Serial Stories கோகுலம் காலனி

கோகுலம் காலனி-7

7

  1. ” ஹாய் நந்தா கோவிலுக்கு வந்தாயா …? என்ன இங்கே தனியாக உட்கார்ந்து விட்டாய் …? ” கேட்டபடி வந்தான் சங்கர்

” தனியாக இல்லைடா .இதோ ராகவி இருக்கிறாள் ” நந்தகுமார் அவளை காட்டவும் தூணின் பின்னால் மறைந்து அமர்ந்திருந்த ராகவி அதிர்ந்தாள் . இவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் …?

” ஓ ..ராகவி .இவள் இங்கே எதற்கு வந்தாள் …? ” சங்கரின் கண்கள் விசத்தை கக்கியது .

” நாங்கள் இரண்டு பேரும் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோம்டா ..” 

” உங்க வீட்டிலிருந்து யாரும் கூட வரலையா …? ” சங்கரின் கண்கள் தூணின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்ற ராகவியின் மேலேயே இருந்த்து .

” எங்கள் இரண்டு பேரின் அம்மாவிற்கும் வேலைகள் .நீங்களே போய்விட்டு வாங்கன்னு அவுங்கதான் எங்களை அனுப்பி விட்டாங்க ” கூசாமல் புளுகினான் .

” செண்பகம் ஆன்ட்டி அப்படி யார் கூடவும் மகளை அனுப்ப மாட்டாங்களே ” சங்கரின் சந்தேகம் தீரவில்லை .

” என் கூட அனுப்புவாங்களே …நான் அவுங்க பேவரிட் கண்ணனாச்சே …” நந்தகுமார் அழுத்தமான குரலில் பேச , சற்றே முந்தைய வருடங்கள் எதிரெதிர் குடும்பத்தாரான இந்த இரு வீட்டினரும் நெருக்கமாக பழகியது,  அவரவர் குடும்ப பிள்ளைகளை பரஸ்பரம்  கண்ணா ,ராஜா , செல்லமென கொஞ்சியது நினைவு வர சங்கர் வாயை மூடிக் கொண்டுவிட்டான் .

” போகலாமா அண்ணா …? ” கேட்டபடி அங்கே வந்து நின்றாள் கீதா .சங்கரின் தங்கை அவள் .

இது போல் ஒரு அழகான பெண்ணோடு கோவிலுக்கு வர வேண்டிய நேரத்தில் இப்படி தங்கையென்ற பெயரில் ஒரு வானரத்தை தலையில் கட்டி என்னை அனுப்பியிருக்கிறார்களே …சங்கர் விட்ட அனல் மூச்சின் தாக்கம் ராகவி மறைந்திருந்த கற்தூணில் பட்டு சிதறியது .




பெருமூச்சுடன் குனிந்தவனின்

பார்வையில் தரையில் கோடு கிழித்துக் கொண்டிருந்த தங்கையின் கால் பெருவிரல் பட்டது . இவளெதற்கு இப்படி வெட்கப்படுகிறாள் ….நிமிர்ந்த அவன் பார்வை கீதாவின் வெட்க காரணத்தை காட்டியது .ஆணியடித்தாற் போன்ற நந்தகுமார் மேலான அவள் பார்வை .

” ஏய் இங்கே என்ன பார்வை …? வாடி …” எரிச்சலோடு தங்கை கையை பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்பினான் .கீதா நந்தகுமார் மேல்  மையல் பார்வையையும் , ராகவி மேல் பொறாமை பார்வையையும் போட்டபடி திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனாள் .

” ஏய் அறிவில்லையா உனக்கு …எதற்காக அப்படி மறைந்தாய் ? ” 

” ஏய் அறிவில்லையா உங்களுக்கு …எதற்காக என்னை காட்டினீர்கள் ? ” 

இருவரும் ஒன்று போல் கேட்டுவிட்டு பேச்சை நிறுத்தி ஒருவரை ஒருவர் முறைத்தனர் .

” யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதே என்றுதான் தூணுக்கு பின்னால் ஒளிந்திருந்தேன் ” 

” அதுதான் ஏன் என்கிறேன் .ஒளிந்து மறைந்து இருப்பதற்கு தப்பு செய்கிறோமா நாம் …? ” 

” பின்னே இல்லையா …வீட்டிற்கு தெரியாமல் இப்படி கள்ளத்தனமாக சந்திப்பவர்களுக்கு காலனிக்குள்  வேறு பெயர் வைத்துவிடுவார்கள் ” 

ராகவி படபடக்க உதடு குவித்து மெலிதாய் சீட்டியடித்தான் நந்தகுமார். ” அப்படி என்ன பெயர் வைப்பார்கள் ராகா …? ” குறும்பு கொப்பளிக்கும் அவன் விழிகளை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறின அவள் விழிகள் .

” எனக்கு தெரியாது . நான் கிளம்புகிறேன் …” எழுந்து கொண்டவளுடன் தானும் எழுந்தான் .

” சரிதான் நாளையும் இங்கேயே வந்து விடு ” 

” அதெல்லாம் முடியாது ” 




” ஏன் முடியாது …? நாம் இன்னமும் சரியாகவே பேசவில்லையே .இன்னமும் நிறைய பேச வேண்டும் ” 

” அப்படி ஒன்றும் எனக்கு பேச கிடையாது .நான் வரமாட்டேன் ” 

” சரி .அப்போ நாளைக்கு நான் உங்க வீட்டிற்கே வந்து விடுகறேன் .அங்கே வைத்தே பேசிக் கொள்வோம் …” 

” ப்ளாக்மெயிலா …? ” முறைத்தாள் .

” இல்லை ராகா .எனக்கு உன்னுடன் நிறைய பேச வேண்டும் ” இரு கை விரித்து நிறைய அளவு காட்டியவனுக்கு பதிலாக ஐந்து விரலை சுருக்கி கொஞ்சூன்டு அளவு காட்டினாள் .

” எனக்கு இவ்வளூண்டு கூட பேச இல்லை .நான் வரமாட்டேன் .அதுவும் இந்த கோவிலுக்கு வரவே மாட்டேன் …” 

” ஏன் …பர்ட்டிகுலராக இந்த கோவில் …? ” 

” இந்தக் கிருஷ்ணன் கூட சண்டை …” கல்மண்டபத்திலிருந்து நடந்து வந்து கருவறையை தாண்டிக் கொண்டிருந்த போது ராதே கிருஷ்ணன் புறம் திரும்பி முறைப்பாய் கோபம் காட்டினாள் .

” சரிதான் .சாமியையும் விட மாட்டாயா …? என்ன சண்டை …? என்னை சந்திக்க வர விடாமல் செய்ய வெண்டுமென்ற வேண்டுதல் வைத்தாயாக்கும் …? ” 

அது எப்படி இவனுக்கு தெரியும் …விழித்தாள் .

” உன் முழியே காட்டிக் கொடுக்கிறது .இப்படி காட்டேரி பார்வை  பார்த்து தொலையாதே தாயே …பயமாக இருக்கிறது …” 

” நீங்கள் பயப்படுவீர்களாக்கும் …அதுவும் எனக்கு …? ” அவனது காட்டேரி விளித்தலில் ஏறி இறங்கியது ராகவியின் நெஞ்சம் .

” சூடம் வாங்கி வரட்டுமா …? ” கோவிலுக்கு வெளியே இருந்த கடையை காட்டிக் கேட்டான் .” அணைத்து சத்தியம் செய்ய …” 

ராகவி அவனை முறைத்தபடி வேகமாக அவனை முந்தி நடக்க முயல , அநாயசமாக கால்களை அகற்றி வைத்து அவளோடு சேர்ந்தபடி ” நிஜமாகவே  பயமாகவே இருக்கிறது ராகா …” மென்மையாக சொன்னான் . புரியாமல் பார்த்தவளுக்கு ” ஏதாவது தப்பான சொல் சொல்லி விடுவாயோ என்று ” விளக்க முயன்றான் .

அந்த தப்பான சொல் நாய் , பேய் , கழுதை ,பன்னி இப்படி ஏதாவது ஒன்றாக ஏன் இருக்க கூடாது என யோசிக்க ஆரம்பித்தாள் .என்ன என்று கேட்டவனுக்கு ” எப்படி சொல்லி வையலாமென யோசிக்கிறேன் ” என்றாள் .

உடன் நந்தகுமார் பார்த்த பார்வை அவள் உடல் முழுவதும் ஒயரில்லா மின்சக்தியை பாய்ச்சியது . அடிக்கடி ஏன் இப்படி பார்த்து தொலைகிறான் …?பார்வையை திருப்பிக் கொண்டு இன்னும் யார் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டுமே என கவலைப்பட தொடங்கினாள் .

” நான் திட்டுகிற வார்த்தையை சொல்லவில்லை ” 

” பிறகு …? ” 

” நீ மறுப்பாக ஏதாவது சொல்லிவிடுவாயோ என்று …” 

” எதை மறுப்பேன் …? ” 

மீண்டும் அவனிடம் அந்த  புரியாத பார்வை .அடப் போடா …சலிப்பாய் முகம் திருப்பினாள் .நந்தகுமார் விடாப்பிடியாக அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து ” நாளை கோவிலுக்கு வந்தே ஆக வெண்டுமென்ற ” மிரட்டலோடு பிங்க் கலரில்  ஓரம் சுருட்டப்பட்ட ரேப்பரோடு இருந்த  இரண்டுபெரிய சாக்லேட்டுகளை அவள் கைகளில் திணித்து விட்டு   அவளை வீட்டிற்குள் அனுப்பி விட்டு தன் வீட்டிற்குள் போனான் .

” ஏய் எதுக்காகடி அவன் கூட தெரு வழியாக நடந்து வருகிறாய் …? ” செண்பகம் மகளின் கூந்தலை பிடித்து ஆட்டும் எண்ணத்தில் இருந்தாள் .

” அ…அம்மா …அ…அது வந்து …கோவில்ல …” 

” நந்தா எனக்கு ஒரு வேலை சொல்லியிருந்தான்மா .ராகவியை கோவில்ல பார்த்த போது அது விபரம்தான் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். என்ன சொன்னான் ராகவி …? ” முரளி பரபரப்பாக வந்தான் .

படித்து முடித்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சரியான வேலை இல்லாமல் இருப்பதில் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பவன் அவன் .

” ம் …அவன் சொல்கிற வேலையாவது உனக்கு அமைந்தால் சரி …” செண்பகம் சமாதானதமாகி உள்ளே போய்விட்டாள் .

” என் வேலை விபரங்களை உன்னை பார்த்தால் உன்னிடம் கூட சொல்வேனென்று நந்தா சொன்னான் ராகவி .என்ன சொன்னான் …? ” 

” ஏதோ பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார் அண்ணா ” சமாளித்தாள் .




மறுநாள் கோவிலில் நந்தகுமாரிடம் …

” அப்படி என்ன வேலை என் அண்ணனுக்கு வாங்கித் தர போகிறீர்கள் …? கரண்டி பிடித்து சோறாக்குகிற வேலையா …? உங்களைப் போல் …ம் …? ” நக்கலாக கேட்டாள் .

நந்தகுமாரின் முகம் மாறியது .




What’s your Reaction?
+1
22
+1
11
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!