Serial Stories Uncategorized

கோகுலம் காலனி-14

14

சுத்தமான வெள்ளை துணியை கூம்பாக பிடித்துக் கொண்டு அதனுள் ஆரஞ்சு கலர் மாவை ஊற்றிக் கொண்டு மிதமான சூட்டில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியின் மேல் பிழிய தொடங்கினார் அவர் .முதலில் இரண்டு வட்டங்கள் …பிறகு ஓரமாக சின்ன சின்ன வட்டங்கள் , மேலே பெரிதாக ஒரு வட்டம் .அவ்வளவுதான் ஒரு ஜாங்கிரி தயார் .எண்ணெய் பொங்கி அடங்கியதும் ஜாங்கிரிகள் வடிவான அழகோடு மேலே மிதக்க அதனை திருப்பி விட்டார் .

” இங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய் …? ” நந்தகுமார் அவளருகே வந்து நின்றான் .

ராகவி கோவிலுக்குள் அவனோடு சண்டை போட்டு விட்டு கோவில் வாசலில் வந்து நின்றிருந்தாள் .வாசலில் வரிசையாக இருந்த கடைகளில் , ஒரு தள்ளு வண்டியில் வைத்து ஒருவர் சூடாக ஜாங்கிரி போட்டு விற்றுக் கொண்டிருந்தார் .அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி .

வெந்து எடுத்த ஜாங்கிரிகள் இப்போது சூடான சர்க்கரை பாகிற்குள் ஸ்சென்ற சத்தத்துடன் போடப்பட்டுக் கொண்டிருந்தன .

” என்ன கோபம் ராகவி ? ” நந்தகுமாரின் குரல் குழைந்து கொஞ்சலாக ஒலித்தது.

” வந்த வேலையை விட்டுட்டு ஊர் முன்னால் போஸ் கொடுத்துட்டு உட்கார்ந்திருக்கீங்களே …எதற்கு …? ஒவ்வொருத்தராக வந்து நின்று கமெண்ட் பண்ணிட்டு போறாங்க .சந்தோசமாக அதைக் கேட்டுட்டு உட்கார்ந்திருக்கிறீங்க …இதுக்காகவா இங்கே வந்தோம் …? ” 

” நான் அதற்காகத்தான் அங்கே உட்கார்ந்திருந்தேன் ராகவி .எல்லோரும் என்னை பார்க்கவும் , பேசவும் ..மட்டும்தான் …” சொல்லி விட்டு நந்தகுமார் நடந்து போய் விட ,ராகவி அவனது அழுத்தமான குரலில் குழம்பி நின்றாள் .இவன் ஏதோ ப்ளான் செய்கிறானோ …? 

எல்லோரும் பேசப் பேச அசையாமல் உட்கார்ந்திருந்தானானால் …திடுமென அவளுக்கு அது உரைத்தது .விடு விடுவென மீண்டும் கோவிலுக்குள் ஓடினாள் .அந்த துளசி புதர் அருகே நின்று பார்த்தாள் .அவள் சந்தேகம் சரியே … நந்தகுமாரிடம் நின்று பேசிப் போன ஒருத்தர் கூட அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லையே …

” என்ன புரிந்ததா…?” அவள் முகத்தின் முன் சூடான முறுகலான ஜாங்கிரிகள் .ஒரு பேப்பர் தட்டில் வைத்து நீட்டப்பட்டன .” சாப்பிடு .உனக்கு பிடிக்குமே …” 

” புரிந்தது . அப்படியென்றால் அண்ணனின் லவ் ப்ளேஸ் இதுதானென்கிறீர்கள் …” தட்டை வாங்கிக் கொண்டாள் .

” நல்லவேளை புரிந்து விட்டது …” பெரு மூச்சுடன் தன் ஜாங்கிரி தட்டோடு மீண்டும் அந்த தியான இடத்திலேயே அமர்ந்தான் .ராகவி தான் முன்பு அமர்ந்த பழைய இடத்திற்கே போனாள் .

” இதோ இப்போது நான் உட்கார்ந்திருக்கும் இடம் …சுவரை ஒட்டி இருக்கிறது .நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் ஒருவர் உட்கார்ந்து விட்டால் , என் இடத்திற்கு யாராலும் வர முடியாது .அத்தோடு இந்த துளசி செடி புதரினால் என்னை யாராலும் பார்க்கவும் முடியாது . இப்படித்தான் …இங்கே அந்த பெண் மறைவாக உட்கார்ந்து கொள்ள ,அண்ணன் அங்கே உட்காரந்து யோகா எனும் போர்வையில் மந்திரம் சொல்வது போல் கண்ணை மூடி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள் …” 

” ஊப் ….” பெருமூச்சை வெளியேற்றினான் நந்தகுமார் .” பிழைத்தேன் நான் .” 

” சரி …சரி …ரொம்ப அலட்ட வேண்டாம் .ஒரு சின்ன பிசகு .அவ்வளவுதான் …” முணுமுணுத்தபடி தட்டிலிருந்த ஜிலேபியை பிய்த்து வாய்க்கு கொண்டு போனாள் .அழுத்தமான அம்பொன்றை தனது உடலில் உணர்ந்து திரும்பி பார்த்தவள் நந்தகுமாரின் பார்வைக்கு ஜிலீரென்று மென் அதிர்வு வாங்கினாள் .

எதற்கு இப்படி பார்க்கிறான் ..? நந்தகுமாரின் பார்வை தன் கை ஜிலேபியில் பதிவதை கண்டாள் …பிடுங்கி கொள்வானோ …சந்தேகம் வரவும் வேகமாக அவளது இதழுரசி வாய்க்குள் போகப் போன ஜிலேபி துண்டு , அவள் பயம் போன்றே பிடுங்கப்பட்டது .நந்தகுமாரின் வாய்க்குள் போய் மெல்லப்பட்டது .

திருந்தவே இல்லையா நீ …? சலிப்பு பார்வை பார்த்தவளுக்கு ஆட்காட்டி விரலை நேராக நீட்டி நுனியை மடக்கி விரித்து சிறு பிள்ளைகள் போல் வக்கலம் காட்டினான் .




” போடா நெட்டை கொக்கு ” 

” போடி மொட்டை பாப்பா ” 

தங்களது சிறு வயது பட்டை பெயரை சொல்லி ஒருவரை ஒருவர் வைது விட்டு ,  இருவருமே சிரித்து விட்டனர் .

” ஊருக்கெல்லாம் சமைத்து போடுறீங்க . இன்னமும் என் கையிலிருந்து பிடுங்கி திங்கிறீங்களே …? ” 

” அதுதானே அலாதி ருசியாக இருக்கிறது ராகா .அப்போதும் …இப்போதும் ..” 

நந்தகுமார் சிறு வயதிலருந்தே இப்படித்தான் .எப்போதும் ராகவியின் கையிலிருக்கும் தின்பண்டங்களைத்தான் பிடுங்கி தின்பான் .அதே தின்பண்டம் அவனது கையிலும் இருந்தாலும் அவனது விருப்பம் அவள் கை பண்டமாகத்தான் இருக்கும் .பெரும்பாலும் சாக்லேட்டுகள் .ராகவி சாக்லேட் பைத்தியம் . அவளது ஆசைக்காக , அடத்திற்காக என அம்மா , அப்பா , அண்ணா என யாராவது அவளுக்கு சாக்லேட் வாங்கி குடுத்துக் கொண்டே இருக்க , நந்தகுமார் அவற்றை பிடுங்கி தின்று கொண்டே இருப்பான் .

” ஊ…னனு அழுவியே அப்போ .இப்போது அழலையா …? ” ராகவி புன்னகைத்தாள் .

அப்போதெல்லாம் அவளுக்கு அவன் மீது அவ்வளவு கோபம் வரும் .திங்க விடாமல் பிடுங்குகறானே என ஆத்திரம் ஆத்திரமாக வரும் .சப் சப்பென்று அவனை அறைய வேண்டும் போல் இருக்கும் .ஆனால் அண்ணாந்து பார்க்கும் அளவு உயரமானவனாக இருக்கும் அவனை அவளால் எதுவும் செய்ய முடியாது .

” போடா நெட்டை கொக்கு …” அழுகையோடு கத்த மட்டுமே  முடியும் .

” போடி மொட்டை பாப்பா …” அருகே வந்து அவள் தலையை தடவி விட்டு ஓடுவான் .   என்றோ மொட்டை போட்டு இருந்த போது அழைக்க ஆரம்பித்த பெயர் , முடி வளர்ந்த பிறகும் அவளுக்கானதானது .

” ஸ்வீட் மெமரீஸ் …” ரசித்து சொன்ன நந்தகுமாரின் கண்கள் ராகவியின் இதழ்களில் இப்போது பதிந்தன. அவள் இதழ் தொட்டுக் கொண்டிருந்த ஜாஙகிரியை மீண்டும  பிடுங்கும் போது ஒற்றை விரல் அவள் இதழ்களை வருடி பிரிந்தது . 

” நீ ரொம்ப கெட்டவன் .அப்போதும் …இப்போதும் …” ராகவி தலை குனிந்து முணுமுணுத்தாள் .

” அதென்னவோ ராகா எனக்கு உன்னை பார்த்தாலே ஏதாவது சீண்ட வேண்டுமென்றே தோன்றும் .அப்போதும் …இப்போதும் ….” 

” உன் கை பொம்மையா நான் …? ” ராகவி முறைத்தாள் .

” ஆமாம் . நீ பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த போது அம்மா என்னைக் கூட்டிப் போய் , குட்டிப் பாப்பா பார் என்று உன்னைக் காட்டினார்கள் . கண்களை சுருக்கிக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த நீ அப்போது எனக்கு பொம்மை போலத்தான் தோன்றினாய் .தூக்கிப் போட்டு விளையாட வேண்டும் போல் இருந்த்து . உன்னை வீட்டிற்கு அழைத்து வந்ததும் ஒரு நாள் அதையும் செய்து விட்டேன் .தொட்டிலில் படுத்திருந்த உன்னை தூக்கி பொம்மை போல் குலுக்க , நீ கீழே விழுந்து கத்த , அதிலிருந்து என்னை யாரும் உன் பக்கத்திலேயே விடுவதில்லை .நீ வளர்ந்தாலும் உன்னை தூக்கிப் போட்டு விளையாட வேண்டுமென்ற என் ஆசை மட்டும் போகவே இல்லை , இப்போது கூட ….” 

நந்தகுமாரின் பார்வை தீவிரமாக ராகவியின் உடல் மேல் பதிய ,ராகவி வேகமாக எழுந்து கொண்டாள் . ” கோவில் …” முணுமுணுத்தாள் .” வீட்டிற்கு போகலாம் …” 

வீடு திரும்பிய அவர்கள் பயண பொழுதுகள் ஏதோ ஓர் இனம் புரியா எதிர்பார்ப்பும் , ஏக்கமும் நிறைந்து மௌனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டன . 

—————

வீட்டுக் கதவை திறந்து விட்ட சுந்தராம்பாளின் பின் எதிர்பார்ப்பு தழும்பிய விழிகளோடு செண்பகம் நிற்க , ராகவி அம்மாவை ஆதரவாக அணைத்துக் கொண்டாள் .” கண்டுபிடிச்சிடலாம்மா ” 

” சில விசயங்கள் கண்டுபிடிச்சிருக்கிறோம் ஆன்ட்டி .சீக்கிரமே முரளியை பிடிச்சிடலாம் .இங்கே அவனுடைய ரூம் அல்லது அவனோட செல்ப் எதுவும் …? ” 

” இது அவனோட செல்ப் சாவி தம்பி …” நந்தகுமார் விசாரித்து முடிக்கும் முன் செண்பகம் சாவியை தந்திருந்தாள் .

முரளியின் அலமாரியும் அவனை போன்றே ரகசியமாகவே இருந்தது .அதில் எந்த தகவலும் இவர்களுக்கு கிடைக்கவில்லை .

” இது ஏதோ பில் போல் இருக்கிறது நந்தா .ஏதோ புத்தகம் வாங்கிய பில் …” அலமாரி மூலையில் கசங்கி கிடந்த தாளை எடுத்துக் கொடுத்தாள் ராகவி .

புத்தகத்தில் பதிப்பகத்தின்  தெளிவான அட்ரஸ்  இருக்க , நந்தகுமார் உடனே அங்கே போன் செய்தான் .

” சார் சங்கீதஸ்வரங்கள் கிற புத்தகம் உங்கள் பதிப்பக வெளியீடுதானே …? இப்போது  இருக்கிறதா …? எனக்கு வேண்டியதிருக்கிறது ” 

” இருக்குது சார..வந்து வாங்கிக்கிறீங்களா …? கொரியரில் அனுப்பவா …? “

” சொல்றேன் சார் . ப்ரசன்ட் பண்ணுவதற்காக   இந்த புக்கை  ஒருத்தர் சஜ்ஜெஸ்ட் பண்ணினார.அது கரெக்டாக வருமா சார. …? ” குத்து மதிப்பாக கேட்டான் .

” ப்ரசென்ட் வாங்க போகிறவங்க இசைக்கலைஞராக இருந்தால் ரொம்ப பொருத்தமாக இருக்கும் சார் .அந்த புக் முழுவதும் ம்யூசிக் பற்றிய விசயங்கள்தான் …” 

நந்தகுமார் பேசிக் கொண்டிருக்கும் போதே ராகவி தன் போனில் அந்த புத்தக விபரத்தை தேடி எடுத்து விட்டாள் .” ராகவாச்சாரி ங்கிற கர்நாடக இசைக் கலைஞர் எழுதிய புத்தகம் அது .கர்நாடக சங்கீதம் பற்றி தெளிவான விளக்கங்கள் இருக்கும் ” 

” இதை யாருக்கு வாங்கி கொடுத்திருப்பான் ? ” இருவரும் யோசிக்க …

” இரண்டு பேரும் சாப்பிட வருகிறீர்களா …?” கேட்டபடி சுந்தராம்பாள் வந்து நின்றாள்.




” அம்மா நம்ம காலனியில் கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா ..? ” 

” இருக்கிறார்களே .நம்ம காலனி மூன்றாவது தெருவில் இருக்கும் மெய்யம்மை கர்நாடக கச்சேரியே பண்ணுவார்களே …” 

நந்தகுமார் – ராகவிக்கு சப்பென்றானது .அந்த மெய்யம்மைக்கு எழுபது வயதிருக்கும் .தலை முழுவதும் நரைத்து குரலே நடுங்க ஆரம்பித்து விட்ட அம்மையார் அவர் .

ராகவி சோர்ந்து அமர்ந்து விட நந்தகுமார் ஒளிர்ந்த முகத்துடன் நிமிர்ந்தான் .” அம்மா அந்த மெய்யம்மைக்கு மகள் இருக்கிறார்களா …? ” 




 

What’s your Reaction?
+1
24
+1
14
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!