Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-13

13

“ம்ஹூம் … “மகதி தலையசைத்து அவன் அழைப்பை மறுக்க குணாளனே மெல்ல அவளை நோக்கி நடந்து வரத் துவங்கினான். அவன் அருகில் வர வரவே உயர்ந்து கொண்டே போன அவன் உருவத்தில்தான் இன்னமும் தான் மண்டி போட்டு அமர்ந்திருப்பதை உணர்ந்தாள் மகதி. எழப் போனவளின் தோளில் கை வைத்து அழுத்தியவன் அதே உயரத்திற்கு தானும் குனிந்து பார்த்தான்.

” என்ன பார்க்கிறாய்?” கோட்டுருவாய் அவள் கிறுக்கி வைத்திருந்ததை பார்த்தவன் அன்று போல் இன்றும் அவள் காதைப் பற்றி திருகினான். “எங்கள் வீட்டு கண்ணாடியை கிறுக்கி பாழாக்க எவ்வளவு தைரியம்?”

” படம் வரைந்து இருக்கிறேனாக்கும்…” ரோஷத்துடன் மறுத்தவளின் உதடு கோபத்தில் பிதுங்கியது.

” என்ன படம்? யார் இது?” பிதுங்கிய உதடுகளில் பார்வை பதித்தபடி குணாளனும் இப்பொழுது அவளுக்கு சமமாக மண்டியிட்டுக் கொண்டான்.

” இதோ கையில் கம்பு வைத்துக் கொண்டிருப்பவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார். அவர் ஒரு டாக்டர். இந்த சிறுமி அவரிடம் பாடம் படிக்க ஆசைப்படுபவள். பாவம் எப்போதும் அவரிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பாள். சில நேரம் அடி கூட கிடைக்கும்” தான் வரைந்த உருவங்களை தொட்டு மகதி விளக்க குணாளன் புன்னகைத்தான்.

” இப்படி நினைத்தா இதனை வரைந்தாய்?”

 ஆக இத்தனை வருடங்களாக இதனைக் கூட இவன் கவனிக்கவில்லையா? மனவாட்டம் மகதிக்கு. மெல்ல எழுந்து நின்று கொண்டாள். 

“இது டாக்டர். சரி. யார் இந்த குட்டிப் பெண்?” குணாளன் தொட்டுக்காட்டி கேட்க மகதி உச்சு கொட்டினாள்.

” அவளை உங்களுக்கு தெரியாது. அவளுக்கு அண்ணனோடு சேர்ந்து டாக்டரிடம் பாடம் படிக்க ஆசையாக இருக்கும்.ஆனால் பயமாகவும் இருக்கும்” குறைபாடாய் சொன்னபடி குணாளனை  பார்த்தவள் முகம் சிவந்தாள்.

 மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் பார்வைக்கு நேராக எழுந்து நின்றவளின் இடைப்பகுதி இருக்க சேலைக்கட்டின் இடைவெளியில் பளீரென்று தெரிந்த தேகத்தில் நிலைத்திருந்தது அவன் பார்வை. அனிச்சையாக புடவையை மேலே ஏற்றி சரி செய்து கொண்டவள் “அத்தை கூப்பிட்டது போல் இருக்கிறது” வேகமாக படியிறங்கி விட்டாள்.

 கூடத்தில் இன்னமும் குழுமி கிடந்த பெண்களின் பார்வையில் படாமல் மெல்ல வீட்டின் பின்புறம் போய் அமர்ந்து கொண்டாள். இருள் ஆரம்பிக்கவும் மீனாட்சி வந்து அழைக்க சில உறவுப் பெண்கள் அவளுக்கு அலங்காரம் செய்ய துவங்கினர். கேலியும் கிண்டலுமாக அவர்கள் பேசிய பள்ளியறை ரகசியங்கள் மகதிக்கு உவ்வே வரும் போல அசிங்கமாக தோன்றியது.




” சரி சரி போதும் நீங்கள் எல்லோரும் கிளம்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” மீனாட்சி உள்ளே வரவும்தான் அவளுக்கு நிம்மதி மூச்சு விட முடிந்தது. 

“உன்னிடம் பேச வேண்டும் மகிம்மா” என்று ஆரம்பித்த மீனாட்சிக்கு எப்படி தொடர்வது என்று தெரியவில்லை. “வந்து… நேற்று குணா உன்னிடம்… வந்து… நல்லபடியாக நடந்து கொண்டானா?”

 மீனாட்சி கேட்க வரும் விஷயம் புரிய என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் மகதி. அழுத்தமாக அவள் கைகளை பற்றிய மீனாட்சி “எனக்கு தெரியும் அவன் சரியாக நடந்து கொண்டிருக்க மாட்டான். அவன் மனதில் இன்னமும் அந்த சரண்யா இருக்கிறாள்”

 மாமியார் சொல்ல மகதிக்கு தூக்கி வாரி போட்டது. சரண்யா… சில வருடங்களுக்கு முன்பு இந்த பெயர் அவள் மனதில் பதிந்துதான் கிடந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மறந்து போன பெயர் இப்போது விஸ்வரூபமாக எழுத்து எழுத்தாக அவள் முன் பிரமாண்டமாக எழுந்து நின்றது. குணாளனுக்கு முதலில் பார்த்த டாக்டர் மணப்பெண். இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்ததால் இருவருக்குள்ளும் காதல் என்ற பேச்சு கூட அப்போது ஊருக்குள் இருந்தது.

 ஆனால் திருமணத்தன்று காலை சரண்யா ஒரு விபரமும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிப் போனதில் இந்த காதல் கதை பொய் என்றே எல்லோரையும் போல மகதியும் நம்பிக் கொண்டாள்.ஆனாலும் அன்று குணாளன் கண்கலங்கி அமர்ந்திருந்த தோற்றம் அடிக்கடி அவள் மனதிற்குள் உறுத்தியபடி இருக்கும்.

மகதியின் நீர்த்திரையிட்ட கண்களை கண்டுவிட்ட மீனாட்சி பதறினாள். “மகிம்மா கண் கலங்காத புள்ள, என் மனசாட்சி என்னை துரோகின்னு ஏசுது. அறியா பெண்ணின் வாழ்வை கெடுத்து விட்டாயேன்னு குத்துது. குணா அவன் மனம் பற்றி என்னிடம் பேசியதில்லை. ஐந்து வருடங்களாக அஞ்ஞாத வாசம் போல் ஊரை விட்டு ஒதுங்கி இருந்தவனை கெஞ்சிக் கரைத்து திரும்ப ஊருக்கு வர வச்சேன். பிறகும் அழுது அடம் பிடித்து உண்ணாவிரதம்லாம் இருந்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறேன். அவன் கொஞ்சம் இல்லை நிறையவே கோபக்காரன்தான். இப்போது நான் உன்னிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் அவனது கோபத்தையோ வெறுப்பையோ பொருட்படுத்தாமல் அவனுக்கு எசஞ்சு கொடுத்து நீ அவனோட வாழ ஆரம்பிச்சிடனும்.உங்களுக்கு ஒரு பிள்ளைன்னு வந்துட்டா எல்லாம் சரியாகிடும்” கண்களில் இறைஞ்சலுடன் நின்ற மீனாட்சியை வெறுமையாக பார்த்தாள்.

 மாமியார் சொல்ல வருவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.வாழ்க்கையை வெறுத்து இருந்த மகனை பேசி கரைத்து திருமணம் வரை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள் தாய். இனி அவனுடைய மீத வாழ்க்கையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மருமகளிடம் ஒப்படைக்க நினைக்கிறாள். அதாவது மனதார அவன் பழைய காதலை மறந்து மனைவியுடன் வாழவில்லை என்றாலும் மனைவி என்ற உரிமையை பயன்படுத்தி உடலால் அவனை தன் பக்கம் கவர்ந்திழுக்க சொல்கிறார்.

 பின்னர் பிறக்கும் குழந்தையை வைத்து அவனை குடும்பம் என்ற கூட்டுக்குள் இழுக்க பார்க்கிறார். இது என்ன ஈனத்தனமான வாழ்வு! பெருமூச்சுடன் மகதி எழுந்து கொள்ள மீனாட்சி பதட்டத்துடன் அவள் கைகளை பற்றினாள்.

” மகிம்மா என்னை தப்பா நினைக்காதே புள்ள, குணா எனக்கு ஒற்றைப் பிள்ளையா நின்னு போனான்.கல்யாணம் வேண்டாம்னு  அவன் உறுதியாய் இருக்க எங்க வம்சத்தை வளர வைக்க எனக்கு வேறு வழி தெரியல.அன்னைக்கு தற்செயலா கடைத்தெருவில் உன்னை பார்த்ததும் இந்த பெண்ணை ஏன் கேட்கக்கூடாதுன்னு எனக்கு தோணுச்சு. தயக்கத்தோடுதான் பெண் கேட்டு விட்டேன். உங்கள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் ரொம்ப நல்லாயிருந்தது. உங்கள் வீட்டில் சம்மதம் சொல்லிட்டாலும் ஏதோ தவறு செய்த உணர்வுடன்தான் இருந்தேன். அப்பதான் உன் அண்ணி ரூபா இங்கே வந்தாள். உன்னை பற்றி பெருமையாக சொல்வதாக பேர் பண்ணிக்கொண்டு சிறுவயதிலேயே நீ குணாவிடம் காதல் சொன்னதை என்னிடம் சொல்லி போனாள். உன் மனதுக்கு பிடித்தவன் குணா என்றதுமே என் மனசுல இருந்த குற்ற உணர்வு மறைந்து விட்டது. நிச்சயம் அவன் மனதை மாற்றி அவனோடு வாழத் தொடங்குவாய் என்ற நம்பிக்கை வந்து விட்டது…” பேசிக் கொண்டே போன மீனாட்சியை கை உயர்த்தி நிறுத்தினாள் மகதி.




” உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும் அத்தை.பார்க்கலாம்…” என்றவளிடம் இதுவரை மாமியாரிடம் இருந்த மன ஒட்டுதல் குறைந்திருந்தது.

 எந்திரமாய் பால் சொம்பை எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள். பத்து வருடங்களுக்கு மேலாக மறக்க முடியாமல் மனதிற்குள் வேறொருத்தியை வைத்துக் கொண்டிருப்பவனை, உடலால் நெருங்கி என் பக்கம் திருப்ப வேண்டுமா? அது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கும் என்று மகதிக்கு தோன்றவில்லை. சற்றுமுன் தன் இடையில் பதிந்த குணாளனின் ஆண்பிள்ளை பார்வையை உணர்ந்தே இருந்தாள். 

ஆனால் அப்படி கீழிறங்கி அவனுடன் தாம்பத்தியம் செய்து பிள்ளை பெற வேண்டுமா? அசூசையில் அவளுடல் சுருங்கியது.அறைக்குள் டேபிள் முன் அமர்ந்து ஏதோ ஒரு கனத்த மெடிக்கல் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான் குணாளன்.

“உள்ளே வா மகதி, ஏதோ பாடம் படிக்க ஆசை என்றாயே! இப்படி வந்து உட்கார் படிக்கலாம்”  எதிரே இருந்த நாற்காலியை காட்டினான்.

 மகதி பால் சொம்பை டேபிளில் வைத்துவிட்டு “ஊற்றி குடித்துக் கொள்ளுங்கள்.எனக்கு தூக்கம் வருகிறது ” சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் ஒரு தலையணையை எடுத்து தரையில் போட்டுக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.




What’s your Reaction?
+1
45
+1
22
+1
1
+1
0
+1
1
+1
1
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!