mayanginen mannan inke

மயங்கினேன் மன்னன் இங்கே-5

5

 

” அந்தப் பொண்ணு சின்னப்பிள்ளை மாப்பிள்ளை. அதுக்கு என்ன தெரியும் ..? அது சொல்லுதுன்னு நீங்க இந்த பிசினஸை வேண்டாம்னு சொல்லலாமா …? “

 

” இதையே நான்காவது தடவையாக சொல்கிறீர்கள் மாமா. நீங்கள் நினைப்பது போல் மலர் சின்னப்பொண்ணும் கிடையாது. அவள் சொன்னவைகள் எல்லாமே அவளது கருத்துக்களும் கிடையாது. எல்லாமே தகுந்த ஆதாரங்களுடன் அவள் எடுத்து வைத்திருப்பவை ….”

 

” நீங்கள் எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டீர்களா … ? ” சந்திராம்பிகை கேட்டாள் .

 

” இல்லைம்மா. எனக்கு நேரமில்லை. இவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நீ வேண்டுமானால் அவள் ஐ பாடை வாங்கி செக் பண்ணிக் கொள். நீங்கள் இரண்டு பேரும் உள்ளே போய் சாப்பிட்டு விட்டு போங்கள். போகும் போது மறக்காமல் பாட்டியை பார்த்து விட்டு போங்க. மலர் இவர்களை உள்ளே அழைத்து போ …” அவர்களை உள்ளே அழைத்து போவதற்கான உத்தரவை சஷ்டிக்கு தரும் போது திருமலைராயன் தன் கார் கதவை திறந்து கொண்டிருந்தான். அத்தனை விரைவாக பேசியபடியே தன் வேலைக்கு சென்றிருந்தான் அவன் .

 

அடுப்பு அனலை தன் முதுகில் உணர்ந்து திரும்பிப் பார்த்த சஷ்டி அது சந்திராம்பிகையின் தந்தையின் பார்வையென உணர்ந்தாள். இவரெதற்கு இப்படி முறைக்கிறார் …?

 

” ஆறு மாதங்களாக திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிற தொழில் .ஒரே நாளில் நிறுத்த பார்க்கிறாயே …? “

 

” நானா …? என்னையா சார் சொல்கிறீர்கள் …? நேற்று உங்கள் வீட்டிலிருந்து காரில் வரும் போதே , திரு இந்த தொழிலை பற்றி பேசிக் கொண்டே வந்தார். இது சம்பந்தமான விசயங்களை நெட்டிலிருந்து எடுத்து எனக்கு கொடு மலர் என்றார். நான் நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து தகவல்கள் சேகரித்து இதோ இப்போது அவரிடம் சொல்லியிருக்கிறேன். நான் தப்பான தகவல்கள் எதுவும் சொல்லவில்லை சார். நீங்கள் வேண்டுமானாலும் செக் செய்து கொள்ளுங்கள் …” அப்பாவியாய் விழி விரித்தபடி தனது ஐ பாடை அவர்கள் பக்கம் நீட்டினாள் .

 

சந்திராம்பிகையின் தாமரை முகம் கறுக்க , அவள் தந்தையின் பல் நறநறப்பு இங்கே …சஷ்டியின் காதிற்கு கேட்டது .

 

” சந்திரா வாம்மா போகலாம் …”

 

” கிளம்புகிறீர்களா …? திரு உங்களை சாப்பிட்டு போகச் சொன்னாரே …பாட்டியை கூட பார்க்க சொன்னாரே ..”

 

” இன்னொரு நாள் வருகிறோம் .ஒரு அவசர வேலை வந்து விட்டதென்று உள்ளே சொல்லிவிடு …” அலட்சியமாக வீட்டின் உட்புறம் சாடை கைகாட்டியவர் தன் மகளின் கை பிடித்து அழைத்து போனார்.

 

” அதென்ன அவரை மரியாதை இல்லாமல் பேசுகிறாய் …? ” தந்தையின் இழுவைக்கு மெல்ல நகர்ந்தபடி சந்திராம்பிகை கேட்டாள் .

 

” நான் அவரை எப்போதும் அப்படித்தான் அழைப்பது வழக்கம் .” திரு ” என்பது மரியாதை குறைவா …? எவ்வளவு உயர் வார்த்தை அது …” கைகளை கட்டிக்கொண்டு லேசாக கண்களை சிமிட்டிக் கொண்டு கேட்ட சஷ்டியின் குரலில் விசமம் இருந்தது .

 

தந்தையும் , மகளும் ஒளியிழந்த முகத்துடன் காரில் ஏறுவதை சந்தோசமாக பார்த்தவள்  தன் வலது கையை இடது கையால் தானே பற்றி தனக்கு தானே ஷேக் ஹேன்ட் கொடுத்துக் கொண்டாள் .

 

” அவர் உங்கள் வருங்கால மாமனார் இந்த தொழிலை ரொம்பவே எதிர்பார்த்திருந்திருப்பார் போல. என்னிடம் கொஞ்சம் கோபமாக பேசிவிட்டார் .” இரவு வீடு வந்ததும் சாப்பிட உடகார்ந்த  உடனேயே  திருமலைராயனிடம் காலை கதையை திரும்ப மெல்ல ஆரம்பித்தாள் .

 

” என்ன பேசினார் …? ” கவனம் இருந்தது அவன் குரலில் .

 

” மலர் உன்னையா …? திட்டினாரா …? என்னிடம் சொல்லவேயில்லையே …? ” சொப்னா விசாரித்தாள் .

 

” உனக்கு ஏன் வீண் மனகஷ்டமென்றுதான் …” இழுத்தாற் போல் நிறுத்தி ஓரக்கண்ணால் திருமலைராயனை பார்த்தாள் .

 

” நீ ஏன்டி அவருடன் பேசினாய் …? என்ன பேசினாய் …? ” கணீரென உச்சந்தலையில் கொட்டியது பாட்டியின் குரல் .

 

மெல்ல பேசிக் கொண்டிருக்கிறேன் …இப்போது எப்படி பாட்டிக்கு கேட்டது …? சஷ்டி விழித்தாள் .இந்த பாட்டிக்கு காது உண்மையாகவே கேட்கிறதா …இல்லையா ..? இந்த சந்தேகம் அவளுக்கு இப்போதெல்லாம்  அடிக்கடி வந்தது .

 

” நான் இன்று காலை வாசலில் வைத்து  ராயரிடம்தான் பேசிக் கொண்டிருந்தேன் பாட்டி .அவராகத்தான் என்னிடம் பேசினார் …”

 

” என்ன காலையில் சந்திராம்பிகையின் அப்பா நம்  வீட்டிற்கு வந்தாரா …? ” பேச்சியம்மா கேட்டாள் .




” அவரோடு மேடம் சந்திராம்பிகையும் வந்தார்களே ஆன்ட்டி …” விழிகளை அபிநயித்து பார்த்தாள் சஷ்டி .

 

” உங்களுக்கு தெரியாதாம்மா …? அவர்கள் உங்களை வந்து பார்க்கவில்லையா பாட்டி …? உங்களை பார்த்து விட்டுத்தானே போகச் சொன்னேன் ? ” திருமலைராயனின் புருவங்கள் நெரிந்தன .

 

” நான் சொன்னேன் ராயர். அவர்கள் இரண்டு பேரும் முக்கிய வேலை இருப்பதாக சொல்லிவிட்டு வாசலோடு போய்விட்டனர் …” புகார் எனத் தோன்றாத வகையில் தனது குரல் பாவத்தை அமைத்தாள் .

 

” அப்பொழுதே ஏன் எங்களிடம் சொல்லவில்லை …? ” பாட்டியம்மாளின் கேள்விக்கு சஷ்டி உதடு சுளித்தாள் .

 

ம்க்கும் எனக்கு ரொம்ப அக்கறை பாருங்க. இதை உங்க பேரன் காதுக்கு கொண்டு போகிறதுதான் என் நோக்கமே தவிர, உங்க காதுக்கு கொண்டு போவதில்லை.. தனக்குள் சொல்லிக் கொண்டவள் பாட்டிம்மாவை பார்த்து சங்கடம் போல் புன்னகைத்தாள் .

 

” நா ..நான் ரொம்ப சொன்னேன் பாட்டி. அவர்கள் கேட்கவேயில்லை. அவர் சந்திரா மேடத்தோட அப்பா …அப்படியே அவுங்க கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்  …” மீண்டும் அபிநயித்தாள் .

 

” என்ன ராயா இது …அவர் மனம் வருந்தும்படி நீ ஏன் நடந்து கொள்கிறாய் …? அந்த தொழிலிலுக்கு சரி சொன்னால்தான் என்ன .? அதுவும் ஒன்று நமக்கு இருந்து விட்டு போகிறது ” பேச்சியம்மா மகனிடம் கண்டிப்பாக பேச ,

 

” வாயை மூடுடி ” பாட்டிம்மா அதட்டினார் .

 

” என் பேரன் என்ன பிடித்து வைத்த பொம்மையா …? அந்த தாண்டவராயன் சொல்படி ஆட. தொழில் விசயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் பேச்சி. ஏதோ ஆர்வத்தில் உள்ளே நுழைந்து விட்டு பிறகு விழித்துக் கொண்டிருக்க கூடாது …ராயா நீ உன் மனதிற்கு சரியெனப்பட்டதை செய்யப்பா …”

 

பாட்டியின் ஆதரவிற்கு தலையசைத்த திருமலைராயனின் மனம் யோசனையில் இருப்பதை முகம் காட்டியது .யோசனைகள் நிறைந்த இடம் குழப்புவதற்கும் உகந்த்தாயிற்றே …

 

” நான் எவ்வளவோ சொன்னேன் ராயரே .என் ஐ பாடை பாருங்களனு அவுங்க கையில் கூட கொடுத்தேன் .வாங்கவேயில்லை .அப்புறம் …ஏதோ ஒரு நாள் கணக்கு சொன்னார்களே …இரண்டு மாதமோ …மூன்று மாதமோ …” ஆட்காட்டி விரலால் நெற்றியை தட்டி நினைவுபடுத்திக் கொள்வது போல் பாவனை செய்து அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்து விட்டு …

 

” ஆங் …ஆறு மாதம் .ஆறு மாதமாக யோசித்து வளர்த்த தொழிலாம். நான் ஒரே நாளில் நிறுத்தி விட பார்க்கிறேனாம் ” திரி நுனியை திருகி விட்டு நெருப்பை அழகாக பற்ற வைத்தாள் சஷ்டி .

 

கொளுந்து விடும் நெருப்பை திருமலைராயனின் கண்களில் ஒரு நிமிடம் பார்த்தாள். மறு நொடியே அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதையும் ஆச்சரியமாக பார்த்தாள் .

 

” அப்படி என்ன தொழில் அண்ணா ..? சட்டவிரோதமானதா …? ” சொப்னா கேட்க இல்லையென தலையசைத்தான் திருமலைராயன்  .

 

” அப்போது நமக்கு நஷ்டம் வரும் தொழிலா …? ” பேச்சியம்மாள் கேட்டாள் .

 

” நிறைய லாபம் வரும்மா …” திருமலைராயன் சாப்பாட்டு தட்டிலிருந்து எழுந்தான் .கை கழுவினான் .

 

” பிறகு என்னப்பா …? சரின்னுதான் சொல்லேன் …” அப்பாவியாய் கேட்ட தாயின் அருகே வந்தவன் அவள் முந்தானையை எடுத்து சாப்பிட்டு கழுவிய தனது வாயை துடைத்தான் .

 

” பணத்தை சம்பாதிக்கும் போதே மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டுமில்லையாம்மா .அதுதானே முக்கியம் …ம் …”

 

பேச்சியம்மாவிற்கு இப்போதும் புரியவில்லை. ஆனால் தன் மகன் இப்படி அருகே வந்து அவள் முந்தானை பிடித்து நிற்பது பிடித்திருந்தது.  தாயன்பில் உடல் சிலிர்க்க கை உயர்த்தி முகம் தொட வேண்டிய உயரத்தில் இருந்த மகனின் கன்னத்தை மென்மையாக வருடினாள் .

 

” நீ சொன்னால் சரிதான் கண்ணப்பா …”

 

மகனின் திருமணத்தில் தடங்கல் எதுவும் வந்து விடக்கூடாதே என்ற பரிதவிப்பு அந்த தாய்க்கு. அதற்காக மகனின் வார்த்தைகளை மறுத்துக் கொண்டிருந்தவளை நொடியில் தன் பக்கம் திருப்பி நீ என்ன சொன்னாலும் சரியென தலையாட்ட வைத்து விட்டவனின் சாமர்த்தியத்தில் வியந்தாள் சஷ்டி. கிட்டதட்ட ஊரையே கட்டி ஆள்பவன் .இப்படி பெற்றவளிடம் அடங்கி நிற்பது அவளுக்கு பார்க்க பாந்தமாக இருந்த போதிலும் …இவன் யாரையும் எளிதில் தன் வசப்படுத்தி விடுகிறானே …இவனை எப்படி சமாளிக்க போகிறேனென்ற கவலையும் அவள் மனதில் வந்தது .

 

அம்மா – மகனின் பாசப் பிணைப்பை பாட்டியும் , சொப்னாவும் பார்த்து ரசித்தபடி இருந்தனர். நாம் …நம் குடும்பமென இந்த ஒட்டுதல் சஷ்டிக்கு பிடிக்காமல் போக …

 

” ஆறு மாதம் முன்பே திட்டமிட்ட தொழிலென்றால் …உங்களிடமும் சொல்லியிருப்பார்கள்தானே சார் ..? “. பிரச்சனையின் தொடர்பு அறுந்து விடாமல் தொடுத்தெடுத்து பேசினாள் .

 

” இல்லை மலர் . என்னிடம் இரண்டு நாள் முன்புதான் இதை பற்றி பேசினார் …”

 

” அப்படியென்றால் …உங்களுக்கு தெரிவிக்காமலேயே அக்ரிமென்ட் வரை …மை காட் …” பேச்சை முழுவதும் முடிக்காமல் கையால் தன் வாயை பொத்திக் கொண்டாள் . தன் அதிர்வுக்கான பிரதிபலிப்பை சுற்றியிருந்தோர் முகத்தில் தேடினாள் .

 

” இது விசயம் நாம் நாளை பேசிக்கிடலாம் ராயா .இப்போது நீ போய் தூங்கு ” சட்டென பாட்டி பேச்சை நிறுத்தி விட , சஷ்டி எரிச்சலுடன் திரும்பி பாட்டியை பார்க்க , அப்போது அவரும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் .

 

குத்தூசி ஒன்று நடு நெஞ்சில் சொருகியது போலொரு உணர்வை பாட்டியின் பார்வையில் பெற்ற சஷ்டி சட்டென எழுந்து விட்டாள் .

 

” நாளை பேசலாம். நான் தூங்க போகிறேன் …” முதல் ஆளாக சாப்பாட்டு அறையை விட்டு வெளியேறியும் விட்டாள் . தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தவள் தன் போனை எடுத்து ஒரு நம்பரை அழுத்தினாள் .

 

” நான் சொன்ன விபரங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அக்கா. எந்நேரமும் கேட்பேன் …”  யாரிடமோ  பேசினாள் .சில நிமிடம் எதிர்முனை பேச்சை செவிமடுத்தவள் …

 

” எவ்வளவு பெரிய ரிஸ்க் வேண்டுமானாலும் நான் எடுக்க தயாராக இருக்கிறேன் அக்கா. என்னுடைய தேவையெல்லாம் அந்த திருமலைராயனின் திருமணம் நிற்க வேண்டும். அவ்வளவுதான் …” சஷ்டி மலரின் குரலில் வன்மம் தெறித்தது .

 




What’s your Reaction?
+1
14
+1
11
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!