Serial Stories

கோகுலம் காலனி-16

16

”  பெரிய வீட்டு கல்யாணம். அதுக்கு டிவி சீரியல் புரொட்யூசர் வர்றாரு. அங்கே வந்து பாடினால் டிவியில் பாடும் சான்ஸ் கிடைக்கலாம்னு , ரேகாவோட அம்மாவிடம் சொன்னேன் .அவுங்க உடனே ரேகாவிற்கு போன் போட்டு கொடுத்துட்டாங்க .ரேகா இல்லை நான் பாட வரவில்லைன்னு ஒரேடியாக மறுத்தாள் .நான் விடாமல் உங்களை நேரிலேயே வந்து பார்க்கிறேன்னு சொல்லி இடம் கேட்டு , இந்த சிதம்பரனார் பூங்காவிற்கு வருமாறு அட்ரஸ் சொல்லியிருக்கிறாள் .நாளை அவளை பார்க்க போகிறேன் …” 

நந்தகுமார் சுந்தராம்பாள் , செண்பகத்திடம் விபரம் சொல்லிக் கொண்டிருந்தான் .

” முரளி கூட போன பெண் அவள்தான் என்று என்ன நிச்சயம் நந்தா …? ” 

” ஒரு கெஸ்தான் அம்மா .முரளியோட லவ்வர் நம்ம காலனி பெண்தான்கிறது நிச்சயம் .அதனால்தான் அவளால்  நம்ம காலனி கோவிலுக்கு தினமும் வர முடிந்திருக்கிறது . அவள் ஒரு மியூசிக் டீச்சர் என்று வைத்து பார்த்தால் நம் காலனியில் பொருந்திப் போகிற ஒரே பெண் ரேகாதான் .இப்போது அவள் வீட்டிலும் இல்லை .வேலை விசயமாக வெளியூர் போயிருப்பதாக அவள் அம்மா சொல்கிறார் .ஆனால் அவள் எனக்கு சந்திக்க கொடுத்த இடம் நம் ஊர் பூங்கா . மகள் உள்ளூரிலேயே இருப்பது அவள் அம்மாவிற்குமே தெரியாமல் கூட இருக்கலாம் .முரளி இங்கேயே இருப்பது நமக்கு தெரிகிறதா என்ன …? ” 

” உங்கள் கணிப்புபடியே பார்த்தாலும் வீட்டை விட்டு போனவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ளாமல் …அல்லது வெளியூருக்கு போகாமல் ஏன் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் …? ” ராகவியின் கேள்விக்கு நந்தகுமார் உதடு பிதுக்கினான் .

” இது எனக்கும் புரியவில்லை .இதற்கான பதிலை அவர்கள் இருவரும்தான் சொல்ல வேண்டும் .” 

” அப்போ நாளைக்கு அந்த ரேகாவை பார்க்கில் போய் பார்த்து பேசப் போகிறாயா தம்பி …? ” 

” ஆமாம் ஆன்ட்டி .என் குறி மட்டும் சரியாக இருந்தால் …நாளை மாலை உங்கள் மகன் வீட்டிற்கு வந்து விடுவான் .கயறு கட்டி இழுத்து வந்தாவது உங்கள் காலடியில் போட்டு விடுவேன் .கவலைப்படாமல் போய் தூங்குங்கள் …” 

செண்பகம் கண் கலங்க நின்றாள் .” இதற்கெல்லாம் உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் தம்பி …? ” 

” உன் மகனை வாலை சுருட்டிக் கொண்டு ஒழுங்காக வேலைக்கு போய் விட்டு வரச் சொல்லு .அது போதும் …” அழும் தோழியை பார்த்து அதட்டினாள் சுந்தராம்பாள் .

” சுந்தரி உன்னை புரிந்து கொள்ளாமல் எப்படியெல்லாம் பேசி விட்டேனடி …? இப்போது எனக்கு  ஒன்று என்றதும் பழசையெல்லாம் மறந்து விட்டு ஓடி வந்திருக்கிறாயே .உன் மனசு யாருக்கு வரும் …? ” 




” ஆமாம் நீ பாகிஸ்தான்.நான் இந்தியா பாரு .பெரிய இன்டேசனல் ப்ராளம் நமக்குள் .போடி எதையாவது உளறிக் கொண்டு …” 

சுந்தராம்பாளின் சில வார்த்தைகள் புரியாது ராகவியும் , செண்பகமும் விழிக்க , நந்தகுமார் அம்மா அருகில் மாறி அமர்ந்து கொண்டு அவள் தோளில் கை போட்டுக் கொண்டான் .

” ம்மா அது இன்டேசனல் ப்ராளம் இல்லை . இனடர்நேசனல் ப்ராப்பளம் .எங்கே சொல்லுங்க …இன்…டர்…நேஷ…னல்…” ” அன்னைக்கு ஆசிரியராக ஆனான் .மகனின் வாயசைப்பை கவனித்துப் பார்த்து சுந்தராம்பாள் முயன்றாள் .

ராகவி இருவரையும் ஆச்சரியமாக பார்த்தாள் .எப்பேர்பட்ட தாய் – மகன் இவர்கள் … கண்ணெடுக்காமல் அவர்களை பார்க்க , சுந்தராம்பாள் கையை நீட்டி ராகவியின் கண்களை அழுத்தமாக பொத்தினாள் .

” பொறாமை பிடிச்சவடா நந்தா .நம்மளை  என்னமா கண்ணு போடுறா பாரு …காலடி மண்ணை எடுத்து சுத்தி போடனும் …” 

சட்டென ராகவியினுள் இருந்த தன்மானச் சிங்கம் விழித்தெழ , அவளும் சீறி எழுந்தாள் .” பெரிய அம்மா – மகன் …நேரங் காலம் இல்லாமல் அலட்டிக்குதுங்க .இவுங்களை போய் கண்ணு வைக்கிறேனாக்கும் …? ” 

” ஏய் ராகவி சும்மா இருடி …என்ன பெரியவுங்க்கிட்ட மரியாதை இல்லாமல் …” செண்பகத்தின் அதட்டல் ராகவியின் காதில் ஏறவில்லை .




” யாருடி அலட்டுறது …? ” சுந்தராம்பாளும் எழுந்து நின்று கொண்டாள் .இரு கைகளையும் தூசு தட்டுவது போல் தட்டி விட்டு களத்திற்குள் நுழைய தயாரானாள் .

” அம்மா …அவள் என்னமும் சொல்லிட்டு போறா …நீங்க விடுங்க …” நந்தகுமாரின்  இடையிடலுக்கும் அக்களத்தில் இடம் கிடைக்கவில்லை .

” நீங்கதான் .அதென்ன எங்கம்மா பாகிஸ்தான் …நீங்கள் இந்தியா …நாங்க என்ன தீவிரவாதிகளா …? ” 

” நீயெல்லாம் இந்த வீட்டில் பிறந்திருக்கிறியேடி .அப்போ இந்த வீடே தீவிரவாத வீடேதான் …” 

” என்னது …நான் …தீவிரவாதியா …? இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆகனும் மிஸஸ் சுந்தராம்பாள் …” 

” ஆ …உன்கிட்ட …நான்…மன்னிப்பா …? உன்னையெல்லாம் அன்னைக்கே என் பையனை விட்டு அடிச்சு நொறுக்க சொல்லியிருக்கனும் .பாவம்டா சின்ன பொண்ணு விட்டுடுன்னு அவன் கையை கட்டிப் போட்டது என் தப்பு …” 

ராகவியின் ஆத்திரம் உச்சக் கட்டத்திற்கு போனது .அம்மா …மகனுக்குள்ளே இந்த சம்பவம் வேறு நடந்திருக்கிறதா …? என்னை அடிச்சு நொறுக்குவானா அவன் …? பதிலை மகன்தானே சொல்ல வேண்டும் …கையில் சூலாயுதம் பிடித்து ராகவி மகன் பக்கம் திரும்பிய போது அந்த மகன் அந்தர்த்தனம் ஆகியிருந்தான் .

விடாது கருப்பென பரபரவென விழி சுழற்றி தேடிய போது , சுந்தராம்பாளின் மகனும் , ராகவியின் அம்மாவும் அடுப்படிக்குள் இருந்தனர் .

” குழைவாக பால் சாதம் தயாரித்ததும் இந்த அன்னாசி பழங்களை இப்படி பொடிப் பொடியாக துண்டுகளாக்கி மேலே தூவி , ஒரு கலக்கு கலக்கி தட்டில் எடுத்து வச்சு பாருங்க ஆன்ட்டி .ருசி அற்புதமாக இருக்கும் …” 

படபடவென பழங்களை துண்டாக்கி சாத்த்தில் தூவி கிண்டிக் கொண்டிருந்தவனருகே பவ்யமாக கை கட்டி நின்றிருந்தாள் செண்பகம் . ” ஓ …அப்படியா தம்பி …” 

ஹாலில் நடந்து கொண்டிருந்த களேபரத்திற்கும் அவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இருப்பது போல் தெரியவில்லை . கிண்ணத்தில் இருந்த சாத்த்தை ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டு பார்த்து ருசித்தபடி இருந்தனர் .




பிற ஆள் ஒருவரால் பார்க்கப்படாத சண்டையினால் சுவாரஸ்யம் என்ன கிடைக்க போகிறது …? சுந்தராம்பாளுக்கும் , ராகவிக்கும் புஸ்ஸென்றாகி விட்டது .

” அங்கே பாருங்க ஆன்ட்டி இரண்டு பேரும் நம்மை கொஞ்சமாவது கண்டுக்கிறாங்களா …? நம்மை விட பால்சாதம் முக்கியமாக போய்விட்டது ” ராகவி சட்டென சரண்டைந்தாள் .

” அதானே …இரண்டு பேருக்கும் திமிருடி ராகவி .நாமளும் அவுங்களை கண்டுக்க வேண்டாம் .நீ …வா .நாம் டிவி பார்க்கலாம் .அதுங்க இரண்டுமே அந்த அடுப்பை கட்டிக்கிட்டு அழட்டும் …” ராகவியின் கை பற்றி இழுத்துக் கொண்டு டிவி முன் அமர்ந்து விட்டாள் .

நந்தகுமாரும் , செண்பகமும் பால் சாத கிண்ணங்களுடன் ஹாலுக்கு வந்த போது , டிவியில் வில்லி ஒருத்தி எதிர் வீட்டு குடும்பத்தை கெடுக்க , கொலை பாதக திட்டமொன்று தீட்டிக் கொண்டிருக்க , ” 

இன்டர்நேசனல்னா உலகம் முழுவதும் என்று அர்த்தம் ஆன்ட்டி ” சற்று முன் சுந்தராம்பாள் தவறாக உச்சரித்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தாள் ராகவி .

செண்பகமும் , நந்தகுமாரும் நிம்மதி பெருமூச்சுடன் அவர்களுக்கு பால் சாத்ததை நீட்டி விட்டு தாங்களும் அமர்ந்து உண்ண தொடங.கினர்.

இரவு சுந்தராம்பாளும் , நந்தகுமாரும் அவர்கள் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பிக்க , செண்பகத்தின் முகம் மாறியது .வருத்தமும் , பயமும் வந்து அமர்ந்து கொண்டது .

” சுந்தரி …அவரும் இல்லை .இந்தப் பயலும் இப்படி துரோகம் பண்ணிட்டு ஓடிட்டான் .தனியாக வீட்டில் நாங்க இரண்டு பேரும் பொண்ணுங்களாக இருக்க பயமாக இருக்குதடி .நீங்களும் இன்று இங்கேயே தங்கிக் கொள்ளுங்களேன் …” 

நந்தகுமார் சட்டென ராகவியை பார்க்க அவள் ” ப்ளீஸ் ” என இதழ் மட்டும் அசைத்தாள் .நந்தகுமார் கண்களை மூடி திறந்து சம்மதம் சொன்னான் .அவர்கள் அன்று அங்கேயே தங்கினர்.

அன்று இரவு உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ராகவி வீட்டின் வெளியே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த நந்தகுமாரை பார்த்தாள் .தானும் எழுந்து அங்கே போனாள் .




What’s your Reaction?
+1
21
+1
14
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!