Serial Stories

பெண்ணின் மனதை தொட்டு-3

3

வெள்ளை முழுக்கை சட்டை கையை இரண்டு மடிப்பு மடித்து விட்டுக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்து அவன் விட்ட ஒரே உதையில் பைக் ஸ்டார்ட் ஆக அந்த சத்தம் மெலிதாக மகதிக்கு கேட்டது. வழக்கம்போல் அவனுடைய பைக் பயணத்தை கண்களால் தொடர்ந்தபடி இருந்தவள் அவர்கள் வீட்டை கடக்கும் சமயத்தில் மானசீகமாக அவனிடம் பேசினாள்.

 எங்கள் வீட்டில் எனக்கு ஒரு அரைக்கிழவனை திருமணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா உனக்கு?

 பாதி முடி உதிர்ந்து மீதி முடிகள் ஆங்காங்கு வெளுத்து இருக்க கன்னங்கள் சுருங்கி தாடை தளர்ந்து தொங்கும் ஒரு வயதான தோற்றம் அவள் மனக்கண்ணில் தோன்ற நடுங்கியது அவள் உள்ளம். மகதியின் மன எண்ணங்கள் அவனுக்கு கேட்கவில்லை. அவன் எப்போதும் போல் தன் வழியில் போய் விட்டான்.

 அம்மாவிடமோ அப்பாவிடமோ இது பற்றி பேச மகதிக்குள் ஏதோ ஓர் அச்சம். அவர்களும்  அதே தயக்கத்தை உணர்ந்தார்களோ என்னவோ, திருமண விஷயம் மகதியிடம் பேச வரவில்லை. ஆனால் அன்று இரவு சீக்கிரமாகவே கடையை பூட்டி விட்டு வந்த தமிழ்ச்செல்வன் “மகி உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று வந்து அமர்ந்த போது அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.

 அண்ணன் எதற்கு இதில் தலையிடுகிறான்? தூது அனுப்புகிறீர்களா அப்பா? தள்ளி பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து பெயருக்கு பேப்பரை கையில் வைத்துக் கொண்டிருந்த அப்பாவை பார்த்தாள். அவரோ இவரை பார்க்காதது போல் பேப்பரிலேயே பார்வையை பதித்திருந்தார். அம்மாவின் புடவை நுனி அடுப்படி கதவுக்கு பின்னால் தெரிய ரூபாவதியோ சட்டமாக கணவன் அருகில் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

” எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது அண்ணா. பிறகு பேசலாமே” தள்ளிப் போட முயன்றாள்.

” இல்லைம்மா ஏற்கனவே ஒரு வாரமாக இந்த பேச்சு வீட்டிற்குள் நடக்கிறது. உன்னுடைய முடிவை கேட்ட பிறகுதான் நாங்கள் மேலே பேச முடியும்”

” சரி சொல்லுங்கள்” வேறு வழியின்றி மனதை திடப்படுத்திக் கொண்டு கேட்க தயாரானாள்.

” வந்து… ஒரு வரன் வந்திருக்கிறது. பையனுடைய அம்மாவிற்கு மிகவும் விருப்பம். ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். உங்கள் ஜாதகங்கள் மிக நன்றாகவே பொருந்தி இருக்கிறது. நம் ஊருக்குள் மிகவும் தெரிந்தவர்கள். ஆதலால் முகத்திற்கு நேராக வேண்டாம் என்று சொல்ல அப்பாவாலும் முடியவில்லை.அதனால்தான் உன்னிடம் கேட்கலாம் என்று…” தயங்கி நிறுத்தினான் தமிழ்ச்செல்வன்.

 அம்மாவிற்கு ஜாதகம் பொருந்தி விட்டது. அப்பாவால் மறுத்து பேச முடியவில்லை. சப்போர்ட்டுக்கு அண்ணனும் வருகிறான். ஏனோ முந்தைய மைனஸ்கள் எல்லாம் பிளஸ்ஸாக இருக்கும் இந்த வரன் குறித்து மகதிக்கு பயம் வந்தது. “யார் அண்ணா..?” தடுமாறிய குரலில் கேட்டாள்.

” நிறைய பணம் இருக்கிறது. நல்ல தொழில் இருக்கிறது. ஊருக்குள் பெயர் இருக்கிறது. என்ன வயதுதான் கொஞ்சம் அதிகம். ஒன்பது வருடங்கள் வித்தியாசம் இந்த காலத்தில் அதிகம்தானே ?” இடையில் புகுந்தாள்  ரூபாவதி.

” ரூபா நீ பேசாமல் இரு” தமிழ்ச்செல்வன் அதட்ட, “நீங்க சும்மா இருங்க,ஒரு பெண்ணுடைய மனது பெண்ணிற்குத் தான் தெரியும். என்னதான் பெரிய டாக்டராக இருந்தாலும் ஒன்பது வயது மூத்தவரை மகதிக்கு பிடிக்க வேண்டுமே” நிறையை குறைத்து குறையை கூட்டி எடுத்து பேசினாள் ரூபாவதி.




 மகதியினுள் எதிர்பார்ப்பு பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. “யார்… யாரைச் சொல்கிறீர்கள் அண்ணா?”

“அவர்தான்மா, எங்கள் மெடிக்கல் ஸ்டோருக்கு பக்கத்தில் ஹாஸ்பிடல் வைத்திருக்கிறாரே டாக்டர் குணாளன். கொஞ்ச நாட்கள் மிலிட்டரியில் கூட வேலை பார்த்தாரே, அவரைத்தான் சொல்கிறோம்”

 லேசர் ஒளிக்கற்றை ஒன்று உச்சந்தலை வழியே உடல் முழுவதும் ஊடுருவி செல்வது போல் உணர்ந்தாள் மகதி.

” நம்முடைய பக்கத்து வீடுதான்மா. சிறுவயதிலிருந்தே நமக்கெல்லாம் பழக்கம்தான். அவர் வாழ்க்கையில் நடந்ததெல்லாமே நமக்கு தெரியும். அவர் அம்மாவும் எதையும் மறைக்கவில்லை. இவ்வளவு நாட்களாக கல்யாணம் வேண்டாம் என்று இருந்தவர், இப்போதுதான் சரி சொல்லி இருக்கிறாராம். அவர் அம்மா வேகமாக பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள்”

 மகதியின் கண்கள் குற்றச்சாட்டுடன் ரூபாவதி மேல் படிந்தன “என்ன அண்ணா உங்கள் மெடிக்கல் ஸ்டோர் பக்கத்தில் ஆஸ்பத்திரி வைத்திருக்கிறார் என்கிறீர்களே! அவருடைய ஹாஸ்பிட்டலை நம்பித்தானே உங்கள் ஸ்டோரே இருக்கிறது.அக்கம் பக்கத்தினர் தெரிந்தவர் என்ற முறையில் உங்கள் மெடிக்கலுக்கு அவர்தானே சீட்டு எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்”

 இந்த கேள்வியில் அவள் கணித்தது போல் ரூபாவதியின் முகம் ஒளியிழந்தது. தமிழ்செல்வனுக்கு எதுவும் தோன்றவில்லை. ஏனெனில் மகதி சொல்வதுதான் உண்மை. இன்னமும் தெளிவாக சொல்வதானால் தமிழ்ச்செல்வனை பி ஃபார்ம் படிக்கவும் தொடர்ந்து மெடிக்கல் ஸ்டோர் வைக்கவும் ஐடியா கொடுத்ததே குணாளன்தான். படிக்கும் போது தன் படிப்பு சம்பந்தமான சந்தேகங்களை தமிழ்ச்செல்வன் குணாளனிடம்தான் கேட்டு தெரிந்து கொள்வான். 

“ஆமாம்மா என்னை விட 4 வயது மூத்தவராக இருந்தாலும் டாக்டர் சார் எனக்கு சிறந்த வழிகாட்டியோடு நண்பரும் கூட, என்னிடம் கேட்டால் இது உனக்கு மிகச் சிறந்த வரன் என்று சொல்வேன்”

 அண்ணனை பேச விட்டு அப்பா பின்னால் ஒதுங்கிய காரணம் இப்போது மகதிக்கு புரிந்தது. தமிழ்செல்வன் கிட்டத்தட்ட டாக்டர் குணாளனின் விசிறி.

” என்னங்க நீங்களே எதையாவது முடிவு செய்யாதீர்கள். வயது வித்தியாசத்தை மறந்து விட்டீர்களா?” ரூபாவதி எடுத்துக் கொடுக்க,”ஓ அதனால்தான் நேற்று அப்படி சொன்னீர்களா அண்ணி?” பட்டென கேட்டுவிட்டாள் மகதி.

” என்ன சொன்னாள்? ” தமிழ்ச்செல்வன் கேட்க, “அப்பா எனக்கு இரண்டாம் தார வரன் பார்த்திருப்பதாக சொன்னார்கள்” அனைவரும் முன்பும் தெளிவாக போட்டு உடைத்தாள்.

 தமிழ்ச்செல்வன் முகம் செந்தனலாக, இவ்வளவு நேரம் அமைதி காத்த சுகவனம் சர்ரென்ற சத்தத்துடன் சேரை பின்னுக்கு தள்ளி விட்டு எழுந்தார். “தமிழ் உன் மனைவியை கூட்டிக்கொண்டு மாடிக்கு போ. இனி மற்ற விஷயங்களை மகியிடம் நான் பேசிக் கொள்கிறேன்”

” ஏன்மா இப்படிச் சொன்னாய்?” பொறுக்க மாட்டாமல் அடுப்படிக்குள் இருந்து வந்து கேட்டாள் சௌபாக்கியம்.

” மாப்பிள்ளை வயதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களாக திருமணம் ஆகவில்லை என்றால் நம்ப முடியவில்லை.இவர் வேறு அவர் வாழ்க்கையில் சோகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதனால் முன்பே திருமணம் முடிந்திருக்கும் என்று நினைத்தேன்” தயங்காமல் பேசினாள் ரூபாவதி.




” நீயாக கற்பனை செய்து எதையாவது பேசாதே ரூபா.டாக்டர் சாருக்கு முதலில் பேசிய திருமணம் நின்றுவிட்டது. அதில் அவர் கொஞ்சம் அப்செட் ஆகி விட்டார். அவ்வளவுதான் “

“அடக்கடவுளே முதல் திருமணம் நின்றுவிட்டதாமே! மகதி இது என்ன அநியாயம்! இதற்கெல்லாம் நீ சம்மதிக்கவே செய்யாதே” பெரிதாய் குரல் உயர்த்தியபடி வந்தாள் ரூபாவதி.

 அமைதியாக அமர்ந்திருந்த மகதியை குழப்பமாக பார்த்தாள். “எனக்கும் இந்த விபரங்கள் தெரியும் அண்ணி” அமைதியாக பதில் தந்தாள் மகதி.

 ரூபாவதிக்கு சப்பென்றானது “என்ன மாமா இது நம் வீட்டுப் பெண்ணிற்கு இப்படி ஒரு சம்பந்தத்தையா பார்ப்பீர்கள்?”

 சுகவனம் மருமகளை முறைத்தார். இவ்வளவு நாட்களாக அவளது அலட்டல்களை கண்டு கொள்ளாமல் இருந்தவர் இப்போது நேரடியாக கோபத்தை காட்டுவதில் ரூபாவதி கொஞ்சம் பயந்துதான் போனாள். இரண்டு எட்டு பின்னால் வைத்து நகர்ந்து போனாள்.

 சுகவனம் இப்போது நேரடியாக மகளிடமே கேட்டார். “மகிம்மா நம்ம பக்கத்து வீட்டு குணாளன் தம்பியை உனக்கு திருமணம் முடிக்க கேட்கிறார்கள். உனக்கு சம்மதம் என்றால் மேலே பேசலாம்”

“அ… அவர்… டாக்டருக்கு இந்த திருமணத்தில் சம்மதமா அப்பா?” மகதி தடுமாறி கேட்டாள்.அவள் மனதிற்குள் முன்னாள் நினைவு ஒன்று பிம்பங்களாய் அலைந்தது. 

“நாம் இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாமா?” கேட்ட அவளின் கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது குணாளனின் கை.

 வரி வரியாய் கன்னத்தில் பதிந்திருந்த அவன் விரல் தடங்களை பொத்தியபடி அவனை கண்களில் நீரோடு பார்த்தாள் மகதி.




 

What’s your Reaction?
+1
37
+1
20
+1
1
+1
4
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!