Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-13

13

விருந்தினர்கள் அனைவரும் செல்லவும் வெறிச்சோடியது வீடு .மணமகன் வீட்டில் இன்று இரண்டாவது இரவு .அதற்காக எழில்நிலாவை அலங்கரிக்க வந்தனர் நித்யவாணனின் உறவினப்பெண்கள் .

“ஏன்கா துணைபட்டுக்கு இந்த கலரை எடுத்திருக்காங்க ,இது பொண்ணை இன்னும் கொஞ்சம் கறுப்பால்ல காட்டும்” என்றாள் உறவினப்பெண்ணொருத்தி …

“அட நீ வேற இந்ந்ந்….த நேரத்துல  நம்ம மாப்பிள்ளை தம்பிக்கு பொண்ணோட கலரா கண்ணுக்கு தெரியப்போகுது ….” கேலியுடன் சிரித்தாள் இன்னொருத்தி .

சாதாரண கேலிதான் .எல்லா புது மணப்பெண்ணும் எதிர்கொள்ள வேண்டிய கேலிதான்.ஆனால் எழில்நிலா சாதாரணமாக இல்லையே .எதிர்கால வாழ்க்கை பற்றிய அச்சத்தில் இருந்தவளை மேலும் அச்சுறுத்தியது இக்கேலி .

“எனக்கு தலை வலிக்குது நீங்கெல்லாம் கொஞ்சம் போறீங்களா?”என்றாள் பட்டென்று .

முகம் மாறியது அப்பெண்களுக்கு .”இந்தாம்மா..” என வேகமாக ஆரம்பித்தாள் அவர்களுள் சற்று மூத்த பெண் .

“நேற்றிலிருந்து எழிலுக்கு கொஞ்ச நேரம் கூட ஓய்வு இருந்திருக்காது .அந்த டென்சன்லதான் இப்படி பேசியிருப்பா .நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க …மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என அவர்களை அனுப்பினாள் சந்திராவதி .

“இங்க பாரும்மா எழில்நிலா அவுங்க நம்ம விருந்தாளிங்க ,நம்ம மனசுல எவ்வளவு டென்சன் இருந்தாலும் அதையெல்லாம் அவுங்ககி்ட்ட காட்டக்கூடாது.புரியுதா?இப்ப என்ன நீ சாப்பிட வர்றியா…அப்புறமா சாப்பிட போறியா ?”

மாமியாரின் கறாரான பேச்சில் கண்கலங்கி விட்டது எழில்நிலாவுக்கு .இவுங்க என்ன இப்படி பேசுறாங்க ?இவுங்க கூடவே எப்படி என்னால் இருக்க முடியும்? கலக்கத்துடன் தளர்ந்து கட்டில் மேல் அமர்ந்தவள் எதிரில் நிழலாட நிமிர்ந்தாள் .நித்யவாணன்தான்.அவளை  விழுங்குவது போல் பார்த்திருந்தான்.

என்ன இப்படி பார்க்கிறான்.கன்னம் சிவக்க யோசித்தவள் ,இல்லையில்லை இந்த பார்வையிலெல்லாம் மயங்க கூடாது.தலை நிமிர்ந்து அவனை நோக்கி “உங்களுடன் நிறைய பேச வேண்டும்” என்றாள் அவசரமாக.

“என்னது பேசனுமா ?ஏற்கெனவே நேற்று  பொழுதை பூராவும் வீணடிச்சிட்ட ,இன்னைக்கும் பேசியே பொழுதை கழிக்கலாம்னு பாக்குறியா. அதெல்லாம் நடக்காது .இன்றைக்கு பேச்சே கிடையாது. வீச்சு மட்டும்தான் ” என  கண்களை சிமிட்டியவன் அதையே நிரூபிப்பவன் போல் அவள் எதிர்பாராத தருணத்தில் அவளை இறுக அணைத்து அவள் இதழ் மீது அழுந்த இதழ் பதித்தான்.

நீருக்குள் இழுக்க துடிக்கும் ராட்சஷ கையிடமிருந்து துடித்து மேலெழும்ப முயலும் ரப்பர் பந்து போல் மூச்சுக்கு தவித்தாள் எழில்நிலா.அத்தை சாப்பிட அழைத்தார்களே…ஆனால் என்னால் சாப்பிட முடியுமா…அதற்கு வாய் இருக்குமா?இவ்வுலகில் இல்லாமல் வேறெங்கோ  ,சுய நினைவற்று பறந்து கொண்டிருந்தாள்.

நித்யவாணன் அணைப்பை விலக்காமல் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிறு நகை பெட்டியை எடுத்தான்.இதழ் விடுத்து அழுந்த மூடிக் கிடந்த அவள் இமைகளின் மேல் தன் உதடுகளை பதித்து எடுத்தவன் ” இங்கே பார் நிலா பிடித்திருக்கிறதா?” என்றான் கொஞ்சலாக.

எழில்நிலா விழி திறந்து பார்த்தாள்.அது பொடி பொடி வைரக் கற்களை வரிசையாக பதித்த தங்க செயின்.மையத்தில் ஒரு பெரிய சிகப்புக் கல்.பார்த்ததும் பிடிக்கும் விதத்தில் நகை இருக்க, மெல்ல வருடினாள்.

” அழகாக இருக்கிறது.இதென்ன செயின்…வித்தியாசமாக இருக்கிறது?”

தன் இரண்டு கைகளாலும் அவள் இடை பற்றியிழுத்தவன்,”இது  காமர்பேன்ட் ( kamarband) பெங்காலி டிசைன்.இதனை இங்கே அணிய வேண்டும்” கைகளை அவள் இடையில் பதித்து வருடினான்.

“பெல்லி பெல்ட்.என்னை சரிய வைக்கும் உன் அழகான இடுப்பிற்கான என் பரிசு.இதை இன்று உனக்கு நானே அணிவித்து பார்த்து ரசிக்க போகிறேன்” கண்களை சிமிட்டினான்.

என்னது… எழில் நிலாவிற்கு மயக்கம் வரும் போல் இருந்தது அய்யய்யோ இவனிடமிருந்து மீளவே முடியாது போலிருக்கிறதே…




யாரோ வரும் ஓசை கேட்டு தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன் அவள் நிற்க முடியாமல் தள்ளாடுவது கண்டு ,மெல்ல பற்றி கட்டில் மேல் அமர்த்தினான் ” அதற்குள் மயக்கமா? இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. அதற்கெல்லாம் மூர்ச்சையாகி விழுந்து விடுவாய் போலவே,உடம்பை தேற்றிக் கொண்டு சீக்கிரம் வந்து சேரு ” ரகசியம் பேசிவிட்டு நகர்ந்தான் .

நெற்றி வியர்க்க விழித்தபடி அமர்ந்திருந்தாள் எழில்நிலா .இவன் கட்டாயம் இன்றிரவு பேசப்போவதில்லை .அவளையும் பேச விடப்போவதில்லை .உட்கார்ந்து தெளிவாக பேசி விட்டு இந்த வாழ்க்கை தனக்கு தேவையில்லையென எழில்நிலா சொல்லிவிட்டால் நஷ்டம் அவனுக்குதானே ,எப்படி பேசுவான் …!எனவே மனைவியின் வாயை அடைக்க ஆண்களுக்கே உரிய முறையை கையாளுகிறான் என வேதனையோடு எண்ணினாள் எழில்நிலா .

அவன் அணைப்புக்குள் அடங்கி விட்டால் தனது உறுதிகள் தனக்கே நினைவு வருமோ என்னவோ …அவன் தான் அப்படி மயக்கி வைத்திருக்கிறானே  தனக்குள்ளேயே குமுறினாள்.

“சாப்பிட வாம்மா …பத்து நிமிடத்தில் சாப்பிட்டாயானால் ரூமுக்குள் போக நேரம் சரியா இருக்கும்.டக்குன்னு எழுந்திரு” என்றபடி வந்தார் சந்திராவதி.

சாப்பிடக் கூட டைம் டேபிளா?  வெளித்தெரியாமல் பற்களை கடித்தபடி எழுந்து வந்தாள் எழில்நிலா .எதிரில் அமர்ந்திருந்த நித்யவாணனை நிமிர்ந்து பார்க்காது தட்டிற்குள் தலையை கவிழ்த்துக்கொண்டாள் .




அவள் கவனத்தை கவர எழுந்த அவனது செறுமல் வீணானது. .”ஒரு சப்பாத்திக்கு அப்போதிருந்து பேன் பார்த்துக் கொண்டிருக்கிறாய் .டயட் டயட்னு நல்லா உடம்பை கெடுத்து வச்சிருக்கீங்க இந்த காலத்து பிள்ளைங்க .சப்பாத்தி மெல்ல பல்லில்லைன்னா விடு, இந்த பால்சாதமாவது சாப்பிடு ” அவள் பக்கம் சாதம் வைத்த தட்டை தள்ளினாள் சந்திராவதி.

என்னது பல் இல்லையா! எழில்நிலாவிற்கு விக்கிறது. அவள் அருகில் தண்ணீரை தள்ளி வைத்த நித்யவாணன், “எதை சாப்பிட்டாலும் வயிற்றை நிறைத்து விட்டே வா! உடம்பில் தெம்பு வேண்டும்” என்றபடி எழுந்து போனான்.

இவன் வேற… நெற்றியை தாங்கிக் கொண்டவளின் கையை பட்டென தட்டினாள் சந்திராவதி. “அதென்ன நல்ல நேரத்தில் தலையில் கை வைத்துக் கொண்டு… ஒழுங்காக சாப்பிடு”

வேறு வழியின்றி சாதத்தை வெளியே வர வர உள்ளே தள்ளிய எழில்நிலா அடுத்து யாரும் எதுவும் சொல்ல ஆரம்பிக்கும் முன் அவசரமாக கை கழுவ ஓடினாள் .

” பிளாஸ்க்ல பால் இருக்குது. கொண்டு போ. படி ஏறியதும் லெஃப்ட் சைடுல இருக்குற சுவிட்ச் போர்டுல நான்காவது சுவிட்சை ஆஃப் பண்ணிடு. கீழே எல்லா லைட்டுமே ஆஃப் ஆயிடும்” வீட்டின் நடைமுறையை படபடவென உரைத்து விட்டு சந்திராவதி படுக்க போய்விட்டாள்.

 வீட்டில் தங்கியிருந்த ஒன்றிரண்டு உறவினரும் சென்று படுத்திருக்க தயங்கி தயங்கி மாடி படிகளில் ஏறினாள் எழில்நிலா.தலையை கையில் தாங்கி பாற்கடல் பரந்தாமன் போசில் கட்டிலில் படுத்தபடி அறைக்கதவையே பார்த்திருந்தான் நித்யவாணன். 

“இங்கே உங்கள் அம்மாவிடம் என்னை தள்ளிவிட்டு நீங்கள் சென்னையில் சுதந்திரமாக இருக்க நினைக்கிறீர்களோ?” அறைக்குள் நுழைந்ததும் எழில்நிலா கேட்ட கேள்விக்கு புருவம் சுருக்கினான்.

” நிலா என்ன பிரச்சனை உனக்கு? இங்கே வா, உட்கார். நாம் எல்லாவற்றையும் தெளிவாக பேசலாம்”கட்டிலில் தன்னருகை தட்டிக் காட்டி அழைத்தான்.

” இங்கே நின்று கொண்டிருந்தாலே நீங்கள் பேசுவது நன்றாகவே என் காதில் கேட்கும். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்”

” என்ன கேள்வி இது? உனக்கு பிடிக்கும் என்றுதான் நீ இங்கேயே இருக்க ஏற்பாடுகள் செய்தேன்”

 எழில் நிலாவிற்கு ஆத்திரம் வந்தது. எவ்வளவு திறமையாக வார்த்தைகளை போட்டு பேசுகிறான். எப்போதுமே எனது பிடித்தத்தை பற்றி மட்டுமே நினைப்பானாம். என்னை இங்கே சிறை வைத்து விட்டு அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் திட்டம் போட்டவன்தானே இவன்!

” ஓ எனக்காகவா? அப்படி எனது விருப்பத்திற்காக பார்ப்பதானால் இங்கே வரவே வராதீர்கள். சென்னைக்கே போய் விடுங்கள்.நான் இங்கே நிம்மதியாக இருந்து கொள்கிறேன்”கட்டுப்பாடின்றி கத்தினாள்.

நித்யவாணனின் கண்கள் சிவந்தன. “சாதாரணமாக நான் இவ்வளவு பொறுமைசாலி இல்லை நிலா. உனக்காக மிகவும் பொறுமையாக இருந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு. நீ என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறாய். உன்னுடைய பைத்தியக்காரத்தன பேச்சுக்களை எல்லாம் நிறுத்திவிட்டு கதவை பூட்டிவிட்டு வந்து பக்கத்தில் படுடி”

” எவ்வளவு திமிர்?”கொதித்தாள் எழில்நிலா, “அங்கு வரவே அருவருப்பாக இருக்கிறது” கண்களால் கட்டிலை காட்ட இப்போது கொதித்து எழுவது நித்யவாணன் முறை. 

“உன் கழுத்தில் தாலி கட்டியிருக்கேன்டி,அப்படியெல்லாம் நீ என்னை தவிர்க்க முடியாது”அவளை நெருங்கி தோள் பற்றி உலுக்கியவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.




What’s your Reaction?
+1
32
+1
19
+1
1
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!