்லமாக தலையில் கொட்டினான்.

” இன்னமும் அதே மூக்குறுஞ்சி குட்டி மகதிதான்”

” நான் ஒன்றும் மூக்குறுஞ்ச மாட்டேன்” சொல்லிவிட்டு மூக்குறுஞ்சிக் கொண்டவள்,” வலிக்கிறதா…?” எப்போதோ பட்ட காயத்திற்கு இப்போது வடுக்களை வருடினாள்.

 அவள் இரு கைகளையும் பிடித்து தன் மார்பில் சேர்த்துகொண்டு முதுகோடு அவளை அழுத்திக் கொண்ட  குணாளன் “அன்று மிகவும் வலித்தது. இப்போது இல்லை .உனக்கு தெரியுமா மகதி… அன்று அந்த இரவில்…குளிரில்  கொஞ்ச நேரம் தலை சாய்த்து கொள்ள ஒரு மடி கிடைக்காதா என்று நினைத்தேன். இன்று…” ஏக்கமாக அவளை திரும்பிப் பார்க்க, மகதி வேகமாக அவன் அருகே கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு அவன் தோள் பற்றி தன் மடி சாய்த்து கொண்டாள்.

 ஆறடி உயர ஆஜானுபாகுவான ஆண் தன் மடியில் துவண்டு சரிந்து இருப்பதை கண்ட மகதியின் மனம் எல்லையில்லா வாஞ்சையில் நிறைந்தது. மெல்ல அவன் முதுகு வடுக்களை வருடியபடி “உங்கள் ராணுவ கதைகளை சொல்லுங்கள்” என்றாள்.

குணாளன் உற்சாகமாக பேச துவங்கினான். இவற்றையெல்லாம் சொல்வதற்கு ஒரு தோழமையை அவன் எதிர்பார்த்திருந்தது நன்றாக தெரிந்தது. மகதி உம் கொட்டிக் கேட்க பேசியபடி இருந்தவன் ஒரு கட்டத்தில் கண்கள் சொருக தூங்கிப் போனான். அடர்ந்த அவன் தலை முடிக்குள் தன் விரல்களை விட்டு அலைந்தவள் அடர் புருவங்களை வருடி ,கூர் மூக்கை ஸ்பரிசித்து கடைசியாக அவளது வெகு நாள் ஆசையான அவனது மீசை நுனியை பிடித்து திருகிப் பார்த்துவிட்டு,மெல்ல மடியில் இருந்து தலையணைக்கு அவனை இடம் மாற்றினாள். பிறகு ஒரு விதமான நிறைவுடன் அருகில் படுத்து தூங்கிப் போனாள்.

 மறுநாள் காலை குளித்து முடித்து ஈரத் தலைமுடியை சுற்றி இருந்த துண்டை பால்கனி கொடியில் காயப் போட்டவளின் கண்கள் அந்த ஊஞ்சல் மேல் படிந்து விலகியது. மெல்ல அருகில் போய் நின்று பார்த்துக் கொண்டிருக்க பெண்ணிருந்து அவள் இடை அழுத்தமாக பற்றப்பட்டு அப்படியே அவள் தூக்கப்பட்டாள். அதிர்ச்சியாய் அவள் கால்களை உதற அவளை பற்றி தூக்கி ஊஞ்சலில் அமர்த்தினான் குணாளன். பிறகு ஊஞ்சலை ஆட்டி விட தொடங்கினான்.

 அவள் பின்னால் வரும் ஒவ்வொரு முறையும் அவள் இடையை அழுத்தி பற்றி ஊஞ்சலை தள்ளி விட்டவன், குனிந்து காதுக்குள் பேசினான். “இந்த ஊஞ்சல் அப்பா இருந்தபோது அவர் உபயோகித்தது மதி. உட்காருவது படுப்பது சாப்பிடுவது என்று அவருக்கு எல்லாமே இந்த ஊஞ்சலில்தான். அவர் இறந்த பிறகு வேறு யாரையும் இந்த ஊஞ்சலை தொடவிடவும் எனக்கும் அம்மாவிற்கும் மனமில்லை. அதனால்தான் இங்கே மாடிக்கு ஊஞ்சலை மாற்றி என் அறைக்குள் கொண்டு வைத்துக் கொண்டேன். அன்று நீ இதில் ஆடிய போது கூட  அதனால்தான் கோபம் வந்தது” விளக்கம் கொடுத்தவன் ஊஞ்சலை நிறுத்தி அவள் இடையை பின்னிருந்து கட்டிக்கொண்டு “ஓகேவா?” என்றான்.

 மகதி கூச்சத்தில் நெளிந்தாள். “இந்த கையை எடுத்து விட்டால் ஓகே” என்றாள்.

” ஏன் ?”அவன் கைகள் வீம்பாய் இன்னமும் அவள் இடைமேல் இறுகியது. “வந்து… எனக்கு கூச்சமாக இருக்கிறது”

“ஆஹா நீ மட்டும் நேற்று இரவு என்னை இப்படி பின்னிருந்து கட்டிக் கொண்டாயே! நானெல்லாம் ஒன்றும் சொல்லவில்லைதானே!” குணாளன் நியாயம் கேட்டான்.

 எதற்கு எதை முடி போடுகிறான் பார்… சர்ப்பமாய் தன்னை சுற்றியிருந்த அவன் கைகளை விலக்க முயற்சித்து முடியாமல் கெஞ்சுதலாக அவன் முகம் பார்த்தாள். “ப்ளீஸ் விடுங்க, எனக்கு இன்னைக்கு கிளாஸ் இருக்குது. நான் கிளம்பனும்”

 மனமின்றி அவள் இடையை வருடியபடி கைகளை எடுத்தவன் “நானும் கிளினிக் போகணும். வா உன்னை உன் அம்மா விட்டு வாசலில் இறக்கி விட்டுப் போகிறேன்”

 பைக்கில் ஜோடியாக கிளம்பிய இருவரையும் கண்கள் நிறைய பார்த்திருந்தாள் மீனாட்சி. அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் இருக்கும் அந்த பயணம். ஆனாலும் கணவனின் தோள் பற்றியபடி தாய் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அச்சிறு பயணத்தை மிகவுமே விரும்பி அனுபவித்தாள் மகதி.

” வாம்மா.. வா…” விருந்தாளி போல் தன்னை வரவேற்ற தாய் தந்தையை வியப்பாக பார்த்தபடி உள்ளே வந்தாள். 

“மாப்பிள்ளை வாசலோடு போயிட்டார். உள்ளே வர சொல்லியிருக்கலாமே..?” சௌபாக்கியம் கேட்க “அவருக்கு கிளினிக் இருக்குல்லம்மா. நான் கிளாசுக்கு போகிறேன்” மாடி ஏறினாள்.

” உன் கிளாஸ் ரூமை சுத்தமாக பெருக்கி துடைத்து வைத்திருக்கிறேன்மா” சௌபாக்கியம் சொல்ல இடுப்பில் கைதாங்கி தாயை முறைத்தாள். “ஏய் பாக்கி யார் இந்த வேலையெல்லாம் உன்னை செய்யச் சொன்னது? என் இடத்தை நான் சுத்தம் செய்து கொள்வேன்.இனிமேல் இந்த வேலை பார்க்காதே”

“எங்கள் இடத்தை நாங்கள் சுத்தம் பண்ணிக்கிறோம். இதில் உனக்கு என்னம்மா கஷ்டம்?” கேட்டபடி வந்தாள் ரூபாவதி.

 அதெப்படி நான்கே நாட்களில் இந்த இடம் என்னிலிருந்து அண்ணிக்கு உரியதாக மாறும்? ஆட்சேபமாக பார்த்தாள் மகதி.




What’s your Reaction?
+1
43
+1
21
+1
1
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!